சட்டத்தரணி அமீர் பாயிஸ்
முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டச் (MMDA) சீர்திருத்தங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சட்ட ரீதியான திருமணங்களுக்கான வயதெல்லையை 18 வருடங்களாக உயர்த்துதல், திருமணப் பதிவு ஆவணத்தில் மணப்பெண் கையெழுத்திடுவதை கட்டாயமாக்குதல், பலதார திருமணங்களை இல்லாதொழித்தல் மற்றும் காதி நீதிமன்ற முறைமையை அகற்றுதல் ஆகிய விடயங்கள் இச்சீர்திருத்தங்களின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளன.
கடந்த 1956 ஆம் ஆண்டு தொடக்கம் இது வரை ஐந்திற்கும் குறைவில்லாத குழுக்கள் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தினை சீர்திருத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ளன. இம்முறை, அண்மையில் நியமிக்கப்பட்ட குழு தனது ஒற்றை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. எனினும், இக்குழுவில் உள்ள சில ஆண்களும் பெண்களால் கோரப்படும் இந்த சீர்திருத்தங்களை தடுப்பதற்காக நேர்மையற்ற முயற்சிகளில் ஈடுபடுவதாகத் தெரிகின்றது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையில் (ACJU) உள்ளோர் தமது வழமையான நகர்வுகளை ஆரம்பித்துள்ளனர். மேற்குறித்த தீர்மானங்களுக்கு முன்னர், திருமணத்துக்கான பெண்களின் அதிகுறைந்த வயதெல்லையை நிர்ணயிப்பது மற்றும் காதி நீதிபதிகளாக பெண்களை நியமிப்பது என்பன இஸ்லாத்துக்கு எதிரான விடயங்கள் என்றும் அவற்றில் எந்த வித விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை எனக் கூறினர். தற்பொழுது பலதார மணம் மற்றும் காதி நீதிமன்றங்கள் என்பன அகற்றப்படப் போகின்றமையை உணர்ந்து கொண்டுள்ள அவர்கள் தமது இலக்குகளை மாற்றியமைத்துள்ளனர்.
பலதார மணத்தை துஷ்பிரயோகம் செய்து அதனை அனுபவித்து வந்தோர் பலதார மணம் பற்றி ”குர்ஆன் வழங்கும் உரிமை” பற்றி சலசலக்க ஆரம்பித்துள்ளனர். மற்றும் சிலர் காதி நீதிமன்றங்களை அகற்றுதல் என்ற விடயத்தை சமூக ஊடகங்கள் ஊடாக விமர்சனத்துக்கும் கேள்விக்கும் உட்படுத்தி வருகின்றனர். துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டு வழமையான நீதிமன்றங்கள் ஊடாக முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தின் மீதான சீர்திருத்தத்தை சரி காணும் கள மட்டத்தில் உள்ள செயற்பாட்டு பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் அண்மைக் காலமாக இலக்கு வைக்கப்பட்டு வருகின்றனர்.
முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சீர்திருத்தங்களுக்கு எதிராக குரலெழுப்புவோர் அச்சீர்திருத்தங்களில் அடங்கியுள்ள பின்வரும் மூன்று விடயங்கள் தொடர்பாகவே தமது எதிர்ப்பை வெளியிடுகின்றனர்: பலதார மணம், காதி நீதி மன்றங்கள் மற்றும் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் இருந்து விலகி இருப்பதற்கான அடிப்படை உரிமை.
பலதார மணம்
பலதார மணம் என்பது இஸ்லாத்தில் கட்டாயமான விடயமொன்றல்ல. மேலும் அது விருப்புக்குரிய தெரிவு என்றும் கூற முடியாது. துனிசியா மற்றும் துருக்கி போன்ற முஸ்லிம் நாடுகள் பலதார மணத்தை தடைசெய்துள்ளன. அதன் அனுமதி, ஏற்றுக்கொள்ளக் கூடிய தன்மை மற்றும் பிரயோகம் என்பன தொடர்பில் நீதியாளர்கள் மற்றும் இஸ்லாமிய சட்ட நிபுணர்களிடையேயும் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.
