பேராசிரியர், மெளலவி.
எம்.எஸ்.எம்.ஜலால்தீன் (கபூரி)
வரலாற்று ரீதியாக இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு பேரினவாத தாக்குதல்களும், நெருக்குதல்களும் ஒவ்வொரு கால கட்டத்திலும் நடந்தேறி வந்துள்ளன.
பிரித்தானியர் ஆட்சிக்காலத்தின் இறுதிப்பகுதியில் 1915ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட ‘சிங்கள முஸ்லிம் கலகம்’, ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்டது மட்டுமன்றி, பொருளாதார, சமய, கல்வித்துறைகளிலும் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்திய மிக திட்டமிடப்பட்ட கலகமாகும்.
1915 ஆம் ஆண்டு இடம்பெற்ற இக்கொடூர கலகத்தின் பின் இலங்கையில் வடகிழக்குக்கு வெளியே இதுவரை 35க்கும் மேற்பட்ட பாரிய கலகங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
2019 இல் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பேரினவாத நிகழ்ச்சி நிரலின் தற்கால போக்கு பற்றியே இக்கட்டுரை ஓரளவு ஆய்வு செய்ய முயல்கின்றது. 2019 உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புச் சம்பவம் இடம் பெறுவதற்கு முன்னரே, குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலேயே முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத நிகழ்ச்சி நிரல் ஆரம்பமாகிவிட்டதை அப்போது இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இப்பேரினவாத, நிகழ்ச்சி நிரலின் முக்கிய கதாபாத்திரங்களாக பெளத்த தீவிரவாத மதகுருவான ஞானசார தேரரும், அவரது பொதுபல சேனா அமைப்பும் மட்டுமன்றி, சிங்கள ராவய, ஜாதிக ஹெல உருமய, சிங்கள உருமய போன்ற இனவாத அமைப்புகளும் அவற்றின் ஸ்தாபகர்களும் ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முப்பது வருடம் இலங்கையில் நடைபெற்றுவந்த உள்நாட்டுப்போர் 2009இல் முழுமையாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டபின், பெளத்த பேரினவாதம் மற்றொரு எதிர்முகாமை உடனடியாகத் தேடத்தொடங்கியது. அப்போதுதான் அவர்களுக்கு முஸ்லிம்களும், முஸ்லிம்களது நவீன இஸ்லாமிய சிந்தனைகளின் பக்கமான ஆர்வமும் தென்படத் தொடங்கியது இதுபற்றிய கருத்துக்களை விரிவஞ்சி விடுக்கின்றேன்.
பாட்டாலி சம்பிக்க ரணவக்கவும் முஸ்லிம்களும்
தனது பல்கலைக்கழக மாணவ காலத்திலேயே ஒரு தீவிரவாத மாணவராக விளங்கிய சம்பிக்க ரணவக்க ஆரம்பத்தில் ஜனதாவிமுக்தி பெரமுன இயக்கத்தில் இணைந்து செயற்பட்டபோதும் 1991ஆம் ஆண்டின்பின் தனது இளமைக்கால நண்பரான அதுரலிய ரதன தேரர், நிசாந்த வர்ண சிங்க போன்றோருடன் இணைந்து ‘ஜனதா மித்ரயோ’ என்ற இனவாத அமைப்பை உருவாக்கினார். 1993இல் நடந்த ஜனாதிபதி தேர்தலின் சந்திரிக்கா குமாரதுங்கவை ஆட்சிபீடமேற்ற இவ்வமைப்பு முன்னின்று செயற்பட்டது.
சிறிது காலத்தின்பின் “சிஹல உருமய’’ என்ற சிங்கள தேசியக்கட்சியில் இணைந்து கொண்டார். அதன்பின் சிஹல உருமயகட்சி பெளத்த தேரர்களின் அதிக பிரசன்னத்துடன் “ஜாதிக ஹெல உருமய கட்சியாக மாற்றம் செய்யப்பட்டு 2005இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக கொண்டுவர முழுமூச்சாக செயற்பட்டது.
மஹிந்த ராஜபக்ஷ, ஜாதிக ஹெலஉருமய போன்ற இனவாதக்கட்சிகள், தீவிரவாத பெளத்த பிக்குகளின் பூரண அனுசரணையுடன் ஆட்சிக்கு வந்ததால் முதலில் விடுதலைப்புலிகளை முழுமையாக துவம்சம் செய்வதை முக்கிய இலட்சியமாகக் கொண்டு செயற்பட்டது. 2009இல் இக்குறிக்கோள் பூரணமாக நிறைவேற்றப்பட்டவுடன் தமது அடுத்த எதிரியாக முஸ்லிம்களை அடையாளப்படுத்தி முஸ்லிம்களுக்கெதிரான மும்முனைத்தாக்குதலை ஆரம்பித்தது. இவ்விடயத்தில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவோ அவரது அரசாங்கமோ நேரடியாக முஸ்லிம்களுக்கு எதிராக களத்தில் குதிக்காத போதும் பட்டாலி சம்பிக்க ரணவக்க போன்ற தீவிரவாத பெளத்த அரசியல்வாதிகள் களத்தில் நின்று செயற்பட்டார்கள்.
2008ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சம்பிக்க ரணவக்க உரையாற்றும்போது இலங்கை முஸ்லிம் சமூகத்தை ‘வெளிநாட்டவர்களே’ என்று பகிரங்கமாக அறிவிப்புச் செய்ததன் மூலம் சம்பிக்க ரணவக்கவின் உண்மைமுகம் முஸ்லிம்களுக்கு தெரிய வந்தது. சம்பிக்க ரணவக்க முஸ்லிம்களுக்கு எதிரான தனது தாக்குதல்களை வெறும்பேச்சு மூலம் மட்டுமன்றி ஆய்வுகள் வெளியீடுகள் மூலமும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார்.
பெளத்த தேசியவாத வேட்கையுடனும், சிறுபான்மை மக்களின் அபிலாஷகைளுக்கு எதிராகவும் பட்டாலி சம்பிக்க ரணவக்க ஐந்து நூல்களை எழுதிவெளியிட்டுள்ளார். இவற்றில் பின்வரும் இரண்டு நூல்களும் முழுமையாக இலங்கை முஸ்லிம் சமூகத்தை சீண்டும் வகையில் எழுதப்பட்டுள்ளன.
1.நெகனஹிர சிங்கள உருமய (Sinhala Heritage in the East, கிழக்கில் சிங்கள பூர்வீகம்)
2. Al- Jihad al queida (The Past, Present and the future of Islamic Fundamentalism)
இவ்விரண்டு நூல்களில் முதல் நூலில் சிங்கள பூர்வீமும் தொல்லியல் சான்றுகளும் சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லிம் சமூகங்களால் முழுமையாக துவம்சம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றை முழுவதும் கண்டுபிடித்து பெளத்தர்களின் சிங்களவர்களின் கிழக்கு மாகாண பூர்வீகமும் தொல்லியல் சான்றுகளும் மீண்டும் நிலை நிறுத்தப்பட வேண்டு என்ற கருத்தை சிங்களவர்களை உணர்ச்சியூட்டும் வகையில் முன்வைத்தார். இவ்வாறான கருத்துக்கள் சம்பிக்க ரணவக்கவின் நூல் வெளியீடுகளுக்கு முன்பே, மிக ஆழமாக விமர்சனங்களுக்கு உட்பட்டிருந்தாலும் சம்பிக்க ரணவக்கவின் நூலே, நிகழ்கால ராஜபக்ஷ அரசாங்கத்தின் வடக்கு கிழக்கு தொல்லியல் செயலணி ஒன்று பூரண அந்தஸ்துடன் உருவாக்கப்படவும், சிங்களவர்களை மட்டுமே உ-றுப்பினர்களாகக் கொண்டு செயல்படவும் வழிவகுத்தது என்று கூறலாம். அதன் தாக்கமே பொத்துவில் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான பல நூறு ஏக்கர் நிலத்தை தொல்லியல் சான்று மிக்க பிரதேசமாக பிரகடனம் செய்ய அரசாங்கம் இன்று நடவடிக்கை எடுத்துள்ளதாகும்.
