(ஏ.ஆர்.ஏ.பரீல்)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வஹாபிஸத்தை ஏற்றுக்கொள்கிறதா? அல்லது புறக்கணிக்கிறதா என்பதைத் தெளிவாகக் கூற வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பொதுபல சேனாவின் ஊடக பிரிவு அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 2021.09.22 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் அர்கம் நூராமித்தின் கையொப்பத்துடன் பொதுபலசேனாவுக்கு வெளியிட்ட கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையிலே இவ் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நாட்டின் கலாசாரத்துக்கு அமைவாக வாழ்ந்து பாதுகாப்பு பிரிவுகளில் இணைந்து சேவையாற்றிய மலே முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நீங்கள் வஹாபிஸம் சலபிவாத உலமா சபையின் செயலாளராக நியமனம் பெற்று இவ்வாறான கலந்துரையாடல்களைச் செய்வது குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
குறிப்பாக வஹாப் வாதம், சலபிவாதம், தப்லீக் ஜமா அத் மற்றும் ஜமா அத்தே இஸ்லாமி ஆகிய கொள்கைகளிலிருந்தும் முஸ்லிம் சமூகத்தைக் காப்பாற்றி இந்நாட்டின் கலாசாரத்துக்கு அமைவான சமூகமொன்றினை உருவாக்கும் பலம் உங்களுக்குக் கிட்டவேண்டுமெனவும் நாம் பிராத்திக்கிறோம்.
உலமா சபை வஹாபிஸத்தை ஏற்றுக் கொள்கிறதா? புறக்கணிக்கிறதா? என்ற முக்கியமான கேள்விக்கு நீங்கள் பதிலளிக்க மறந்து விட்டீர்கள். இந்த கேள்வியை ஞானசார தேரர் பகிரங்க ஊடகமாநாடுகளில் பல தடவைகள் வினவியிருக்கிறார். என்றாலும் இதுவரை உலமா சபையின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்படவில்லை.
அத்தோடு ஞானசாரதேரர் எந்த வகையிலும் மதத்தை அவமதிப்புக்குள்ளாக்கவில்லை. அவரது கருத்து ஸ்ரீ லங்கா தெளஹீத் ஜமாஅத்தின் குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பினை அடிப்படையாகக் கொண்டே தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள இந்த இயக்கம் வெளியிட்டுள்ள குர்ஆன் தொடர்பில் உலமாக்கள் எதுவித கருத்தும் எவளியிடவில்லை. அதனால் உலமாசபை அந்த குர் ஆன் மொழிபெயர்ப்பினை ஏற்றுக் கொள்கிறதா என நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
ஞானசார தேரர் சமயத்தை அவமானப்படுத்தியதாக உலமாசபை குற்றஞ்சாட்டுவது போன்ற கருத்துக்கள் குர்ஆன்,ஹதீஸ்களிலும் அடங்கியுள்ளன. அவற்றை வெளிப்படுத்த முடியுமென்றாலும் வஹாப்வாதிகள் அல்லாத இந் நாட்டின் கலாசாரத்தை புரிந்துகொண்டு அதன்படி வாழும் சமாதானத்தை விரும்பும் முஸ்லிம்களின் மனதுபுண்படும் என்பதால் நாம் அனை அதனைத் தவிர்த்துள்ளோம்.
நாம் ஒரு குர்ஆன் வசனத்தை இங்கு குறிப்பிடவிரும்புகிறோம். அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்தவோர் செயலும் இடம்பெறாது.(64:11) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் வசனம் இவ்வாறென்றால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எவ்வாறு இடம்பெற்றது? அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்தவோர் செயலாவது இடம்பெற முடியும்என உலமாக்களாகிய நீங்கள் நம்புவதாயிருந்தால் அது தொடர்பில் கடிதம் மூலம் அறிவிக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.
அத்தோடு அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாசபை குர்ஆனில் குறிப்பிட்டுள்ள மக்காவுடன் தொடர்பான விடயங்கள்இந்நாட்டுக்கு தொடர்பாவைகள் அல்ல என்று தெரிவிப்பதற்கு முயற்சிப்பதாக நாம்நினைக்கின்றோம். நாம் இது தொடர்பில் மகிழ்கிறோம். அதனால் மக்கா மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கு உரித்தான பல விடயங்கள் எமக்குத் தொடர்பானவைகள் அல்ல. அப்படியென்றால் உலமா சபை இதுவரை காலம் வழங்கியுள்ள பத்வாக்கள் மற்றும் வழிகாட்டல்கள் உங்களது முன்னைய கடிதத்தின் படி அமுலாகாது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli