கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
2019ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தினம் இலங்கையின் கிறித்தவ மக்களால் என்றுமே மறக்க முடியாத ஒரு நாள். சில முஸ்லிம் பாதகர்களின் ஈவிரக்கமற்ற செயலால் சுமார் இருநூற்றைம்பது அப்பாவி கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் இறைவனின் துதிபாடுகையிலேயே குண்டு வெடிப்பினால் கொலை செய்யப்பட்ட ஒரு கறுப்பு தினம். அந்தக் கொடூரத்தை மனிதாபிமானமுள்ள எவராலும் மறக்கவும் முடியாது, அக்கொலைகாரர்களை மன்னிக்கவும் முடியாது. அந்தக் கொலைகாரர்களைப் பாதுகாப்புத்துறையினர் சுட்டுக் கொன்றபின் அவர்களின் பூத உடல்களுக்கு எந்தவித இஸ்லாமிய மதாசாரங்களையும் செய்ய முஸ்லிம் சமூகம் மறுத்ததே அந்தப் பாவிகளுக்கு சமூகம் கொடுத்த மிகப்பெரும் தண்டனை எனக் கருதலாம். ஒரு சமூகத்தினால் வேறென்னதான் செய்ய முடியும்? அந்தக் கொலைகளுக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது தெளிவு. எனினும் அந்தக் கொலை வெறியர்களின் பேயாட்டத்தால் கத்தோலிக்கர்களுக்கு அடுத்தபடியாகப் பாதிக்கப்பட்டதும் இன்றுவரை பாதிக்கப்படுவதும் முஸ்லிம் சமூகமே. அந்தச் சம்பவத்தை மையமாக வைத்து சிங்கள பௌத்த பேரினவாதிகள் முஸ்லிம் சமூகத்தையே இன்று அன்னியப்படுத்தி உள்ளனர்.
இவை ஒரு புறமிருக்க, அந்தச் சம்பவத்தைப்பற்றிப் பூரணமாக விசாரித்து அதன் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்களுக்குத் தக்க தண்டனை வழங்கவேண்டுமென்று இரண்டு விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டன. ஒன்று நல்லாட்சிக் காலத்தில், மற்றது தற்போதைய ராஜபக்ச ஆட்சியில். இரண்டாவது குழு சமர்ப்பித்த சுமார் 100,000,000 வார்த்தைகளைக் கொண்ட நீண்ட அறிக்கையைப் படித்துத் தக்க சிபாரிசுகளைச் சுருக்கமாக ஜனாதிபதிக்கு வழங்குமாறு இன்னொரு குழுவும் நிறுவப்பட்டு அதுவும் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. இதுவரையில் நூற்றுக்கும் மேலான முஸ்லிம்கள் சந்தேகத்தின் பெயரில் காவல் துறையினராலும் உளவுப் படையினராலும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் ஓர் அரசியல்வாதியும் முன்னை நாள் மாகாண ஆளுனர் ஒருவரும் இரு முஸ்லிம் மார்க்க ஆர்வலர்களும் ஓர் இளம் கவிஞனும் ஒரு மனித உரிமை வழக்குரைஞனும் அடங்குவர். எந்தக் குற்றமும் செய்யாத முஸ்லிம் இயக்கங்கள் பலவும் தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனால் ஜனாதிபதியின் விசாரணைக்குழு தடை செய்யுமாறு பணித்த பொது பல சேனா இன்னும் சுதந்திரமாக நடமாடுவதேன்?
இத்தனைக்கும் மத்தியில், அந்தக் கொலைகளினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ சமூகத்தின் பேராயர் மல்கம் ரஞ்ஜித் அவர்களுக்கும் மேலே குறிப்பிட்ட நீண்ட அறிக்கையின் பிரதி சமர்ப்பிக்கப்பட்டது. அவரும் அதைப் படித்துள்ளார். இன்று அவரே பகிரங்கமாக் கூறுகிறார், இந்த விசாரணையால் கத்தோலிக்க மக்களுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை என்றும், அதற்குப் பதிலாக முஸ்லிம் சமூகம் வீணாகத் தண்டிக்கப்படுகிறது என்றும், இந்தச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி அல்லது சூத்திரதாரிகள் இந்த அரசினால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது என்றும் பாரிய குற்றச்சாட்டுகளை இப்பேராயர் பகிரங்கமாகவே முன்வைத்துள்ளார். அத்துடன் இவ்விசாரணைகள் பற்றிய அவரது கவலைகளையும் ஏமாற்றங்களையும் பாப்பரசரிடமும் முறையிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழு 48ஆவது முறையாக ஜெனிவா நகரில் இம்மாதம் 13ஆம் திகதி கூட்டப்பட்டு இலங்கையின் மனித உரிமை மீறல்களைப் பற்றிய குற்றச்சாட்டுகளை விவாதிக்கும் சூழலில் பேராயரின் கவலைகளும் குற்றச்சாட்டுகளும் அவ்வாணைக்குழுவின் கவனத்தை ஈர்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இதற்கிடையே நௌபர் மௌலவிதான் இந்தச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியென மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறியிருப்பது யாரைச் சமாதானப்படுத்தவோ தெரியவில்லை. அது உண்மையென்றால் ஏன் ஜனாதிபதியோ பிரதமரோ அதை ஊர்ஜிதப்படுத்தவில்லை? இங்கே ஒரு பம்மாத்து நாடகமே அரங்கேற்றப்படுகின்றது என்பதுதான் உண்மை. எல்லாரையும் எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.
