பீரிஸ்-ஓ.ஐ.சி.பேச்சுவார்த்தை
இலங்கை முஸ்லிம்களின் விவகாரங்கள் தொடர்பில் விரிவாக கேட்டறிந்தார் பொதுச் செயலாளர் யூசுப் அல்-ஒதைமீன்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உட்பட பல்தரப்பு அரங்கில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவிற்கு வரவேற்புத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அரசியல் நோக்கங்களுக்காக நாடுகளை தனிமைப்படுத்துவதை எதிர்ப்பதாகவும் மாறாக தேசிய பிரச்சினைகளை அந்தந்த நாடுகளே தீர்த்துக்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது அமர்வில் பங்கேற்கச் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் யூசுப் அல்-ஒதைமீனைச் சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது இவ்வாண்டின் தொடக்கத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலாளருக்கும் இடையில் இடம் பெற்ற தொலைபேசி உரையாடலை நினைவுகூர்ந்த அமைச்சர் பீரிஸ், இலங்கைக்கும் சர்வதேச முஸ்லிம் சமூகத்திற்கும் இடையிலான நீண்டகாலத்தொடர்பைப் பற்றியும் குறிப்பிட்டார்.
பலஸ்தீன அரசை முதலில் அங்கீகரித்தவர்களில் இலங்கையும் ஒன்று என்பதுடன் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ச, இளம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இலங்கை பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தை நிறுவி 25 ஆண்டுகளாக அதன் தலைவராகவும் பணியாற்றினார் என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். அத்தோடு பலஸ்தீனப் பிரச்சினைக்கு இலங்கை தொடர்ந்தும் ஆதரவளித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை உட்பட பல்தரப்பு அரங்கில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு இலங்கைக்கு வழங்கிய ஆதரவை பாராட்டிய வெளிவிவகார அமைச்சர், அரசியல் நோக்கங்களுக்காக நாடுகளை தனிமைப்படுத்துவதை எதிர்க்கும் அதேவேளை நாடுகள் தமது தேசிய பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் இதன்போது இலங்கைக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் நீண்டகால உறவுகளை வரவேற்ற அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் அல்-ஒதைமீன், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு உலகளாவிய ரீதியிலுள்ள முஸ்லிம்களின் நலனில் அக்கறை கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதேவேளை முஸ்லிம்கள் உள்நாட்டு சமூக, கலாசாரம் மற்றும் நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளித்துச்செயற்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
ஏனைய சமூகங்களிலிருந்து தம்மைத் தனிமைப்படுத்திக்கொண்டு வாழும் குழுக்களினால் ஏற்படக்கூடிய அபாயநிலை தொடர்பில் குறிப்பிட்ட அவர், இது பிரிவினை மற்றும் பேரழிவிற்கான செயன்முறை என்பதுடன் தீவிரவாத செயற்பாடுகளுக்கும் வழிவகுக்கக்கூடும் என்றும் கூறினார்.
மேலும் கொவிட்-19 வைரஸ் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை இஸ்லாமிய மதநம்பிக்கைகளின் பிரகாரம் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியமைக்காக அரசாங்கத்தைப் பாராட்டிய அல்-ஒதைமீன், தமது அமைப்பு தீவிரவாதம், வன்முறை ஆகியவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு கொவிட் – 19 வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே திட்டமிடப்பட்ட விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் முன்னேற்றகரமான செயற்பாடுகளை அவதானிப்பதற்குத் தூதுக்குழுவொன்றுடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இதன்போது வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் யூசுப் அல்-ஒதைமீனுக்கு அழைப்புவிடுத்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli