நளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை மன்றம்
இலங்கை மண் ஈன்றெடுத்த தேச நலனுக்காக செயற்பட்ட உன்னத ஆளுமைகளில் ஒருவராக நளீம் ஹாஜியார் திகழ்கிறார். 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் திகதி பேருவளை சீனன்கோட்டையைச் சேர்ந்த முஹம்மது இஸ்மாயில், ஷரீபா உம்மா தம்பதிக்கு வாரிசாக நளீம் ஹாஜியார் பிறந்தார். மிகுந்த வறுமைப்பட்ட குடும்பப் பின்னணியில் பிறந்து வளர்ந்த அவரால் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பாடசாலைக் கல்வியைத் தொடர முடியுமாக இருந்தது. இளம் வயதிலேயே சுயமாக தொழில் செய்து உழைக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.
பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வளர்ந்துவந்த நளீம் ஹாஜியார் பேருவளை மக்களது பிரதான தொழிலான மாணிக்கக்கல் வர்த்தகத்தில் இளம் பிராயம் முதல் ஈடுபட ஆரம்பித்தார். அவரது அயராத உழைப்பினாலும் தொடர் முனைப்பினாலும் மாணிக்க வர்த்தகம் தொடர்பில் நன்கு அனுபவமும் தேர்ச்சியும் பெற்றவராக மாறினார்.
பேருவளை சீனன்கோட்டையைச் சேர்ந்த ரபீகா எனும் பெண்ணை மணமுடித்த நளீம் ஹாஜியார் நான்கு ஆண் பிள்ளைகள் மற்றும் ஒரு பெண்பிள்ளையினது தந்தை ஆவார்.
இரத்தினக்கல் வர்த்தகத்திற்கான பங்களிப்பு
நளீம் ஹாஜியார் உலகப் புகழ் பூத்த மாணிக்க வியாபாரிகளில் ஒருவராக கருதப்படும் அளவு வளர்ச்சி கண்டார். உள்நாட்டு, வெளிநாட்டு இரத்தினக்கல் வர்த்தகத்துக்குக் காத்திரமான பங்களிப்புக்களை செய்யுமளவு இரத்தினக்கல் வர்த்தகத்துறையில் வளர்ச்சி கண்ட நளீம் ஹாஜியார் ஈற்றில் இரத்தினக்கல் அரசன் (Gem King) என்று அழைக்கப்படும் அளவு உலகப் பிரசித்தி பெற்றார்.
இனம், பிரதேசம், நாடு என்ற எல்லைகளைக் கடந்து மாணிக்க வர்த்தகத்தில் நம்பிக்கை, வாய்மை, நேர்மை போன்ற உயரிய வர்த்தக விழுமியங்களை தனதாக்கிக் கொண்டு செயற்பட்ட நளீம் ஹாஜியார், இலங்கைத் திருநாட்டில் மாணிக்க வர்த்தகத்தில் அப்போது ஈடுபட்டிருந்த அனைத்து மத மற்றும் இனத்தவர்களோடும் வலுவான உறவைப் பேணி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் எப்பாகத்திலாவது மிகவும் பெறுமதி வாய்ந்த இரத்தினக்கல் கிடைக்கப்பெற்றால் முதலில் நளீம் ஹாஜியாருக்கு விற்பனை செய்வதற்காகக் கொண்டு வந்து காண்பிக்கும் ஓர் அழகிய கலாச்சாரத்தையே அவர் தோற்றுவித்திருந்தார். அதேபோன்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மன், ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து மாணிக்க வியாபாரிகள் மிகவும் மதிப்பு வாய்ந்த இரத்தினக் கற்களைக் கொள்வனவு செய்வதற்காக அன்னாரை நாடி வருவது வழக்கமாக இருந்தது. இவ்வாறு தனி மனிதனாக நின்று இலங்கை தேசத்துக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையிலான இரத்தினக்கல் வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்தி, தேசத்துக்கான தனது தனித்துவமான பங்களிப்பை மேற்கொண்டார்.
இத்தகைய வர்த்தக செயற்பாடுகளுக்கூடாக இலங்கையின் சர்வதேச வியாபாரத்துக்குப் பங்களிப்பு செய்ததோடு அந்நியச் செலாவணியை இலங்கை தேசத்துக்கு ஈட்டிக் கொடுப்பதற்கும் பாரிய பங்களிப்புகளை நல்கினார்.
1950 களில் தனது மாணிக்கக்கல் வர்த்தகப் பயணத்தை ஆரம்பித்து நெடுங்கால அனுபவத்தையும் முதிர்ச்சியையும் அவர் பெற்றதுடன் மாணிக்கக் கல்லின் வகைகள், அவற்றுக்கான பெறுமதி நிர்ணயித்தல் போன்ற மிக நுணுக்கமான பகுதிகளில் ஆழ்ந்த அறிவைப் பெற்றிருந்தார். மாணிக்க வர்த்தகத்தின் அடியாகத் தோன்றிய தேசிய, சர்வதேச உறவுகளை தன்னோடு மாத்திரம் வைத்துக்கொள்ளாது, இலங்கை நாட்டின் மாணிக்கக்கல் வர்த்தகத்தின் வளர்ச்சிக்காகவும் அவற்றை உபயோகித்தார். இலங்கை தேசத்துக்கு அதிக வருமானம் ஈட்டித் தரும் துறையாக அத்துறை மாறுவதற்கு அவசியமான ஆலோசனைகளையும் திட்டங்களையும் அவர் இலங்கை அரசுக்கு வழங்கினார்.
1970ஆம் ஆண்டு இலங்கை அரசு மாணிக்கக்கல் ஏற்றுமதியை ஒழுங்கமைக்கும் நோக்கில் இலங்கை இரத்தினக்கல் கூட்டுத்தாபனத்தினை உருவாக்கத் திட்டமிட்டது. அன்றைய நிதியமைச்சராக இருந்த கலாநிதி என். எம். பெரேரா நளீம் ஹாஜியாருடன் இரண்டு தடவைகள் இதுதொடர்பான கலந்துரையாடல்களை நடாத்தி, அவரிடமிருந்து காத்திரமான ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டமை இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கது. இலங்கை மாணிக்கக்கல் கூட்டுத்தாபனத்தின் தோற்றத்துக்குப் பங்களிப்பு செய்தமைக்காக, 1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி நடந்த இலங்கை மாணிக்கக்கல் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ திறப்பு விழாவிற்கு இலங்கை அரசு நளீம் ஹாஜியாரை விஷேட அதிதியாக அழைத்து கௌரவித்தது.
இலங்கை வரலாற்றில் முதன்முதலில் 1972 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட மாணிக்கக்கல் கூட்டுத்தாபனத்தின் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பவேண்டிய முதலாவது கல்லையும் நளீம் ஹாஜியார் அவர்களே வழங்கி வைத்தமை இலங்கை மாணிக்க வர்த்தகத் துறை வளர்ச்சியில் கூடிய கரிசனை அவருக்கு இருந்தமைக்கான சிறந்த சான்றாகும்.
மாணிக்க வர்த்தகர்களுக்கிடையில் வலுவான உறவைக் கட்டியெழுப்பவும், அவர்களுக்குப் பயனுள்ள ஆலோசனைகளை வழங்கவும், பல்கலைக்கழகங்களில் மாணிக்க வர்த்தகம் தொடர்பான அனுபவங்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்வதற்கும் அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாணிக்கத் துறை தொடர்பான விஷேட அமர்வுக்கு பிரதம அதிதியாக கலந்து இலங்கை நாட்டில் மாணிக்கத் துறை காணவேண்டிய பல்வேறு வளர்ச்சிகள் குறித்த பல்வேறு பயனுள்ள ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தன்னுடைய அனுபவ அறிவின் அடியாகப் பகிர்ந்து, இலங்கைப் பல்கலைக்கழக மாணிக்கம் சார் துறைக்கு தம்முடைய பங்களிப்பை வழங்கியமை நினைவு கூரத்தக்கது.
1981ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத் மகாராணி இலங்கையைத் தரிசித்த சந்தர்ப்பத்தில், அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன அவர்களுடன் நளீம் ஹாஜியார் உள்ளிட்ட இலங்கையின் முன்னணி மாணிக்க வியாபாரிகள் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் மகாராணியைச் சந்தித்தனர். அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் பிரபல மாணிக்க வியாபாரிகளான நளீம் ஹாஜியார், நிமல் பத்திரன மற்றும் ஜே. குருகே ஆகியோர் அரசுக்கு அன்பளிப்பு செய்த ‘Sri Lankan Blue Sapphire’ எனும் பெறுமதி வாய்ந்த மாணிக்கக் கல்லை ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன மகாராணிக்கு அன்பளிப்பு செய்தார். இலங்கையின் தேசிய நீரோட்டத்தில் தவிர்க்க முடியாத ஓர் ஆளுமையாக நளீம் ஹாஜியார் திகழ்ந்தமைக்கு இந்நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டாகும்.
