முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்தை ஆதரியுங்கள்
முஸ்லிம் தலைவர்கள், அரசியல்வாதிகளிடம் ஐ.நா. அறிக்கையாளர் சஹீட் கோரிக்கை
ஆண்களைப் போன்றே பெண்களுக்கும் மத சுதந்திரம் அல்லது நம்பிக்கையைப் பின்பற்றுவதற்கு சம உரிமை உண்டு என்பதை அங்கீகரிக்கும் வகையில், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தை திருத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குமாறு முஸ்லிம் தலைவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அழைப்பு விடுக்கிறேன் என மதம் மற்றும் மத ரீதியான நம்பிக்கைகளுக்கான சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் கலாநிதி அஹமட் சஹீட் தெரிவித்துள்ளார்.
‘போருக்குப் பின்னரான இலங்கையில் முஸ்லிம்கள் : அடக்குமுறை, எதிர்ப்பு, மறுசீரமைப்பு” எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு இணைய வழியாக நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் முழுமையான மறுசீரமைப்பைக் கொண்டு வருவதற்கு இலங்கையின் அமைச்சரவை கடந்த ஏப்ரல் மாதம் அனுமதி வழங்கியமை குறித்து நான் அறிவேன்.
முன்மொழியப்பட்டுள்ள மறுசீரமைப்பானது முஸ்லிம் பெண்களுக்கு நீதியை சிறப்பாக அணுகுவதற்கான வழிமுறைகளை உள்ளடக்க வேண்டும். முஸ்லிம் விவாக விவகாரத்துச் சட்டம் மற்றும் ஆண்களை மட்டுமே கொண்ட காதி நீதிமன்ற முறைமை, முஸ்லிம் பெண்கள் மீதான உரிமை மீறல்கள் உள்ளிட்டவற்றை சீர்திருத்துவதற்காக கடந்த 60 வருடங்களாக நீடித்து வரும் போராட்டத்தில் இது ஒரு முக்கிய தருணமாகும். இந்த வாய்ப்பை வீணாக்கக் கூடாது.
அத்துடன் முஸ்லிம், கண்டியன், தேசவழமை உள்ளிட்ட தனியார் சட்டங்களை திருத்துமாறும் இவற்றில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாரபட்சமான அம்சங்களை நீக்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.
இதேவேளை முஸ்லிம் சமூகத்தின் மனித உரிமை விவகாரங்கள் குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார்.
“முஸ்லிம் சமூகத்தையும் அவர்களின் வழிபாட்டுத்தலங்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற கலவரத்தைத் தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டில் உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்கள் இடம்பெற்றன.
நான் இலங்கையில் மதரீதியான சிறுபான்மையினரின் மனித உரிமைகள் நிலை குறித்து தொடர்ச்சியாகக் கண்காணித்து, அறிக்கையிட்டிருக்கின்றேன். அதுமாத்திரமன்றி சிறுபான்மையின சமூகத்திற்கு எதிரான வன்முறைகள் மற்றும் வெறுப்புணர்வை முடிவிற்குக்கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அரசாங்கத்தைத் தொடர்ச்சியாக வலியுறுத்தியிருக்கின்றேன்.
இனங்களுக்கு இடையிலான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதில் அரசியல் மற்றும் மதத்தலைவர்களுக்குரிய பொறுப்பை வலுப்படுத்துவதற்கும் சமூகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தேன்.
கொவிட் – 19 வைரஸ் பரவல் மனித உரிமைகள் நிலைவரம் மேலும் மோசமடைவதற்கு வழிவகுத்தது. குறிப்பாக விஞ்ஞானரீதியான நிரூபிக்கப்படாத நிலையிலும்கூட, முஸ்லிம் சமூகத்தின் மதரீதியான நம்பிக்கைக்கு முரணான வகையில் கொவிட் – 19 வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்வதைக் கட்டாயமாக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிப்பதையும் மாற்றுக்கருத்துக்களை வெளியிடுவதையும் குற்றமாக்குவதற்கும் அத்தகைய நபர்கள்மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. இச்சட்டத்தின்கீழ் நூற்றுக்கும் அதிகமானோர் தன்னிச்சையான முறையில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதுடன் அவர்களில் அநேகமானோர் இன-மதரீதியான சிறுபான்மையினரும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் சட்டத்தரணிகளுமாவர்.
இலங்கையில் முஸ்லிம்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் வன்முறைகள் மற்றும் அதிகரித்துவரும் வெறுப்புணர்வுப்பேச்சுக்களுக்கு எதிராக செயற்பட்டுவந்த பிரபல சட்டத்தரணியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து பயங்கரவாத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.- Vidivelli