சம்பிக்க ரணவக்கவின் மற்றொரு நூலான, ‘அல் ஜிஹாதி அல் கைதா’ நூல் இலங்கை முஸ்லிம்களை குறிப்பாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாண முஸ்லிம்களையும், அவர்களின் தொல்லியல் மரபுகளையும் வரலாற்று பூர்வீகத்தையும் முழுமையாக கேள்விக்குட்படுத்தி எழுதப்பட்ட நூலாகும்.
குறிப்பாக உள்நாட்டுப்போரினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு முஸ்லிம்களின் பல்கலைக்கழக கல்வி மிக மோசமான தாக்குதலுக்கு உள்ளாகி சின்னாபின்னமாக்கப்பட்டிருந்தது. ஒரு கால கட்டத்தில் 1995 ல் தோன்றிய தென்கிழக்கு பல்கலைக்கழகம், அதன் கல்வி நடவடிக்கைகள், அதன் நிர்வாக அதிகாரிகள், மாணவர்கள் பற்றிய பல்வேறு சந்தேக எண்ணங்களையும் ஐயப்பாட்டையும் சிங்களவர் மத்தியில் மிக வேகமாக பரவச் செய்யும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இலங்கையில் காணப்படும் முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமான மத்ரஸாக்கள், அதன் கல்வி நடவடிக்கைகள் பற்றியும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மட்டும் இயங்கிவரும் இஸ்லாமிய கற்கை, அரபு மொழிப்பீடம் பற்றியும் அதன் பாடத்திட்டங்கள் பற்றியும் ஜாமிஆ நளீமிய்யா போன்ற உயர் இஸ்லாமிய கல்வி நிலையங்கள் பற்றியும் மிகவும் கற்பனையான விஷமக் கருத்துக்களை சம்பிக்க ரணவக்க இந்நூலில் ஆங்காங்கே இழையோடவிட்டுள்ளார். இவ்விஷக் கருத்துக்களின் தாக்கம் இப்போது ஓரளவு எமக்குத் தென்படுகின்றபோதிலும் எதிர்காலத்தில் பயங்கர கொரோனா தொற்று நோயாக அது உருவெடுக்கும் என்பதை முஸ்ஸிம் சமூகம் அறிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறான விடயங்களை நாம் ஆய்வுக்கு உட்படுத்தும்போது இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத தாக்குதலின் நவீன உருவாக சம்பிக்க ரணவக்கவை நான் பார்க்கிறேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடப்பதற்கு முன்பே இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத நிகழ்ச்சி நிரல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
டொக்டர் ஷாபி சிஹாப்தீன் விவகாரம்
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை அடுத்து பெளத்த பேரின வாதத்தின் முழுக்கவனமும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராகவே திசை திருப்பப்பட்டது. அதன் முதல் வேட்டையாக குருநாகல் ஆஸ்பத்திரியில் ஒரு வைத்தியராக பல ஆண்டுகள் கடமையாற்றிக் கொண்டிருந்த ஒரு அப்பாவி வைத்தியரான ஷாபி சிஹாப்தீன் இரையானார். குருநாகல் ஆஸ்பத்திரியில் தொடர்ச்சியாக இடம் பெற்று வந்த பல்வேறு முறுகல் நிலை டொக்டர் ஷாபியை பலியெடுக்க காரணமானது. தனது மனைவியும் ஒரு டொக்டராக கடமையாற்றியதுடன் ஓரளவு அரசியல் ஈடுபாடு கொண்டிருந்த டொக்டர் ஷாபி ஒரு மகப்பேறு மருத்துவராக (VOG) இல்லாதபோதும் அவ்வைத்தியசாலையிலுள்ள மகப்பேறு வைத்தியருக்கு ஒரு உதவி வைத்தியராக பல ஆண்டுகள் கடமையாற்றி பல கர்ப்பிணிப்பெண்களின் மகப்பேற்று சிகிச்சையிலும் அதிக ஈடுபாடு காட்டி வந்தார். அங்கு சிகிச்சைக்கு வரும் பல சிங்களப் பெண்களுக்கு டொக்டர் ஷாபி ஒரு பிள்ளைப்பேறு வைத்திய நிபுணராகவே அவர்களது மனங்களில் இடம் பிடித்திருந்தது மட்டுமன்றி பல சவால்களுக்குட்பட்ட மகப்பேறு அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டு மிகவும் வெற்றிகரமாக சேவை செய்தமையால் ஆஸ்பத்திரியிலும் வெளியிலும் நிலவி வந்த அவருக்கு எதிரான தொழில் போட்டி காரணமாக பல எதிர்ப்புகளை எதிர்நோக்கியிருந்தார்.
அவரிடம் சிகிச்சை பெற்ற சில சிங்களப் பெண்கள் தம்மை சட்டவிரோதமாக டொக்டர் ஷாபி கர்ப்பத்தடை செய்ததாகவும், சிலர் தாம் நிரந்தரமாகவே கர்ப்பம் தரிக்க முடியாத நிலைக்கு டொக்டரால் ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் பிரபல ஊடகங்களில் பகிரங்கமாக டொக்டரை குற்றஞ்சாட்டியதுடன் பொலிஸிலும் முறைப்பாடு செய்தனர்.
இச்சம்பவத்தை டொக்டர் ஷாபிக்கு எதிராக மாத்திரமன்றி முழு முஸ்லிம் சமுதாயத்துக்கும் எதிராக திசை திருப்பிவிட பேரினவாதம் மிகவும் ஆக்ரோஷத்துடன் செயற்பட்டு அதில் ஓரளவு வெற்றியும் கண்டது. டொக்டர் ஷாபி சுமார் 8000 சிங்களப் பெண்களை நிரந்தரமாக மலடாக்கி உள்ளதாக உள்ளூர் வெளிநாட்டு ஊடகங்களில் மிகப் பகிரங்கமாக அறிக்கை விடப்பட்டதுடன் குறிப்பிட்ட காலம் பிரபல ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளிவந்த செய்தியாகவும் இது இடம்பெற்றது.
அதுமட்டுமன்றி டொக்டர் ஷாபி முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் ஆதரவாளர் என்பதால் அவர் மீது கற்பனையில் எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பேரினவாதிகளால் சுமத்தப்பட்டன. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு நிதியுதவி செய்தமை, சஹ்ரான் ஹாஷிமோடு தொடர்பு, என்பன போன்ற பல அநியாயமான குற்றச் சாட்டுக்கள் டொக்டர் ஷாபி மீது பேரினவாதிகளால் இட்டுக்கட்டப்பட்டு, பிரசாரப்படுத்தப்பட்டன. அந்த நேரத்தில் குருநாகலில் முஸ்லிம்கள் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் வெளியில் நடமாடக் கூடத் தயங்கினர். இந்த ஊடக பிரசாரத்தால் முஸ்லிம் சமூகமே தலை குனிந்து நின்றது. இதன்மூலம் பேரினவாதிகள் தமது குறிக்கோளில் ஓரளவு வெற்றியடைந்திருந்தனர். 2019 மே மாதம் 24 ஆம் திகதி டொக்டர் ஷாபி கைது செய்யப்பட்டமை, அதன் பின் அவர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டு, இன்று வரை தமது வைத்தியத் தொழிலையும் தொடர்ந்து மேற்கொள்ள முடியாமல் தனது சொந்த ஊரில் தனது குடும்பத்தோடு வாழ முடியாமல் தனது பிள்ளைகளின் பாடசாலைக் கல்வி வாழ்வும் சீரழிக்கப்பட்டு மிகவும் கவலையான நிலைமைக்கு இந்தப்பேரினவாதிகளால் ஆக்கப்பட்டுள்ளார். இலக்கு வைக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் இக்கொடூர நிகழ்வுகள் நினைவுகளிலிருந்து ஓரளவு தம்மை சுதாகரித்துக் கொண்டபோதும் முஸ்லிம் சமூகத்தின் ஒரு உறுப்பினரான டொக்டர் ஷாபி அந்த நரக வேதனையிலிருந்து இன்னும் மீளவில்லை. பேரினவாதிகளின் இலக்கு ஓரளவு தோற்கடிக்கப்பட்டபோதிலும் அதற்கு டொக்டர் ஷாபி கொடுத்தவிலை, அவரது வாழ்வை மட்டுமன்றி அவரது செல்வங்களின் வாழ்வையும் சீரழித்துள்ளது. இவ்வனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்து டொக்டர் ஷாபி முற்றாக விடுவிக்கப்படும் நாள் வெகு தூரத்திலில்லை. முழு முஸ்லிம் சமுதாயமே அவருக்காக. இருகரம் ஏந்தி பிரார்த்தித்தால் அவர் பூரண விடுதலை அடையும் நாளே பேரினவாதத்தின் பயங்கரத் தோல்வியின் மற்றொரு வெற்றி நாளாகும்.
