ஓய்வுபெற்ற பின்னரும் சேவையில் இணைந்து கொவிட் தொற்றால் மரணித்த டாக்டர் ரபாய்தீன்

0 344

ஏ.ஆர்.ஏ.பரீல்

“கொரோனா வைரஸ் தொற்­றி­லி­ருந்து மக்­களைக் காப்­பாற்­று­வ­தற்கே வாப்பா மீண்டும் சேவையில் இணைந்தார். ஆனால் அவரை கொரோனா காவு கொண்­டு­விட்­டது. அவ­ரது இழப்பு ஈடு­செய்ய முடி­யா­தது. வாப்­பா­விடம் மருந்து பெற்­றுக்­கொள்­ள­ வரும் வசதி வாய்ப்­பற்ற ஏழை நோயா­ளர்­க­ளுக்கு ஓரிரு நேர மருந்­து­களை இல­வ­ச­மாக வழங்கும் வாப்பா மறு­தினம் OPD க்கு வந்து இல­வ­ச­மாக மருந்து பெற்­றுக்­கொள்­ளு­மாறு அறி­வு­றுத்­துவார். ஏழை­களை நேசித்­தவர் அவர்.”

கொரோனா வைரஸ் தொற்­றினால் வபாத்­தாகி ஓட்­ட­மா­வடி, மஜ்மா நகர் மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட டாக்டர் சஹீட் ரபாய்­தீனின் (62) மூத்த மக­ளான ஆசி­ரியை எஸ்.ஆர்.எஸ். சாஜிதா ‘ விடி­வெள்­ளி’­யிடம் இவ்­வாறு தெரி­வித்தார்.

பல வரு­ட­கால அனு­பவம் வாய்ந்த டாக்­ட­ரான வாப்­பா­வையே கொரோனா வைரஸ் பலி கொண்­டு­விட்­டது எனும் நிலையில் சமூகம் இந்த வைரஸ் தொற்­றி­லி­ருந்தும் பாது­காப்புப் பெற்றுக் கொள்­வதில் மிகவும் கவ­ன­மாக இருக்­க­வேண்டும் எனவும் அவர் கூறினார். அவர் தொடர்ந்தும் தனது தந்தை தொடர்­பான விப­ரங்­களை விடி­வெள்­ளி­யுடன் பகிர்ந்து கொள்­கையில்,

“எனது தந்தை கட்­டு­கஸ்­தோட்டை அர­சினர் வைத்­தி­ய­சா­லையில் 10 வரு­டங்கள் கட­மை­யாற்­றி­விட்டு 2019 ஆம்­ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் திகதி சேவை­யி­லி­ருந்தும் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்­றதும் வீட்டில் டிஸ்­பென்­சரி ஒன்­றினை நடாத்தி வந்தார். இந்­நி­லையில் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதி­க­ரித்த நிலையில் கட்­டு­கஸ்­தோட்டை வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­யர்­க­ளுக்கு பற்­றாக்­குறை நில­வி­யது. சுகா­தார வைத்­திய அதி­கா­ரி­யி­ட­மி­ருந்து வாப்­பா­வுக்கு அழைப்பு வந்­தது. மீண்டும் சேவையில் இணைந்து கொள்­ளு­மாறு வாப்பா வேண்­டப்­பட்டார். அத­னை­ய­டுத்து 2020 மார்ச் மாதம் வாப்பா மீண்டும் கட்­டு­கஸ்­தோட்டை வைத்­தி­ய­சா­லையில் இணைந்து கொண்டார்.

வீட்­டுக்கு மருந்து பெற்­றுக்­கொள்­ள­வரும் ஏழை நோயா­ளி­க­ளுக்கு ஓரிரு வேளை மருந்­து­களை இல­வ­ச­மாக வழங்கும் வாப்பா மறு­தினம் OPD க்கு வந்து இல­வ­ச­மாக மருந்­து­களைப் பெற்­றுக்­கொள்­ளு­மாறு அறி­வு­றுத்­துவார். குப்பை சேக­ரிக்கும் தொழி­லா­ளர்­களும் வந்து வாப்­பா­விடம் இல­வ­ச­மாக மருந்து பெற்றுச் செல்­வார்கள்.
பேரா­தனை வைத்­தி­ய­சாலை விடு­தியில் சிகிச்சை பெற்­று­வந்­த­போது அவர் நன்­றாக இருந்தார். உம்­மா­வு­டனும், பிள்­ளை­க­ளான எங்­க­ளு­டனும் நன்­றாகப் பேசினார். அதி­தீ­விர சிகிச்சைப் பிரி­வுக்கு மாற்­றப்­ப­டு­வதை அவர் அறிந்­தி­ருக்­க­வில்லை. அதி­தீ­விர சிகிச்­சைப்­பி­ரிவில் அவர் சிகிச்சை பெற்று வந்­த­போது வைத்­தி­ய­சாலை நிர்­வாகம் அவர் அருகில் செல்­வ­தற்கு எம்மை அனு­ம­திக்­க­வில்லை. நாம் தூரத்­தி­லி­ருந்தே அவ­ரைப்­பார்த்தோம். அதி­தீ­விர சிகிச்­சைப்­பி­ரிவில் அவர் சிகிச்சை பெற்று வந்த பகுதி கண்­ணா­டி­யினால் மறைக்­கப்­பட்­டி­ருந்­தது.

