கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
முன்னோர் வகுத்தவழி முறைப்படியே
வாழுவது நன்மை தரும் என்று சொல
நான் அங்கே மறைந்துவிட்டேன்
– கவிஞர் அப்துல் காதர் லெப்பை
சொந்தக் கோடரி தான் கொண்டு
சுயமே வெட்டுன் பாதைதனை
முந்திச் சென்றோர் அடிமீது
முனைந்து நடத்தல் பாபமதாம்
–அல்லாமா இக்பால்
செப்டெம்பர், இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் அஷ்ரப் அவர்களின் புகழ்பாடும் மாதம். இப்பாடலின் வரிகள் வெவ்வேறானாலும் அதன் ராகம் ஒன்றுதான். அதாவது அவர் திறந்த அரசியல் பாதை வழியேதான் வாழ்பவர்களும் வாழப்போகிறவர்களும் நடந்துசெல்ல வேண்டும் என்பதாகும். இந்தச் சிந்தனையைப்பற்றிச் சில கருத்துக்களை முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
மர்ஹூம் அஷ்ரப் அவர்களை என்னால் மறக்கமுடியாது. அவர் எனது தந்தை கவிஞர் அப்துல் காதர் லெப்பையின் அரசியற் சிந்தனை தோற்றுவித்த ஒரு தலைவன். என் தந்தை இருதய நோயினால் பீடிக்கப்பட்டுப் போராடிக் கொண்டிருக்கையிலே அடிக்கடி மாத்தளைக்குச் சென்று அவரைக் கவனித்து, அவர் மரணித்த போது நான் உடனிருந்து செய்ய வேண்டிய கடமைகள் யாவற்றையும் அவரது பெறாமகன் ஆப்தீனுடன் சேர்ந்து கவனித்த அந்தப் பெருமகனை நன்றியுணர்வுடன் சதா நினைவுபடுத்திக்கொண்டே வாழ்கிறேன். ”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு” என்பதற்கொப்ப அஷ்ரபின் நினைவு என்றும் என்னில் நிலைத்திருக்கும். ஆனாலும் அவர் வகுத்த அரசியற்பாதையில் ஓர் அடிகூட எடுத்துவைக்க நான் விரும்பவில்லை. அந்தப் பாதையே இன்று வாழும் இலங்கை முஸ்லிம்களின் நெருக்கடியான நிலைமைக்கு முக்கிய காரணம் என்பதையும் அந்தப் பாதையை விட்டும் விலகினாலன்றி முஸ்லிம்களின் எதிர்கால சபீட்சம் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கும் என்பதையும் நான் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளேன். அவருடைய புகழ்பாடும் இந்தச் சூழலிலும் அதையே மீண்டும் இக்கட்டுரை தெளிவுபடுத்த விரும்புகிறது.
அஷ்ரப் வளர்த்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்னும் அரசியல் மரத்தின் விதை நடப்பட்டது கிழக்கு மாகாணத்தின் கல்முனையில் அல்ல, மத்திய மாகாணத்தின் மாத்தளையில். அதனை விதைத்த ஐவரும் இன்று உயிருடன் இல்லை. என் தந்தை, அஷ்ரப், அவரின் மாமா மாவட்ட நீதிபதி ஹுஸைன், கவிஞரின் பெறாமகன் ஆப்தீன், அவரின் மனைவி பரீதா ஆகியோரே அவ்வனைவரும். மாவட்ட நீதிபதி என் தந்தையின் சிந்தனைத் தோழன். அவர்களது தோழமை பதுளையில் ஆரம்பமாகி குருத்தலாவ வரை சென்று மாத்தளையிலே பூர்த்தியானது. அப்போது வாலிபன் அஷ்ரப் சட்டக்கல்லூரி மாணவராகவும் திருமணச் சந்தையில் விலைபெறக் காத்திருப்பவராகவும் இருந்தார்.