ஜனாதிபதி பதவியேற்பின்போது
இலங்கையில் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோத்தபாய ராஜபக் ஷ 2019 நவம்பர் 18 ஆம் திகதி பெளத்த மக்களின் புனித பூமியாகக் கருதப்படும் அனுராதபுர ருவன்வெலிசாயவில் வைத்து ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவுடன் அவரது முதலாவது ஜனாதிபதி கன்னியுரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.
“பெரும்பான்மை சிங்கள மக்களிடமிருந்து எனக்கு கிடைக்கவுள்ள ஆதரவுடன் நான் இந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவேன் என்று அறிந்திருந்தேன். எனினும் என்னோடு வந்து (இவ்வெற்றியில்) இணைந்து கொள்ளுமாறு சிறுபான்மை சமூகங்களிடம் கூறினேன். எனினும் அவர்களின் ஆதரவு எனக்குக் கிடைக்கவில்லை. எவ்வாறெனினும் நான் எல்லோருக்குமே ஜனாதிபதிதான் என்பதை இவ்விடத்தில் உறுதி செய்து கொள்கிறேன்.”
ஜனாதிபதியின் இவ்வுரை பேரினவாதிகளின் மனங்களை மகிழ்வித்தன. குறிப்பாக சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன்தான், தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக குறிப்பிட்டது சிறுபான்மை சமூகத்தைப் பொறுத்தவரையில் அவர்களுக்கான ஒரு எச்சரிக்கையாகக் கருதப்பட்டாலும் பெளத்த பேரினவாதம் தமது ஜனாதிபதியின் உரையினால் மீண்டும் தமது புஷ்டியை உயர்த்திக் கொண்டன. கோத்தாபயவின் இவ்வெற்றிக்கு பின்னால் ஓரணி திரண்டிருந்த பெளத்த மதகுருமார் ஏனைய அரசியல் வாதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள்.
அனைவரும் இவ்வெற்றியை தமது வெற்றியாக, பெளத்த பேரினவாதத்தின் வெற்றியாக தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
எவ்வாறெனினும், கடந்த ஒன்றரை வருடங்களுக்குள்ளாகவே கோத்தாபய அரசாங்கத்தின் பலவீனங்களையும், இயலாமையையும் அறிந்துகொண்ட பெளத்த பேரினவாதம் இப்போது தம் தலையில் தாமே மண்ணைப் போட்டுக் கொண்டதாக தமது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டன. எந்தளவுக்கு என்றால் கோத்தாபயவின் வெற்றிக்காக முன்னின்று செயற்பட்ட பிரபல பெளத்த மத குருவான முருத்தெட்டுவே ஆனந்ததேரர் சென்ற வாரம் நடாத்திய ஒரு ஊடக மாநாட்டில் பின்வருமாறு கூறினார்.
“படுமோசமான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு முன்னின்று செயற்பட்டதால் நரகத்திற்கு செல்ல நேரிடும் என நாட்டு மக்கள் எம்மை விமர்சிக்கின்றார்கள். மக்கள் வழங்கிய பெரும்பான்மை பலம் தவறாக செயற்படுத்தப்படுகிறது’’
இவ்வாறான கூற்றுக்களின் மூலம் பேரினவாதத்தின் தோல்வி ஆரம்பமாகி விட்டதை நாம் அறிய முடிகின்றது.
முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்தமை
கொரோனா 19 தொற்று நோயினால் உயிரிழந்த அனைவரினதும் உடல்களை அடக்கம் செய்யாமல் தகனம் செய்ய வேண்டும் என அரசு, உறுதியாக முடிவெடுத்து தொடர்ந்து செயற்படுத்தி வந்தது. இறந்த முஸ்லிம்களின் உடல்களை எந்த நிலையிலும் தகனம் செய்வது தமது மத நம்பிக்கைகளுக்கும், செயற்பாட்டுக்கும் விரோதமானது எனவும் தமது மதத்தினரின் (தொற்றினால்) உயிரிழந்த உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு அரசாங்கத்தின் காலில் விழுந்து முஸ்லிம் சமூகம் கெஞ்சியது. சர்வதேசத்திடமும் முறையிட்டது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல் அறிக்கை உடல்களை அடக்கம் செய்தவற்கும் அனுமதியளித்திருந்தபோதிலும், அரசு எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு தகனம் செய்வதிலேயே தொடர்ந்து செயற்பட்டு வந்தது. இச்செயற்பாடு முஸ்லிம்கள் அனைவரினதும் மனங்களை வெகுவாகப்பாதித்தது. முஸ்லிம் சமூகமே ஒன்று திரண்டு வல்ல அல்லாஹ்விடம் இருகரமேந்திப் பிரார்த்தித்து, அழுது மண்டியிட்டது. எவ்வாறெனினும் முஸ்லிம்களின் 200 உடல்களுக்கு மேல் தகனம் செய்யப்பட்டபின் இலங்கைக்கு விஜயம் செய்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் வேண்டுகோளை ஏற்று அரசு பல நிபந்தனைகளுடன் அடக்கம் செய்வதற்கும் அனுமதியளித்தது. இலங்கையில் குறிப்பிட்ட ஒரேயொரு மையவாடியிலேயே இதுவரை 3000க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
அண்மையில் டெல்டா பிறழ்வின் காரணமாக மிக அதிக உயிரிழப்புக்கள் நாட்டில் பதிவாகின. தகன சாலைகளில் உடல்களை தகனம் செய்ய முடியாமல் அரசு திண்டாடியது. அப்போது முஸ்லிம்களின் மரணித்த உடல்களை அடக்கம் செய்வது போன்று கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாமா? என அரசும், பெளத்த தீவிரவாதமும் தீவிரமாக ஆலோசித்ததாக அறிய முடிகின்றது. இது பெளத்த பேரினவாதத்துக்கு கிடைத்த மற்றொரு தோல்வியாக வரலாற்றில் பதிவு செய்யப்படும்.
முஸ்லிம்களின் காதி நீதிமன்றமும் விவாகரத்து சட்டமும்
“இலங்கை ஒரே நாடு ஒரே சட்டம்’’ என்ற தாரக மந்திரத்தை தூக்கிப்பிடித்துள்ள பௌத்த பேரினவாதம் முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக இந்நாட்டில் நடைமுறைப்படுத்தி வரும் காதிநீதிமன்ற கட்டமைப்பையும் முஸ்லிம்களுக்கான தனியார் விவாகரத்து சட்டத்தையும் இல்லாதொழிக்க இன்றுவரை முனைப்புடன் போராடிவருகின்றது. இப்போராட்டத்தின் முக்கிய சூத்திரதாரியாக அத்துரலிய ரதன தேரர் காணப்படுகின்றார். இதற்காக அரசும் பல முயற்சிகளை எடுத்து ஆலோசனைக் குழுக்களை நியமித்து பெளத்த பேரினவாதிகளின் உள்ளங்களை மகிழ்விக்க முயற்சித்தபோதும் இன்றுவரை எதுவும் முடிவாகவில்லை. என்னைப் பொறுத்தவரையில் அரசாங்கத்தின் இம் முயற்சிகள் மூலம் முஸ்லிம் சமூகத்தின் காதிநீதிமன்ற, விவாகரத்து சட்டங்களில் சில முன்னேற்றகரமான தீர்வுகள் வரலாம் என உணர முடிகின்றது. இறைவன் இதிலும் எமது சமுதாயத்துக்கு பூரண வெற்றியைத் தருவானாக.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பழி முஸ்லிம்களின் மீது
2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் முஸ்லிம் பெயர் தாங்கிய சிலரே முழுமையாக ஈடுபட்டதால், முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் அதன் பழியை சுமத்திய பேரினவாதம், அதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது. இதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக முஸ்லிம்களுக்கு எதிராக திசை திருப்பிவிட பேரினவாதம் கங்கணம்கட்டிக் கொண்டு செயற்பட்டது. இதற்காகவே நூற்றுக்கணக்கான சோடிக்கப்பட்ட சாட்சிகள் ஆணைக்குழுவுக்கு பேரின வாதத்தால் அனுப்பி வைக்கப்பட்டன. இப்போது ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்து, முஸ்லிம் சமூகத்தின் மீது தமது அறிக்கையை ஓரளவு திசை திருப்பிவிட்டுள்ளபோதிலும், அறிக்கையிலுள்ள பல்வேறு குறைபாடுகளையும், அறிக்கையை அரசு கையாளும் விதம் பற்றியும் உள்நாட்டில் மட்டுமல்ல, சர்வதேசத்திலும் பல்வேறு விமர்சனங்களும், கண்டனங்களும் தொடர்ந்து வெளிவரத் தொடங்கியுள்ளன.
