-
பொய்த் தகவல்களால் மக்களைக் குழப்பும் உளவுப் பிரிவு
-
ஞானசார தேரரின் கூற்றை மெய்ப்படுத்த முயற்சிக்கின்றனரா?
எம்.எப்.எம்.பஸீர்
பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலை ஒத்த மற்றொரு தாக்குதல் இடம்பெறப் போவதாக கடந்த 13 ஆம் திகதி கூறியிருந்தார். அது தொடர்பில் தன்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கூற்றினை தொடர்ந்து இலங்கையில் உளவுத் தகவல் பரிமாற்ற கட்டமைப்பின் வங்குரோத்து நிலையை உணர்த்தும் விதமாக இரு வேறு சம்பவங்கள் சமூக வலைத் தளங்கள் ஊடாகவும் பிரதான ஊடகங்கள் ஊடாகவும் வெளிப்படுத்தப்பட்டன. ஒரு வட்ஸ் அப் குழு தகவல் பரிமாற்ற விவகாரம் மற்றும் போப்பிட்டிய தேவாலயத்துக்கு கடற்படை குழுவொன்று சென்று தெரிவித்த விடயங்களே அவை.
ஞானசார தேரரின் தொலைக்காட்சி நேர்காணல் தகவல் முதல், கடற்படை குழுவின் எச்சரிக்கை வரை அனைத்து விடயங்களையும் ஒரு சேர ஒன்றிணைத்து ஆராயும் போது, பின்னணியில் ஏதோ ஒன்று நடக்கிறதா எனும் சந்தேகம் எழுகிறது.
வட்ஸ் அப் பரபரப்பும் பொலிசாரின் விளக்கமும்:
கடந்த 25, 26 ஆம் திகதிகளில் சமூக வலைத் தளங்களில் பொலிஸ் திணைக்களத்தின் கீழ் உள்ள உளவுப் பிரிவொன்றின் கடிதத்தை மையப்படுத்தி பரபரப்பு விடயங்கள் பகிரப்பட்டன.
‘இன்டர் ஸ்கூல்’ எனும் பெயரில் வட்ஸ் அப் குழுவொன்று செயற்படுவதாகவும், அது ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு சொந்தமானது எனவும், மேல் மாகாண உளவுப் பிரிவினால் அறிவிக்கப்பட்ட விடயம் அடங்கிய அறிக்கையொன்றே இவ்வாறு சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பு நிலயை ஏற்பட்டுத்தியிருந்தது.
மேல் மாகாண உளவுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் புஷ்பகுமாரவினால் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அனுப்பப்பட்ட கடிதமே இவ்வாறு சமூக வலைத்தளங்களுக்கு கசிந்துள்ளது.
அக் கடிதத்திலேயே, ‘ இன்டர் ஸ்கூல்’ எனும் பெயரிலான ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பின் வட்ஸ் அப் குழுவொன்று தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும், அந்த குழுவில் இணையும் எவரும் மீள அதிலிருந்து விலக முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டு விஷேட விசாரணைகளும் கோரப்பட்டிருந்தன.
இந்த உளவுத் தகவல் கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதி வியாழனன்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் 24 ஆம் திகதி வெள்ளியன்று அவருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக அக்கடிதத்தில் இடப்பட்டுள்ள குறிப்புகள் ஊடாக தெளிவாகிறது.
எவ்வாறாயினும் குறித்த உளவுப் பிரிவின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் போலியானவை என தேசிய உளவுச் சேவை (எஸ். ஐ.எஸ்.) பாதுகாப்பு அமைச்சுக்கும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கும் அறிவித்துள்ளது. குறித்த கடிதத்தில் உள்ள வட்ஸ் அப் குழு தொடர்பிலான தகவல் 2017 ஆம் ஆண்டு முதல் உலா வரும் விடயம் எனவும், அதனை பொரளையில் உள்ள மேல் மாகாண உளவுப் பிரிவு மீள கடிதமாக அனுப்பியுள்ளதால், அக்கடிதம் சமூக வலைத் தளங்களுக்கு கசிந்துள்ளதன் பின்னணியில் வீண் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய உளவுத் துறை சுட்டிக்காட்டியுள்ளதாக அறிய முடிகின்றது.
