நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவமும் அதனைத் தொடர்ந்து சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும் அந்நாட்டிலும் இலங்கையிலும் பலத்த அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது. இதன் போது தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதே இந்த விவகாரம் இங்கும் அதிகம் பேசுபொருளாகக் காரணமாகும்.
குறித்த இளைஞர் 2011 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து நியூசிலாந்துக்கு மாணவர் வீசாவில் சென்றுள்ள நிலையில், பின்னர் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் இலங்கையில் அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி அகதி அந்தஸ்துக்காக விண்ணப்பித்துள்ளார். எனினும் இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மேன்முறையீடு செய்துள்ளார். இக் காலப்பகுதியில் அவர் சில குற்றச் செயல்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார். அவர் நியூசிலாந்துக்குச் சென்று சரியாக 10 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையிலேயே தற்போது இவ்வாறானதொரு துரதிஷ்ட முடிவு அவருக்கு நேர்ந்துள்ளது.
அவர் நியூசிலாந்தில் தங்கியிருந்த காலப்பகுதியில் ஜ.எஸ். தீவிரவாத சிந்தனைகளின்பால் ஈர்க்கப்பட்டதாக அந்நாட்டுப் பிரதமர் கூறியுள்ளார். 2016 இல் சிரியாவுக்குச் செல்ல முற்பட்ட சமயம் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் இவர் தீவிரவாத சிந்தனைகளை பரப்ப முற்பட்டதாகவும் அதன்பால் ஈர்க்கப்பட்டிருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எனினும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு சம்பந்தப்பட்ட நபரின் நம்பிக்கையோ, கலாசாரமோ இனமோ காரணம் அல்ல என்றும் அதற்கு அவர் மாத்திரமே பொறுப்பு என்றும் அந்நாட்டு பிரதமர் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
இருந்தபோதிலும், இலங்கையைப் பொறுத்தவரை இச் சம்பவமானது கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்தி நோக்கப்படுகின்றமை துரதிஷ்டவசமானதாகும். இன்று குறித்த நபர் இலங்கையில் ஏதேனும் தாக்குதல்களில் ஈடுபட முற்பட்டாரா என்ற கோணத்திலும் இலங்கையிலும் இவருக்கு வேறு யாருடனும் தொடர்புகள் இருந்தனவா என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞரின் கடந்த 10 வருட கால நியூசிலாந்து வாழ்க்கையை எடுத்து நோக்கும்போது அவர் தனிமையில் அதிக காலத்தைச் செலவிட்டுள்ளமையும் குறிப்பாக அவர் பாரிய மன அழுத்தத்திற்குட்பட்டிருந்தமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலும், அவர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை வெறுமனே தீவிரவாத கண்கொண்டு மாத்திரம் நோக்காது அவர் இவ்வாறானதொரு நிலைக்குத் தள்ளப்பட்டமைக்கு மன அழுத்தமும் ஒரு காரணம் என்பதையும் கருத்திற்கொள்வது அவசியமானதாகும். குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் அடிக்கடி இடம்பெறும் கத்திக்குத்துச் சம்பவங்கள், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் பின்னால் சம்பந்தப்பட்ட நபர்கள் பெரும்பாலும் மன அழுத்தத்திற்குட்பட்டுள்ளமையே காரணமாக கண்டறியப்பட்டுள்ளன.
தீவிரவாதமோ, மன அழுத்தமோ எதுவாகவிருப்பினும் அப்பாவி மக்கள் மீதான இவ்வாறான கொடூரமான தாக்குதல்களை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. ஆனாலும் இவ்வாறு ஒரு நபர் செய்த தவறுக்காக அவர் சார்ந்த சமூகத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது கவலைக்குரியதாகும். இது இந்த விவகாரத்தை நியூசிலாந்தும் அதன் பிரதமரும் கையாண்ட விதத்திலிருந்து இலங்கையர்கள் படிப்பினை பெற்றுக் கொள்ளவில்லை என்பதையே காட்டிநிற்கிறது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தினால் நியூசிலாந்தில் வாழும் முஸ்லிம்களும் பாரிய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர். வெள்ளையின தீவிரவாதிகள் மூலம் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்படலாம் எனும் எச்சரிக்கையை அந்நாட்டு பொலிசார் விடுத்துள்ளனர். கிரைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல்களில் 2019 மார்ச்சில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 51 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு முஸ்லிம்கள் மீது அனுதாப அலைவீசியது. அந்நாட்டு அரசாங்கமும் பொது மக்களும் முஸ்லிம்கள் மீது தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினர். எனினும் தற்போது இந்த தாக்குதல் சம்பவமானது அங்கு வாழும் முஸ்லிம்களை தலைகுனியச் செய்துள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பெற்றோரையும் பிறந்த நாட்டையும் பிரிந்து கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று தனிமையில் வாடும் பலர் இவ்வாறான துரதிஷ்டமான முடிவுகளைச் சந்தித்த பல சம்பவங்களை நாம் கண்டுள்ளோம். இது சகலருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும். பெற்றோர் பிள்ளைகளை எப்போதும் தமது கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். அவர்களது மன நிலை குறித்து கூடுதல் கரிசனை காட்ட வேண்டும். இன்றேல் இவ்வாறான விரும்பத்தகாத விளைவுகளுக்கே முகங்கொடுக்க வேண்டி ஏற்படும். நாம் விடும் சிறு தவறுகள் ஒரு குடும்பத்திற்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த சமூகத்திற்குமே பேராபத்தைக் கொண்டுவந்துவிடும் என்பதற்கு இச் சம்பவம் சிறந்த உதாரணமாகும்.-Vidivelli