அது ஜெயவர்தனவின் ஆட்சிக்காலம். அவர் கொண்டுவந்த அரசியல் யாப்பு சிறுபான்மை இனங்கள், அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள், தமது வாக்குப் பலத்தால் அரசியல் கட்சிகளுடன் பேரம்பேசும் நிலைமையை அகற்றும் நோக்குடனும் அதே சமயம் லங்கா சமசமாஜக் கட்சி, பொதுவுடமைக் கட்சி போன்ற இடது சாரிகளின் செல்வாக்கை முறியடிக்கும் நோக்குடனும் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு யாப்பு. இந்த யாப்பின் தந்திரத்தை முறியடிக்க ஒரே வழி முஸ்லிம்கள் ஒரே குடையின்கீழ் ஒன்று திரள்வதுதான் என்று நினைத்தவர்களே கவிஞரும் மாவட்ட நீதிபதியும். இவர்கள் இருவரினதும் முடிவுக்கு முன்னுதாரணமாக விளங்கியது முகம்மதலி ஜின்னாவின் இந்திய முஸ்லிம் லீக் கட்சியும் அதன் பாக்கிஸ்தான் போராட்டத்தின் வெற்றியும். அப்போராட்டத்தின் சமகாலத்தவர்கள் இவ்விரு சிந்தனையாளர்களும். ஜின்னாவைப்போன்று சட்டத்தையே ஆயுதமாகக் கொண்டு முஸ்லிம்களை ஒரே கட்சியின் கீழ் திரட்டக்கூடிய ஒரு தலைவன் இலங்கையிலும் உருவாக வேண்டுமெனக் கனவு கண்டனர். அந்தக் கனவிலே தோன்றியவரே அஷ்ரப்.
அப்பொழுது நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டேன். என் வருகையின் பின்னணியும் அரசியலே. அதை இங்கே விபரிக்கத் தேவையில்லை. முஸ்லிம்களுக்கென ஒரு தனிப்பட்ட அரசியற் கட்சி வேண்டும் என்ற கருத்தையும் அதற்குப் பொருத்தமான தலைவன் அஷ்ரப் என்பதையும் கடிதம் மூலம் என்தந்தை எழுதியிருந்தார். அந்தக் கருத்தை எனது பதில் மூலம் அன்றே நிராகரித்ேதன். என் தந்தையும் மாவட்ட நீதிபதியும் இலங்கை முஸ்லிம்களுக்குள் ஒரு ஜின்னாவைத் தேட நானோ ஓர் அபுல்கலாம் ஆஸாத்தையோ இன்னும் ஒரு பதியுதீனையோ தேடினேன். இன்றும் தேடுகிறேன். எனது பிரதிவாதமோ இதுதான்: இந்தியாவைப்போன்று இலங்கையிலும் முஸ்லிம்கள் நாடெங்கிலும் பரந்து வாழ்கின்றனர். ஆனால் செறிவாகச் சில மாகாணங்களிலும் சிதறலாகப் பலமாகாணங்களிலும் வாழ்கின்றனர். இந்தியாவில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்த மாகாணங்களின் பலத்தினால் வென்றெடுக்கப்பட்டதே பாக்கிஸ்தான். அதன் விளைவாகச் சிதறலாக வாழ்ந்த சுமார் 120 கோடி முஸ்லிம்கள் அனாதரவாக்கப்பட்டு இந்துத்துவவாதிகளின் இன்னல்களால் இன்று இந்தியாவில் நசுக்கப்படுகிறார்கள். அதேபோன்று இலங்கையிலே கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பலத்தைக் கொண்டு உருவாகும் ஒரு தலைமை எவ்வாறு ஏனைய மாகாணங்களிலே சிதறுண்டுவாழும் முஸ்லிம்களின் நலனைப் பாதுகாக்கும் என்பதே எனது பிரதிவாதம். அதை நான் வெளிப்படுத்தியபின் தந்தை எனக்கு எழுதிய ஒரு கடிதத்தில், ”நீயும் அஷ்ரபும் இரு துருவங்களில் நிற்கிறீர்கள்” எனக் குறிப்பிட்டபின் அவ்விடயம்பற்றி எழுதுவதை நிறுத்திக் கொண்டார். எனது வாழ்க்கையிலேயே என் தந்தையுடன் நான் முரண்பட்டது இந்த ஒரு விடயத்திலேதான்.
இன்றுள்ள முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்கள் பலர் அன்று விடுதலைப் புலிகளால் ஏற்பட்ட ஆபத்துகளிலிருந்து முஸ்லிம்களைக் காப்பாற்ற அந்தக் கட்சியே ஒரே பரிகாரமாக இருந்தது என்றும் இன்றைய தலைமைப்பீடம் கட்சியைச் சீரழித்துவிட்டது என்றும் எனவே அதனைச் சீர்படுத்தி திறமையுள்ள ஒரு தலைமைத்துவத்தின்கீழ் கொண்டுவர வேண்டுமென்றும் வாதாடுகின்றனர்.
விடுதலைப்புலிகள் முஸ்லிம்களை வேட்டையாடியது உண்மையே. ஆனால் புலிகளின் பலத்தைக் கண்டு விரண்ட தமிழ் முஸ்லிம் தலைவர்கள் அவ்வியக்கத்தின் போராட்டம் என்றுமே வெற்றிபெறாது என்பதை ஏனோ உணரத்தவறிவிட்டனர். அதற்குரிய காரணங்களை லண்டனிலிருந்து வெளிவந்த Tamil Times என்ற சஞ்சிகையில் 1986ல் நான் சுட்டிக்காட்டி இருந்தேன். தமிழ் நாடு தனி நாடாகாதவரை தமிழீழம் வரமுடியாது என்பதே அக்காரணங்களின் சுருக்கம். அதை உணர்ந்திருந்தால் தனிப்பட்ட ஒரு கட்சியை அமைக்காது இலங்கை அரசுடன் இணைந்து தமிழ் முஸ்லிம் தலைவர்கள் மாற்று வழியொன்றைக் கையாண்டிருக்கலாம். புலிகளுக்கும் அதைப் புரியவைத்திருக்கலாம். இப்போது இது நடந்து முடிந்த கதை. அதைப்பற்றி மேலும் விபரிக்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால் புலிகளினாலேதான் முஸ்லிம் காங்கிரஸ் உருவாகவேண்டி இருந்தது என்று கூறினால் புலிகள் ஒழிந்தபோதும் ஏன் இக்கட்சி இன்னும் இயங்குகிறது? ஏனெனில், இஸ்லாம், முஸ்லிம் என்ற கோஷங்களை எழுப்பி, வாக்காளர்களை ஏமாற்றி, தலைவர்களாகிச் செல்வந்தர்களாகலாம் என்ற சுயலாப நோக்கு. அதைத்தானே இன்றுள்ள காங்கிரஸ் அரசியல்வாதிகள் செய்துள்ளனர்? முஸ்லிம்களுக்கெனத் தனிக்கட்சியொன்றை அமைக்காமல் அன்றைய முஸ்லிம் தலைவர்கள் சிலர் சாதித்ததில் ஒரு சதவீதத்தையேனும் இவர்களால் சாதிக்க முடிந்ததா? இல்லையென்றால் ஏன் இந்த ஏமாற்று வித்தை?
இதனிடையே, இன்றைய முஸ்லிம் தலைவர்கள்மேல் அதிருப்திகொண்டு அரும்புகின்ற ஓர் இளைய தலைமுறை அஷ்ரபின் புகழ்பாடிக்கொண்டு அவர்காட்டிய வழியில் கட்சியைச் சீரமைப்போம் என்று கூறி இன்னொரு கட்சியையும் அமைக்கப் போவதாக வதந்திகள் உலாவுகின்றன. ஒரே குட்டையில் ஊற இன்னுமொரு மட்டையா? இது முஸ்லிம்களை இந்நாட்டின் நிரந்தர எதிரிகள் என்று பெரும்பான்மை மக்களிடையே பரப்ப விளையும் முட்டாள்தனம்.
இன்று முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளோ அனந்தம். அவற்றுள் எதையுமே முஸ்லிம்கள் தனித்துநின்று போராடித் தீர்க்க முடியாது. பெரும்பான்மை இனத்துடன் சேராமல் சிறுபான்மை இனங்கள் எதுவும் எதையும் வென்றெடுக்க முடியாது. இதனைத் தமிழர்களும் உணரவேண்டும். ஆனால் இன்றுள்ள ஆளும் கூட்டணிதான் சிங்கள பௌத்த பேரினவாதத்தை வளர்க்கும் அணியென்றால் அக்கூட்டணியை எதிர்க்கும் கட்சிகளும் அதனையே ஒரு துரும்பாகப் பாவித்து ஆட்சியைப் பிடிக்க முனைகின்றன. ஆகவே அவர்களிடமும் இன்றைய பிரச்சினைகளைத் தீர்க்கப் பரிகாரம் இல்லை. அதேவேளை, பெரும்பான்மை மக்களெல்லாருமே பேரினவாதிகள் அல்லர் என்ற உண்மையையும் சிறுபான்மை இனங்கள் உணரவேண்டும்.
