மின்ஸார் இப்றாஹிம்
இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் காதி நீதிமன்றக் கட்டமைப்பு என்பன தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்த இரண்டு விடயங்களும் இவ்வாறு கொதி நிலை அடைவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமே வித்தூன்றியது.
அதாவது 2016 இல் ஐ.தே.க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரிரு முன்னணி அமைச்சர்கள் ‘‘ஐரோப்பிய யூனியனின் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை பெறுவதற்கு முஸ்லிம் தனியார் சட்டத்தை குறிப்பாக முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லையில் திருத்தம் செய்ய வேண்டும். அப்போது தான் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைப் பெற்றுக்கொள்ள முடியும்’’ என்றனர். இக்கருத்து முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. ஐரோப்பிய யூனியனின் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைக்கும் முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லைக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி பரவலாக எழுந்தது. இது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போன்றதாகும்.
ஆனால், தாம் அவ்வாறு நிபந்தனை விதிக்கவில்லை என்று குறிப்பிட்ட ஐரோப்பிய யூனியன், முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் கதை வெளிவந்த ஒரு மாதத்திற்குள்ளேயே அச்சலுகையை இலங்கைக்கு வழங்கிவிட்டது.
என்றாலும் ஐ.தே.க. வினர் என்ன நோக்கத்திற்காக இக்கதையை முன்வைத்தனரென முஸ்லிம்கள் அன்று எண்ணிப் பார்க்கத் தவறினர். ஆனாலும் ஜி.எஸ்.பி. நிவாரணம் கிடைத்ததோடு முஸ்லிம் தனியார் சட்ட திருத்த விவகாரம் நிறுத்தப்படவில்லை. மாறாக 2009 இல் நீதியமைச்சராக இருந்த மிலிந்த மொரகொட முஸ்லிம் தனியார் சட்டத்தை மறுசீரமைக்கவென நியமித்து குழுவை ஐ.தே.க நீதியமைச்சர் உயிர்ப்பித்தார். ஆனால் அது அச்சமயம் பேசுபொருளானதும் அச்சட்டத்திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்தாத நிலையையும் ஐ.தே.க. வினரே உருவாக்கினர்.
ஆனால் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு எதிராக நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு சில அமைச்சர்களும் ஒரு சில அரச சார்பற்ற அமைப்புக்களும் தங்களது அற்ப நலன்களுக்காக திரை மறைவு சூழ்ச்சியை முன்னெடுத்து வந்தமையையே இந்நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.
இச்சந்தர்ப்பத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆட்சிபீடமேறுவதற்கான தேர்தல் கால துரும்புச் சீட்டுகளில் ஒன்றாக ஐ.தே.க. வினர் திரைமறைவில் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு எதிராக முன்னெடுத்த நடவடிக்கைகளை வெளிப்படையாக எடுத்துக்கொண்டன. அதாவது நாட்டில் ஒரே சட்டம், ஒரே நீதிமன்ற கட்டமைப்பு தான் இருக்க வேண்டும் என்ற பிரசாரத்தை அவர்கள் முன்னெடுத்தனர்.
முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு எதிராக ஐ.தே.க. வினர் அன்று முன்னெடுத்த சதி சூழ்ச்சியின் விளைவாக, இந்நாட்டு முஸ்லிம்கள் தங்களுக்கென தனியான சட்ட மற்றும் நீதிமன்ற கட்டமைப்பை கொண்டிருக்கின்றனர் என்ற பிழையான பார்வை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. அரசியல் நலன்களை அடைந்து கொள்ளும் வகையில் அவை சிங்கள மக்கள் மத்தியிலும் கொண்டு செல்லப்பட்டன. ஆனால் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கும் காதி நீதிமன்ற கட்டமைப்புக்கும் எதிராக பிரசாரம் செய்யப்பட்டது போன்று முஸ்லிம்களிடம் தனியான சட்ட மற்றும் நீதிக் கட்டமைப்பு கிடையாது. அவர்களும் இந்நாட்டின் அரசியலமைப்பின் கீழான பொது சட்டத்திற்குக் கட்டுப்பட்டே வாழ்ந்து வருகின்றனர்.