இலங்கையில் பலதார மணம் என்பது கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என எவராவது கூறுவாரேயானால், அது பாரியதொரு பொய்யாகவும் ஏமாற்றுக் கதையாகவுமே அமையும். பலதார மணத்தை அனுமதிப்பது ஒழுக்கமற்ற மற்றும் திருமணத்துக்கு வெளியில் காணப்படும் உறவுகள் அல்லது மறுமணவாளிகளை வைத்திருப்பதை தடுக்கிறது அல்லது அகற்றுகின்றது என வாதிடுபவர்கள் யதார்த்தத்தை உணராதவர்களாகவே இருக்க வேண்டும்.
சிறுவர் துஷ்பிரயோகம், மனைவிகளுக்கு மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகம், மனைவிகளை வன்முறையாக நடத்துதல், தனது விருப்பப்படி மனைவிகள் மற்றும் பிள்ளைகளை கைவிட்டுச் செல்லல், திருமணத்தை பதிவு செய்தல் கட்டாயமானதாக இல்லாததால் தந்தையின் பெயர் இல்லாத பிள்ளைகள் கல்வியைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் உள்ளடங்கலாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்பன ஆய்வு செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். பலதார மணம் புரிவோர் ஆகக் கூடுதலாக நான்கு மனைவிகள் என்ற எல்லைக்குள் தம்மை மட்டுப்படுத்துவதில்லை.
இலங்கை பன்மைத்துவம் கொண்ட நாடொன்றாக மாற்றமடைய வேண்டுமென்று விரும்புகின்றோம். முஸ்லிம்களாகிய நாம் மற்றையவர்களைப் போன்று சமமாக நடத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். இவ்வாறான சூழமைவு ஒன்றில் இந்த ”முஸ்லிம் பாதுகாவலர்கள்” பன்மைத்துவத்தை ஊக்குவித்து முஸ்லிம்களை சிறந்ததொரு நிலையில் வெளியுலகுக்கு காண்பிக்க வேண்டுமா அல்லது திரை மறைவில் சூட்சுமமான கை முறுக்குதல் மற்றும் மிரட்டல்கள் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டுமா?
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவை பொறுத்த வரை அவ்வமைப்பு ஹலால் சான்றிதழ் அத்துடன் அரசியலமைப்பால் பாதுகாக்கப்பட்ட முடக்கப்பட இயலாத அடிப்படை உரிமையான நல்லடக்க உரிமை என்பவற்றில் மேற்கொண்ட விட்டுக்கொடுப்புகள் எம் முன்ேன உள்ளன. இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் மீறப்பட்ட நிலையில் அவ்வமைப்பு கடல் கடந்து சென்று அவ்வுரிமைகள் இங்கு நன்கு பாதுகாக்கப்படுவதாக பொய்யுரைத்ததையும் நாம் அறிவோம். இவ்வேளையில் அவர்கள் தேவையற்ற அல்லது மதத்தினால் கட்டாயமாக்கப்படாத மேலும் பல முஸ்லிம் பெண்கள் மற்றும் பிள்ளைகளை நிர்க்கதிக்கு உள்ளாக்கியுள்ள பலதார மணம் என்ற விடயத்தில் விட்டுக்கொடுப்பை வழங்கி முன்னுதாரணம் ஒன்றை ஏற்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும்.
காதி நீதிமன்றங்கள்
நீண்ட காலமாக அனைத்து துயரங்களுக்குமான ஊற்றாக காதி நீதிமன்ற முறைமை அமைந்திருப்பதாக கூறப்படுகின்றது. காதி நீதிமன்றங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டங்கள் காரணமாக பெண்கள் அங்கு எதிர்நோக்கும் அநீதி காரணமாக இந்தச் சீர்திருத்தத்துக்கான கோரல் முன்வைக்கப்படுகின்றது. அங்கு பெண்கள் செல்லும் நேரங்களில் தாம் அவதூறுக்கு உட்படுத்தப்படுவதாக, கௌரவமிழக்கச் செய்யப்படுவதாக, பாகுபாட்டுக்கு உட்படுத்தப்படுவதாக மற்றும் பாதுகாப்பற்றவர்களாக உணருகின்றனர். காதி நீதிமன்றங்கள் நீதியை குழிதோண்டிப் புதைக்கும் கட்டமைப்புகளாகவே உள்ளன.