தேசத்திற்கான பணிவான அன்பளிப்பு
சம்பாதித்த செல்வத்தை தேசத்தின் பல்வேறு நலன்களுக்காக செலவளித்தமை நளீம் ஹாஜியாரின் சாதனை வாழ்வில் அவதானிக்கும் தனித்துவமான வரலாற்றுச் சான்றாகும். 1970 களில் இலங்கை அரசு எதிர்கொண்ட பாரிய வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடியை எதிர் கொள்வதற்கு இலங்கை அரசுக்கு நளீம் ஹாஜியார் ஒத்துழைத்தமை தேசத்தின் நலன்களில் அவருக்கிருந்த பலமான ஈடுபாட்டை வெளிப்படுத்தும் சிறந்த சான்றாகும்.
1974 ஆம் ஆண்டில் இலங்கை மிகப் பாரதூரமான வெளிநாட்டுச் செலாவணிப் பிரச்சினையை எதிர்நோக்கியது. இந்நிலையில் இலங்கை நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு அரசாங்கத்துக்கு சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான தனது வெளிநாட்டு செலாவணியை அன்பளிப்புச் செய்தார். நாட்டின் உற்பத்தித் திட்டத்திற்கான தன்னுடைய “பணிவான அன்பளிப்பு“ எனக்கூறி பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவிடம் தனது அன்பளிப்பைக் கையளித்தார். இலங்கை வரலாற்றில் முதன்முறையாக சாதாரண பிரஜையொருவர் அரசாங்கத்திற்கு வெளிநாட்டு செலாவணி வழங்கியமை வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நிகழ்வாகப் பதியப்பட்டுள்ளது.
கல்வி மேம்பாட்டுக்கான பங்களிப்பு
கல்வி மேம்பாட்டுக்காக நளீம் ஹாஜியார் காத்திரமான பங்களிப்புக்களை வழங்கியுள்ளார். பாடசாலைக் கல்வியை மேம்படுத்துவதற்காக பேருவளை மற்றும் ஏனைய பிரதேசங்களிலுள்ள அரச பாடசாலைகளது கீழ்க் கட்டுமான வசதிகளுக்குப் பெருந்தொகையான பணத்தை செலவளித்து அரச பாடசாலைகளது வளர்ச்சிக்குப் பங்களிப்பு வழங்கினார். துறைசார் நிபுணத்துவம் கொண்ட புத்திஜீவிப் பரம்பரை ஒன்றைத் தோற்றுவித்து, இந்நாட்டுக்குப் பங்களிப்பு செய்யும் நோக்கோடு பேருவளையில் ஜாமிஆ நளீமிய்யா உயர் கலாபீடத்தை நிறுவினார். 1973 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் திகதி அன்றைய கல்வியமைச்சர் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்களால் இக்கலாபீடம் திறந்து வைக்கப்பட்டது.
இஸ்லாமியக் கற்கை நெறியை பிரதானமாகக் கொண்டு, தேசிய உயர் கல்வி கொள்கைகளுக்கிணங்க இயங்கும் ஜாமிஆ நளீமிய்யா உயர் கலாபீடம் கடந்த ஐந்து தசாப்த காலமாக நாட்டுக்குத் தேவையான பட்டதாரிகள், புத்திஜீவிகள், அரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களைத் தோற்றுவித்து தேச நிர்மாணத்தில் தனித்துவமான பங்களிப்பைச் செய்து வருகிறது. இந் நிறுவனத்தின் கல்விப் பயணம் குறித்து இந்நாட்டின் கல்வியியலாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் வெகுவாகப் பாராட்டிப் பேசி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
“இந்தக் கலா நிலையத்தில் நடைபெறும் பணிகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டன. இதனை நிறுவியதன் மூலம் நளீம் ஹாஜியார் அவர்கள் நாட்டிற்கும் குறிப்பாக இஸ்லாமிய கல்வித்துறைக்கும் மிகச்சிறந்த பணி புரிந்துள்ளார்” என்பதாக பேராசிரியர் டீ.ஈ ஹெட்டியாரச்சி 1984 ஆம் ஆண்டு நிறுவனத்தின் பணிகளைப் பாராட்டி இருந்தார். இலங்கை முன்னாள் கல்வி அமைச்சராக இருந்த கலாநிதி நிஸ்ஸங்க விஜயரத்ன 1978 ஆம் ஆண்டில் நளீமிய்யாவைத் தரிசித்ததுடன், ”இந்நிறுவனத்தில் காணப்படும் கற்பதற்கான சிறந்த வசதி வாய்ப்புக்களும் அதன் பாடத்திட்டமும் ஓர் உயர்ந்த கலா நிலையமொன்றின் தரத்திற்கு அதனை உயர்த்தி உள்ளன. நான் இந்தக் கலாநிலையத்தால் மிகவும் கவரப்பட்டுள்ளேன்” என ஜாமிஆ நளீமிய்யாவை சிலாகித்துப் பேசினார்.
”ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தை உருவாக்கி நளீம் ஹாஜியார் ஆற்றிய பணி சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்” என இலங்கை முன்னாள் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல ஜாமிஆ நளீமிய்யாவின் 10 ஆவது பட்டமளிப்பு விழாவின்போது நளீம் ஹாஜியாரின் பங்களிப்புகளை நினைவு கூர்ந்தார்.
உயர் கல்வியை ஊக்குவித்து, கல்வி மேம்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் பொதுவாகவும், முஸ்லிம் உயர் கல்வியை இலக்காகக் கொண்டு குறிப்பாகவும் 1981 ஆம் ஆண்டு நளீம் ஹாஜியார் அவர்களால் கல்வி மறுமலர்ச்சி இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. அன்றைய தலைவர்களான சேர் ராஸிக் பரீத், பதியுத்தீன் மஹ்மூத், எம்.எச் முஹம்மத் மற்றும் ஏ.சி.எஸ் ஹமீத் போன்றோரின் பூரண ஒத்துழைப்புடன் 1981 ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட கல்வி மறுமலர்ச்சி இயக்கத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் பல்வேறு துறை சார் பட்டதாரிகள் தோற்றம் பெற்றார்கள். கல்விப் பொதுத் தராதர உயர்தர கற்கையைக் கற்கும் மாணவர்களுக்கு தகுதியும் அனுபவமும் உள்ள ஆசிரியர்களைக் கொண்டு கற்பிப்பதற்கு ஏற்பாடுகளை செய்து கொடுத்து, அதனூடாக பல்கலைக்கழக அனுமதியை அதிகரிக்கச் செய்ய உதவியதோடு, பல்கலைக்கழக அனுமதி பெற்று கல்வியைத் தொடர முடியாது பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்ட மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கி நாட்டின் உயர் கல்வி முன்னேற்றத்திற்கு கல்வி மறுமலர்ச்சி இயக்கம் காத்திரமான பங்களிப்புக்களை வழங்கியுள்ளமை ஈண்டு குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்பத் துறையில் தேர்ச்சி பெற்று, தேசிய அபிவிருத்தியில் பங்களிப்பு செய்யும் பிரஜைகளை உருவாக்கும் நோக்கில் நளீம் ஹாஜியார் இக்ரா தொழில்நுட்பக் கல்லூரியைத் தோற்றுவித்தார். மறுமலர்ச்சி இயக்கத்தின் கல்விப் பணியின் ஒரு மைல்கல்லாக பேருவளையில் இத்தொழில்நுட்பக் கல்லூரி நிறுவப்பட்டது. 1992ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் திகதி நாட்டின் அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களால் இக்கல்லூரி திறந்து வைக்கப்பட்டது.
எனவே ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம், கல்வி மறுமலர்ச்சி இயக்கம் மற்றும் இக்ரா தொழில்நுட்பக் கல்லூரி என்பவற்றை ஸ்தாபித்து இலங்கை உயர் கல்வி வளர்ச்சிக்குத் தமது பங்களிப்புக்களை நளீம் ஹாஜியார் வழங்கியுள்ளமை தேசத்தின் முன்னேற்றத்தில் அன்னாரின் வகிபாகம் மிகவும் கனதியானது என்பதைப் பறைசாற்றுகின்றது.
