அனைவரது மனதையும் வென்ற டாக்டர்
கொவிட் தொற்றினால் வபாத்தான இளம் டாக்டர் மர்ஹூம் ராசிக் மொஹமட் ஜனான்
ஏ.ஆர்.ஏ.பரீல்
‘நாங்கள் எங்கள் மதத்தை மிகவும் நேசிக்கிறோம். இதேபோன்று ஏனையோரும் அவர்களது மதங்களை நேசிக்கிறார்கள். அதனால் எவரது மதத்தையும் அவமதிப்புக்குள்ளாக்க வேண்டாம்.’ இது கொவிட் தொற்றினால் வபாத்தான இளம் டாக்டர் மர்ஹூம் ராசிக் மொஹமட் ஜனானின் முகநூல் பதிவொன்றாகும்.
‘டாக்டர் ஜனான் எனது சகோதரர். அவர் வைத்தியசாலையில் இரு வாரங்கள் வரை சிகிச்சை பெற்றார். இந்த இரு வாரங்களில் அதிகமான நாட்கள் அதி தீவிர சிகிச்சை பிரிவிலே சிகிச்சை பெற்றார். அவரது நிலைமை சீராகியிருந்தது. அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியும் என்றே நாம் எண்ணியிருந்தோம். ஆனால் அவருக்கு வருத்தம் என்று டாக்டர்கள் கூறினார்கள். அவரை காப்பாற்றுவதற்காக டாக்டர்கள் அதிகாலை 2 மணியிலிருந்து மறுநாள் காலைவரை முயற்சித்தார்கள. அவரது உயிரைப் பிடித்துக்கொண்டே இந்த சில மணிநேரம் இருந்தார்கள்.
வயது சென்று எனது தம்பி இறந்திருந்தால் எமக்கு கவலை இருக்காது. இறைவனே சாப்பிட இல்லாது விட்டாலும் பரவாயில்லை. இவ்வாறான நோய்களை மட்டும் மனிதர்களுக்கு கொடுக்காதே. நாங்கள் எல்லோரும் மனிதர்கள். எதிரிகளுக்குக் கூட இவ்வாறான நோய்களைக் கொடுக்காதே என்றே இறைவனிடம் கேட்கிறோம்.’ என்று டாக்டர் ஜனானின் மூத்த சகோதரர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
டாக்டர் மர்ஹூம் ராசிக் மொஹமட் ஜனான் மதவாச்சி நேரிய குளத்தில் பிறந்தவர். நாட்டில் அப்போது நிலவிய அசாதாரண நிலைமை காரணமாக அவரது குடும்பம் கம்பளைக்கு குடிபெயர்ந்துள்ளது. கம்பளை சாஹிரா கல்லூரியில் பயின்ற அவர் வைத்திய பட்டப்படிப்பை மேற்கொண்டு டாக்டராகியுள்ளார். திருமணம் செய்து கொண்டதன் பின்பு கம்பளை பகுதியில் வீடொன்றினை நிர்மாணித்துக் கொண்டுள்ளார். அப்போது அவர் கம்பளையிலே கடமையாற்றினார்.
அவர் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியிலும் கடமையாற்றியுள்ளார். இவர் ஓர் முஸ்லிமாக இருந்த போதிலும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என அனைவருடனும் நட்புடன் பழகியுள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை தொடர்பான வைத்தியர் என்றாலும் சாதாரண டாக்டராகவும் கடமையாற்றியுள்ளார். ஏனைய இனத்தவர்களின் சமயங்கள், கலாசாரங்களை அவமதிக்கும் வகையில் ஒருபோதும் செயற்பட்டதில்லை. சிங்கள, தமிழ் புத்தாண்டு விழாக்களில் கலந்துகொண்டு கயிறு இழுத்தல், பலூன் ஊதுதல் போன்ற விளையாட்டுகளில் பங்குபற்றி சிங்கள, தமிழ் மக்களுடன் நட்புறவுடன் பழகியுள்ளார். இதனால் அவர் ஏனைய இனத்தவர்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளார்.
இவர் ராகம வைத்தியசாலையில் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை டாக்டராக 2016இல் நியமனம் பெற்றார். அக்டோபர் மாதம் பதவியேற்ற அவர் என்டரமுல்ல பகுதியில் வீடொன்றினைப் பெற்று குடும்பத்துடன் வாழ்ந்தார். இரண்டு ஆண் பிள்ளைகள் மற்றும் 3 மாத கால வயதுடைய பெண் குழந்தைக்கு அவர் தந்தையாவார்
டாக்டர் ஜனான் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி மூன்று வாரங்களுக்கு முன்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ராகம வைத்தியசாலையில் நான்கு தினங்கள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆரம்பத்தில் அவர் கொவிட் 19 தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கவில்லை. இதனாலே அங்கு அனுமதி பெற்றிருந்த ஏனைய நோயாளர்களை மகிழ்விக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டும். அவர் அங்கு பாட்டுப் பாடி மகிழ்வித்தார் என அங்கு கடமையாற்றிய சுகாதார சேவை ஊழியர்கள் தெரிவித்தனர்.
கொவிட் 19 தொற்று நிலைமை மோசமாகியதனால் அவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதனாலேயே அவர் இப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இப்பிரிவில் 10 தினங்கள் அவர் சிகிச்சை பெற்றார். என்றாலும் டாக்டர்களால் அவரைக் காப்பாற்ற முடியாமற் போனது. அவரது இதயத்துக்குச் செல்லும் இரத்த நாளங்களில் இரத்தம் தடை ஏற்பட்டதனாலே மரணம் சம்பவித்ததாக டாக்டரின் சகோதரர் தெரிவித்தார்.
‘எங்கள் குழுவில் கடமையாற்றிய இவ்வாறான திறமையான டாக்டர் திடீரென காலமாகியமை ராகம வைத்தியசாலைக்கு மாத்திரமல்ல முழு நாட்டின் மக்களுக்கும் பேரிழப்பாகும்’ என ராகம வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் சம்பத் லியனகே தெரிவித்தார்.
என்றாலும் வைத்தியர் என்ற வகையில் சமூகத்துக்கு உதாரணமாக செயற்பட வேண்டிய அவர் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றிக்கொள்ளவில்லை என்பது தொடர்பில் அவரது நண்பர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இதனாலே டாக்டர் ஜனானுக்கு இந்நிலைமை ஏற்பட்டதெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கான காரணம் தெரியவில்லை. கொவிட் 19 தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் தாமதியாது பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை டாக்டர் ஜனானின் மறைவு உறுதிப்படுத்துகிறது.
நன்றி : ஞாயிறு லங்காதீப
– Vidivelli