கொவிட் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய மஜ்மா நகரில் இடப்பற்றாக்குறை இல்லை
பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘ஓட்டமாவடி மஜ்மா நகரில் கொவிட் 19 ஜனாஸாக்களை தொடர்ந்தும் நல்லடக்கம் செய்வதில் எவ்வித பிரச்சினையுமில்லை. மையவாடிக்கு தேவையான காணியினை நான் பெற்றுக் கொடுத்துள்ளேன். நான் அபிவிருத்தி குழுவின் தலைவராக இருக்கும் வரை மையவாடிக்கு தேவையான காணிகளை தொடர்ந்தும் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் தெரிவித்தார்.
ஓட்டமாவடி மஜ்மா நகர் கொவிட் 19 மையவாடி தொடர்பில் விளக்கங்கள் கோரிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ‘ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடியின் பாதை உட்கட்டமைப்பு வசதிகளுக்காக அரசாங்கம் 68 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இதற்கு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளார். விரைவில் பாதை உட்கட்டமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படும்.
புதிதாக மையவாடிகள் இனங்காணப்பட்டால் அதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் பாதை வசதிகளை அமைப்பதற்கு அரசாங்கத்திடமிருந்து நிதியினைப் பெற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில் ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடிக்கான பாதை உட்கட்டமைப்பு வசதிகளுக்கு 68 மில்லியன் ரூபா அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான காணிகளை பெற்றுக் கொடுப்பது எனது பொறுப்பாகும். அதனால் மக்கள் இது தொடர்பில் கவலை கொள்ளத் தேவையில்லை. ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முடியாமற் போகுமோ எனப் பயப்படாதீர்கள். அல்லாஹ்வின் உதவியினால் நான் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வேன்’ என்றார்.-Vidivelli