நாட்டை ஆளும் தலைவர்களும் சீரழியும் நாட்டின் பொருளாதாரமும்

0 1,104
  • ஷப்கீ அபீ இஸ்ஸத்

“இலங்கை: ஆசியா இழந்து விட்ட ஆச்சரியம்” என்ற நூலை எழுதி பேராசிரியர் மில்டன் ராஜரட்ண,  நாட்டில் போதுமான பொருளியல் வல்லுநர்கள் இல்லாத வெற்றிடத்தை அறிந்து தனது மகளிடம்  உங்களுக்கும் நாட்டிற்கும் மிகப் பிரயோசனமளிக்கும் பொருளியற்றுறையில் உயர்கல்வியை மேற் கொள்ளுமாறு ஆலோசனை கூறியபோது, பொருளியல் துறையில் உயர்கல்வியை மேற்கொள்வதில்  பிரயோசனமில்லை. இந்நாட்டு ஆட்சியாளர்களில் எவரும் பொருளியல் வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்பதில்லையே என்று மகள்  பதிலளித்ததாக ஒரு கலந்துரையாடலின்போது அவர் தெரிவித்துள்ளார்

அதைவிட ஆச்சரியமான விடயம் என்னவெனில், இந்த நாட்டின் பொருளாதாரக் கொள்கை வகுப்பதற்கான பொருளியல் நிபுணர்களை உருவாக்க ஆட்சிக்கு வருபவர்கள்  தவறியே வந்துள்ளனர். இந்த வெற்றிடத்தை நிதிசார் நிபுணர்களைக் கொண்டே நிரப்பியும் வருகின்றனர். இது இலங்கையின் பொருளாதார அடிப்படைக் கொள்கையில் ஏற்பட்டுள்ள பெரும் கோளாறாகும். இதன் காரணமாகவேதான் இலங்கை தொடர்ந்தும் கடனுக்காகக் கையேந்தும் நாடாகவே பயணிக்கிறது. உண்மையில் நாட்டுக்கான தன்னிறைவு தேசிய பொருளாதாரக் கொள்கையொன்றை வகுத்துக் கொள்வது நாட்டின் ஆட்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் மிக அவசியமும் அவசரமுமாகும்.  தன்னிறைவு என்பது நாட்டு மக்களுக்குத் தேவையான அனைத்தையும் உள்நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டுமென்பது அர்த்தமல்ல. மக்களுக்கு அவசியமான பொருட்களை இறக்குமதி செய்யத்தான் வேண்டும். ஆனால் அந்த இறக்குமதிகளை ஈடு செய்யும் வகையிலான  உறுதியான சர்வதேச சந்தைப் பெறுமானமுள்ள ஏற்றுமதிகள் அவசியமாகும். எனினும் முற்றிலும்  ஏற்றுமதிப் பொருளாதாரத்தையும் உறுதியாக நம்பவும் முடியாது. ஏனெனில், நமது ஏற்றுமதிகளின் சர்வதேச சந்தையும் பல நெருக்குவாரங்களுக்கு உட்படக் கூடியதனாலேயாகும்.

நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் பிரித்தானிய காலனித்துவம் இலங்கையை தோட்டப்பயிர்ச் செய்கைப் பொருளாதாரத்திலேயே வளர்த்தது. அதை சார்ந்ததாகவே தொழில்துறைகளும் விருத்தி செய்யப்பட்டன. நுகர்வுப் பயிர்ச் செய்கை சிறிதளவே மேற் கொள்ளப்பட்டது. ஏற்றுமதிக்கான தோட்டப் பயிர்ச்செய்கைப் பொருட்களின் விலைகளை உலக சந்தையில்  நிர்ணயம் செய்வதும் மற்றும் இதற்கான மூலவளங்கள் பொருட்களின் விலை நிர்ணயங்களும் மேற்குலக அதாவது, ஏகாதிபத்தியவாதிகளின் கைகளிலேயே அப்போதும் தங்கியிருந்தன. அதனால் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தின் பெரும்பகுதி தரகர்களிடமே சென்றன. ஆனாலும் சுதந்திரத்தின் பின் தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்ட போதிலும் ஏகாதிபத்திய சக்திகளின் பிடியிருந்து மீளமுடியாமல் போயுள்ளது.  இந்நிலையில் 1956க்குப் பின்னர் குறிப்பாக, 1960க்குப் பின்பு சில தொழிற்றுறைகளில் நாடு வளர்ச்சியடைந்த போதிலும் அவைகள் ஒரு தேசிய பொருளாதாரக் கொள்கையின் பகுதியாக அமைந்திருக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆகவேதான் 1970களில் சர்வதேச சந்தையில் ஏற்பட்டிருந்த எரிபொருள் விலையேற்றமும் அக்காலப் பகுதியில் ஏற்பட்ட வரட்சி காரணமாகவும் ஏற்பட்ட உணவுப் பொருள்களின் தட்டுப்பாடும் குறிப்பாக நகரங்களில் வாழ்ந்த மக்களை வெகுவாகப் பாதித்தன. இதன் காரணமாக மக்கள் விரக்தியடைந்திருந்த நிலையைப் பயன்படுத்தி உணவுத் தட்டுப்பாட்டை நிவர்த்திக்க வாரத்திற்கு எட்டுக் கிலோ தானியம் வழங்கப் போவதாக வாக்களித்ததன் பலனாக அறுதிப் பெரும்பான்மைக்கும் அதிகரித்த பெரும்பான்மையுடன் பாராளுமன்றைக் கைப்பற்றிய ஐ.தே.க. தலைவர் ஜே.ஆர். ஜயவர்தன திறந்த பொருளாதார நிலையொன்றையும் கட்டுப்பாடற்ற இறக்குமதிகளையும் அனுமதித்ததன் விளைவின் தாக்கம் நாடு கடனாளியானது மட்டுமல்லாமல், மக்களின் வாழ்வியலிலும் பல மற்றங்களை ஏற்படுத்தின.

1978 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையால் ஏற்பட்ட தாக்கங்களில் ஒன்றுதான் மக்களின் நுகர்வுமட்டம் வெகுவாக வளர்ச்சி அடைந்து நுகர்வுத் தன்மையும் மாற்றமடைந்தது. உணவு, உடை, பொழுதுபோக்கு, போக்குவரத்து, நாளாந்த பாவனைப் பொருட்கள் என எல்லா அத்தியாவசியத் தேவைகளிலும் பெரும் பகுதியை ஆடம்பர இறக்குமதிப்  பொருட்களே ஆட்கொண்டன.  போக்குவரத்திற்கான எரிபொருள் பாவனை, மின்சாரப் பாவனை கடந்த மூன்று தசாப்த காலமாக பத்து மடங்கிற்கும் மேலாகவே அதிகரித்துள்ளன. அவற்றிக்குத் தேவையான அந்நிய செலாவணியை எங்கிருந்து பெறுகிறோம் என்று எப்போதாவது நாட்டு மக்கள் சிந்தித்ததுண்டா?

நாட்டிற்கும் நாட்டின்  பொருளாதாரத்திற்கும் முதுகெலும்பான மனித வளத்தின் கணிசமான பகுதியை குறைந்த  கூலி விலைக்கு மத்திய கிழக்கிற்கும் பிறநாடுகளுக்கும் திறந்த பொருளாதார வலயங்களுக்கும் வழங்கி அதன் மூலம் பெறப்படும் பணப்புழக்கமும் ஆடம்பர நுகர்வுப் பழக்கத்தையே வலுப்படுத்தியுள்ளன. நாட்டில் ஏற்படும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உள்நாட்டு வளங்களை தேடிப் பயன்படுத்தி ஏற்றுமதிகளை அதிகரித்துத் தீர்வு காண்பதை தவிர்த்து, அந்நிய முதலீடுகளையும் கடன்கள் பெறுவதிலுமே ஆட்சியாளர்கள் விருப்பம் கொண்டுள்ளனர்.  வானுயர்ந்த கட்டிடங்களும் அகல துரிதவேக நெடுஞ்சாலைகளும் தனியார் மருத்துவ மனைகளும் கட்டுப்பாடற்ற தனியார் கல்வி நிறுவனங்களின் விரிவாக்கங்களும் மட்டுமே அபிவிருத்தி எனக் கருதமுடியாது. இவைகள் நாட்டை கடனாளியாக்குவதுடன் கடன்களையும் அதற்கான வட்டியையும் செலுத்த மக்களை சுமைதாங்கிகளாக மாற்றும் செயலாகும். இக்காரணிகளும் தற்போதுள்ள  ரூபாவின் பாரிய மதிப்பிறக்கத்திற்கும் நாட்டின் அபிவிருத்திப் பின்னடைவிற்கும் முதற் காரணியாக அமைந்துள்ளதாகக் கொள்ளமுடியும். இதுவுமொரு நாட்டுப் பொருளாதார கொள்கை வகுப்பில் ஏற்பட்டுள்ள பார்வைக் கோளாறாகும்.  இலங்கை, சர்வதேச நாடுகளுடனான வர்த்தக நடவடிக்கைகளுக்காக அமெரிக்க டொலரை ஏற்றுக்கொண்ட நாடாகும். அதனால் சந்தையிலுள்ள டொலரின் கேள்விக்கும் நிரம்பலுக்கும் ஏற்ப இலங்கை நாணயத்தை மிதக்கவிடுவதற்கு மத்திய வங்கி தீர்மானித்திருக்கிறது. இவ்வருடம் மே மாதத்தில் இலங்கை மத்திய வங்கி தமது நாணயத்தைப் பாதுகாக்க 190 மில்லியன் டொலர்களை விற்பனை செய்தது. அதேவேளை 220மில்லியன் டொலர்களை விற்றும் 90 மில்லியன் டொலரை வாங்கியும் இருந்தது. இதனைக் கருத்திற்கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்காக தலைவர் மெனுலா கொரெத்தி, இலங்கை நாணயத்தை மிதக்கவிட வேண்டுமென ஜூன் மாதம் கூறி இருந்தார். நாணயத்தை மிதக்க விடுதல் என்பது தனது நாணயத்தை வெளியிடுவதற்கு நிகராக தங்கமோ அல்லது வேறு சொத்துகளோ ஒதுகீட்டில் இல்லாதபோது சந்தையின் எதிர்பார்ப்புக்கும் நிரம்பலுக்குமேற்ப நாணயத்தின் பெறுமதியை தளம்பலுக்கு விடுவதாகும்.  அதனையும் வெளி நாட்டுச் செலாவணிகளே தீர்மானிக்கின்றன.

அன்மையில் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி இலங்கை சந்தையில் டொலர் அதிகரித்துக் காணப்பட்டால் அதனைக் கொள்வனவு செய்து ஒதுக்கீடாக சேமித்து வைக்க வேண்டும் என்பதாகும். அதன் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக மத்திய வங்கி இதனைச் செய்தது. எனினும் செய்த ஒப்பந்தம் காரணமாக ஒதுக்கீட்டில் இருப்புவைத்துள்ள டொலரை வெளியிட முடியாத நிலையில் அரசாங்கம் சிக்கியுள்ளது. இதன் காரணமாகவே டொலருக்கு நிகரான இலங்கை ரூபா பலமில்லாததால் ரூபா நாணயம் தற்போது மதிப்பிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இலங்கை நாணய பெறுமதி இறக்கம் இதுதான் முதற்தடவையுமல்ல. 1977க்குப் பின்னரும் நடந்துள்ளன. நல்லாட்சியின் கடந்த மூன்று வருடங்களில் மாத்திரம் 30 சதவீதம் மதிப்பிழக்கச் செய்யப்பட்டுள்ளது. இந்த வார மத்தியவங்கி அறிக்கையின்படி அமெரிக்க டொலர் இலங்கை நணயப் பெறுமதி 180.90 சதமாகும். இப்படியான பொருளாதார நெருக்கடி நிலையில் நாடு வீழ்ந்திருக்கும் சூழ்நிலையிலும் அரச செலவினங்களும் எல்லைதாண்டி அதிகரித்துச் செல்வது நாட்டின்  பொருளாதாரத்தில்  அரச தலைவர்களின் அக்கறை எப்படி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

