முஸ்லிம் தனியார் சட்டத்தை அகற்ற இடமளிப்பதில்லை
எதிரணி முஸ்லிம் எம்.பி.க்கள் தீர்மானம் ஹக்கீம் தலைமையில் குழு நியமனம்
முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் தொடர்பில் சமகாலத்தில் நிலவும் சர்ச்சைகளுக்கு தீர்வு காண்பது குறித்து எதிர்க் கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஷிம், ரிஷாட் பதியுதீன் எஸ்.எம்.மரிக்கார், இம்ரான் மகரூப் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது அமைச்சரவையில் முன்மொழியப்பட்டுள்ள முஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்தங்கள், குறிப்பாக காதி நீதிமன்றம் மற்றும் பலதார மணத்தை இல்லாதொழித்தல் தொடர்பான விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இதன்போது முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்குவதற்கு இடமளிக்க முடியாது என்றும் முக்கியமான அம்சங்களைப் பாதுகாத்தவாறு, தேவையான திருத்தங்களை மாத்திரம் மேற்கொள்வதற்கான இணக்கப்பாட்டை எட்டுவதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கென எதிர் அணி சார்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இதன் ஏற்பாட்டாளராக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் உறுப்பினர்களாக இருந்து கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களையும், நீதியமைச்சர் அலி சப்ரியையும் அரசு தரப்பில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து பேசுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இலங்கையில் உள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களை சந்தித்து பேசுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் முஸ்லிம் சிவில் அமைப்புகள், இந்த விவகாரத்தில் ஆர்வத்துடன் செயற்படும் சிரேஷ்ட முஸ்லிம் சட்டத்தரணிகள், முஸ்லிம் பெண் உரிமைகளுக்கான அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்தும் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் முஸ்லிம் தரப்புகள் மத்தியில் நிலவும் கருத்து வேறுபாடுகளை களைந்து ஒருமித்த நிலைப்பாடு ஒன்றை எட்டுவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதென்றும் இதன் போது தீர்மானிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.- Vidivelli