எஸ்.அஷ்ரப்கான்
அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் நில ஆக்கிரமிப்பு சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்ற வண்ணமே உள்ளது. அந்த அடிப்படையில் சம்மாந்துறை-, வளத்தாப்பிட்டி, கரங்காவட்டை விவகாரம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
பரம்பரை பரம்பரையாக அதாவது கடந்த 60 க்கும் மேற்பட்ட வருட காலமாக முஸ்லிம்களுக்குச் சொந்தமான, அவர்களால் தொடராக விவசாயம் செய்து வந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை சிங்களவர்கள் ஆக்கிரமிப்பு செய்வதாகவும் விவசாயம் செய்யவிடாது அத்துமீறுவதாகவும் அதனை மீட்டுத்தருமாறும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
அம்பாறை – சம்மாந்துறை பிரதேச எல்லையில் அமைந்துள்ள வளத்தாப்பிட்டியில் உள்ள முஸ்லிம்களின் பூர்வீகக் காணியான கரங்காவட்டை தற்போது சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
1943 ஆம் ஆண்டிலிருந்து இந்தக் காணியில் முஸ்லிம்கள் விவசாயச் செய்கையில் ஈடுபட்டிருந்தனர் என்பது வரலாறாகும். இப்போது இந்த காணியில் முஸ்லிம்கள் கால்வைக்கமுடியாத நிலை உருவாகியுள்ளது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் 2013 ஆம் ஆண்டு அம்பாறையில் நடைபெற்ற ‘தேசத்துக்கு மகுடம்’ கண்காட்சியின் பின்னர் அந்தக் காணிகள் முஸ்லிம்களிடமிருந்து திட்டமிட்டு பறிக்கப்பட்டன. தற்போது அந்தக் காணிக்குள் அத்துமீறி சிங்களவர்கள், வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ச்சியாக குறித்த காணியில் சிங்கள மக்கள் விதைப்புக்கான உழவு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதுவிடயமாக பாதிக்கப்பட்ட மக்கள் பிரதேச அரசியல்வாதிகள் அரசாங்க அதிகாரிகள் உட்பட ஜனாதிபதியின் கவனத்திற்கும் தங்களது பிரச்சினைகளை எடுத்துக்கூறியிருந்தனர்.
இது தொடர்பில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் பண்டாரநாயக்கா தலைமையில் மாவட்ட செயலகத்தில் விவசாயிகளின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணும் நோக்கில் உயர்மட்ட கலந்துரையாடலொன்றும் அண்மையில் இடம்பெற்றது.
கரங்கா வட்டையில் விவசாயிகள் விவசாயம் செய்வதில் தடையாக இருந்து ஒரு குழுவினர் அத்துமீறி செயற்பட்டதை தடுத்து நிறுத்தி நிரந்தரமான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காஸிம், சட்டத்தரணி முஷாரப் முதுனபின், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். நௌஸாத், அம்பாறை அரசாங்க அதிபர், அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சம்மாந்துறை மற்றும் அம்பாறை பிரதேச செயலாளர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் சம்மாந்துறை – அம்பாறை கரங்காவட்டையில் விவசாயிகள் எவ்வித தடைகளுமின்றி விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதற்கான சகல ஏற்பாடுகளையும் தான் செய்ய தயாராக உள்ளதாக அரசாங்க அதிபர் உறுதியளித்ததாகவும் மேலும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இவ்விடயம் தொடர்பில் தான் கவனம் செலுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க உள்ளதாகவும் யாரையும் அத்துமீறி இந்த பிரதேசங்களில் செயற்பட அனுமதிக்கப்போவதில்லை என்று உறுதியளித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இக்கலந்துரையாடல் இடம்பெற சில மணித்தியாலங்களுக்கு முன்னர் அத்துமீறியவர்களுடன் அம்பாறை அரசாங்க அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் தொடர்ந்தும் அத்துமீறும் செயற்பாடுகளை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் போது அவர்கள் தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளில் தாங்கள் ஈடுபடமாட்டோம் என்று அரசாங்க அதிபரிடம் உறுதியளித்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களிடம் தெரிவித்தார்.
ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதிலேயே அரசியல்வாதிகள் முதற்கொண்டு அரச அதிகாரிகளும் குறியாக இருக்கின்றனர் என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர் றிஸ்வான் குறிப்பிடும்போது, “எங்களின் காணி என்பதற்கான முழு ஆதாரமும், உறுதிப்பத்திரங்களும், வரைபடங்களும் எங்களிடம் உள்ளன. இந்த விவகாரம் தீர்க்கப்படாமல் நீடித்தால் இனக்கலவரம் உருவாகும் வாய்ப்பும் கூட ஏற்படலாம். எனக்கு சுமார் இரண்டு ஏக்கர் காணி அங்கு உள்ளது. நானும் இங்குள்ள காணிகளுக்கு சொந்தக்காரர்களும் பரம்பரையாக விவசாயம் செய்து வருகின்றோம். இப்போது இவர்கள் எங்களது காணியை அபகரிக்க முற்படுவது முற்றிலும் அநியாயமானது. என்ன கூட்டம் போட்டு தீர்வுகள் எடுத்தாலும் அதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலையே இந்த சந்தர்ப்பம் வரை காணப்படுகின்றது.
