அரபு நாடுகளை நாடும் இலங்கை
அமைச்சர் சரத் வீரசேகரவை அரபு நாட்டு இராஜதந்திரி திடீரென சந்தித்தது ஏன் ?
இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில் கடனுதவிகளையும் ஏனைய பொருளாதார நலன்களையும் பெற்றுக் கொள்ளும் பொருட்டு அரபு நாடுகளின் இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.
கடந்த வாரம் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ நியூயோர்க்கில் வைத்து குவைட் நாட்டின் பிரதமர் ஷெய்க் சபா அல் சபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான ஐம்பது வருடகால நெருங்கிய தொடர்புகள் நட்புறவுடன் கூடிய இராஜதந்திர உறவுகள் பற்றி நினைவூட்டிக்கொண்ட இரு தலைவர்களும், இந்த தொடர்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டுமென்று வலியுறுத்திக்கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஜனாதிபதியுடன் நியூயோர்க் சென்ற வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளரைச் சந்தித்து கலந்துரையாடினார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உட்பட பல்தரப்பு அரங்கில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவிற்கு வரவேற்புத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அரசியல் நோக்கங்களுக்காக நாடுகளை தனிமைப்படுத்துவதை எதிர்ப்பதாகவும் மாறாக தேசிய பிரச்சினைகளை அந்தந்த நாடுகளே தீர்த்துக்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபான்று அமைச்சர் பீரிஸ் துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லட் சவுஷோலுவையும் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேசக் கட்டமைப்புக்களில் இலங்கை – துருக்கி ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இருநாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ள எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தலைமையிலான குழுவினர் இவ்விரு நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களுடன் எரிபொருளுக்கான உதவிகளைப் பெற்றுக் கொள்வது குறித்து பல பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளனர். அத்துடன் அஸர்பைஜான் எரிசக்தி அமைச்சருடனும் அமைச்சர் உதய கம்மன்பில பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதனிடையே கொழும்பிலுள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதரக பொறுப்பதிகாரி ஹுமைத் அல் தமீமி, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை கடந்த வாரம் அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் ரொஹான் குணரட்னவும் பங்குபற்றியுள்ளார். இதன்போது இரு நாடுகளினதும் உறவுகள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகின்ற போதிலும், அண்மையில் அல்லாஹ்வை அவமதிக்கும் வகையில் தேரர் ஒருவர் வெளியிட்ட வெறுப்புப் பேச்சு தொடர்பில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலேயே ஐக்கிய அரபு இராச்சியத்தின் அதிகாரி அமைச்சர் வீரசேகரவை சந்தித்திருக்கலாம் என இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன. தேரரின் கருத்தை ஆதரிக்கும் வகையில் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தமையும் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
மேலும் அரசாங்கமும் அதன் அமைச்சர்களும் உள்நாட்டில் முஸ்லிம்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்கின்ற அதேநேரம் முஸ்லிம் நாடுகளுக்குச் செல்லும்போதும் அதன் இராஜதந்திரிகளைச் சந்திக்கும்போதும் முஸ்லிம்களுடன் நெருக்கமான உறவைப் பேணுவது போன்று பாசாங்கு செய்வதாகவும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.-Vidivelli