சிங்கள பௌத்த மக்கள் சகிப்புத் தன்மையும் தாராளமனமும் விருந்தோம்பும் குணமும் எவருடனும் சரளமாகப் பேசிப்பழகும் பண்பும் உள்ளவர்கள். அதை இலங்கையின் பண்டைய வரலாறு அழகாகத் தெளிவுபடுத்துகிறது. அந்தப் பண்புகள் அவர்களிடம் இல்லாதிருந்திருந்தால் முஸ்லிம்கள் இந்நாட்டில் குடிகொண்டிருக்க முடியுமா? முஸ்லிம் சிறுபான்மையினரை பௌத்த சிங்கள மன்னர்கள் ஆதரித்தவாறு வேறு எந்த நாட்டிலும் எந்த அரசனும் ஆதரித்ததில்லை என்பதை அடிக்கோடிட்டு எழுதலாம். அந்தப் பண்புகளைத் திட்டமிட்டுச் சீர்குலைத்தவர்கள் அவர்களிடையே உருவாகிய அரசியல்வாதிகளும் அந்த அரசியல்வாதிகளுக்குப் பின்னால் இயங்கிய தீய சக்திகளுமே. எழுபது வருடங்களுக்கும் மேலான சுதந்திர இலங்கையின் சீரழிவு இந்தச் சீர்குலைவினால் ஏற்பட்டதை இன்று அந்த மக்களே உணர்கின்றனர். அந்த மக்களிடையே இப்போது உருவாகியுள்ள சிவில் இயக்கங்கள் பலவும் புத்திஜீவிகளும் மதத் தலைவர்கள் பலரும் இதனை உணர்ந்து பெரும்பான்மை மக்களுக்கு யதார்த்தத்தைப் புரியவைக்கப் பாடுபடுகின்றனர். அவர்களுக்குக் கைகொடுத்து உதவி அவர்களுடன் சேரவேண்டியது முஸ்லிம் சிவில் இயக்கங்களினதும் புத்திஜீவிகளினதும் தலையாய கடமை. அதைவிடுத்து மாண்டவர்களின் புகழ்பாடிக்கொண்டு உருப்படியான ஒரு செயற்திட்டமும் இல்லாமல் முஸ்லிம்களை ஏமாற்ற முயலும் பச்சோந்திகளை முஸ்லிம்கள் ஒதுக்க வேண்டும்.
அஷ்ரப் மறைந்துவிட்டார். அவர் வாழ்ந்த சூழல் வேறு, இன்றுள்ள சூழல் வேறு. இன்றுள்ள இனவாதம் பேசும் எல்லாக் கட்சிகளுமே இந்த நாட்டினதும் அதன் பல்லின அமைப்பினதும் எதிரிகளே. துவேஷத்தினால் ஆட்சிபீடம் ஏறியவர்கள் சிறுபான்மை இனங்களைப் பலிக்கடாக்களாக்கி தொடர்ந்தும் நாட்டைச் சூறையாடுவதை சிங்கள பௌத்த மக்களே இப்போது உணரத் தொடங்கிவிட்டனர். கொள்ளை நோயையும் பொருட்படுத்தாது அவர்கள் போராட்டத்தில் இறங்கி விட்டனர். நாட்டை இப்போது முடக்கி அவசரகாலச் சட்டத்தையும் பிறப்பித்திருப்பது அந்தப் போராட்டங்களைத் தடுப்பதற்காகவே. நாடு திறபட்டதும் போராட்டங்கள் மீண்டும் தொடரும். முஸ்லிம்களும் தமிழர்களும் அவர்களுடன் இணைந்துபோராடும் சந்தர்ப்பம் இது. முஸ்லிம்களைப் பொறுத்தவரை இதைவிடச் சிறந்த வழி வேறில்லை. அஷ்ரபின் பெயரைச் சொல்லிக்கொண்டும் முஸ்லிம் கட்சிகளைக் கட்டிப்பிடித்துக்கொண்டும் கூத்தாடுவது முஸ்லிம் சமூகத்தையே புதை குழிக்குள் தள்ளிவிடும்.-Vidivelli