சபீர் மொஹமட்
காணிகள் என்பது அவற்றின் உரிமையாளர்களுடைய வாழ்க்கையின் ஓர் அங்கமாகும். அவர்களுடைய நிலத்தின் உரிமை அவர்களுடைய அடையாளமாகும். அடிப்படை மனித உரிமையாக நோக்கப்பட வேண்டிய காணிகளை மாறிமாறி ஆட்சிக்கு வருகின்ற ஆட்சியாளர்களும் அரச அதிகாரிகளும் மக்களுக்கு வழங்குதல், மக்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளுதல் அல்லது மீள்குடியமர்த்துதல் போன்ற செயற்பாடுகளின் போது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது வெறுமனே இலாபம் ஈட்டக்கூடிய ஒரு பண்டமாகவே பார்க்கின்றனர்.
இலங்கையின் எல்லா மாவட்டங்களிலும் வாழ்கின்ற மக்கள் காணி சம்பந்தப்பட்ட ஏதேனுமொரு பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். இதற்கான பிரதான காரணம், காணிகள் என்பது மக்களின் வாழ்க்கையுடன், உணர்வுகளுடன் எந்த அளவு பிணைந்துள்ளது என்பதனை மறந்து ஆட்சியாளர்கள் எடுக்கின்ற தவறான தீர்மானங்கள் மற்றும் முடிவுகளே ஆகும்.
யுத்தத்திற்குப் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சுற்றுலா விடுதிகள் மற்றும் பண்ணைகள் போன்ற வர்த்தகம் சார்ந்த நடவடிக்கைகள் மக்களுடைய காணி பற்றிய பிரச்சினைகள் மென்மேலும் அதிகரித்துள்ளது. இவ்வாறு மறைமுகமாக மேற்கொள்ளப்படுகின்ற இராணுவ மயமாக்கல் காரணமாக பல வழிகளிலும் மக்கள் தமது காணி உரிமைகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காணி ஆணைக்குழுவின் 2019/2020 அறிக்கையின் படி தனிநபர்களுக்குச் சொந்தமான பிரதேசங்களை ஆக்கிரமித்துள்ளதற்கு அப்பால் இராணுவ ஆக்கிரமிப்பானது, மீன்பிடி, விலங்கு வேளாண்மை போன்ற அம்மக்களின் அடிப்படை பொருளாதாரத்தையும் அன்றாட வாழ்வாதாரத்தையும் பாதிப்படையச் செய்துள்ளது. குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான தன்னிச்சையாக எடுக்கப்படுகின்ற முடிவுகள் காரணமாக மக்கள் மிகுந்த அச்சத்துக்கு மத்தியிலேயே தமது காணிகளிலே வாழ்ந்து வருகின்றனர். இராணுவ அதிகாரிகளின் கரங்களினால் உருவாக்கப்பட்டுள்ள பாகுபாட்டுடன் கூடிய பகையுணர்வுமிகு நடவடிக்கைகளும் தன்னிச்சையான விதிகளின் திணிப்பும் அடக்குமுறை மிக்கவையாகவே அம்மக்களுக்கு உள்ளதென மக்கள் காணி ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகின்றது. மேலும் முல்லைத்தீவைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத பெண்ணொருவர் காணி ஆணைக்குழுவின் கள விஜயத்தின்போது இவ்வாறு கூறியுள்ளார்.
“நாங்கள் பாதுகாப்பை உணர எமக்கு இராணுவம் தேவையில்லை. தேசிய பாதுகாப்பு என்பது இராணுவம் பற்றியது அல்ல. அது எங்களைப் பற்றியது. இலவசமாக கல்வியினைப் பெறுவது. எங்களது காணிகளை நாங்களே வைத்திருப்பது அதிலே பெண்கள் வாழ்ந்து அவர்கள் நினைத்த நேரம் சுதந்திரமாக நடமாடுவதே அதுவாகும். அது தான் தேசிய பாதுகாப்பு என்பதைக் குறிக்கின்றது”
2020 ஜூன் மாதம் இரண்டாம் திகதி 2178/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்றின் மூலம் கிழக்கு மாகாணத்தின் புராதன தொல்பொருள் பாரம்பரியங்களை நிர்வகிப்பதற்காக “ஜனாதிபதி செயலணியை” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறுவுகின்றார்.
இந்த செயலணியின் தலைவராக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மற்றும் செயலாளராக பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் டி.எம்.எஸ். திசாநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இதிலே ஏனைய உறுப்பினர்களாக தொல்பொருளியல் சக்கரவர்த்தி எல்லாவல மேதானந்த தேரர், பனாமுரே திலகவங்ஸ நாயக தேரர், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் பண்டார திஸாநாயக, காணி ஆணையாளர் நாயகம் சந்திரா ஹேரத், நில அளவையாளர் நாயகம் ஏ.எல்.எஸ்.சீ. பெரேரா, களணி பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ராஜ்குமார் சோமதேவ, பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கபில குணவர்தன, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜீ திஸாநாயக மற்றும் தெரண ஊடக வலையமைப்பின் தலைவர் திலித் ஜயவீர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
கிழக்கு மாகாணத்திற்கு சொந்தமான தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளம் காணுதல், அவற்றை பாதுகாத்தல், மீளமைத்தல், முகாமைத்துவம் செய்தல் மற்றும் இலங்கையின் தனித்துவத்தை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பிரபல்யப்படுத்தல் போன்ற பல பொறுப்புகளும் அச்செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் நிறுவப்பட்ட ஜனாதிபதி செயலணி தொடர்பில் மிகப்பெரிய பிரச்சினைகள் உள்ளன.
“யுத்தம் நிலவிய காலகட்டங்களில் தேசிய பாதுகாப்பு (National Security) எனக்கூறி வடக்கு, கிழக்கு மாகாண மக்களுடைய இடங்கள் அரசாங்கத்தின் மூலம் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் தற்போது தேசிய, சொத்து பாரம்பரியம் (National Heritage, Archaeology) என்ற போர்வையில் முன்புபோல் மக்களுடைய காணிகள் பறிமுதல் செய்யப்படுகின்
றன. குறிப்பாக தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்கள் சிறுபான்மை மக்களின் இடங்களை பெற்று அவற்றை பெரும்பான்மையினருக்கு வழங்குகின்ற ஒரு திட்டமாகவே இதனை நான் பார்க்கின்றேன். மிகவும் மறைமுகமாக மேற்கொள்ளப்படுகின்ற ஜனாதிபதி செயலணியின் செயற்பாடுகள் பற்றி அப்பிரதேச மக்களும் எதுவும் அறியாதவர்களாகவே உள்ளார்கள்” என மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் பவானி பொன்சேகா கூறினார்.
இந்த செயலணியில் பௌத்த மதத்தலைவர்கள் இருவர் மாத்திரமே உள்ளனர். ஏனைய சகல உறுப்பினர்களும் சிங்கள பௌத்த மத பின்புலத்தை சார்ந்தவர்கள். அத்துடன் இந்த செயலணியின் தலைவர் இராணுவ பயிற்சி பெற்ற பாதுகாப்பு செயலாளர். அதாவது தமிழ் பேசக்கூடிய சிறுபான்மை மக்கள் பரவலாக வாழும் கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் பாரம்பரியங்களை பாதுகாத்தல் மற்றும் சிவில் மக்களில் காணி பற்றிய பிரச்சினைகள் இவர்கள் முன்னிலையிலேயே தீர்க்கப்பட வேண்டும். சிறுபான்மை பிரதிநிதித்துவமோ பெண்களின் பிரதிநிதித்துவமோ இதில் இல்லை.
