கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
கிழக்கிலங்கையின் ஓட்டமாவடி சுமார் 28,000 முஸ்லிம்கள் வாழும் ஒரு சிற்றூர். அங்கே மஜ்மா நகர் என்ற ஒரு பகுதி பரம்பரையாக மந்தைகளின் மேய்ச்சல் நிலமாகவும் அவைகளைக் கட்டிப்போடும் காலையாகவும் இருந்துவந்துள்ளது. அதுதான் இன்று கொவிட் மையத்துகளின் ஒரே இறுதிப் புகலிடமாக மாறியுள்ளது. இதுவரை சுமார் 2,300 உடல்கள் அங்கே புதைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 2,150 முஸ்லிம்களது என அறியக்கிடக்கிறது. இனபேதமின்றி சமரசம் உலாவும் ஓர் இடமாக மாறியுள்ளது மஜ்மா நகர். ஓட்டமாவடி நகரசபை உறுப்பினர்களோ இனியும் அங்கே அடக்கம் செய்தால் வாழும் மக்களுக்கு இடமேது என ஒப்பாரி வைக்கின்றனர். அதில் உண்மையுண்டு. எனினும் அவர்களின் மரண ஓலம் இனவாத அரசியலின் இதயராகம் என்பதை உணர்வார்களா? அதைத்தான் இக்கட்டுரை விளக்குகிறது.
கொவிட் முதலாம் அலையும் அரசியற் சூழலும்
இலங்கையில் கொவிட் நோயால் முதன் முதலாகப் பீடிக்கப்பட்டவர் ஓர் இலங்கையரல்ல. அவர் ஒரு சீனப் பெண்மணி. அது 2020 ஜனவரி 27இல் நடைபெற்றது. அவரைத் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்த பலர் மூலமாக அந்நோய் விரைவாகப் பரவத்தொடங்கவே அத்தொற்றாளர்களைத் தனிமைப்படுத்துவதற்காக அவசர அவசரமாக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு அதனால் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பாராட்டுகளையும் பெற்றது. ஆனால் கொவிட் பரவத்தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் கோத்தாபய ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் 2020 ஆகஸ்ட் மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்று அவரின் தமயன் மகிந்த ராஜபக்ச ஒருங்கே பிரதமரும் நிதி அமைச்சருமானார். நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் அத்தலைவர்களாலும் அவர்களின் ஆதரவாளர்களாலும் முன்னெடுக்கப்பட்ட பிரசாரத்தின் தலையம்சமாக விளங்கியது சிங்கள பௌத்த இனவாதமேயன்றி வேறில்லை. சிறுபான்மை இனங்களால், அதிலும் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் குறிப்பாக முஸ்லிம்களால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து உண்டு என்ற தொனிப்படவே அவர்களின் தேர்தல் பிரசாரம் முடுக்கிவிடப்பட்டது. கடும்போக்குடைய பௌத்த பிக்குகளும் பௌத்த சிங்கள இஸ்லாமோபோபியர்களும் தலைமைதாங்கி இப்பிரசாரத்தை மேற்கொண்டனர். இதனால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும் அட்டூழியங்களும் அனந்தம். அவற்றைக் கண்டும் காணாததுபோல் இருந்தனர் இவ்விரு தலைவர்களும். இதனால் இரண்டு தேர்தல்களிலும் மிகப்பெரும்பான்மையான முஸ்லிம்கள் ராஜபக்சாக்களுக்கு வாக்களிக்கவில்லை. அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட மனப்புண் கொவிட் பரவும்போதும் அவர்களை வருத்தியது என்பதை மறுக்க முடியாது. இதனைப் பின்புலமாகக் கொண்டுதான் கொவிட் நோயினால் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யாமல் தகனம் செய்யவேண்டும் என்ற ஜனாதிபதியின் அறிவித்தலை அணுகவேண்டும்.
வெளிநாடுகளிலிருந்து வந்த விமானப் பயணிகளால் இத்தொற்று பரவியது என்ற செய்தி வெளியானதும், சிங்கள பௌத்த இஸ்லாமோபோபியர்கள் முதன் முதலில் பழி சுமத்தியது இந்தியாவிலிருந்து வந்த ஒரு சில தப்லீக் ஜமாஅத்தினர்மேல் என்பதை இங்கு நினைவு கூரல் வேண்டும். அதே சமயம் சில பௌத்த குருமாரும் அப்போது இந்தியா சென்று திரும்பியது அவர்களின் கண்களுக்குப் புலப்படாததில் ஆச்சரியமில்லை. சிங்கள பௌத்த இஸ்லாமோபோபியர்களின் ஆதரவில் வென்றவர்தானே ஜனாதிபதி. எனவே முஸ்லிம்களின் உடல்களைத் தகனம் செய்ய வேண்டுமென்ற அவரின் முடிவு யாரைத் திருப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டது என்பதை வாசகர்களே முடிவு செய்யவேண்டும். இந்த முடிவினால் முஸ்லிம்களின் மனங்கள் எவ்வாறு புண்படும் என்பது ஜனாதிபதிக்குத் தெரியாதா? தெரிந்திருந்தம் அவரின் முடிவு முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்டதல்ல, விஞ்ஞான உண்மையொன்றின் அடிப்படையிலேதான் எடுக்கப்பட்டதென அவர் விளக்கம் கொடுத்தார். அந்த உண்மைதான் என்ன?