இந் நிலையில் கடந்த 26 ஆம் திகதி பிற்பகல் பொலிஸ் தலைமையகம் விஷேட அறிக்கை ஒன்றினை இது தொடர்பில் வெளியிட்டது. அவ்வறிக்கையின் பிரகாரம், சமூக வலைத் தளங்களில் பகிரப்படும் அறிக்கை மேல் மாகாண உளவுப் பிரிவினரால் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்டது தான் என உறுதி செய்துள்ள பொலிஸ் தலைமையகம், அதில் தெரிவிக்கப்பட்டுள்ள வட்ஸ் அப் குழு தொடர்பிலான விடயம் உறுதி செய்யப்பட்ட உண்மை தகவல் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அத்தகைய விடயம் ஒன்றினை சமூக வலைத் தளத்தில் பகிர்வது தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என சுட்டிக்காட்டியுள்ள பொலிஸ் தலைமையகம், இலங்கை பொலிசார் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய எந்த தகவலாக இருப்பினும் அதனை பெற்று ஆராய்ந்து அவசியம் ஏற்படின் நடவடிக்கைகளுக்காக உரிய தரப்பினருக்கு அறிவிப்பர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. அத்தகைய அறிக்கை ஒன்றினை பகிரங்கமாக சமூக ஊடகங்களில் பகிர்வது அரச இரகசியங்கள் குறித்த சட்டத்தின் கீழும் குற்றமாகும் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. உயர் பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் இரகசியமாக பகிரப்பட்ட இக் கடிதம் எவ்வாறு சமூக வலைத்தளங்களுக்கு கசியவிடப்பட்டது என்பது குறித்தும் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போபிட்டிய தேவாலயத்துக்கு சென்ற கடற்படை குழு கூறியதென்ன?
ஜா – எல – போபிட்டிய, சென். நிக்கலொஸ் தேவாலயம் மீது குண்டுத் தாக்குதலொன்று இடம்பெறப் போவதாக கடந்த 28ஆம் திகதி செவ்வாயன்று கடற்படையின் விஷேட குழுவினர் சென்று அங்கு சேவையாற்றும் ஒருவரிடம் குறிப்பிட்டு எச்சரிக்கையாக இருக்குமாறு கூறியுள்ளனர். இதனை அந்த தேவாலய அருட் தந்தை ஜயந்த நிமல் வெளிப்படுத்திய நிலையில் பரபரப்பு நிலை ஏற்பட்டது.
குறித்த தினம் முற்பகல் 10.05 மணிக்கு வெலிசறை கடற்படை முகாமிலிருந்து, கெப் ஒன்றில் சென்றுள்ள கடற்படை குழு ஒன்று, அங்கு அருட் தந்தை இருக்காத நிலையில், தாக்குதல் ஒன்று நடாத்தப்படப் போவதாகவும் மிக அவதானமாக இருக்குமாறும் தேவாலயத்தின் பணியில் இருந்த பெண் ஒருவரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.
பின்னர் அருட் தந்தை ஜயந்த நிமல் தேவாலயத்துக்கு வந்து இது தொடர்பில் பேராயர் இல்லத்துக்கும் அறிவித்து, விடயம் தொடர்பில் தேடிப் பார்த்துள்ளனர்.
