உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் “சூத்திரதாரி அல்லாஹ்” என ஞானசாரதேரர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் இலங்கை முஸ்லிம்களை மாத்திரமல்ல முழு உலக முஸ்லிம்களையும் நிந்திப்பதாகும். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். குர்ஆன் வசனம் இறக்கப்பட்ட காலம், சூழலை புரிந்து கொள்ளாது மொழி பெயர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு அல்லாஹ்வை நிந்தித்தமை முஸ்லிம்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை பொதுபல சேனா அமைப்பின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதில் வழங்கியுள்ளது.
அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அர்க்கம் நூராமித்தின் கையொப்பத்துடன் கூடிய அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; அண்மையில் ஊடக மாநாடொன்றில் ஞானசாரதேரர் தெரிவித்த மதத்தினை அவமதிக்கும் கருத்துக்கள் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையினால் நாம் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளோம். குறிப்பிட்ட ஊடக மாநாட்டில் கலகொட அத்தே ஞானசாரதேரர் மிகவும் மோசமாக மத நிந்தனை செய்துள்ளார். அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் “சூத்திரதாரி அல்லாஹ்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஞானசாரதேரரின் இந்தக் கருத்து இலங்கை முஸ்லிம்களை அவமதிப்பது மாத்திரமல்ல முழு உலகிலும் வாழும் சுமார் இரண்டு பில்லியனுக்கும் மேலான முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்ட அவமானமாக நிந்தனையாகவே நாம் கருதுகிறோம். பின்பு இந்த மோசமான அவமதிப்பு தொடர்பாக எதுவித காரணங்களுமின்றி அல்குர்ஆனின் 8:30 வசனத்தைக் குறிப்பிட்டு விபரிப்பது எவ்விதத்திலும் அடிப்படையற்றதாகும்.
இந்த பாரதூரமான கருத்தினை வெளியிடுவதற்காக குறிப்பிட்ட மத குரு சிங்கள மொழிபெயர்ப்பொன்றினையே கையாண்டுள்ளார். அவர் தேர்ந்தெடுத்த அல்குர்ஆன் வசனம் தொடர்பான விவரணக்குறிப்பினை அவர் வாசித்திருந்தால் இவ்வாறான பிரச்சினைக்குரிய பரபரப்பான கருத்தினை வெளியிட்டிருக்கமாட்டார்.
நாட்டின் இலக்கிய கிரந்தங்களை எடுத்துக்கொண்டால் முதற் பிரதியின் பொருள் பொதுமக்களுக்கு விளங்கிக் கொள்ள முடியாமல் இருப்பதனாலே விவரண நூல்கள் வெளிவருகின்றன. மகாவங்ச கிரந்தத்துக்கும் விவரண நூல் எழுதப்பட்டுள்ளது.
சிங்கள மொழியிலான காவியத்தின் கவிதையொன்றினது பொருளை சாதாரண மொழியில் விபரிப்பதற்கு முன்பு அது என்ன கவிதை? அதன் கவிஞர்யார், கவிஞரின் இலக்கு என்ன? அந்தக் கவிதைக்கு முன்னைய கவிதை எது? அந்தக்கவிதைக்கும் இந்தக் கவிதைக்குமுள்ள தொடர்பு என்ன? என்பதை ஆராய்ந்து தேடிப்பார்த்து தெளிவான கட்டுரையொன்றினை எழுதுவற்கு பாடசாலை மாணவர்களுக்குக்கூட தெரியும்.
அல்லாஹ்வினால் இறக்கப்பட்ட புனித குர்ஆன் வசனங்கள் தொடர்பாக கருத்து வெளியிடுவதற்கு முன்பு அந்த வசனம் இறக்கப்பட்ட சூழலையும் கருத்திற்கொள்ளாது மாற்றமான திரிபுபட்ட கருத்துக்களை வெளியிடுவது தவிர்க்கப்படவேண்டும்.
அல்குர்ஆன் வசனம் 8:30 இறக்கப்பட்ட காலம் மக்கா வாசிகள் முஹம்மது நபியவர்களை கொலை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சூழ்ச்சிகளை பின்னணியாகக் கொண்டதாகும். என்றாலும் அல்லாஹ் நபியவர்களை இந்த சூழ்ச்சிகளிலிருந்தும் பாதுகாத்தான் என்பதே இந்த குர்ஆன் வசனத்தின் நோக்கமாகும். மக்காவாசிகளின் சூழ்ச்சியை தோற்கடிப்பது திட்டமிட்ட ஏற்பாடு ஒன்றல்லவா?
இந்த அல்குர்ஆன் வசனம் இறக்கப்பட்டது என்ன காரணத்துக்காக? யாருக்காக இறக்கப்பட்டது? இந்த குர்ஆன் வசனம் இறக்கப்பட்ட சூழலைப் புரிந்து கொள்ளாது, தான் அறியாதமொழியில் எழுதப்பட்டுள்ள குர்ஆன் வசனத்துக்கு ஞானசாரதேரர் இவ்வாறான அவமதிப்பு செய்துள்ளமை தொடர்பில் நாம் எமது கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
சமயத் தலைவர் ஒருவர் முக்கியமான கருத்துக்களை வெளியிடுவதற்கு முன்பு அது தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli