அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்
அல்குர்ஆனில் அல்லாஹ் சூரா மும்தஹனாவின் ஆரம்ப வசனங்களில் மதீனாவில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவம் ஒன்று பற்றி குறிப்பிடுகிறான்.
ஹாதிப் இப்னு அபீ பல்தஆ (ரழி) என்ற நபித்தோழர் மக்காவிலிருந்து மதீனா வந்திருந்த ஒரு பெண்ணுடைய கையில் நபியவர்களுடைய திட்டமொன்று பற்றிய தகவலை உள்ளடக்கிய கடிதம் ஒன்றை எழுதி மக்காவாசிகளுக்கு கொடுக்கும் படி கொடுத்து அனுப்பினார். அப்பெண் வழியில் போய்க் கொண்டிருந்த போது அக்கடிதம் நபியவர்களால் அனுப்பப்பட்ட சில நபித் தோழர்களால் கைப்பற்றப்பட்டது. இந்த ஸஹாபியின் நடவடிக்கையை அல்லாஹ் கடுமையாக எச்சரித்தான்.
அல்லாஹ்வினதும் அவனது தூதரதும் எதிரிகளை நேசத்துக்கும் விசுவாசத்துக்கும் உரியவர்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று அந்த சூராவின் ஆரம்ப வசனங்கள் எச்சரிக்கின்றன. முஸ்லிம்கள் நிராகரிப்பாளர்களாக மாற வேண்டும் என்று அவர்கள் விரும்புவதாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக அவர்கள் போராடும் அதே நேரம் மோசமான வார்த்தைகளை பேசுவதாகவும் கூறுகின்றான். அப்படியான நிராகரிப்பாளர்களுக்கு முஸ்லிம் சமூகத்தின் தகவல்களை நகர்த்துவது பாரிய குற்றம் என்பதை இந்த வசனங்கள் உணர்த்துகின்றன.
மதீனாவில் ரசூல் (ஸல்) அவர்கள் தனது சஹாபாக்களுடன் இருந்த பொழுது பேசிக்கொண்ட சில முக்கியமான கருத்துக்களை ஒரு நபித்தோழர் -தனது சில தனிப்பட்ட இலாபங்களுக்காக – மக்காவிலுள்ள குறைஷிகளுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் மேற்கொண்ட இந்த முயற்சி பயங்கரமான குற்றம் என்பதை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். இது ஒரு விரிவான சம்பவமாகும்.
எனவே மிகவும் பாரதூரமான, வெளிப்படுத்தக் கூடாது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கும் தகவல்களை வெளிப்படுத்துவது மிகப் பெரிய துரோகம் மட்டுமல்ல பாவமாகும்.
இரு நபர்களுக்கு இடையில் இடம்பெறும் உரையாடல், கணவன் மனைவிக்கிடையிலான தாம்பத்திய உறவு, ஒரு கூட்டத்தில் இடம்பெறும் கலந்துரையாடல் போன்ற இவை அனைத்தும் ரகசியமாக தனிப்பட்ட முறையில் பேணப்பட வேண்டிய தகவல்களாகும். அவற்றை பாதுகாக்காமல் விடுவது அல்லது மற்றொரு நபருக்கு சொல்வது சமூகத்தில் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் அதே நேரம் மனதில் கவலையையும் ஆத்திரத்தையும் இனங்களுக்கும் தனிநபர்களுக்கும் இடையிலான உறவு விரிசல்களையும் ஏற்படுத்தும்.
நபி(ஸல்) கூறினார்கள்:- “ஒருவர் இன்னொருவரோடு ஒரு செய்தியைப் பேசிவிட்டு திரும்பிப் பார்த்தால் அது அமானத் ஆகும்” (அபூதாவூத் – 4868)
இதற்கு இமாம் முனாவி (ரஹ்) விளக்கமளிக்கும் போது: தகவலைப் பகிர்ந்த அந்த நபர் அந்த மஜ்லிஸில் இருந்து சென்றுவிட்டாலோ அல்லது வலமாகவோ இடமாகவோ திரும்பிப் பார்த்தாலோ அவர் பேசிய விடயங்களை அவர் யாரோடு பேசினாரோ அவரைத் தவிர வேறு எவரும் தெரிந்துகொள்ளாதிருக்க வேண்டும் என்ற நோக்கில் இருக்கிறார் என்பதற்கான அடையாளங்கள் அவரிடமிருந்து வெளிப்பட்டால் அவர் பேசியவை அமானத்தாகும். யாருடன் அவர் பேசினாரோ அவரிடம் அதனை அடைக்கலமாக ஒப்படைத்திருக்கிறார் என்பதனால் வேறு எவருடனும் அவர் அதனைப் பகிர்ந்து கொண்டால் அல்லாஹ்வின் கட்டளைக்கு அவர் மாறுசெய்தவராவார். தனக்கு தரப்பட்ட அமானிதத்தை பொருத்தமற்றவரிடம் கொடுத்ததாக அது அமையும். அநியாயக்காரர்களில் ஒருவராக அவர் மாறுகிறார். எனவே அதனை அவர் மறைக்க வேண்டும். அவர் திரும்பிப் பார்த்ததன் மூலம் அதனை வேறு யாருடனும் பேச வேண்டாம் என அவரை வேண்டிக்கொண்டதாக கருத வேண்டும்.