2019 உயிர்த்த ஞாயிறு சம்பவத்துக்குப் பின்னர் முஸ்லிம்களுக்கு அடுக்கடுக்காக அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது. அதை ஒரு முஸ்லிம் நீதி அமைச்சரே கண்டும் காணாததுபோல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த நிலையில் இலங்கை முஸ்லிம் அரசியல் தலைவர்களும் மதத்தலைவர்களும் இதுவரை இவைபற்றி எதையும் கூறாமல் மௌனிகளாக இருப்பதை விளங்க முடியாமல் இருக்கிறது. பயமா? சுயலாப அரசியல் தந்திரமா? பேராயரின் துணிவான பேச்சுக்களாலும் நடவடிக்கைகளாலும் கலக்கமுற்ற பொது பல சேனா, சிங்கள ராவய ஆகிய பௌத்த பேரினவாத இயக்கங்கள் கத்தோலிக்க சமூகத்துக்கெதிரான பயமுறுத்தல்களை அவிழ்த்துவிட ஆரம்பித்துள்ளன. காவியுடை ஞானசாரரும் அவரது வழமையான துவேஷ ராகத்தைப் பாடத் தொடங்கியுள்ளார். அநீதியைக் காப்பதற்கு அவர்களுக்குள்ள ஒரேயொரு ஆயுதம் இனக்கலவரத்தை எப்படியாவது தூண்டிவிடுவது என்பது இந்நாட்டின் தற்கால வரலாற்றின் தலைவிதிபோல் தெரிகிறது.
முஸ்லிம்களும் பேராயருடன் இணைந்து நீதிக்காகக் குரல் கொடுத்தால் அது சர்வதேச அரங்கில் ஓங்கி ஒலிக்கும் என்பதும் உண்மை. அதனால் பேரினவாதிகளின் முஸ்லிம்களுக்கெதிரான பிரசாரம் மீண்டும் வலுப்பெற்று அது சமூகத்தைப் பாதிக்கும் என்ற பயம் இத்தலைமைகளை மௌனிகளாக்கியதோ? “அச்சமுடையார்க்கு அரணில்லை”, என்கிறது குறள். அதாவது பயந்து பயந்து வாழ்பவனுக்கு என்றுமே பாதுகாப்பில்லை என்பது அதன் பொருளாகும். பேராயரைப் போன்று முஸ்லிம்களும் கேட்பது நீதியைத்தவிர வேறொன்றுமில்லை. அதைக் கேட்க ஏன் தயங்க வேண்டும்? அரசியல்வாதிகளாலும் கொடுங்கோல் ஆட்சியாளர்களாலும் பாதிக்கப்பட்ட உலக மக்கள் யாவரும் ஒரே குரலிற் கேட்பதும் நீதியைத்தானே. அம்மக்கள் வாழ்கின்ற நாடுகளிலுள்ள நீதித்துறை இலங்கையைப்போன்று அரசியல் மயமாக்கப்பட்டு அதன் சுயாதீனத்தை இழந்து நிற்கையிலே சர்வதேச அரங்கினைத்தவிர வேறெங்கே அவர்கள் நீதிகேட்டுப் போராடலாம்? அதைத்தானே பேராயரும் செய்கிறார்? அவருடன் சேர்ந்து முஸ்லிம் தலைவர்கள் போராடுவதற்கு ஏன் பயப்பட வேண்டும்?
நீதி இன்றேல் அரசாட்சியே இல்லை என்பதற்கு இப்னு பல்கி (850-934) என்னும் ஒரு முஸ்லிம் மூதறிஞனின் பின்வரும் வரிகள் சிறந்த ஓர் எடுத்துக்காட்டு.