எனது உம்மா ஒரு மெள­ல­வியா. இரு­வரும் கண்டி கல்­ஹின்­னையைச் சேர்ந்­த­வர்கள். வாப்பா அனைத்து இன மக்கள் மீதும் அன்­புள்ளம் கொண்­ட­வ­ரா­கவும் உதவி செய்­ப­வ­ரா­கவும் இருந்தார். இதனால் பெரும்­பான்மை மக்­களும் ஏனைய இனத்­த­வர்­களும் எம்மைச் சந்­தித்து தொடர்ந்தும் அனு­தா­பங்­களைத் தெரி­வித்து வரு­கி­றார்கள். வாழ்நாள் முழு­வதும் அவ­ரது நினை­வு­க­ளு­டனே நாம் வாழ்வோம்” என்றார்.

மர்ஹும் ரபாய்தீன் டாக்­டரின் ஒரே மக­னான எம்.ஆர்.மொஹமட் ஹசன் கணக்­கீட்டு இயற்­பி­யலில் (Computational Physics) சிறப்­புப்­பட்டம் பெற்­றவர். அவர் தற்­போது Virtusa நிறு­வ­னத்தில் பணி­யாற்றிக் கொண்­டி­ருக்­கிறார். அவர் விடி­வெள்­ளி­யுடன் தனது தந்தை தொடர்­பான விப­ரங்­களைப் பகிர்ந்து கொண்டார்.

“எங்கள் குடும்­பத்தில் நாம் 5 பிள்­ளைகள். 4 பெண்கள், நான் ஒருவர் மாத்­தி­ரமே ஆண். முத­லா­வது சகோ­தரி ஓர் ஆசி­ரியை. இரண்­டா­வது சகோ­தரி டாக்டர். அக்­க­ரைப்­பற்று வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்றி வந்த அவர் தற்­போது இட­மாற்றம் பெற்­றுள்ளார். மூன்­றா­வது சகோ­த­ரியும் டாக்டர். அவர் லேடி ரிஜ்வே வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்­று­கிறார். நான்­கா­வது சகோ­தரி மருந்­தகத் துறையில் பட்­டப்­ப­டிப்பு படித்­து­விட்டு பேரா­தனை வைத்­தி­ய­சா­லையில் பணி­யாற்­றி­வ­ரு­வ­துடன் Mphil பயின்று வரு­கிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம்­ தி­கதி கொரோனா பரி­சோ­த­னை­யின்­போது வாப்­பா­வுக்கு கொரோனா வைரஸ் தொற்­றி­யிருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது. இத­னை­ய­டுத்து வாப்பா பேரா­தனை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார். ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை தொற்று தீவி­ர­ம­டைந்­ததைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி மாலை வாப்பா பேரா­தனை வைத்­தி­ய­சா­லையின் அதி­தீ­விர சிகிச்­சைப்­பி­ரி­விற்கு இட­மாற்றம் செய்­யப்­பட்டார்

ஆகஸ்ட் 17 ஆம் திக­தி­யி­லி­ருந்து 27 ஆம் திகதி வரை வைத்­தி­ய­சாலை விடு­தியில் நான் வாப்­பா­வுடன் அவ­ருக்கு துணை­யாக இருந்தேன். வைத்­தி­ய­சாலை விடு­தி­யி­லி­ருந்து அதி­தீ­விர சிகிச்சை பிரி­வுக்கு மாற்­றப்­ப­டும்­போது அவ­ருக்கு மூச்­சு­வி­டு­வதில் சிரமம் இருந்­தது.

