பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீண்டும் தனது வெறுப்புப் பிரசாரத்தை கையிலெடுத்துள்ளார். கடந்த சில தினங்களாக அரச மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் தோன்றிவரும் அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னிறுத்தி முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் “உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி அல்லாஹ்தான்” என வெளியிட்ட கருத்து முஸ்லிம்களை அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், நேற்றைய தினம் பொலிஸ் தலைமையகத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவரால் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து நேற்றைய பாராளுமன்ற அமர்விலும் பேசப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் ஞானசார தேரரின் வெறுப்பூட்டும் கருத்துக்கள் குறித்து கண்டித்துப் பேசியதுடன் அரசாங்கம் இது குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கேள்வியெழுப்பினர். எனினும் அரச தரப்பில் இது குறித்த எந்தவித ஆக்கபூர்வமான பதிலும் அளிக்கப்படவில்லை.
கடந்த காலங்களில் ஞானசார தேரர் வெளியிட்ட வெறுப்புப் பேச்சுக்களுக்காகவும் அதன் மூலம் ஏற்பட்ட வன்முறைகளுக்காகவும் கைது செய்யப்பட்டு ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையில் சிபாரிசு செய்திருந்தது. எனினும் இதுவரை அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக இத்தாக்குதலுடன் எந்தவகையிலும் சம்பந்தப்பட்டிராத அப்பாவி முஸ்லிம்கள் பலர் கடந்த இரு வருடங்களுக்கும் மேலாக சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் பௌத்த சிங்கள தீவிரப்போக்காளர்கள் இவ்வாறு இஸ்லாத்தை அவமதிப்பதும் முஸ்லிம்களை துன்புறுத்துவதும் இதுவே முதற்தடவையல்ல. கடந்த 10 வருடங்களில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும் இவற்றில் ஒன்றுக்காகவேனும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதில்லை என்பதே யதார்;த்தமாகும். தற்போதைய அரசாங்கம் கொவிட் தொற்றினால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரித்தமை உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச நாடுகளிலும் பாரிய அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தது. ஈற்றில் சர்வதேச அழுத்தத்தின் பேரிலேயே அப் பிரச்சினைக்கு முடிவு காணப்பட்டது.
அன்றெல்லாம் முஸ்லிம் நாடுகளின் கோரிக்கைகளையும் அழுத்தங்களையும் கண்டு கொள்ளாத இந்த அரசாங்கம், இன்று பொருளாதார மற்றும் மனித உரிமைகள் சார்ந்த நெருக்கடிகள் வந்த பிற்பாடு முஸ்லிம் நாடுகளின் தயவை நாடியிருப்பது வெட்கத்துக்குரியதாகும்.
ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு விஜயம் செய்துள்ள எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கச்சா எண்ணெயை கடனுக்குப் பெற்றுக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தற்போது நாடு எதிர்கொண்டுள்ள அந்நியச் செலாவணி பற்றாக்குறைக்கு தீர்வாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் இந்த உதவி அமையும் என கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ள ஜனாதிபதி குவைத் பிரதமரை அங்கு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன் துறைமுக நகர் திட்டத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மறுபுறும் தற்போது ஜனாதிபதியுடன் நியூயோர்க் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலாளரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன் முஸ்லிம் நாடுகளுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவு குறித்து நீண்ட நேரம் பிரஸ்தாபித்துள்ளார். மேலும் துருக்கியின் வெளிவிவகார அமைச்சருடனும் இரு நாடுகளினதும் வர்த்தக உறவுகள் குறித்து பேராசிரியர் பீரிஸ் பேச்சு நடத்தியுள்ளார்.
உலகிலுள்ள பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு எப்போதுமே உதவிக் கரம் நீட்டி வந்துள்ளன. யுத்த காலத்திலும் மனித உரிமைகள் பேரவை நெருக்கடியின் போதும் அனர்த்தங்களின் போதும் முஸ்லிம் நாடுகள் ஏராளமான உதவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் இலட்சக்கணக்கான இலங்கையர்கள் மூலம் பாரிய அந்நியச் செலாவணி இலங்கைக்கு கிடைக்கிறது. எனினும் உள்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தொடர்பில் மாத்திரம் அரசாங்கம் ஓரக்கண்கொண்டு தீர்மானங்களை எடுக்கிறது.
முஸ்லிம்கள் விடயத்தில் உள்நாட்டில் ஒரு கொள்கையும் வெளிநாடுகளில் வேறு ஒரு கொள்கையையும் பின்பற்றும் இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு ஒருபோதும் வெற்றியளிக்கப் போவதில்லை. தற்போது ஞானசார தேரர் அல்லாஹ்வை அவமதிக்கும் விதத்தில் வெளியிட்ட கருத்து குறித்து இலங்கையிலும் உள்ள சகல முஸ்லிம் நாடுகளின் தூதரகங்களும் விசேட கவனம் செலுத்தியுள்ளன. இவ்வாறான வெறுப்புப் பேச்சுக்களுக்கு அரசாங்கம் தொடர்ந்தும் இடமளிக்குமானால் முஸ்லிம் நாடுகள் தமது ஆதரவை விலக்கிக் கொள்ள நேரிடலாம். அது நிச்சயமாக இந்நாட்டை மேலும் படுகுழியில் தள்ளவே வழிவகுக்கும்.
ஞானசார தேரரின் இவ்வாறான கருத்துக்கள்தான் முஸ்லிம் சமூகத்தில் தீவிரவாத சக்திகள் தோற்றம் பெற வித்திட்டன என்பதை அரசாங்கம் அறியாமலில்லை. இதனையே ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களது வாய்களுக்கு பூட்டுப் போடுவதே இப்போதைக்குள்ள தேவையாகும்.- Vidivelli