நளீம் ஹாஜியார் தேச எல்லையைக் கடந்தும், குறிப்பாக இந்தியாவிலும் கல்வி மேம்பாட்டுக்காகப் பொருளாதார உதவிகளை வழங்கியுள்ளார். ஓர் இலங்கைப் பிரஜை என்ற ரீதியில் அவர் செய்த பணிகள் பிற நாட்டவர்கள் மத்தியில் இலங்கைக்கு நன்மதிப்பையும், கீர்த்தியையும் பெற்றுத் தந்துள்ளன.
இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் பணிக்கு முன்னோடியாக இருந்து நளீம் ஹாஜியார் செயற்பட்டார். அதனூடாக இலங்கை வரலாற்றின் ஒரு முக்கிய இடைவெளியைப் பூரணப்படுத்தி ஆவணப்படுத்தும் பணிக்கு பெருமளவு பொருளாதார உதவிகளை வழங்கினார். இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக வரலாற்றை முறையான ஆய்வுக் கூடாக ஆவணப்படுத்தும் காத்திரமான பங்களிப்பை இலங்கை வரலாற்றுத் துறையில் பாண்டித்தியம் பெற்ற புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்வதற்கு கலாநிதி சுக்ரி போன்றோரின் முழு ஒத்துழைப்புடன் முன்னின்று உழைத்து அவர் வெற்றி கண்டார்.
1984 ஆம் ஆண்டுகளில் ஜாமிஆ நளீமிய்யா மாநாட்டு அரங்கில் தொடராக நடைபெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட பல்வேறு ஆய்வுகளையும் கருத்துக்களையும் கலாநிதி சுக்ரி “இலங்கை முஸ்லிம்கள் – பூர்வீகப் பாரம்பரியத்திற்கான பாதைகள்” (Muslims of Sri Lanka -Avenues to Antiquity) என்ற தலைப்பில் தொகுத்தார். இலங்கை முஸ்லிம் வரலாற்றில் ஒரு பெரும் இடைவெளியை நிரப்பிய காத்திரமான வரலாற்றுப் பங்களிப்பு என்ற வகையில் 1986ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இந்த நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வுக்கு அப்போதைய ஜனாதிபதி ஜே. ஆர் ஜெயவர்தன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்நூல் பற்றிய ஆய்வுரையை இலங்கை வரலாற்றுத் துறை அறிஞர்களில் ஒருவரான கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா நிகழ்த்தினார். நூலின் முதல் பிரதி நளீம் ஹாஜியார் அவர்களால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
சமூகநல மேம்பாட்டுக்கான பங்களிப்பு
நளீம் ஹாஜியார் தன்னிடம் உதவி கேட்டு வரும் அனைவருக்கும் இன, மத வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து மனித நேயத்துடன் உதவி செய்து மகிழ்ந்தார். நாடு பூராகவும் வாழ்ந்த பல ஏழை எளியவர்கள் நாளாந்தம் நளீம் ஹாஜியாரின் வீடு தேடி வந்து உதவிகளைப் பெற்றுச் செல்வது வழமையாக இருந்தது. ஏழை மக்களின் வாழ்வை வளப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக தனது செல்வத்தின் பெரும் பகுதியை நளீம் ஹாஜியார் நன்கொடை செய்தமைக்கு மக்கள் சான்று பகிர்கின்றனர்.
இது போன்று அவர் தேசிய மட்டத்தில் செய்த பொது நலப் பணிகளில் இலங்கை தேசத்தின் வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய ஒரு பணியாக, “சுசரித்த” கட்டட அன்பளிப்பைக் குறிப்பிடலாம். அவர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச உள்ளூராட்சி அமைச்சராக இருந்த காலத்தில் அதன் பிரதான கட்டடமான “சுசரித்த” கட்டடத்தைப் புதிதாக நிர்மாணித்துக் கொடுத்தார்.
தேசத்தில் இன, மத நல்லுறவைப் பேணுவதிலும் அதனைப் போஷிப்பதிலும் நளீம் ஹாஜியாரின் பங்களிப்புகள் காத்திரமானவை. தனது மாணிக்க வியாபாரத்தில் பெரும்பாலான கொடுக்கல் வாங்கல்களை முஸ்லிமல்லாத சகோதர மதத்தவர்களுடனேயே அவர் மேற்கொண்டார். அனைத்து இன, மதத்தவர்களுக்கும், அவர்களது உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, நாட்டில் சமாதான சகவாழ்வை நிலைக்கச் செய்வதில் நளீம் ஹாஜியார் கூடுதல் கரிசனை காட்டினார். தனது பிரதேசத்திலும் தேசிய மட்டத்திலும் பல மதஸ்தலங்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்கினார்.