நபியவர்கள் சொற்சுருக்கத்துடன் இங்கு கூறியுள்ளார்கள். மனிதர்களுடன் பழகும் முறைகள், நட்பின் ஒழுங்குகள், இரகசியங்களை மறைப்பது, அன்பை பாதுகாப்பது போன்ற விடயங்களையும் சகோதரர்களுக்கிடையே பகைமையைத் தோற்றுவிக்கும் கோள் சொல்வதை எச்சரிக்கும் வகையிலும் இந்த ஹதீஸ் அமைந்துள்ளது. (ஃபைளுல் கதீர் 1/325)
மேலும் நபிகளார் (ஸல்) அவர்கள்:- “மஜ்லிஸ்கள் அமானிதத்தோடு கூடியவையாகும். (அங்கு பேசப்படும் தகவல்கள் வெளியே சொல்லப்படக் கூடாதவை) ஆனால், மூன்று விவகாரங்கள் அங்கு பேசப்படுமாக இருந்தால் அவற்றைத் தவிர.
அநியாயமாக ஒருவரை கொலை செய்வது பற்றிய தகவல்
சட்டத்துக்கு புறம்பாக உடலுறவு கொள்வது பற்றிய தகவல்
ஒருவரது சொத்தை எவ்வித உரிமையும் இன்றி அபகரித்துக் கொள்வது பற்றிய தகவல்(ஹதீஸ் ஹஸன்)
மேற்படி நபிமொழிகள் பயங்கரமான குற்றங்கள் தொடர்பான தகவல்கள் ஓரிடத்தில் பகிரப்படுமாயின் சமூகத்தின் நலன் கருதி அதனை அந்த சபைக்கு அப்பால் நகர்த்துவதில் தவறு கிடையாது என்பதை நபியவர்கள் உணர்த்துகிறார்கள். முதலில் அது பற்றி உரியவருக்கு எச்சரித்த பின்னரும் கூட அவர் அது விடயமாக கவனமாக நடக்காத போது இவ்வாறு சபைக்கு வெளியே தேவைப்படும் நபர்களோடு மாத்திரம் அதனைப் பகிர்ந்து கொள்ள முடியும்.
இங்கு கூறப்பட்டுள்ள மூன்று விடயங்களும் சமூகத்தை அழிப்பதாகவும் அத்துமீறலாகவும் அமைவதனால் அது பற்றி மௌனம் சாதிக்க கூடாது என்பதும் உணர்த்தப்படுகிறது. ஆனால் ஒரு சபையில் மட்டும் உள்ளவர்களோடு தொடர்பான, பாவ காரியங்களோடு சம்பந்தப்படாத தகவல்கள் சபையோடு வரையறுக்கப்பட வேண்டும் என்பதையும் அதற்கப்பால் நகர்த்துவது மோசமான துரோகம் என்பதையும் இந்த ஹதீஸ் காட்டுகிறது.
மேலும் ஒரு தடவை நபியவர்கள்: “ஒருவர் தனது மனைவியோடு தாம்பத்திய உறவை மேற்கொள்கிறார். அவளும் அவரோடு அவ்வாறு ஈடுபட்ட பின்னர் அவளுடைய ரகசியத்தை வெளிப்படுத்துபவர் மறுமையில் அல்லாஹ்விடத்தில் மிக மோசமான அந்தஸ்துள்ள ஒரு மனிதர் ஆவார்” (ஸஹீஹ் முஸ்லிம்- 1437) எனக் கூறினார்கள்.
எனவே இஸ்லாத்தில் உரையாடலுக்கும் சபை நடவடிக்கைகளுக்கும் மிக அழகான ஒழுக்கங்கள் சொல்லித் தரப்பட்டுள்ளன. சபையில் தனிப்பட்ட முறையில் இரண்டு பேருக்கு இடையில் பேசப்படும் தகவல்கள் அதி முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருப்பின் அவற்றை அந்த வட்டத்துக்கு அப்பால் பகிர்வது பலவகையான பாதகமான, மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி, சமூக கட்டுக் கோப்பையும் உடைத்துவிடும்.
எனவே சபையின் இரகசியங்களைப் பேணுவது, தலைமைக்கு கட்டுப்படுவது, நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையின் அந்தரங்கங்களை பாதுகாப்பது என்பன இஸ்லாத்தின் அடிப்படையான போதனைகளாகும்.-Vidivelli