அண்மையில் ஜனாதிபதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்திற்கு பயணம் மேற்கொண்டபோது அவருடன் 63 பேர் பயணம் மேற் கொண்டதாக ஊடகங்கள் வெளிப்படுத்திய தகவல்கள் இதற்கு தக்க சான்றாகும். இக்குழுவில் நான்கு அமைச்சர்கள், மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள், பௌத்த பிக்குகள் இருவர் எனப் பலர் சென்றுள்ளனர். நாட்டில் அந்நிய செலாவணி பற்றாக்குறையாக இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அந்நிய செலாவணியை தண்ணீரைப்போல் செலவிடும் இப்பணியை அரச தலைவர்களே இவ்வாறு செய்வதாக இருந்தால் நாட்டின் நாணயம் மதிப்பிழப்பதை எவ்வாறு தவிர்க்க முடியும்? இதேபோலவே பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் செலவுகளும் அதிகரித்துக் காணப்படுகிறன. இந்த அரசியல்வாதிகளின் சொகுசு வாழ்க்கைக்காக வாரி இறைக்கப்படுவது கோடிக்கணக்கான அந்நிய செலவாணியான டொலர்களே. இப்படியான நிலையில் தொடர்ந்து ரூபா மதிப்பிழந்து செல்வதற்கான காரணத்தை அறிந்து அதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க ஆட்சியாளர்கள் தவறியே வருகின்றனர்.

உண்மையில் இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கீட்டுக்குத் தேவையான டொலர்கள் இலங்கை சந்தைக்கு வராமையும்  இலங்கையிருந்து அதிகளவிலான வெளிநாட்டு நாணயங்கள் வெளியேறிச் செல்வதுமே பிரதான காரணங்களிலொன்றாகும்.

இதனைவிடவும் .இலங்கை தற்போது வருடாந்தம் 11 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களையும் சேவைகளையும் ஏற்றுமதி செய்கிறது. மறுபுறம் 21 பில்லியன் டெலர்கள் பெறுதியானளவில் பொருட்களை இறக்குமதி செய்கிறது. அதனால் வருடாந்தம் 10 பில்லியன் அளவில் வர்த்தக நிலை ஏற்படும் நிலை உருவாகிறது. 2017இல் வர்த்தக நிலுவை 9619 மில்லியனாக இருந்தது. 2018 ஜூன் மாதக் காலப் பகுதிவரை ஏற்றுமதி வருமானமாக 6805 மில்லியன் டொலராகவும் இறக்குமதிச் செலவாக 13196 மில்லியன் டொலராகவும் இருந்துள்ளன. ஆக, இவ்வருட முதல் ஆறுமாத காலப் பகுதியிலேயே 6391 மில்லியன் டொலர் வர்த்தக நிலுவையுமுள்ளது. இந்த நிலுவைகளை நோக்குவோமாயின் வெளிநாட்டு செலாவணி நாட்டுக்குள் வராமலேயே முன்சென்ற முதல் ஆறு மாதங்களிலும் ஆறு பில்லியனுக்கதிகமான டொலர்கள் செலவழிக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு செலாவணி ஒதுக்கீட்டில் போதியளவு டொலர்கள் இல்லாமலேயே மேற்கொள்ளப்பட்ட இந்த செலவினங்கள்தான் டொலருக்கு நிகராக நாட்டின் நணயமாக ரூபாவின் மதிப்பிறக்கத்திற்கு மற்றுமொரு காரணமென அறிந்துகொள்ள முடியும். இப்படியான பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் அப்படி என்னதான் அத்தியாவசியத் தேவைகளுக்கான பண்டங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதை நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் அறிந்து கொள்வது அவசியமானதாகும்.  உள்நாட்டு வளங்களைப் பயன்படுத்தாதது மட்டுமல்லாமல் நாட்டின் உற்பத்திகளுக்கான பெறுமானங்கள் குறைக்கப்பட்டு அன்றாடப் பாவனைக்கான அனைத்தையுமே இறக்குமதி செய்கின்ற அவல நிலைக்கு நாட்டுத் தலைவர்களே இந்த செழிப்பான வளமுள்ள  நாட்டை இட்டு செல்கின்றனர். சிறுவர் தாமாவே தயாரித்து விளையாடும் பட்டங்கள் முதல் உள்நாட்டின் பாரிய தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்ய முடியுமான வாகன சட்டங்கள் வரை எல்லாமே இறக்குமதி செய்யப்படுகின்றன. 2017ன் தரவுகளின்படி ஏற்றுமதியைவிட இறக்குமதி 1466 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளது. இவற்றில் 686 பில்லியன் ரூபாவுக்கு உணவுப் பண்டங்களுக்காக இந்த விவசாய உற்பத்திக்கேற்ற இந்த நாட்டிலேயே செலவிடப்பட்டிருக்கிறது.

