பன்மைத்துவத்தின் முன்மாதிரி பேராதனைப் பல்கலைக்கழகம்

0 1,885
  • ஏ.மொஹமட் பாயிஸ்

“கடந்த வருடம் பேராதனைப் பல்கலைக்கழகம் 75ஆவது பவள விழாவைக் கொண்டாடியது. இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஐவர் ஜெனிங்ஸ் இப்பல்கலைக்கழகம் கட்ட நடவடிக்கை எடுக்கும்போது விஷேடமாக எமது நாட்டின் பன்மைத்துவம் பற்றி மக்களின் உணர்வுகள், தேவை பற்றி நன்றாகப் புரிந்துகொண்டு அடித்தளம் இட்டிருக்கிறார் என்பது இன்று நன்கு புரிகிறது. உண்மையில் எந்தவொரு சமூகத்திலும் அல்லது நிறுவனத்திலும் தலைமைப் பொறுப்பை ஏற்கும் நபரொருவர் புத்தி சாதுர்யமான தூரநோக்குடையவராக இருப்பது முக்கியமான ஒன்றாகும். அவர் வெளிநாட்டவராக இருப்பினும் இந்த நாட்டினதும் மக்களினதும் சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டவராக தனக்கு கொடுக்கப்பட்ட பணியை செவ்வனே நிறைவேற்றியிருக்கிறார்” என்று கூறுகிறார் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த சமய பேராசிரியர் அதிவணக்கத்திற்குரிய முவட்டகம ஞானாநந்த தேரர்.

இலங்கை ஒரு மதசார்புடைய நாடு. இங்கு நான்கு மதங்களைப் பின்பற்றுபவர்கள் பெருமளவில் வாழ்கின்றனர். மதங்கள் இம் மக்களின் ஆன்மீக, லௌகீக வாழ்கையை நெறிப்படுத்துவதற்கு வழிவகுக்கின்றன. ஆனாலும் மதத்தின் பேரால் பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன. அப்பிரச்சினை மனிதர்களின் வாழ்வை சிதைத்ததுண்டு. அவ்வாறின்றி பிறரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அனைவரையும் சமமாக மதித்து சம வழிபாட்டை மேற்கொள்ள இடமளிக்கும் ஓர் இடமாக பேராதனைப் பல்கலைக் கழகத்தை அமைத்திருப்பது சிறப்புத்தான்.

“இப் பல்கலைக்கழகத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். எமது பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் சமய நடவடிக்கைகள் மற்றும் விசேட பூசைகளில் ஏனைய இன மாணவர்களும் கலந்துகொள்ளச் செய்வதில் எமது பல்கலைக்கழக இளம் மாணவர்கள் விருப்பத்துடன் செயற்படுகிறார்கள். ஏனைய அனைத்து இன மாணவர்களும் அவ்வாறான நிகழ்வுகளில் ஒற்றுமையாகக் கலந்துகொண்டு சிறப்பிப்பது இங்கு விசேடமான அம்சமாகும்” என்று இப் பல்கலைக்கலகத்தின் மதவழிபாட்டு பன்மைத்துவத்தின் சிறப்பம்சத்தை எமக்கு தெளிவுபடுத்தினார் அதிவணக்கத்திற்குரிய முவட்டகம ஞானாநந்த தேரர்.

பயமறியாத வேகம்கொண்ட இளவயதினரை மத, இன பேதம் கடந்து ஒன்றாக இணைத்து செல்வதில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. ஆனாலும் அனைவருக்கும் சம அந்தஸ்தை வழங்கி சமமாக மதிக்கப்படுமாக இருந்தால் நாம் பல்கலைக்கழகங்களில் இருந்தே பன்மைத்துவ பண்பை வளர்க்க முடியம். இவ்வாறு அனைத்து பல்கலைக்கழகங்களும் வெற்றிகண்டால் நாட்டின் முக்கால்வாசிப் பிரச்சினை தீர்ந்துவிடும். நாம் ஒரு பன்மைததுவ நாட்டில் வாழ்கிறோம் என்பதை எல்லோரும் நினைவில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு ஒவ்வொருவரினதும் நடவடிக்கைகள் இருக்கவேண்டும். நமது இனம், நமது மதம் மட்டும்தான் இருக்கிறது என்று எண்ணி வாழும் பலரால்தான் பல பிரச்சினைகள் எழுகின்றன.