அப்படியென்றால் இந்த முஸ்லிம் தனியார் சட்டம், காதி நீதிமன்ற கட்டமைப்பு என்ன என்ற கேள்வி எழலாம். அது நியாயமான கேள்வியே. அதாவது முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் காதி நீதிமன்றக் கட்டமைப்பானது முஸ்லிம்கள் தங்கள் விவாக மற்றும் விவாகரத்து விடயங்களை சமய, கலாசார விழுமியங்களின் அடிப்படையில் அமைத்துக்கொள்வதற்கு வழிசெய்வதாகும்.
இது பல்லின மக்கள் வாழும் ஒரு நாடாகும். இந்நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களைப் போன்று முஸ்லிம்களும் தனியார் சட்டத்தைக் கொண்டிருக்கின்றனர். மாறாக முஸ்லிம்கள் மாத்திரம் இவ்வாறான சட்டத்தைக் கொண்டிருப்பவர்கள் அல்லர். அந்த வகையில் சிங்கள பௌத்த மக்கள் கண்டியன் சட்டத்தையும், தமிழ் மக்கள் தேச வழமை சட்டத்தையும் கொண்டிருக்கின்றனர். இச்சட்டங்கள் அந்தந்த சமய கலாசார விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட இரண்டு மூன்று விடயங்கள் சம்பந்தப்பட்டவையாகும். அந்த வகையில் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் விவாக விவாகரத்து விடயங்கள் சம்பந்தப்பட்ட விடயங்கள் பிரதானமாகக் காணப்படுகின்றன.
இஸ்லாத்தில் விவாகம் விவகாரத்து தொடர்பில் தெளிவான வரையறைகள் உள்ளன. அதற்கு அமைவாக முஸ்லிம்கள் செயற்படுகின்றனர். அதேநேரம் இந்த முஸ்லிம் தனியார் சட்டக் கட்டமைப்பானது நேற்று இன்று அறிமுகமானதுமல்ல. இந்நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இம்முஸ்லிம்கள் மத்தியில் விவாக விவகாரத்து மற்றும் கொடுக்கல் வாங்கல் வியாபாரம் தொடர்பிலான தனித்துவமான வரையறைகளும் நீதி கட்டமைப்பும் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளன.
அந்த வகையில் எஸ்.ஜி. பெரேரா எழுதியுள்ள ‘இலங்கையின் வரலாறு’ என்ற நூலின் முதலாம் பாகத்தில் ,’8 ஆம் நூற்றாண்டில் (இஸ்லாம் தோன்றிய 200 வருடங்களுக்கு பின்னர்) கொழும்பு, பேருவளை, காலி போன்ற பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் தங்கள் விவாகம், விவாகரத்து மற்றும் வியாபார கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிணக்குகளைத் தீர்த்துக் கொள்வதற்காக அவர்களுக்கென கொழும்பில் ஷரிஆ நீதிமன்றமொன்றைக் கொண்டிருந்தனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு பேராசிரியர்களான லக்ஷ்மன் மாரசிங்கவும் ஷெர்ய ஸ்ரங்குவேலும் இணைந்து எழுதியுள்ள நூலொன்றிலும் முஸ்லிம்களுக்கான தனியான நீதிமன்றம் இருந்துள்ளமையைச் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு லோனா தேவராஜா எழுதியுள்ள இலங்கை முஸ்லிம்களின் வரலாறு என்ற நூலிலும் இவை வரலாற்று ஆதாரங்களுடன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 1505 இல் இலங்கைக்கு வருகை தந்த போர்த்துக்கேயர் இலங்கையை ஆக்கிரமித்ததும் இந்நாட்டின் கரையோரப் பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் சொல்லண்ணா துன்பங்களுக்கு உள்ளாகினர். அவர்கள் மீது திட்டமிட்டு வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதோடு அவர்கள் பாரம்பரிய வாழிடங்களில் இருந்தும் விரட்டியடிக்கப்பட்டனர். இதன் விளைவாக நாட்டின் உட்பிரதேசங்களில் மன்னர்களதும் பெரும்பான்மை மக்களதும் ஆதரவு, ஒத்துழைப்புடன் முஸ்லிம்கள் குடியேறினர். மன்னர்கள் நிலம் மற்றும் வசதிகளை வழங்கி முஸ்லிம்களைக் குடியமர்த்தினர். அப்படி இருந்தும் கூட தம் பிரதேசங்களில் குடியேறி வாழும் முஸலிம்கள் கடைபிடிக்கும் சட்ட வரையறைகளை அவர்கள் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை. மாறாக அவர்கள் முஸ்லிம்களுக்கு சமய, கலாசார விழுமியங்களுக்கு தேவையான சலுகைகளையும் வசதிகளையும் வழங்கினர்.