மண்ணறிவியல்வாதியின் நுண்ணறிவு
கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் உடல்களை மண்ணுக்குள் புதைப்பதன்மூலம் அந்த நோயின் கிருமிகள் மண்ணடியிலுள்ள நீரினூடாக வெளிவந்து வாழும் மக்களுக்குத் தொற்றும் என்ற ஒரு விசித்திரமான கண்டுபிடிப்பை ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மண்ணறிவியல் போராசிரியை ஒருவர் வெளியிட்டிருந்தார். இவருக்கு தொற்றுநோய் பற்றிய நிபுணத்துவம் சற்றேனும் கிடையாது என்பதை முதலில் கவனிக்க வேண்டும். அத்துடன் இவரது விசித்திரமான கண்டுபிடிப்பை உலக சுகாதாரத் தாபனமோ வேறு உலகனைத்தும் உள்ள எந்த ஒரு தொற்றுநோய் நிபுணரோ ஆதரிக்கவில்லை என்பதும் உண்மை. ஆனால் மாயாஜாலங்களையும் மந்திரங்களையும் விஞ்ஞான உண்மைகள் என்று நம்பும் இலங்கையிலே இப்பேராசிரியை அரசாங்கத்தின் தொற்றுநோய் பற்றிய ஓர் ஆலோசகரானார். இவருடைய நுண்ணறிவை ஆதாரமாகக் கொண்டுதான் ஜனாதிபதி அந்த அறிவித்தலை விடுத்தார். “பேய் அரசாட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” (பாரதி).
போராட்டம்
புண்பட்ட முஸ்லிம் சமூகம் போராடத் தொடங்கியது. அப்போராட்டம் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்க்கத் தவறவில்லை. மனித உரிமை அமைப்புகளும் முஸ்லிம் சர்வதேச இயக்கங்களும் முஸ்லிம் நாடுகளும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தலாயின. உள்நாட்டிலும்கூட கிறிஸ்தவப் பாதிரிமார்களும் கல்விமான்களும் மனிதாபிமானம் கொண்ட பௌத்த துறவிகளும் ஜனாதிபதியின் முடிவை மாற்றுமாறு கோரினர். (இதனிடையே ஜனாதிபதியின் முடிவைச் சரிகண்டு உடல்களை அடக்க முடியாவிட்டாலும் எரிந்த சாம்பலை அடக்கினால் போதும் என்ற கேவலமான ஒரு முடிவை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முப்தியே கூறியிருந்ததையும் முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிகாரத்தின் முன்னே உண்மையை உரைக்க முடியாதவர்கள் முஸ்லிம்களின் தலைவர்களானது அச்சமூகத்தின் துரதிஷ்டமே). ஆனால் இஸ்லாமோபோபியர்களின் பிடிக்குள் சிக்குண்ட ஜனாதிபதிக்கு அந்த முடிவை மாற்றும் தைரியம் இருக்கவில்லை. அத்துடன் ஒரு கடும்போக்குடைய பௌத்த துறவி முஸ்லிம் உடல்களைப் புதைப்பது அரசையே புதைப்பதற்குச் சமன் என்று பகிரங்கமாகவே அறிவித்தது அரசாங்கத்தையே ஆட்டங்காணச் செய்தது. தகனங்கள் தொடர்ந்தன. இறுதியாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபையின் செயலாளரின் கவனத்தை இப்பிரச்சினை ஈர்த்தது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற மகாநாட்டிலும் இப்பிரச்சினை ஒரு பேச்சு பொருளாகி இலங்கைக்கெதிரான கண்டனங்களை எழுப்பின. அங்கே மூக்குடைபட்ட பின்னர்தான் ஜனாதிபதிக்கு ஞானம் பிறந்ததோ என்னவோ தகனத்துக்குப் பதிலாக அவர் ஒரு மாற்று வழியை நாடலானார்.
