ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டம் இரு வாரங்களாக அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்று வருகின்றது. இக் கூட்டத் தொடரில் பாகிஸ்தான் சார்பில் இந்தியாவுக்கு பதிலளித்து உரையாற்றிய பாகிஸ்தான் இராஜதந்திரி சைமா சலீம் இன்று உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இரு கண்களினதும் பார்வையை இழந்த அவர், ஐ.நா. சபையில் பிரெய்ல் மொழியைப் பயன்படுத்தி உரையாற்றிய முதலாவது கண் பார்வையற்ற இராஜதந்திரி என்ற பெருமையைப் பெற்றுள்ளதே இதற்குக் காரணமாகும்.
பிரெய்ல் மொழியில் குற்றெழுத்துக்களால் தயார் செய்யப்பட்ட உரையை, எந்தவித தடங்கல்களுமின்றி மிகத் தெளிவாக வாசித்தமை பாகிஸ்தானில் மாத்திரமன்றி உலக நாடுகள் மத்தியிலும் சைமா சலீமுக்கு பெரும் பாராட்டைத் தேடித் தந்துள்ளது.
“நான் மாத்திரமன்றி முழு தேசமும் சைமாவைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம். பார்வைக் குறைபாட்டைக் கொண்ட மாற்றுத்திறனாளியாக இருந்தும் ஐ.நா.வில் ஒரு சிறந்த உரையை அவர் நிகழ்த்தினார். திறமை உள்ளவர்கள் வாழ்வில் உயர பாகிஸ்தான் எப்போதுமே சமமான வாய்ப்புகளை வழங்கும்” என அந்நாட்டு ஜனாதிபதி ஆரிப் அல்வி பாராட்டியுள்ளார். அதேபோன்று பாகிஸ்தானின் அமைச்சர்கள் பலரும் சைமாவைப் பாராட்டி டுவீட் செய்துள்ளர். அத்துடன் பாகிஸ்தான் மக்கள் இவரை சமூக வலைத்தளங்களில் பெருமையுடன் பாராட்டி வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தான் வதிவிட பிரதிநிதி அலுவலகத்தில் கவுன்சிலராக கடமையாற்றுகிறார் சைமா சலீம். ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை, மேற்படிப்பு முடித்த சைமா, அதே துறையில் ஆய்வுப்பட்டமும் முடித்திருக்கிறார். 2007இல் பாகிஸ்தான் மத்திய உயர்நிலை சேவையில் தேர்வெழுதி தேசிய ரீதியாக ஆறாம் இடத்தைப் பிடித்தார். ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் பெற்று வெளிவிவகாரத்துறையில் மேல் படிப்பையும் இவர் முடித்தார்.
‘ரெட்டினிட்டிஸ் பிக்மென்டோசா’ என்ற கண் பார்வை குறைபாடு நோயால் பாதிக்கப்பட்ட இவர், தனது பதிமூன்றாவது வயதில் கண் பார்வையை இழந்தார். இவருக்கு உடன் பிறந்த நான்கு சகோதரர்கள் உள்ளனர். அவர்களில் இருவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ளது. அதில் ஒருவரான யூசுப் சலீம், நாட்டிலேயே முதலாவது கண் பார்வை குறைபாடுடைய நீதிபதியாக இருக்கிறார். சைமாவின் சகோதரியும் கண் பார்வை குறைபாடு மிக்கவர். அவர் லாகூர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.- Vidivelli