எம்.ஏ.எம். அஹ்ஸன்
புனித மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலில் சுமார் நான்கு தசாப்தங்களாக துப்பரவாக்கல் பணியினை செய்து வரும் பாக்கியத்தைப் பெற்றவர்தான் பாகிஸ்தானைச் சேர்ந்த அஹமத் கான். 61 வயதான இவர், 1983 இல் தனது 23 ஆவது வயதில் சவூதி அரேபியாவின் மக்காவுக்கு தொழில் தேடி பயணம் செய்திருக்கிறார். அந்த நேரத்தில் தனது அடுத்த நான்கு தசாப்த வாழ்க்கையை மக்காவில் தான் தொடரப்போகிறேன் என அவர் நினைத்திருக்கவே இல்லை.
தற்போது அஹமத் கான் மஸ்ஜிதுல் ஹரமில் துப்பரவு தொழிலாளர்களுக்கான பிரதான மேற்பார்வையாளர்களுள் ஒருவராக இருக்கிறார். பாகிஸ்தானில் இருந்து சவூதி அரேபியாவுக்கு செல்லும்போது தனது பெற்றோரிடம் தான் விரைவில் நாடு திரும்புவதாகவே அவர் சொல்லியிருக்கிறார். ஆனால் மஸ்ஜிதுல் ஹரமுக்கு சேவை செய்வதை தனது பாக்கியமாகக் கருதிய அஹமத் கான் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லாது சவூதியிலேயே தங்கி விட்டார். மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலின் இரண்டாவது மூன்றாவது விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் கஃபா மறுசீரமைப்பு திட்டங்களின்போது அர்ப்பணிப்புடன் அஹமத் கான் தமது வேலைகளை செய்திருந்ததுடன் குறித்த பணிகளை நேரடியாக கண்களால் காணும் பாக்கியத்தையும் பெற்றிருக்கிறார்.
சவூதி அரேபியாவில் 40 வருடங்களாக காலம் கடத்துகின்ற போதிலும் தான் ஒருபோதும் குடும்பத்திடம் இருந்து விலகி இருப்பதுபோல உணர்ந்ததில்லை என்று அஹமத் கான் கூறுகிறார். அஹமத் கான் எப்போதும் தன்னை ஒரு அதிஷ்டசாலியாகவே உணர்கிறார். “மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலுக்கு சேவை செய்வதோடு மாத்திரமன்றி அங்கு தொழுவதற்கும் முடிகின்றது. நான் எப்போதும் புனித கஃபாவுக்கு மிக அருகில் தான் இருக்கிறேன். இது இறைவனுடன் சிறந்த உறவைக் கொண்ட நபருக்கு மட்டுமே கிடைக்கும் ஒரு பெரிய பாக்கியம். நான்கு தசாப்தங்களாக இந்த வேலையைச் செய்ய முடிந்ததில் நான் மனநிறைவடைகிறேன்” என அவர் தெரிவிக்கிறார்.
ஆரம்ப நான்கு வருடங்களும் வெளிப்புற முற்றங்களை சுத்தம் செய்வதில் பணி செய்த அஹமத் ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு பணிகளை மாறி மாறி செய்துள்ளார். சக முஸ்லிம்கள் சமய கடமைகளை செய்யும்போது வசதியாக உணர வேண்டும் என்று எப்போதும் கரிசனையுடன் செயற்பட்டு வந்ததாக அவர் தெரிவிக்கிறார். அதனை மிகவும் விருப்பத்துடன் ஒரு கடமையாக மற்றும் பாக்கியமாக எண்ணி செய்து வருகிறார்.
மன்னர் பஹத் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் ஆட்சியில் சவூதி அரேபியாவுக்கு வருகை தந்த அஹமட் சவூதியின் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவங்களை நேரடியாகக் கண்டுள்ளதுடன் கஃபாவை மறுசீரமைக்கும் காட்சிகள் மற்றும் மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலை விரிவுபடுத்தும் பணிகளையும் நேரில் காணும் வாய்ப்பினை பெற்றவர் ஆவார். எப்போதும் இந்த விடயங்களை நினைவுபடுத்தி தன்னை ஒரு அதிஷ்டசாலியாக உணரும் அஹமத் கான்; அவ்வாறான விடயங்களை எல்லா இடங்களிலும் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்வார். மன்னர் பஹத் பின் அப்துல் அஸீஸ் ஆட்சிக் காலத்தில் கஃபாவை புனரமைக்கும் வேலைத்திட்டத்தை நேரில் கண்ட இவர் தனது வாழ்க்கையில் அதை ஒரு மிகவும் அழகான விடயமாக உணர்கிறார்.
இவ்வாறான வரலாற்று சிறப்புமிக்க விடயங்களை காணும் பாக்கியத்தை வழங்குவதற்கு தன்னை இறைவன் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்று அஹமத் கான் நம்புகிறார். தனது கடினமான உழைப்பு மற்றும் நேர்மை என்பவற்றிற்காக அனைவர் மத்தியிலும் நன்மதிப்பை இவர் பெற்றிருந்தார். உலகின் எல்லா பகுதியில் இருந்தும் வரும் அன்பான மக்களை வரவேற்று அவர்கள் புனித இஸ்லாமிய சமய கடமைகளை வசதியான முறையில் செய்து முடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதையே அஹமத் கான் பெரிதும் விரும்புகிறார். அர்ப்பணிப்புடனும் மிகுந்த விருப்பத்துடனும் குறித்த சேவையினை அவர் செய்து வருகின்றார்.
அஹமத் கான் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். அவரது இரண்டு மகன்களுள் ஒருவர் புனித மக்காவின் இலத்திரனியல் திணைக்களத்தில் பணி செய்கிறார். மகளும் மகனும் பாகிஸ்தானில் வசிக்கிறார்கள். புனித மக்கா மற்றும் மதீனாவுக்காக சேவை செய்யும்போது தனிமை உணர்வோ அல்லது களைப்போ வருவதில்லை என்று சொல்லும் அஹமத் கான், மக்காவில்தான் தனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று மிகவும் உணர்வுபூர்வமாக கூறுகிறார். புனித பள்ளிவாசலின் எந்தவொரு இடத்திலும் அன்பு, சந்தோஷம், அமைதி, அருள் என்பவற்றை பெற முடிகின்றது என்றும் அஹமட் கருதுகிறார்.
(சவூதி அரேபியாவிலிருந்து வெளிவரும் அரப் நியூஸ் பத்திரிகையில் வெளியான ஆக்கத்தின் தமிழ் வடிவம்) – Vidivelli