அவர் அதி­தீ­விர சிகிச்­சை­பி­ரிவில் 19 நாட்கள் சிகிச்சை பெற்றார். அங்கு வாப்­பா­வுக்கு அருகில் நாம் செல்ல அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. வெளியில் தூரத்தில் இருந்தே நாம் அவரைப் பார்த்தோம்.

வைத்­தி­ய­சாலை சாதா­ரண விடு­தியில் அவர் சிகிச்சை பெற்று வந்­த­போது அவர் என்­னுடன் நன்­றாக கதைத்தார். அறி­வு­ரைகள் கூறினார் தான் யாருக்கும் தவறு செய்­தி­ருந்தால் மன்­னிப்­பு­கேட்க வேண்­டு­மென்றார். தனது ஓய்­வூ­தி­யத்தை உம்மாவுக்கு பெற்றுக் கொடுப்பதற்­கான ஏற்­பா­டு­களை செய்­யு­மாறு வேண்­டிக்­கொண்டார். இருக்கும் கடன்­களை மீள செலுத்­தி­வி­டு­மாறும் தெரி­வித்தார்.

‘மெளத்து’ எந்த நேரத்­திலும் வரும். அதற்குத் தயா­ராக இருக்­க­வேண்டும் என்றார். எதிர்­கா­லத்தில் எவ்­வாறு வாழ வேண்டும் என்ற வழி­மு­றை­களைக் கூறினார். கடந்த செப்­டெம்பர் மாதம் 15 ஆம் திகதி அவர் வபாத்­தானார். இவ்­வு­லகை விட்டும் பிரிந்தார்.
கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் எப்­போதும் அவர் எங்­க­ளுக்கு ஆலோ­ச­னைகள் வழங்­குவார். வீட்­டுக்குள் நுழை­யும்­போது கை கால்­களைக் கழுவிக் கொள்ள வேண்டும் என்றார்.

வாப்­பாவின் மறைவு என்னை மிகவும் பாதித்­துள்­ளது. பேரா­தனை வைத்­தி­ய­சா­லையில் சாதா­ரண விடு­தியில் சிகிச்­சை பெற்று வந்­த­போது அவர் திட­மா­கவே இருந்தார். எங்­க­ளுடன் உரை­யா­டினார்.

அவ­ரது மறைவை அறிந்து பெரும்­பான்மை மக்கள் பெரு­ம­ளவில் வந்து எங்­க­ளுக்கு ஆறுதல் கூறி­னார்கள். அல்­லாஹ்வின் நாட்­டப்­ப­டியே அனைத்தும் நடந்து விட்­டது.
மர்ஹும் டாக்டர் ரபாய்­தீ­னுடன் பணி­யாற்­றிய கட்­டு­கஸ்­தோட்டை வைத்­தி­ய­சாலை பணி­யா­ளர்கள் அவரைப் பற்றிக் கூறு­கையில்,
கொவிட் வைரஸ் பரவல் அதி­க­ரித்­தி­ருந்த காலத்தில் தனது உயி­ரையும் மதிக்­காது வைத்­தி­ய­சே­வையில் இணைந்து கொண்ட டாக்டர் உண்­மை­யிலே ஓர் தியாகி. அவரை எம்மால் ஒரு போதும் மறக்க முடி­யாது.

அவ­ரது இழப்பு எம்மையும், வைத்­திய பணி­யா­ளர்­களையும் பெரிதும் பாதித்­துள்­ளது. நோயா­ளர்­களை நண்பர் போன்­று­க­ருதி சேவை­யாற்­றி­யவர் அவர்.
டாக்டர் ரபாய்தீன் இந்த வைத்தியசாலையில் 10 வருடங்களாக சேவையாற்றினார். சேவையிலிருந்து இளைப்பாறிய பின்பும் நோயாளர்களைப் பாதுகாப்பதற்காகவே சேவையில் இணைந்தார். நோயாளர்களுடன் அன்பாக உரையாடினார். அவருடன் இறுதி நேரத்தில் பேசக்கிடைக்கவில்லை என்பது எமக்கு பெரும் கவலையாக இருக்கிறது. இவரது இழப்பை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது. அவருக்காக நாம் பிரார்த்திக்கின்றோம்” என்றார்கள்.

டாக்டர் ரபாய்தீனின் ஜனாஸா ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இலங்கையில் கொரோனாவினால் பலியான நான்காவது டாக்டர் ரபாய்தீன் ஆவார். அன்னாருக்கு ஜென்னத்துல் பிர்தெளஸ் கிடைக்க வேண்டுமென நாமும் பிரார்த்திப்போம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.