இப்பல்கலைக்கழகத்தில் இந்து, பௌத்த, கத்தோலிக்க, ரோமன் கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் சமய மதஸ்தலங்கள் நிறுவப்பட்டு பரிபாலிக்கப்பட்டு வருகின்றன. உண்மையில் பேராதனைப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் 700 ஹெக்டயர் நிலப்பரப்பைக் கொண்டது. இந்தளவு பெரிய விஸ்தீரணம் கொண்ட நிலப்பரப்பில் வணக்க ஸ்தலங்களை நிறுவியது வெறுமனே வழிபாட்டுக்கு மட்டுமல்ல. இந்த நாட்டின் பன்மைத்துவத்தை எப்போதும் நினைவுபடுத்தும் அடையாளமாக உள்ளன.

“இந்த பல்கலைக் கழகத்திலுஉள்ள கிறிஸ்த்தவ மாணவர்களின் மத வழிபாடுகளை பூர்த்தி செய்வதற்காகவே இவ்வாலயம் கட்டப்பட்டது. உண்மையில் இந்தப் பல்கலைக்கழகத்தில் சமய ஒருமைப்பாடு காணப்படுகின்றது. அனைத்து சமயங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மத ஸ்தலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. உண்மையில் பேராதனை பல்கலைக்கழகத்தில் ஆரம்பத்திலிருந்து சமய நடுநிலைமை பேணப்பட்டு வந்துள்ளது. எமது தேவாலயங்களில் கிறிஸ்தவ மத மாணவர்களுக்கு மாத்திரமல்லாமல் அனைவருக்கும் ஏற்றார்போல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோம். அனைவரும் அதில் பங்குகொள்வர். ஆகவே இவ்வாறான மதஸ்தலங்களின் ஊடாக நாம் மத வேறுபாடுகளை உருவாக்காது மத இணக்கப்பாட்டினையே ஏற்படுத்துகின்றோம்” என்று பேராதனை பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவ பாட விரிவுரையாளர் உறுதிபடத் தெரிவித்தார்.

“எமது மதஸ்தலம் உட்பட பல்கலைக்கழக வளாகத்தினையும் சுத்தம் செய்யும் பணியொன்றினையும் முன்னெடுத்தோம். அதன்போது எமது அழைப்பினை ஏற்று ஏனைய மத மாணவர்களும் குறித்த சிரமதானத்தில் பங்குபற்றினர். நாம் மற்றுமொரு நிகழ்வாக பைபிலின் வரலாறு குறித்து தெளிவுபடுத்தும் அமர்வொன்றினையும் ஏற்பாடு செய்தோம். அதில் பிரதம பேச்சாளராக முஸ்லிம் மௌலவி ஒருவர் கலந்து கொண்டார். குறித்த நிகழ்வில் ஏனைய மதத் தலைவர்களும் கலந்துகொண்டனர். எமது பள்ளிக்கு ஏனைய மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் வருகை தருவதில் எவ்வித தடையுமில்லை. அவர்களின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்றாற்போல் வசதிகள் செய்து கொடுக்கப்படும்” என்றும் மதகுருவான லலித் குணதிலக தமது மதஸ்தலத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களை பெருமையுடன் தெரிவித்தார்.

பிற மதங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் வழங்கும் லலித் குணதிலக போன்ற மதகுருக்கள் சூழலை நன்குணர்ந்து மாணவர்களை ஒன்றிணைக்கும் பொது வேலைத்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

“இந்தக் கோவில், பல்கலைக்கழகத்தால் நிர்மாணிக்கப்பட்டது. நானும் பிரதம குருவும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள். கோவில் கடமைகளைப் புரிவதற்காக இங்கு வந்திருக்கிறோம். இந்தக் கோவிலை இப்பல்கலைக்கழகத்திலுள்ள தமிழ் விரிவுரையாளர்களும், மாணவர்களுமே நிர்வகித்து வருகிறார்கள். இங்கு தைப்பூசை அலங்கார உற்சவம், கும்பாபிசேகம், நவராத்திரி, கந்தசஷ்டி, சிவராத்திரி விசேட பூசைகள் என பல வழிபாடுகள் நடைபெறுகின்றன. இவ்விசேட பூசைகளில் தமிழ் மாணவர்கள் உட்பட ஏனைய அனைத்து இன மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்” என பேராதனை பல்கலைக்கழக குறிஞ்சி குமரன் கோவிலின் குருக்கள் கணபதிப்பிள்ளை சாருஜன் தெரிவிக்கிறார்.

பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் மதங்கடந்து, மொழிகள் கடந்து, கலாசாரம் கடந்து அவர்கள் மனிதாபிமானத்தோடும் பிறமதங்களை, மனிதர்களை கண்ணியப்படுத்தும் நோக்கோடும் ஒன்று கூடுவதுதான் மிக முக்கியமான அம்சமாகும். அவ்வாறான தலத்தை இந்துக் கோவில் போன்ற வணக்கஸ்த்தலங்களும் அதன் மதகுருக்களும் இங்கு ஏற்படுத்துகிறார்கள்.

“இந்தப் பள்ளிவாசலில் ஒவ்வொரு நாளும் ஐந்து நேரத் தொழுகை நடைபெறுகின்றது. அதேபோன்று வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகை நடக்கிறது. இந்த பள்ளிவாசல் இப்பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸினால்  பரிபாலனம் செய்யப்படுகிறது. பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் மஜ்லிஸ் ஆகியன இணைந்து இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். இரத்த நன்கொடை, ரமழான் இப்தார் ஏற்பாடுகள் போன்றவற்றை ஏனைய மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் பங்குபற்றுதலோடு மேற்கொண்டு வருகின்றோம். அதேபோன்று இங்கிருக்கும் மதஸ்தாபனங்களின் தலைவர்களோடு நெருங்கிய தொடர்போடும் நல்லிணக்கத்தோடும் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம்” என்று பேராத.னை பல்கலைக்கழக பள்ளிவாசலின் இமாமான மௌலவி மொஹமட் ஹிஸ்புல்லாஹ் தெரிவிக்கிறார்.

மதஸ்தலங்கள் மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்கு வழிவகுப்பதாகும். எந்தவொரு மதமாக இருந்தாலும் அது அவ்வாறான நோக்கத்துடனேயே இருக்கிறது. அதனது வழிபாட்டுத்தலங்கள் மனிதர்களுக்கு ஆத்மீக திருப்தியை பெற்றுக் கொடுக்கின்றன. ஆனால் இவைகளெல்லாம் சிறந்த வழிகாட்டலுடனேயே நடத்தப்பட வேண்டும். மதங்கள் மனிதர்களுடைய நடவடிக்கைகளை வணக்கஸ்தலங்களில் முடக்கிப் போடவில்லை. அவை அவற்றையும் கடந்து முழு வாழ்கையோடும் தொடர்புபடுத்துகிறது. அதற்கான வழிகாட்டல்களும் வாய்ப்புகளும் இங்குள்ள வணக்கஸ்தலங்களினூடாக செய்துவருவதாக அனைத்து மத தலைவர்களும் குறிப்பிடுகின்றனர்.

“நாட்டினைப் பொறுத்தவரை முஸ்லிம், இந்து, பௌத்த, கிறிஸ்தவ பாடசாலைகள் என பாகுபடுத்தியிருப்பது பிரச்சினைதான். முஸ்லிம் பாடசாலைகளில் இனவாத எண்ணக்கருக்கள் புகட்டப்படலாம். தனி இந்து பாடசாலைகளில் இனவாத கருத்துக்கள் புகட்டப்படலாம். அதேபோல் பௌத்தம், கிறிஸ்தவம். எனவே பாடசாலைகளில் இவ்வாறு இனவாத கருத்துக்கள் உள்வாங்கப்பட்டிருந்தாலும் பல்கலைக்கழகங்களுக்கு வரும்போது அந்த நிலை முற்றிலும் மாறுபடவேண்டும். இதையும் கருத்திற்கொண்டுதான் நாம் மத பன்மைத்துவத்தை இங்கே கட்டமைத்து நடைமுறைப்படுத்தி வருகிறறோம்.” என்கிறார் உபவேந்தர் பேராசிரியர் உபுல் பி. திஸாநாயக்க.

பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும், மத குருக்களும் மத ரீதியான பன்மைத்துவத்தை கட்டமைப்பதற்கு பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது சிறப்பே. நடைமுறையிலும் அதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை ஏற்படுத்தி செயற்பட்டு வருகின்றனர்.

நாட்டின் முக்கிய வகிபாகத்தைக் கொண்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்தான் நாளைய அறிவுச் சமூகமாக மாறுகிறது. நாட்டை இயக்கும் சக்தியாக உள்ளனர். இந்நிலையில் நாட்டில் பன்மைத்துவத்தைப் பேண இந்த அடையாளங்கள் மட்டும் போதுமா? பன்மைத்துவ அடையாளங்களை மட்டுமல்ல பன்மைத்துவ அம்சங்களை நினைவுறுத்தி பன்மைத்துவ சமூகத்தில் வாழ்வது எப்படி என்பதையும் இந்தஅடையாளம் கற்றுக்கொடுக்கவேண்டும்.!
Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.