இந்நிலையில் கிழக்கு மாகாண தொல்பொருள் திணைக்களத்தினால் 375 பகுதிகள் வரலாற்று இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, திருகோணமலை மாவட்டத்தில் 74 இடங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 28 புத்த விகாரைகள் உட்பட 55 இடங்களும், அம்பாறை மாவட்டத்தில் 246 இடங்களும் பௌத்த மத வரலாற்றுடன் தொடர்புடையவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இவை அனைத்துமே தமிழர்களின் பூர்வீக பகுதிகளாகவே உள்ளன. அதனைச் சான்றுபகரும் வகையில் மாவட்டரீதியான பல உதாரணங்கள் உள்ளன. குறிப்பாக குச்சவெளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கந்தசாமி மலை முருகன் ஆலயம், கன்னியா வெந்நீரூற்று, இலங்கைத்துறை முகத்துவாரம், லங்காபட்டின என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு குஞ்சிதபாத மலையில் இருந்த பாலமுருகன் ஆலயம் இடிக்கப்பட்டு பௌத்த விகாரை கட்டப்பட்டுள்ளமை என்பவற்றைக் குறிப்பிடலாம்.
இது பற்றி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவிக்கையில், “பிரித்தானியரிடம் இருந்து இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் வட, கிழக்கு மாகாணங்களில் தமிழ் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்கின்றமை என்பது எமது ஆட்சியாளர்களுக்கு பெரும் தலையிடியாகவே இருந்துவந்துள்ளது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள தொல்பொருள் செயலணியின் நோக்கம் கூட கிழக்கு மாகாணத்தில் உள்ள இன விகிதாசாரத்தையும் நிலப்பரப்பையும் மாற்றி இம்மாவட்டத்தை பௌத்த மயமாக்குவதே ஆகும். தொல்பொருட்கள் பாதுகாக்கப்பட வேண்டியது கட்டாயமானது. ஆனால் தொல்பொருள் என்ற போர்வையில் திரைமறைவு அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதை ஏற்க முடியாது. இவற்றை விதுர விக்ரமநாயக்க நடிக்கின்ற ஒரு திரைப்படமாகவே நான் பார்க்கின்றேன்” எனக் கூறினார்.
1949இல் இலங்கையில் முதலாவது பல்நோக்கு அபிவிருத்தி திட்டமான கல்லோயா முதல் கந்தளாய், மகாஓயா, உட்பட 1977இல் உருவான துரித மகாவலி திட்டம் வரையில் மாறிமாறிவந்த ஆட்சியாளர்களால் 24 சிங்கள குடியேற்றத்திட்டங்கள் கிழக்கில் அமைக்கப்பட்டுள்ளன. டி.எஸ் சேனநாயக்க, ஜே.ஆர்.ஜயவர்த்தன, காமினி திஸாநாயக்க, லலித் அத்துலத் முதலி என அன்றைய தலைவர்களும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்ற வகையில் பல்வேறு வடிவங்களில் கிழக்கிலங்கையிலே தமது ஆக்கிரமிப்புகளை முன்னெடுத்துள்ளனர்.
யுத்தத்தின் போதும், யுத்தம் முடிவடைந்த பின்னரும் இராணுவத்தினரால் காணி உரிமை பற்றிய பிரச்சினைகள் உட்பட இன்னும் பல கஷ்டங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இம்மக்கள் முகம்கொடுத்து வருகின்றனர். எனவே கிழக்கு மாகாண சிறுபான்மை சமூகங்களுக்கிடையே எவ்வாறு மீண்டும் இராணுவத்தினரால் நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும்?
தொல்பொருள் என்பதை ஒரு தேசத்தின் வரலாறு அல்லது அத்தேசத்தின் பண்டைய மக்களுடைய வாழ்க்கை முறையின் வெளிப்பாடு எனலாம். இலங்கை பூராகவும் கண்டுபிடிக்கப்படுகின்ற மற்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சகல தொல்பொருட்களினதும் உரிமை காணப்படுவது இலங்கை மக்களுக்கு ஆகும். அது இலங்கை வரலாற்றின் பிரதிபலிப்பே யன்றி ஒரு குறிப்பிட்ட இனக்குழுவினருக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல.
அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டுபிடிக்கப்படுகின்ற புராதன பௌத்த சின்னங்கள் போன்றே தமிழ் கோயில்களும் முஸ்லிம்களின் கல்லறைகளும் கூட இலங்கையின் தொல்பொருள் அடையாளங்களாகும். ஒரு குறிப்பிட்ட குழுவிற்கு மாத்திரம் தொல்பொருள் என்பதை ஒருபோதும் வரையறுக்க முடியாது. கிழக்கு மாகாணத்திற்காக அமைக்கப்பட்ட தொல்பொருள் செயலணியானது இலங்கைக்கான ஒரு தொல்பொருள் செயலணியாக இருந்திருந்தால் அது வேறு விடயம். ஆனால் இந்த செயலணி உருவாக்கப்பட்டிருப்பதோ வேறு சில திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகும்.
இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்கள் பழைமையான தொல்பொருள் சான்றுகள் உள்ளன எனக்கூறி 100 வருடங்களாக மக்கள் வழிபட்டு வந்த கோயில்களை மூடுவதும் இனிமேல் உங்களால் அங்கே செல்ல முடியாது எனக் கூறுவதும் எந்த விதத்தில் நியாயம்? அதேபோல் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வந்த மக்களின் காணிகளை தொல்பொருள் என்ற போர்வையில் அபகரித்து அவர்களுடைய வாழ்வாதாரத்தையே நிலைகுலையச் செய்வதன் நோக்கம்தான் என்ன?
சட்டத்தரணி மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் தொல்லியல் முதுகலை
ஆய்வாளர் சுபுன் ஜயவீர
“மரபுரிமை முகாமைத்துவம் என்பது தொல்பொருட் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதும் அங்கிருந்து மக்களை பலவந்தமாக அகற்றி குறித்த காணிகளை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதல்ல. ஏனென்றால் இலங்கை பூராகவுமே தொல்பொருட் சிதைவுகள் சிதறிக் காணப்படுகின்றன. உதாரணமாக அநுராதபுர புனித நகரில் உள்ளதைவிட பல மடங்கு தொல்பொருட்கள் அனுராதபுர நகரிலும் அதனை சுற்றியும் உள்ளன. ஆதலால் அநுராதபுர நகரில் வாழ்கின்ற மக்களின் குடியிருப்புகளை அகற்றி
அவற்றை தொல்பொருட்கள் என அரசு பெற்றுக் கொள்வதென்பது நடைமுறைக்கு பொருந்தாததொன்று. எனினும் எவ்வித பிரச்சினைகளும் இன்றி பாதுகாக்க முடியுமான இடங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் பாதுகாக்கப்படாமல் இருந்தால் அது அவர்கள் செய்கின்ற குற்றமாகும். ஆகவே தொல்பொருள் திணைக்களத்தின் மீது மக்களுக்குள்ள வெறுப்பு மற்றும் அச்சத்திற்கான பிரதான காரணம் அரசியல் தலையீடுகள் மற்றும் தனிப்பட்ட இலாப நோக்கங்கள் காரணமாக தொல்பொருள் திணைக்களம் இதற்கு முன்னர் மக்களுடன் நடந்து கொண்ட விதமே ஆகும்” என்று குறிப்பிடுகின்றார்.
மலையக மக்களுடைய காணிப்பிரச்சினை, வடகிழக்கு மக்களுடைய மீள்குடியேற்றப் பிரச்சினை, கல்லோயா மகாவலி போன்ற திட்டங்கள் மூலம் மீள்குடியேற்றப்பட்ட மக்களுடைய பிரச்சினை காணிகள் பிரித்து வழங்கப்படும் போது பெண்கள் புறக்கணிக்கப்படுகின்றமை இதுபோன்ற பிரச்சினைகள் அனைத்துக்கும் மூல காரணம் இலங்கையிலே காணி பற்றிய தேசிய கொள்கையொன்று இன்மையே ஆகும்.-Vidivelli