இதனையடுத்து மீண்டும் மாலை வேளை உஸ்வெட்டகொய்யாவ முகாமிலிருந்து கடற்படை குழுவொன்று குறித்த தேவாலயத்துக்குச் சென்றுள்ளதாக அறிய முடிகிறது. அந்த குழு காலையில் வெலிசறை கடற்படை முகாமிலிருந்து வந்த குழுவினர் தெரிவித்த விடயத்தை, திருத்தம் செய்ய வந்ததாக குறிப்பிட்டுள்ளனர். காலையில் கடற்படை குழுவினர் தெரிவித்த விடயங்கள் தவறுதலாக இடம்பெற்றுள்ளதாக அவர்கள் தெரிவித்து சென்றதாக அருட் தந்தை ஜயந்த நிமல் தெரிவித்துள்ளார்.
கடற்படை ஊடகப் பேச்சாளரின் விளக்கம் :
இது தொடர்பில் கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் இந்திக டி சில்வாவிடம் வினவிய போது, தனக்கு அது தொடர்பில் எதுவும் தெரியாது என பதிலளித்தார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் விளக்கம்:
இது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவிடம் தனியார் தொலைக்காட்சியொன்று விளக்கம் கோரியுள்ளது. அதற்கு கடற்படை ஊடகப் பேச்சாளரிடம் கதைத்த பின்னர் பதிலளித்துள்ள அமைச்சர் சரத் வீரசேகர, குறித்த தெளிவுபடுத்தல் சம்பவம் பாதுகாப்பு கட்டமைப்பின் ஒரு அங்கம் என குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் காலையில் சென்ற குழு, அவசியமான அளவுக்கும் மேலதிகமாக விடயங்களை கூறியுள்ளதாகவும் மாலையில் சென்ற குழு அதனை திருத்தி போதுமான விடயங்களை மட்டும் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
பாதுபாப்பு அமைச்சு அறிக்கை :
இதனிடையே பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவும் நேற்று இது குறித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘‘ இலங்கையில் தேவாலயங்கள் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்படலாம் என பகிரப்படும் தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இது தொடர்பில் பொது மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை என பாதுகாப்புச் செயலாளர் வேண்டியுள்ளார்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டாகிப் போகும் உளவுத் தகவல்கள்?:
உண்மையில் உளவுத் தகவல் எனும் ரீதியில் பரபரப்பாக்கும் தகவல்களை மக்களிடையே பரவச் செய்து, பின்னர் அது அப்படி இல்லை , இப்படி என விளக்கம் அளிப்பதன் ஊடாக பாதுகப்பு தரப்பினர் எதனை எதிர்ப்பார்க்கின்றனர் என தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலதிகமாக ஞானசார தேரரின் கருத்தினை தொடர்ந்து, இவ்வாறு மக்களை அச்சமடையச் செய்ய வைக்கும் விடயங்கள் பொது வெளிக்கு வருவது, பின்னணி தொடர்பிலும் சந்தேகங்களை தோற்றுவிக்கிறது.தேரரின் கூற்றை மெய்ப்படுத்துவதற்கு உளவுத் துறையினர் முற்படுகின்றனரா என்ற கேள்வியையும் பலர் எழுப்புகின்றனர்.
2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதன் அவசியத்தை மையப்படுத்தி, தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பதவிக்கு கொண்டுவரப்பட்டார்.
அவர் அவ்வாறு பதவியேற்றதன் பின்னணியில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் அரசியல் தேவைக்காக அரங்கேற்றப்பட்டதா எனும் சந்தேகம் இன்னும் பொது வெளியில் உள்ளது. இதனாலேயே அவ்வப்போது பாராளுமன்றத்திலும் அது தொடர்பிலான குரல்கள் ஒலிப்பதை அவதானிக்க முடிகிறது. அவ்வாறு கருத்து தெரிவித்த பலரும் சி.ஐ.டி. விசரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளமையும் மறுப்பதற்கில்லை.
