முஸ்லிம் விவகாரங்களை கேட்டறிந்தது ஐ.ஒன்றியம்
அநியாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விடுதலை குறித்து விசேட கரிசனை
- உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலைமைகள், காணிப் பிரச்சினைகள், கொவிட் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யும் விவகாரம், முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் உட்பட பல முக்கிய விவகாரங்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இலங்கையின் மனித உரிமை நிலைவரங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் மனித உரிமை நெருக்கடிகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் மற்றும் சிவில் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடியுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவினர் முஸ்லிம்களுக்கு எதிரான இன மத ரீதியான வெறுப்புப் பேச்சுக்கள், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் நிலைமைகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலைமைகள், காணிப் பிரச்சினைகள், கொவிட் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யும் விவகாரம், முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் உட்பட பல முக்கிய விவகாரங்கள் குறித்து கேட்டறிந்துள்ளனர்.
அத்துடன் நீதியமைச்சர் அலி சப்ரியையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்திய தூதுக்குழுவினர், நாட்டில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நீதியமைச்சினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டனர்.
ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே தனது அறிக்கையில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் கவிஞர் அஹ்னாப் ஜஸீம் ஆகியோர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து தனது கரிசனையை வெளியிட்டிருந்தது. இந் நிலையில் இலங்கை வந்துள்ள தூதுக்குழுவினரும் இவர்களது வழக்குகளின் முன்னேற்றம் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.
முஸ்லிம் காங்கிரஸ் உடனான சந்திப்பு
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், கவிஞர் அஹ்னாப் உட்பட பல இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் பயங்கரவாதத்துடன் தொடர்புள்ளவர்கள் எனக்கூறி தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். உரிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதவிடத்து அவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் அதற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தன்னைச் சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதுக்குழுவினரிடம் வேண்டுகோள்விடுத்தார்.
இந்தச் சந்திப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இச்சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையில் “இந்நாட்டில் அண்மைக்காலமாக நடைபெற்றுவருகின்ற மிக மோசமான மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு எமது அபிப்பிராயத்தை வினவியது. பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி அரசியல் ரீதியான பலரை பழிவாங்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றமை குறித்து விளக்கினோம்.
குறிப்பாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் போன்றவர்கள் தகுந்த காரணமின்றி, சோடிக்கப்பட்ட காரணங்களை காட்டி சுமார் ஒன்றரை வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். சட்டத்தரணி ஒருவரை இவ்வளவு காலம் தடுத்துவைத்திருப்பது ஒரு பழிவாங்கும் முயற்சி என ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஒன்று தொடர்பாகவும் தெரிவித்தோம்.
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் சமூகம் இணக்கம் கண்டுள்ளது. இந்நிலையில் அரசு இதில் தலையிட்டு காதிநீதிமன்ற முறைமையை இல்லாமற் செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. இம்முறைமை இல்லாமற் செய்யப்படக்கூடாது. மாறாக சட்டத்திருத்தங்களே கொண்டுவரப்படவேண்டுமென நாம் தூதுக்குழுவினரிடம் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறான நடவடிக்கைகள் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் விடயமாக மாறிவிட இடமளிக்கக்கூடாது எனவும் வேண்டியுள்ளோம்.
மத-குருமார்கள் வெறுப்பூட்டுகின்ற பேச்சுக்களை பேசுவதற்கு தூண்டப்படுவதும் செயற்படுத்துவதும் சம்பந்தமாக அவர்களை தண்டிப்பது என்பது ஒருபுறம் இருக்க அவர்களுக்கான அனுசரணை வழங்குவதை இந்த அரசாங்கம் தவிர்த்துக்கொள்வதை வெளிப்படையாகவே இவ்விடயத்தில் காண்பித்தல் வேண்டும். அரச சார்பு ஊடகங்கள் தான் இதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றன என்பதையும் தூதுக் குழுவிடம் முன் வைத்துள்ளோம்.
இந்த நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம் பெறுவதை தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளைப் பொறுத்தே ஜி.எஸ்.பி. சலுகைகள் நீடிக்கப்படலாம். அதனால் அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் யாவும் திருப்திகரமாக இல்லை என எங்களுடைய முறைப்பாடுகளைச் செய்திருக்கின்றோம். எனவே இது சம்பந்தமாக மாற்று நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்வதன் மூலம் அரசாங்கத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்கலாம் எனத் தெரிவித்திருக்கிறோம்.
அத்தோடு சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு விரைவில் பிணை வழங்கப்பட்டு பின்பு தேவையேற்படின் கொள்வதன் மூலம் அரசாங்கத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்கலாம் எனத் தெரிவித்திருக்கிறோம்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடனான சந்திப்பில் அக் கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததைத் தொடர்ந்து அரசாங்கத்திற்கு சார்பான தனியான அணியாக செயற்பட்டு வருகின்றனர்.- Vidivelli