இதனிடையே கட்டாய தகனம் கைவிடப்பட்டமைக்கு தங்களின் எதிர்ப்புத்தான் காரணம் என்ற தொனியில் நாடாளுமன்ற முஸ்லிம் பச்சோந்தி அங்கத்தவர்கள் கூத்தாடத் தொடங்கினர். ஆனால் அந்த வெற்றிக்குக் காரணமாய் அமைந்தவர் ஐ. நா. மனித உரிமை தாபனத்தின் ஸ்தானிகரான பெண்மணி மிசேல் பசெலெற்.
ஜனாதிபதிக்கோ இவ்விடயத்தில் ஒரு சங்கடம். சிங்கள பௌத்த இனவாதத்துக்குத் தலை சாயாதவராக அவர் இருந்திருந்தால் அம்மண்ணறிவியல்வாதியின் நுண்ணறிவைப் பகிரங்கமாகவே உதறித் தள்ளிவிட்டு கொவிட் மரணச் சடலங்களை நாட்டிலுள்ள எந்த ஒரு மையவாடியிலும் அடக்கலாமென அவர் அறிவித்திருக்கலாம். அதனால் முஸ்லிம்களும் தகனம் செய்வதை விரும்பாத பிற மதத்தவர்களும் ஆறுதல் அடைந்திருப்பர். ஆனால் அவரோ இனவாதத்தின் சிறைக்குள் அடைபட்டிருப்பவர் ஆதலால் அந்தப் போலி விஞ்ஞானத்தைக் கைவிடமுடியாமல் அதனைச் சரிகாணும் நோக்கிலும் அதேசமயம் முஸ்லிம்களுக்குத் தொடர்ந்தும் இம்சைகளை ஏற்படுத்தும் வகையிலும் எங்கேயாவது வரண்ட மண்ணுள்ள சவக்குழிகள் உண்டா எனத் தேடுமாறு தனது ஆலோசகர்களை வேண்டினார். இந்த மாற்றத்தால் ஏற்பட்ட அவமானத்தினாலோ தெரியாது அந்த நுண்ணறிவுப் பேராசிரியையும் தனது ஆலோசகர் பதவியை ராஜினாமாச் செய்தார்.
புதைகுழி தேடல்
முதலில், ஜனாதிபதியின் நிபுணர் குழு புதைகுழிபற்றி மாலைதீவு அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தவிருப்பதாக வதந்திகள் பரவத் தொடங்கின. அது உண்மையில் ஜனாதிபதியின் ஆலோசனைதான் என்றும் செய்திகள் அப்போது கசிந்தன. இருப்பினும் அந்த முடிவு செயலாக்கப்பட்டால் அது எதிர்காலத்தில் எவ்வாறான ராஜதந்திரப் பிரச்சினைகளை உருவாக்கும் எனப்பயந்து புத்திசாதுரியமாக அந்த யோசனை கைவிடப்பட்டது. அதன் பின்னர் மன்னார் வளைகுடாவிலுள்ள இரணைதீவு பொருத்தமெனக் காணப்பட்டது. அதனைக் கேட்டதும் இரணைதீவுத் தமிழர்கள் கொதித்தெழுந்தனர். ஏற்கனவே தமிழரின் பிரச்சினைகளைப் பற்றிக் கரிசனை கொண்டுள்ள சர்வதேச நிறுவனங்கள் இதனையும் ஒரு காரணியாகக் கொண்டு இலங்கை அரசின்மேலுள்ள அவர்களின் எதிர்ப்பை வலுப்படுத்தலாம் எனப்பயந்து அதுவும் கைவிடப்பட்டது. அதன் பின்னரே கிழக்கிலங்கையின் ஓட்டமாவடியின் சூடுபத்தினசேனை (மஜ்மா நகர்) அந்நிபுணர்களின் வலைக்குள் வீழ்ந்தது. ஜனாஸாக்களை மத ஆசாரப்படி அடக்கும் சலுகையைப் பெற்ற முஸ்லிம்கள் அந்த முடிவால் ஏற்படும் பிரச்சினைகளைப்பற்றிச் சிந்திக்கவே இல்லை. உதாரணத்திற்கு, காலி நகரில் ஒரு முஸ்லிம் கொவிட் தொற்றினால் மரணித்தால் அவரின் உடலை ஓட்டமாவடிக்குக் கொண்டு செல்வதிலுள்ள சிரமங்களை ஒரு நிமிடம் எண்ணிப் பாருங்கள். மரணிப்போரின் சொந்த ஊருக்கும் ஓட்டமாவடிக்கும் இடையேயுள்ள தூரமும், ஜனாஸாவைக் கொண்டு செல்வதிலுள்ள செலவும் சிரமங்களும் ஒரு புறமிருக்க, ஏற்கனவே நிலப்பசியால் வாடும் கிழக்கிலங்கை முஸ்லிம்கள் இருக்கின்ற சொற்ப இடத்தையும் மனிதப் புதைகுழியாக்கினால் வாழும் மனிதர்க்கு இடம் எங்கே என்ற பிரச்சினை இதனால் வலுவடையாதா? இலங்கையின் பொருளாதாரமும் அரசின் வருமானமும் வங்குறோத்தை நோக்கி விரையும் இவ்வேளையில் இந்த மரணச் செலவு அரசுக்குத் தேவைதானா? அருகே உள்ள ஒரு மையவாடியில் குடும்பத்தினரின் செலவில் தொற்று நோய் கட்டுப்பாடுகளுக்கமைய அடக்கம் செய்வதைப் புறந்தள்ளிவிட்டு அரசாங்கம் ஏன் இந்த மேலதிகச் செலவை மேற்கொள்கிறது? சுருக்கமாகக் கூறினால், இந்த முடிவு உண்மையிலேயே முஸ்லிம்களுக்கு அரசினால் வழங்கப்பட்ட சலுகையா அல்லது தண்டனையா? ஓட்டமாவடி நகர சபையினர் இப்போது ஒப்பாரியிடுவது எதனைக் காட்டுகிறதோ?