நாற்புறமும் கடலால் சூழப்பட்டுள்ள, கடலுணவு நிரம்பிய வளமுள்ள இந்த தீவில் 14 பில்லியன் ரூபாவுக்கு கறுவாடு இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. மாட்டுப்பண்ணைகளுக்குப் பொருத்தமான வளம் நிறைந்த  நாட்டில் பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களின் இறக்குமதிகளுக்காக 48 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 2008இல் உணவுப் பண்டங்களின் இறக்குமதி 217 பில்லியனாக இருந்து இப்போது 686 பில்லியன் ரூபாவுக்கு அதிகரித்துச் சென்றுள்ளது. நமது நாட்டிலேயே இறப்பர் உற்பத்தி செய்ய முடியுமான வளம் இருந்தும் டயர், டியூப் போன்றவற்றையும் 2017இல் 11.09 பில்லியனுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது 2008ல் 4.03 பில்லியனாகவே காணப்பட்டது. களனி டயரை சியட் நிறுவனத்திற்கு விற்பனை செய்த காரணத்தினால் சியட் நிறுவனம் இறப்பர் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்கிறது.  இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கை காரணமாக  இஞ்சி, வெள்ளை பூண்டு கூட இப்போது நாட்டில் இறக்குமதி செய்யப்படுகிறது.   வாகனச் சட்டங்கள் உற்பத்திக்காக நிறுவப்பட்டிருந்த தொழிற்சாலைகளை மூடிவிட்டு புதிதாக வொக்ஸ் வெகன் கம்பனி அமைக்கப்படவிருப்பதாக 2015க்கு பின்னர் அமைந்த அரசாங்கம் ஏமாற்றி வந்தது.