விளையாட்டுத் துறைக்கான பங்களிப்பு
நாட்டின் வர்த்தகத் துறை, கல்வித் துறை, சமூக நலன்கள் என பல பகுதிகளுக்கு பங்களிப்புகளை வழங்கிய நளீம் ஹாஜியார் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கும் தனது செல்வத்தின் மூலம் உதவிகளை வழங்கினார். நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விளையாட்டு மைதானங்களை நிர்மாணித்துக் கொடுத்ததோடு, அவசியமான விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார். பேருவளையில் “நளீம் ஹாஜியார் விளையாட்டு அரங்கு” என்ற பெயரில் பொது விளையாட்டரங்கமொன்றை அமைத்தார். இம்மைதானத்தை 1970 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த டட்லி சேனாநாயக்க திறந்து வைத்தார்கள்.
தேசிய மட்டத்திலான விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குக் காத்திரமான பங்களிப்பை வழங்கிய அவர், இலங்கையில் புகழ்பெற்ற விளையாட்டரங்கமான “சுகததாச” உள்ளக விளையாட்டரங்கின் நிர்மாணப்பணிகளுக்கு ஐந்து லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை வழங்கினார். அதேபோன்று எஸ். எஸ். ஸி விளையாட்டரங்கின் அபிவிருத்திக்காக பண உதவிகள் செய்ததோடு, “பைரஹா பெவிலியன்” என்ற பெயரில் அங்கு பார்வையாளர் கூடமொன்றை கட்டிக் கொடுத்தார்.
இவ்வாறு நளீம் ஹாஜியார் தனது தேசத்திற்காகச் செய்த பொதுப் பணிகளின் வீச்செல்லை மிகவும் விசாலமானது. அதன் விளைவாக தேசிய மட்டத்தில் பல கௌரவப் பதவிகளும் பட்டங்களும் அவரைத் தேடி வந்தன. புகழையும் கௌரவத்தையும் விரும்பாத அவரது இயல்பால் அவற்றை கண்ணியமான முறையில் புறக்கணித்தார். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன நளீம் ஹாஜியார் மீது வைத்திருந்த நல்லெண்ணத்தின் காரணமாக “பாரிய கொழும்பு பொருளாதாரக் கமிஷன்“ அங்கத்தவர்களில் ஒருவராக நளீம் ஹாஜியாரை நியமிக்க முடிவு செய்து அவரிடம் அதனைத் தெரிவித்தபோது, தனக்கு அதை ஏற்றுக்கொள்வதில் உடன்பாடில்லை எனக் கூறி நல்ல முறையில் அதனைத் தவிர்ந்து கொண்டார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச இலங்கையின் தேசிய வீரர்கள் தினமொன்றில் அதி உயர் விருதினை வழங்கி நளீம் ஹாஜியாரை கௌரவப்படுத்த அவரிடம் அனுமதி கேட்டதற்கு, பணிவாக அதனை மறுத்துவிட்டார்.
இவ்வாறு பணிவும் பொதுநலனும் ஒன்று சேரப்பெற்றவராக நளீம் ஹாஜியார் வாழ்ந்தார். தான் சம்பாதித்த செல்வத்தால் காத்திரமான பணிகளை மேற்கொண்டு தேசத்தின் நலன் ஓங்குவதற்கு உழைத்த ஓர் உன்னத ஆளுமையான நளீம் ஹாஜியார் 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் திகதி தனது 72ஆவது அகவையில் இந்த உலக வாழ்விற்கு நிரந்தரமாகப் பிரியாவிடை கொடுத்தார். அந்த உன்னத ஆளுமை எமது தேசத்தின் நற்பிரஜைகளுக்கான மிகச் சிறந்த முன்மாதிரி என்பதில் துளியும் சந்தேகமில்லை. அத்தகையதொரு முன்மாதிரி நற்பிரஜையைப் பெற்றதற்காக நாடும் சமூகமும் பெருமிதமடைகின்றன.-Vidivelli