பிரதேச மத குரு ஒருவர் குறிப்பிட்ட சில ஏக்கர் காணிகளில்தான் நீங்கள் விவசாயம் செய்யலாம் என கூறுகின்றார். 250 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளுக்குரிய அரசாங்கத்தின் சகல உறுதி ஆவணங்களும் எம்மிடம் இருக்கின்றது. இருந்தாலும் அந்த மத குரு நாங்கள் அவர்களது காணிகளில் அத்துமீறியதாக அரச அதிபரிடம் கூறுவதுடன் எங்களைக் கைது செய்யுமாறும் கூறினார். ஆனால் அரச அதிபர் மற்றும் அதிகாரிகள் எல்லா ஆவணங்களுடன் இருக்கும் இவர்களை எவ்வாறு கைது செய்ய முடியும் எனக்கூறியது மன ஆறுதலைத் தந்தது. இருந்தாலும் இதுவரை எமது பிரச்சினைக்கு தீர்வு கிட்டவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மற்றொரு விவசாயியான மீராசாஹிபு இஸ்மாலெப்பை என்பவர் குறிப்பிடும்போது, “எனக்கும் எனது சகோதரிக்கும் 4 ஏக்கர் காணி உள்ளது. எங்கள் தாய் தகப்பன் இவ்வளவு காலமும் பராமரித்து வந்த காணிகளே இவை, காலாகாலமாக நாம் தான் இதனை பராமரித்தும் விவசாயம் செய்தும் வருகிறோம். இப்போது வந்து அவர்கள் இவை தமது காணிகள் என உரிமை கோருகின்றனர். இது எமது காணி நீங்கள் வரக் கூடாது என உத்தரவிடுகின்றனர். அரவாக்கத்தி, கோடரி, அரிவாள் கொண்டு வந்து எம்மை விரட்டுகிறார்கள். இது விடயமாக நாங்கள் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளோம். எமக்கு நீதி வேண்டும்” என்றார்.
பாதிக்கப்பட்ட மற்றொரு காணி உரிமையாளர் எம்.எப். றஜாய் கூறுகையில், “ இது எங்கள் மூத்த வாப்பாவின் காணி. அவர் அதனை எங்களுடைய உம்மாவுக்கு வழங்கினார். இப்போது உம்மா சுகயீனம் காரணமாக வீட்டில் இருக்கிறார். அதனை நான் பராமரித்து வருகிறேன். 60 வருடங்களுக்கு மேலாக இந்த காணியை நாம் பராமரித்து வருகிறோம். எனவேதான் இந்த காணியை சிங்கள ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டுத் தருமாறு உயர் அதிகாரிகளை கேட்டுக்கொள்கின்றேன். இது தொடர்பில் அம்பாறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும், அவர்கள் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இந்தப் பாரதூரமான விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகள் எவரும் உரிய முறையில் கவனத்தைச் செலுத்தாமையே தங்களது காணிகள் பறிபோவதற்கான பிரதான காரணம். இவர்கள் கலந்துரையாடினாலும் எமக்கு சாதகமான எந்த தீர்வும் எட்டப்படவில்லை என்பது கவலையாக உள்ளது.
எங்களின் காணிக்குள் நாங்கள் சென்று வேளாண்மைக்கு தயாராகும் சந்தர்ப்பங்களில் சிங்கள மக்கள் மண்வெட்டி, கத்தி, கரும்பறுக்கும் இயந்திரங்களை கொண்டு எங்களைத் தாக்க வருகிறார்கள்” என்றார்.
இலங்கையின் நாலாபுறங்களிலும் ஆங்காங்கே சிறுபான்மைகளின் காணிகள் மீது அத்துமீறும் இந்த நிலை மாற்றப்பட வேண்டும். அதற்காக அரசியல்வாதிகள் முயற்சிகளை மேற்கொண்டாலும் அம்முயற்சி போதாது என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கருத்தாகும். பௌத்த தேரர் இங்கு தலையிடுவதன் ஊடாக இது இன, மத ரீதியான பிரச்சினையாக மாற்றப்பட்டு வன்முறைகள் தோற்றம் பெறலாம் எனும் அச்சம் நிலவிவருகிறது.
அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் இந்த விடயத்தில் தலையிட்டு தீர்வு காண முயற்சிக்கின்ற போதிலும் அவர்களது நடவடிக்கைகளில் மக்கள் பூரண திருப்தி கொள்ளவில்லை என்பது தெரிகிறது. அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் வாக்குறுதியளித்துள்ள போதிலும் அங்கு சிங்கள காணி ஆக்கிரமிப்பாளர்களின் அச்சுறுத்தல் தொடர்வதாகவே பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் கூறுகிறார்கள். இந்த விவகாரம் காரணமாக தாம் தமது காணிகளுக்குள் செல்லும் போது தாக்குதல்களுக்கு முகங்கொடுக்க நேரிடலாம் என்ற நியாயமான அச்சத்தையும் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.
எனவேதான் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான காணிகளை மீட்க அரசியல்வாதிகள் முதற்கொண்டு அனைத்து தரப்பினரும் மிகவும் கரிசனையோடு செயற்பட வேண்டும். அதன் மூலமே கரங்காவட்டை காணிப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.-Vidivelli