ஓட்டமாவடியே தொடர்ந்தும் கொவிட் மரணவாளிகளின் மகா மையவாடியாக இயங்குவதாயின் இன்னும் பல ஏக்கர் நிலங்களை அவ்வூர் பட்டின சபை அரசுக்குத் தாரைவார்க்க வேண்டும். இல்லையாயின் மாற்று இடங்களைத் தேடவேண்டும். ஏற்கனவே இறக்காமம், புத்தளம், மன்னார் ஆகிய முஸ்லிம் பகுதிகளின் பெயர்கள் செய்தி வட்டாரங்களில் உலவுகின்றன. விரைவில் கிண்ணியாவும் அடக்கஸ்தலமாக மாறும் என ஊர்ஜிதமான செய்திகள் வெளிவருகின்றன. ஏன் முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் மட்டுந்தானா கொவிட் புதைகுழிகளாக வேண்டும்? ஏனைய மத்தினரும் மஜ்மா நகரில் அடக்கப்படவில்லையா? அவ்வாறாயின் பெரும்பான்மை இனத்தவர் வாழும் பகுதிகள் இத்தேவைக்குப் பொருத்தமாகாதா? உண்மையை நோக்கினால் இது முஸ்லிம்களுக்குத் திட்டமிட்டு இழைக்கப்படும் ஓர் அநீதி. ஒரு முஸ்லிம் நீதி அமைச்சருக்கும்கூடவா இந்த அநீதி புலப்படவில்லை?
இஸ்லாமோபோபியாவின் இன்பராகம்
இஸ்லாமோபோபியா, அதாவது இஸ்லாத்தைப்பற்றியும் முஸ்லிம்ளைப்பற்றியும் ஏற்படும் பயமும் வெறுப்பும் கலந்த ஓர் உணர்வு, இலங்கையின் இருபத்தோராம் நூற்றாண்டின் துஷ்டக் குழந்தை. அது பாலூட்டிச் சீராட்டித் தாலாட்டி வளர்க்கப்படுகிறது. அப்படி ஒரு குழந்தை முன்பும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இன்று போற்றப்படும் தேசிய வீரனான அனகாரிக தர்மபாலாவின் மடியிலே பிறந்து பௌத்த விழிப்புணர்வு என்ற பெயரோடு வாழ்ந்து காலவரையில் எதிர்பாராத ஒரு நோயினால் (சிங்களவர்- தமிழர் இனவாதத்தினால்) அது மரணித்துவிட்டது. இப்போது பிறந்திருப்பதை அரசாங்கமே பொறுப்பேற்று வளர்க்கிறது. இதன் வடிவங்கள்தான் 2014ஆம் ஆண்டிலிருந்து, அதாவது அளுத்துகமத்தில் நடைபெற்ற கலவரத்திலிருந்து, ஒவ்வொன்றாய் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதன் இன்றைய வடிவமே மஜ்மா நகர் என்னும் கொவிட் மையவாடி. மஜ்மா நகர் துயரத்துக்குப் பரிகாரம் இன்னுமொரு முஸ்லிம் ஊரில் திறக்கப்படும் மையவாடியல்ல. மாறாக, நாடெங்கிலும் உள்ள மயானபூமிகளிலும் தொற்றினால் மரணிப்போரை அடக்குவதற்கு உத்தரவு வழங்குவதே. ஓட்டமாவடியின் மரண ஓலம் இனவாத அரசியலின், அதிலும் குறிப்பாக இஸ்லாமோபோபியாவின் இனியராகம். இதை முஸ்லிம் தலைவர்கள் உணர்வார்களா?- Vidivelli