“படைகளில்லாமல் அரசு இல்லை, செல்வம் இல்லாமல் படைகளில்லை, செழிப்பு இல்லாமல் செல்வம் இல்லை, நீதி இல்லாமல் செழிப்பே இல்லை”.
நீதியே குர்ஆனின் குரலும்கூட. அதைக் கேட்பதும் அதற்காகப் போராடுவதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை. எனவேதான் முஸ்லிம் தலைவர்கள் வாய்புதைத்து மௌனிகளாய் நிற்பதை விளங்க முடியாமல் இருக்கிறது. நாட்டுக்குள் இருப்பவர்களே இயங்காமல் இருக்கும்போது வெளியே இருப்பவர்கள் எவ்வாறு இயங்க முடியும்? அவ்வாறு இயங்கினாலும் அது மட்டுப்படுத்தப்பட்ட இயக்கமாகத்தான் இருக்க முடியும். இதையும் முஸ்லிம் சமூகம் உணரவேண்டும். இந்த உண்மையை தமிழ்த் தலைவர்களிடம் இருந்தாவது முஸ்லிம் தலைமைகள் படிக்கக் கூடாதா?
முஸ்லிம் தலைவர்களின் மௌனத்துக்கு சுயலாப நோக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். ஏனெனில் அது அவர்களின் அரசியலுடன் ஒட்டிவளர்ந்த ஒரு பண்பு. எரிகின்ற வீட்டில் பிடுங்குவது இலாபம் என்ற போக்கிலேதானே சுமார் எழுபது ஆண்டுகளாக முஸ்லிம்களின் அரசியல் வளர்ந்து வந்தது. அந்த நோக்கம்தானே இந்த நாடாளுமன்றத்திலும் அரசியல் சட்ட 20ஆம் திருத்தப் பிரேரணைக்கு ஆதரவாக முஸ்லிம் அங்கத்தவர்களைக் கைதூக்கச் செய்தது? அந்த சுயலாப அரசியல் எந்த அளவுக்கு முஸ்லிம் சமூகத்தைப் பாதித்துள்ளது என்பதை இன்னும் விளக்க வேண்டுமா?
இன்று முஸ்லிம் சமூகமே அன்னியப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீதிக்காகப் போராடாமல் மௌனம் சாதிப்பதன்மூலம் ஆட்சியாளர்களின் சலுகைகளையும் சன்மானங்களையும் உயர் பதவிகளையும் பெறலாம் என இத்தலைவர்கள் கருதுவார்களேயானால் அவர்களைப்போல் மூடர்கள் இனித்தான் பிறக்க வேண்டும்.
இலங்கையிலே ஜனநாயகமும் மனித உரிமைகளும் நீதியும் இன்று புறக்கணிக்கப்பட்டுள்ளன. அவை மீண்டும் தோற்றுவிக்கப்பட வேண்டுமென கோடிக்கணக்கான சிங்கள பௌத்த மக்களும் கிறிஸ்தவர்களும் தமிழர்களும் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் போராட்டம் நாடளாவிய ரீதியில் விரிவடைந்து தெருவுக்கு வராமல் தடுப்பதற்காகவே இராணுவத்தைக் கொண்டு கொவிட் கொள்ளை நோயைச் சாட்டாக வைத்து அரசு தன்னைப் பாதுகாக்கப் பல அரண்களை அமைத்துள்ளது. இவ்வாறு கூறுவதால் கொள்ளை நோயின் ஆபத்தை அணுவளவிலேனும் குறைக்க விரும்பவில்லை. ஆனால் அரசாங்கமோ அதைக் காரணம் காட்டி மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கின்றது என்பதைத்தான் இங்கே வலியுறுத்த வேண்டியுள்ளது. இது சர்வதேச அமைப்புகளுக்கும் நன்கு தெரியும். எனவேதான் முஸ்லிம் சிவில் அமைப்புகளும் புத்திஜீவிகளும் முஸ்லிம் அரசியல் தலைவர்களைப் புறந்தள்ளிவிட்டு அந்தப் போராளிகளுடன் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. முஸ்லிம்களுக்குத் தேவை ஒரு பிரஜைக்குரிய நீதியான உரிமைகளேயன்றி சலுகைகளல்ல.
2019 உயிர்த்த ஞாயிறு சம்பவத்தினால் முஸ்லிம் சமூகத்தின்மேல் படிந்துள்ள குற்றக்கறை அகலவேண்டுமானால் பேராயர் மல்கம் ரஞ்ஜித் அவர்கள் எழுப்பும் குரலுக்கு முஸ்லிம்களும் உரமூட்ட வேண்டும். அதை முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்யமாட்டார்கள். சிவில் சமூகமே செய்யவேண்டும். அவை செய்யுமா?-Vidivelli