(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கல்விப்பொதுத்தராதர (சா/த) பரீட்சையில் பெளத்த சமயபாடம், சிங்கள மொழி உள்ளடங்கலாக 9 பாடங்களிலும் A சித்திகளைப் பெற்றுள்ளார் மாணவி முஹம்மது பாரிஸ் ஆயிஷா அமீனா.
வெல்லவாய, மல்வத்தாவல சிங்கள தேசிய பாடசாலையில் இவர் கல்வி பயின்று வருகிறார். இவரது தந்தை வெல்லவாய நகரில் சைக்கிள் திருத்தும் நிலையமொன்றினை நடாத்திவருகிறார்.
குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையான ஆயிஷா அமீனா தனது சாதனை குறித்து தெரிவிக்கையில் “பரீட்சைக்கு முன்பிருந்தே என்னிடம் இலக்கு ஒன்றிருந்தது. அந்த இலக்கை அடையும் நோக்கிலே நான் செயற்பட்டேன். அதிகமாக பரீட்சை வினாத்தாள்களில் கவனம் செலுத்தினேன்.
எனக்கு பெளத்த சமயப் பாடம் போதித்த ஜினரதன தேரர்,இந்துநில், நுவன், சுபுன், நளின், லாலக மற்றும் எனது வகுப்புக்குப் பொறுப்பான ஆசிரியர் சுபுன், பிரிவுக்குப் பொறுப்பான மஞ்சுள ஆகிய ஆசிரியர்கள் எனது இந்த வெற்றியின் பின்னால் இருந்தவர்கள். இவர்கள் நண்பர்கள் போன்று எனக்கு உதவிகள் செய்தார்கள். நான் சுதந்திரமாக எனது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோருக்கு நன்றிகளைத் தெரிவிக்கிறேன். வினாத்தாள்களை அதிகமாக செய்து பயிற்சி பெறுங்கள். ஆசிரியர்களுக்கு கீழ்படிந்து கல்வியைத் தொடருங்கள் என நான் அனைத்து மாணவர்களிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
நான் ஒரு பொறியியலாளராக வேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பாகும். அந்த இலக்கினை எய்துவதற்காக க.பொ.த (உ/த) பரீட்சையில் கணிதபாடத்தை நான் கற்கவுள்ளேன்.
பெரும்பான்மை இன ஆசிரியர்கள் எவ்வித பாரபட்சமுமின்றி பாடங்களை எனக்கு கற்பித்ததாலே என்னால் ஏனைய மாணவர்களை விட சிறப்பாக சித்தியடைய முடிந்தது என்றும் அவர் கூறினார்.
இவர் சிங்கள மொழி, சிங்கள இலக்கியம் ஆகிய பாடங்களிலும் ‘A’ சித்திகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். – Vidivelli