அதிலும் விசேடமாக இத்தாக்குதலில் முழுமையாக பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ கத்தோலிக்க மக்களின் ஆயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இவ்வறிக்கை தொடர்பிலும் அதை அரசு கையாளும் விதத்திலும் தொடர்ந்து தமது சமூகம் சார்ந்த கண்டனத்தை தெரிவித்து வருவதுடன் அதற்கெதிராக பல சாத்வீகமான போராட்டங்களுக்கும் தொடர்ந்து அழைப்பு விடுத்த வண்ணமுள்ளார். கர்தினாலைப் பொறுத்தவரை இக்கொடூர தாக்குதலின் பின்னால், மறைமுக பயங்கர சக்தி ஒன்று தொடர்புபட்டுள்ளதாக பூரணமாக நம்புவதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக பதவிக்கு வந்துள்ள அரசின் சில சக்திகள் இத்தாக்குதலுக்கு முழுமையான காரண கர்த்தாக்களாக இருந்துள்ளதாக அவரின் பல்வேறு அறிக்கைகள் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளன.
இறுதியாக கடந்த 13ஆம் திகதி கர்தினால் நடாத்திய ஊடக மாநாட்டிலும் இச்சதியின் பல்வேறு அம்சங்களை மிக அழகாக தெளிவுபடுத்தியுள்ளார். குறிப்பாக அரசு, ஆணைக்குழு அறிக்கையை மீள் பரிசீலனை செய்ய தமது அமைச்சர்கள் கொண்ட குழுவை நியமித்தனர். குண்டுதாரிகளுக்கும், இராணுவ புலனாய்வு பிரிவுக்குமிடையிலான கடந்த கால நெருங்கிய தொடர்புகள் குண்டுத்தாக்குதலில் நேரடியாக பங்குபற்றிய சாராஜெஸ்மினை இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உதவியமை, இவ்வறிக்கையை பிழையாக வழிநடத்த அரசும், ஜனாதிபதியும் முயற்சிக்கின்றமை, சட்டத்துறைக்கும், நீதித்துறைக்கும் ஜனாதிபதியால் விடுக்கப்படும் அழுத்தம், அச்சுறுத்தல் என்பனபற்றியெல்லாம் கர்தினால் பல்வேறு கேள்விகளை இவ் ஊடக மாநாட்டில் எழுப்பியுள்ளார்.
சுருக்கமாக கர்தினாலும், கத்தோலிக்க சபையும் கத்தோலிக்க மக்களும் இக்குண்டுத்தாக்குதலின் பின்னணியில் முஸ்லிம் பெயர் தாங்கிய சில குழுவினர் மட்டுமன்றி, நிகழ்கால அரசின் பயங்கர மறைகரமொன்று உள்ளதாகவும், அதன் மூலமே இந்த அரசாங்கம் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ளதாகவும் பூரணமாக நம்புவதை ஊடக அறிக்கை மூலம் அறிய முடிகின்றது.
எது எப்படியோ உண்மைகள் விரைவில் வெளிவரத்தான் போகின்றது. இதற்கு சில மாதங்கள் ஆகலாம், வருடங்கள் ஆகலாம். அப்போது பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரல் சுக்கு நூறாகத்தான் போகின்றது. அதுவரை வல்ல அல்லாஹ்விடம் இருகரமேந்தி ‘துஆ’ செய்வோம்.-Vidivelli