நமது நாட்டிற்கு அந்நிய செலாவணியை பெற்றுதருகின்ற முக்கிய மூலங்களிலொன்றுதான் தைத்த ஆடைகள் ஏற்றுமதியாகும். அந்தக் கைத்தொழிலின் மூலப் பொருட்களில் சுமார் 87 சதவீதமானவைகள் பிற நாடுகளிலி்ருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. அதன் காரணமாக வெளிச்செல்லும் செலாவணியிலும் தாக்கம் செலுத்துகிறது. அதுபோலவே வெளிநாட்டு செலாவணி வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பதிலொன்றுதான் வெளி நாட்டு வேலை வாயப்பாகும். அதிலும் முக்கிமாக மத்தியகிழக்கு நாடுகளிலேயே அதிகமாக வேலை வாய்ப்புகள் வழங்குவதாக அமைந்துள்ன. ஆனாலும் இலங்கையில் தொடர்ந்து நடந்தேறிவரும் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளைக்  கட்டுபடுத்த ஆட்சியாளர்கள் தவறி வருகின்ற காரணத்தினால் 2018 ஜூலை மாதத் தரவுகளின்படி 1.6 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக அறிய முடிகிறது. ஆக, இதுபோன்ற காரணங்களைக் கொண்டு ரூபாவின் மதிப்பிறக்கத்திற்கு உடனடிக் காரணங்களை முன்வைப்பதை விடவும் நாடு சுதந்திம் பெற்றதன் பின்னர் வந்த எந்த ஆட்சித் தலைவர்களிடமும் நாட்டுக்கான தன்னிறைவுப் பொருளாதாரக் கொள்கையொன்றை வகுத்து முன்னெடுத்துச் சென்று வளமான நாடாக மாற்ற அவர்கள் விரும்பவில்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது.  நாட்டை ஆட்சி செய்ய வரும் தலைவர்களும் அவர்களின் கட்சி வளர்ச்சிக்கும் ஏற்ற வகையிலேயே பொருளாதாரக் கொள்கையும் கொண்டு செல்லப்படுகிறது. நாட்டின் பொருளாதாரக் கொள்கையைத் தீர்மானிப்பதற்காக பிதமர் தலைமையில் சிலரை வைத்து பொருளாதார சபையொன்று உருவாக்கப்பட்டது இதற்கு உதாரணமாகும். இந்தச்சபை  கலைக்கப்பட்டு பின்னர்  ஜனாதிபதி தலைமையில் சில பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளீர்த்து  தேசிய பொருளாதார சபையாக உருமாற்றப்பட்டது. இவர்களின் கல்வித்தகைமை, பொருளாதார அறிவு, அனுபவம் எப்படியானது என்பதும் கூடத் தெரியவில்லை இந்த சபை ஒருவருடகால இடைவெளியில்  என்ன செய்தது எனவும் யாருக்கும் தெரியாது. இந்த நிலைதான் இலங்கையின் பொருளாதாரக் கொள்கை வகுப்பாகும். ஒரு நாட்டின் முதுகெலும்பே அந்நாட்டின் பொருளாதாரமாகும்.  நாடாளுமன்றத்தில் நாட்டிற்கான தன்னிறைவான தேசிய பொருளாதாரக் கொள்கை வகுப்பதற்கான ஆலோசனைகளுக்கு சில அமைச்சர்களிலும் இல்லாமலுமில்லை அப்படியானவர்களை குறித்துக் காட்டாமலும் இருக்க முடியாது அப்படியான தகுதியுள்ள சிலர்  சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனால் ஆட்சியாளர்களின் கவனத்திலும் கொள்ளப்படுவதுமில்லை