இவை இவ்வாறிருக்க, ஒல்லாந்தர் இலங்கையை ஆக்கிரமித்த பின்னர் இலங்கைக்கு நிமிக்கப்பட்ட ஆளுனர், ஒல்லாந்து நாட்டின் குடியேற்ற தலைமையகத்திற்கு பின்வருமாறு கடிதம் எழுதினார். ‘இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் விவாகம், விவாகரத்து மற்றும் வியாபார கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சமய கலாசார விழுமியங்களின் அடிப்படையில் சில சட்டங்களைக் கொண்டுள்ளனர். அவற்றை மாற்ற முடியாது. அதனால் இலங்கைக்கான சட்டத்தைத் தயாரிக்கும் போது அச்சட்டங்களையும் கருத்தில் கொள்ளுமாறு குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பின்புலத்தில் தான் 08 ஆம் இலக்க ‘முஹம்மதியன் கோர்ட்’ என்ற சட்டக் கோவை 1770 இல் இந்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்தோடு இலங்கையை ஆக்கிரமித்த பிரித்தானியரும் முஸ்லிம்களின் இச்சட்டத்தில் மாற்றங்களைச் செய்யவில்லை. அதேபோன்று இந்நாடு சுதந்திரமடைந்து 60 – 65 வருடங்கள் கடந்தும் இச்சட்டத்தையோ காதி நீதிமன்ற கட்டமைப்பையோ முற்றாக ஒழிப்பது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. மாறாக 1951 இல் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப திருத்தங்களைச் செய்வது நியாயமானதே.
இதைவிடுத்து முஸ்லிம் தனியார் சட்டத்தையும் காதி நீதிமன்ற கட்டமைப்பையும் ஒழிக்க முயற்சிப்பதே முஸ்லிம்களை வேதனைகளுக்கும் கவலைகளுக்கும் உள்ளாக்கியுள்ளது. ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக இப்பூமியில் வாழும் இந்நாட்டு முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் அவர்களது சமய, கலாசார பாரம்பரிய விழுமியங்களும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் இந்நாட்டின் பிரஜைகளேயன்றி வந்தேறு குடிகள் அல்லர். இந்நாட்டில் வேடுவ சமூகத்தினர் தம் பாரம்பரிய அடையாளங்களுடன் வாழ்வதற்கு தேவையான அனைத்து உரிமைகளையும் பெற்று இருப்பது போன்று முஸ்லிம்களும் தம் சமய, கலாசார விழுமியங்களுடன் வாழ்வதற்கான உரிமைகளைக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் இந்நாட்டின் தனித்துவ அடையாளங்களை சிதைத்து நாட்டை மீண்டும் டும் ஐரோப்பிய கொலனியாக்க விரும்பும் ஐ.தே.க வின் சிலரும் சில அரச சார்பற்ற அமைப்புகளும் தம் அற்ப நலன்களை அடைந்து கொள்வதற்காக இலக்கு வைத்து முஸ்லிம் தனியார் சட்டத்தையும் காதி நீதிமன்றக் கட்மைப்பையும் ஒழிக்க முயற்சிப்பதானது, இந்நாடு சிறுபான்மையினருக்கு வாழப்பொருத்தமற்ற நாடு என்ற பிழையான பார்வையை சர்வதேசத்திற்கு வழங்க முயற்சி செய்து கொண்டிருக்கும் சக்திகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்துவிடும். அதற்கு எவரும் துணைபோய்விடக்கூடாது. எந்தவொரு நடவடிக்கையையும் நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தியே முன்னெடுக்க வேண்டும்.
அந்தடிப்படையில் பல நூற்றாண்டு காலமாக இந்நாட்டில் நடைமுறையில் இருக்கும் முஸ்லிம் விவாக, விவாகரத்து மற்றும் காதி நீதிமன்ற கட்டமைப்பில் காலத்திற்கு தேவையான திருத்தங்களை மேற்கொண்டு அவற்றை தொடர்ந்து பேணிப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதுமே உசிதமான காரியமாக அமையும்.- Vidivelli