இவ்வாறான நிலையில், தற்போது நாட்டின் நிலைமையை ஆராயும் போது, ஆட்சியில் உள்ள அரசாங்கம் மக்களின் செல்வாக்கை தொடர்ந்து இழந்து வருவதை வெளிப்படையாகவே காணமுடிகிறது. வாழ்க்கைச் சுமை காரணமாக அன்றாடம் மக்கள் வீதிகளிலேயே அரசாங்கத்தை விமர்சிக்கும் அளவுக்கு அரசாங்கம் மீதான எதிர்ப்புகள் வெளிக் கிளம்ப ஆரம்பித்துவிட்டன.
இவ்வாறான நிலையில், வழமை போல எல்லா விடயங்களையும் மறைக்க, அல்லது மறக்கச் செய்ய இனவாதம் அல்லது அடிப்படைவாதம் எனும் ஆயுதத்தை மீள கையிலெடுக்க அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் முயற்சிகள் இடம்பெறுகிறதா எனவும் சந்தேகம் இல்லாமலில்லை.
எனவே தற்போதைய சூழலில், ஏதேனும் தாக்குதல்கள் அல்லது வேறு அசம்பாவிதங்கள் இடம்பெறப் போவதாக தகவல்கள், சான்றுகள் இருப்பின் அதனை உளவுப் பிரிவுகள் வினைத் திறனாக கையாண்டு, பாதுகாப்பு தரப்புடன் இணைந்து அதனை தடுக்கவும் சந்தேக நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜனாதிபதியால் பொது மக்கள் பாதுகாப்பு கருதி, நாடு முழுவதும் ஆயுதம் தரித்த முப்படையினரும் அழைக்கப்பட்டு அவர்களது சேவையும் தற்போது பொது அமைதி தொடர்பில் பெறப்பட்டிருக்க கூடிய சூழலில் அவ்வாறு ஒன்று சேர்ந்து செயற்படுவது ஒன்றும் சவாலான விடயமல்ல.
அதனை விடுத்து, பகுப்பாய்வினூடாக உறுதி செய்ய முன்னர், அல்லது விசாரணைக்கு முன்னர் உளவுத் தகவல் எனும் பெயரில் தகவல்களை சமூகங்களிடையே பரவச் செய்ய வழிவகுத்து, உளவுச் சேவைகள் தமது வங்குரோத்து நிலையை வெளிப்படுத்தக் கூடாது.
இந் நாட்களில் தேசிய உளவுச் சேவையை பூரணமாக மறுசீரமைப்புக்கு உட்படுத்துவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக நாம் அறிகிறோம். அதன்படி அரச உளவுச் சேவையின் உள்ளக கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக பாதுகாப்பு தியுள்ளதாக நாம் அறிகிறோம். அதன்படி அரச உளவுச் சேவையின் உள்ளக கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய உளவுச் சேவையின் பிரதானியாக அதன் பணிப்பாளர் செயற்படுவதுடன் அந்த பதவியை பணிப்பாளர் நாயகம் என தரமுயர்த்துவது தொடர்பிலும் அவரின் கீழ் 3 பணிப்பாளர்களை நியமிக்கவும் திட்டமிடப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.
தற்போதைய தேசிய உளவுச் சேவையின் கட்டமைப்பின் பிரகாரம், பொலிசாருக்கு அதில் அதிக இட ஒதுக்கீடு காணப்படுகின்ற போதும், புதிய வியூகத்தின் அடிப்படையில் அதில் இராணுவத்தினர் அதிகமாக தேசிய உளவுச் சேவைக்குள் உள்வாங்கப்பட்டு, பிரதான பதவிகளும் இராணுவத்தினரிடையே பகிரப்படும் வண்ணம் மாற்றங்கள் நிகழலாம் என தகவல்கள் தெரிவித்தன.
இவ்வாறான நிலையில், நாட்டில் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதாக ஆட்சிக்கு வந்தவர்கள், மீண்டுமொரு தாக்குதலுக்கோ, அசம்பாவிதத்துக்கோ, இனவாத, மதவாத மோதல்களுக்கோ வழி அமைத்துவிடக் கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.-Vidivelli