.உதாரணத்திற்காக  தற்பேது ஆட்சிமாற்றத்தின் பின்  அமைச்சுப் பொறுப்பேற்ற ஹிஸ்புல்லாஹ்,  பொருளாதார அறிவுள்ள அரசியற்துறை கலாநிதி பட்டம் பெற்றவராவார். 30 வருட இலங்கை அரசியல் அனுபவமுள்ளவர்  நாட்டின் நிலவளத்தை மட்டும் பயன்படுத்தி அறபு நாட்டின் பாரிய நிதி அன்பளிப்பை மூலதனமாகப் பெற்று நாட்டுக்கு அந்நிய செலவாணியை பெற்றுக்கொள்ளும் வகையில் மத்தியகிழக்கு நாடுகளில் வேலைவாய்புகளை பெற்றுக் கொள்ளும் முறையில் பொருத்தமானதொரு கல்விக் கொள்கைக்கமைய துறைகளைத் தெரிவுசெய்து பயிற்றுவிப்பதற்காகவே பல்கலைக்கழகமொன்றை  உருவாக்கியுள்ளார். அதேபோல உள்நாட்டிலிருந்தும் வெளி நாடுகளிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கவும் அந்நிய செலாவணியை நாட்டிற்குள்  ஈட்டிக்கொள்ளவும் நகரை அழகுபடுத்தியும்  பரீட்சார்த்தமாக பேரீத்த மரங்களைக் கொண்டும் றம்புட்டான் மரங்களை கிழக்கிலும் உற்பத்தி செய்தும் அதன் கனிகளை உள்நாட்டில் சகலரும் உண்டு சுவைக்கவும் வழி சமைத்துள்ளார். மேலும் நாட்டு மூலவளங்களைப் பயன்படுத்தி புதிய ஏற்றுமதிகளை உருவாக்க ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். 2004இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது விமான சேவைகளின் பணிப்பாளராக இருந்து நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவைகள் உலகறிந்ததாகும்  இவரது சேவைத் திறனையும் ஆளுமையையும் அறிந்து உலகளாவிய பலம் வாய்ந்த அமைப்பான ராபிததுல் ஆலம் அல்இஸ்லாமியின் (உலக முஸ்லிம் லீக்) தெற்காசியப் பிரதிநிதியாக சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் நியமித்துள்ளார். இதன்மூலம் நாட்டுக்குப் பொருளாதார ரீதியாக பல பாரிய முதலீடுகளையும் வேறு பல  நன்மைகளையும் பெறமுடியும்.  இப்படியானவர்களை நாட்டின்  பொருளாதார ஆலோசகர்களாகவும் அமைச்சரவையிலும் இடம் பெறச்செய்வதும் ஆட்சியாளர்களின் பொறுப்பாகும். எது எவ்வாறிருந்த போதிலும்  வெளியிலிருந்து  நாட்டிற்குள் முதலீடுகள் வருவதற்கும் செழிப்பான நாட்டை உருவாக்குவதற்கும் உறுதியான பொருளாதாரக் கொள்கை அத்தியாவசியமானது. உறுதியான பொருளாதாரம் இருப்பதற்கு ஸ்திரமான அரசியல் நிலைப்பாடு தேவைப்படுகிறது. இந்த நிலமை தற்போது நமது நாட்டில் இல்லை தற்போதைய நாணய மதிப்பிறக்கத்தின் காரணத்தை  சுட்டிக்காட்டினாலும் அதனை மறைப்பதற்கு ஆட்சியாளர்கள் கடும் பிரயத்தனங்களை மேற்கொள்கின்றர். இந்த நிலைமையினால்  நாட்டுக்குள் அந்நிய செலவாணியை பெற்றுதரும் புதிய ஏற்றுமதி மற்றும் வெளி முதலீடுகளையும் எதிர்பார்க்க முடியாதுள்ளது.

இறுதியாக நாட்டின் நாணயம் மதிப்பிழக்காமல் உறுதியாக இருக்க வேண்டுமானால் போதுமான அந்நிய செலாவணி கையிருப்பில் இருக்க வேண்டும். அந்நிய செலாவணி அதிகரிக்க சர்வதேச சந்தைப் பெறுமானமுள்ள ஏற்றுமதிகளும் வெளி முதலீடுகளும் அதிகரிக்கப்பட வேண்டும். இவை அனைத்துக்கும் பொருத்தமான தேசியப் பொருளாதாரக் கொள்கைகள் சுதந்திரமாக இயங்குவதற்கு கடந்து சென்ற 70 ஆண்டுகளிலும் எந்தத் தலைவர்களாலும் வகுக்கப்படவில்லை.  இந்த நெருக்கடியான ஸ்திரமற்ற அரசியல் குழப்ப சூழலில் பொருளியல் நிபுணர்களையும் உள்ளீர்த்து கொள்கை வகுக்கவும் சாத்தியமில்லை. நீதிமன்றத் தீர்ப்பு எப்படி அமைந்தாலும் ஊழல் மோசடிகளுக்குத் துணைபோன எந்த ஆட்சித் தலைவர்களாலும் நேர்மையாகவும் நீதியாகவும் நாட்டை வழிநடத்திச் செல்லவும் முடியாது. ஆக, உடனடியாக நாடு பொதுத் தேர்தலை சந்தித்து ஸ்திரமான,  நீதி, நேர்மையான  ஆட்சியொன்றை புதிய தலைமையின் கீழ் நிறுவ மக்கள் சிந்தித்து செயலாற்றினாலே அது சாத்தியமாகும்.
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.