காதிநீதிமன்ற கட்டமைப்பை இல்லாமல் செய்யக் கூடாது
அரச ஆதரவு எம்.பி.க்களின் நிலைப்பாட்டை கூறுகிறார் நஷீர்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டில் அமுலிலுள்ள முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டுமேயன்றி காதி நீதிமன்ற கட்டமைப்பு இல்லாமற் செய்யப்படக்கூடாது என்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் நிலைப்பாட்டிலே 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கிய உறுப்பினர்களும் இருக்கிறோம். இது தொடர்பில் கட்சியின் தலைவருடனும் பேச்சு வார்த்தை நடாத்திக் கொண்டிருக்கின்றோம். என பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் “விடிவெள்ளி’’ க்குத் தெரிவித்தார்.
அவர் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம்,மற்றும் காதிநீதிமன்ற கட்டமைப்பு தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் “காதிநீதிமன்ற கட்டமைப்பில் குறைபாடுகள் இருக்கின்றன. சில காதி நீதிபதிகள் விமர்சனங்களுக் குள்ளாகியிருக்கிறார்கள். சிலர் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக காதி நீதிமன்ற கட்டமைப்பையே இல்லாமற் செய்வது பொருத்தமற்றது.
அமைச்சரவையின் தீர்மானத்தின்படி முஸ்லிம்களின் திருமண பிணக்குகள் மாவட்ட நீதிமன்றில் விசாரிக்கப்பட்டால் அதனால் முஸ்லிம் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
மாவட்ட நீதிமன்றில் தீர்ப்பு வழங்குவதற்கு பல வருடங்கள் செல்லலாம் என்பதால் அது பிரச்சினைக்குரியதாக இருக்கும்.
கடந்த காலங்களில் அதிகாரம் எங்கள் கையில் இருந்தபோது முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை நாம் மேற்கொள்ளவில்லை. திருத்தங்கள் தொடர்பில் பேசி பேசியே இருந்தோம். தற்போது அதிகாரம் எங்களிடம் இல்லாதபோது இது பற்றி விமர்சித்துக்கொண்டிருக்கின்றோம். இதுவே எமது இன்றைய நிலைமை. எம்மிடம் அதிகாரம் இருந்தபோது இலகுவாக தீர்வுகளைப் பெற்றுக் கொண்டிருக்கலாம்.
காதிநீதிமன்ற கட்டமைப்பை இல்லாதொழிக்காது அம்முறைமையை மேம்படுத்தவேண்டும், குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது பற்றி நீதியமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களுடனும் தொடர்ந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறோம். எமது முயற்சிகள் நிச்சயம் வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கையுண்டு.
சில காதி நீதிபதிகள் தங்களது கடமையினை முறையாக நிறைவேற்றாமையினாலே தற்போது காதிநீதிமன்ற கட்டமைப்பின் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சிலர் உரிய காரணங்களின்றி விவாகரத்து பெற்று செல்கின்றனர். பிள்ளைகளுக்கு நியாயமான தாபரிப்பு கூட உத்தரவிடப்படுவதில்லை. இந்நிலைமை மாறவேண்டும். எனவே காதிநீதிபதிகள் பொறுப்புடன் தமது கடமைகளை நிறைவேற்றவேண்டியது அவசியமாகும் என்றார்.-Vidivelli