இந்நிலையை நிரூபிப்பதற்கு போதிய புள்ளிவிபரங்கள், சம்பவ குறிப்புகள், ஆய்வு கண்டறிதல்கள் மற்றும் வாக்குமூலங்கள் காணப்படுகின்றன. நீதியுடன் காதி நீதிமன்றங்கள் ஒத்திசைவாக செயற்பட்ட அனுபவங்கள் மற்றும் யதார்த்தங்களை எம்மால் காண முடியாதுள்ளது. யதார்த்தத்தில் காதி நீதிமன்ற முறைமை திருத்தியமைக்கப்பட முடியாத நிலைக்கு அப்பால் சென்றுவிட்டதாக பல முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்கின்றனர். அதன் அடிப்படையே சேதமடைந்து விட்டதாகக் கருதப்படுகின்றது. அது சமத்துவம் மற்றும் நியாயமாக நடத்தப்படல் ஆகிய இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளையே மீறுவதாகக் காணப்படுகின்றது. அது இஸ்லாத்துக்கு நேரெதிரான விடயமாக மாற்றமடைந்துள்ளது.
காதி நீதிபதியாக ஒருவர் நியமிக்கப்படுவதற்கான முழுமையான தேவையாக அமைவது ”நன்னடத்தை கொண்ட முஸ்லிம் ஆண் ஒருவர்” என்பது மாத்திரமேயாகும். குறிப்பிட்டு அடையாளம் காணக்கூடிய ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மையான காதி நீதிபதிகள் நன்னடத்தை கொண்டவர்களாக உள்ளனரா என்பது கேள்விக்குறியே.
காதி நீதிமன்றங்களின் அமைப்பானது இலங்கையின் நீதி நிருவாகத்தின் பிரதான நீரோட்டத்துக்கு வெளியே அமையப் பெற்றுக் காணப்படுகின்றது. அங்கு பொருத்தமான உட்கட்டமைப்புகளோ, பௌதீக அல்லது நிருவாகத்துக்குரிய வசதிகளோ காணப்படுவதில்லை. காதி நீதிபதிகளின் சபை உள்ளடங்கலாக இந்த நீதிமன்றங்கள் சனிக்கிழமைகளில் மாத்திரமே இயங்குகின்றன. இருந்த போதும், இவ்வமைப்பே ஒட்டுமொத்த முஸ்லிம் திருமணங்கள், விவாகரத்து, மற்றும் பராமரிப்பு என்பவற்றுக்கான நீதி மையமாக செயற்படுகின்றது. அரசாங்கம் பாகுபாடு மிக்க முறைமையை அமைதியாக அவதானித்தபடி அதனை தக்க வைக்க நிதியையும் வழங்கி வருகின்றது, வாதிடத்தக்க வகையில் இந்நிலை அரசியலமைப்பின் சமத்துவம் தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் நெறிப்படுத்தற் கொள்கைகளை (Directive Principles) மீறுவதாக இது அமைகின்றது. இந்த வகையில் அமைந்த பாகுபாடு மிக்க முறைமை ஒன்றுக்கு வரியிறுப்பாளர்களின் பணத்தை வழங்கி பேணுவது தொடர்பில் அரசாங்கம் எந்த வித குற்றவுணர்வும் அற்றதாகக் காணப்படுகின்றது.
முஸ்லிம் பெண்களின் இந்த கோரிக்கை அரசாங்கங்கள் தனது குடிமக்களை பாதுகாத்தல் மற்றும் சமமாக நடத்துதல் என்பவற்றுக்கான வேண்டுதலின் அடிப்படையாகவே அமைகின்றது. இங்கு முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் மாவட்ட நீதிமன்றங்கள் என்ற பிரதான நீரோட்ட நீதிமுறைமையின் கீழ் நிருவகிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் வகையில் காதி நீதிமன்ற முறைமையை அகற்றும் முன்மொழிவை ஏற்று, முழுமையாக சீர்திருத்தப்பட்ட முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தினை நீதி நிருவாகத்தின் பிரதான அங்கமாகிய மாவட்ட நீதி மன்றுகளுக்கு ஊடாக செயற்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு சகல முஸ்லிம்களிடமும் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.
மாவட்ட நீதிமன்றங்கள் பெண்களுக்கு பாதுகாப்பான, நடுநிலையான மற்றும் கௌரவமான சூழலை நிச்சயமாக வழங்கும். அவை நிச்சயமாக பெண்களை கீழ்த்தரமாக நடத்துவதையோ அவர்கள் அவதூறுக்கு அல்லது துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவதையோ அனுமதிக்காது. முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் இணைந்து நீதிக்கான அணுகலை சிறப்பாகவும், வேகமாகவும் அத்துடன் நீதியை இலகுவாக அணுகுதல் உள்ளடங்கலாக மேலும் தேவையான சட்ட சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் பின் நிற்காது செயற்பட வேண்டும்.
முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் இருந்து விலகி இருப்பதற்கான அடிப்படை உரிமை
இலங்கை அரசாங்கம் பாகுபாடு மிக்க இந்த காதி நீதிமன்றங்களை பராமரிப்பதற்கான உதவி மற்றும் ஆதரவினை வழங்குவது மாத்திரமன்றி, முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடுகளையும் தொடர்கின்றது. முஸ்லிம் மக்கள் பொது திருமணப் பதிவு கட்டளைச் சட்டத்தின் கீழ் திருமணம் புரிய, அல்லது / அத்துடன் விவாகரத்தினை மேற்கொள்ள அனுமதிக்கப்படாததுடன் திருமணம் சார்ந்த செயற்பாடுகளுக்காக அவர்கள் வழமையான நீதிமன்றங்களை அணுகுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் திருமணம் செய்ய தீர்மானித்தால், அவர்கள் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தின் நியதிகளுக்கு ஏற்பவே அதனை மேற்கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
நாடு முழுவதும் முஸ்லிம் பெண்கள் எதிர்கொள்ளும் துயரங்களைக் கண்ணுற்று, அவற்றினால் உந்தப்பட்டு மற்றும் அப்பெண்களுக்கு துயர் தீர்க்கும் வகையில் கருத்தாழம் கொண்ட சீர்திருத்தங்களை முஸ்லிம் ஆண்கள் இலகுபடுத்த மாட்டார்கள் என்பதையும் புரிந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான வைத்தியர் (திருமதி) துஷிதா விஜேமான்ன முஸ்லிம் பெண்களின் ஆகக் குறைந்த வயதைத் தெரிவு செய்தல், முஸ்லிம்களை பொது திருமணப் பதிவு கட்டளைச் சட்டத்தின் கீழும் திருமணம் செய்ய அனுமதித்தல் மற்றும் விவாகரத்தை மேற்கொள்வதற்கு மாவட்ட நீதிமன்றம் அல்லது காதி நீதிமன்றம் ஆகிய இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்யும் வாய்ப்பினை வழங்கல் என்பவற்றை மேற்கொள்வதற்காக மூன்று தனி நபர் பிரேரணைகளை முன் வைத்தார். பாராளுமன்றம் முன்னரே கலைக்கப்பட்டமையினால் அவற்றின் மீதான இரண்டாம் வாசிப்பு நிறைவுறாத நிலையில் அப்பிரேரணைகளை முன்நகர்த்தி செல்ல முடியவில்லை. நடப்பு பாராளுமன்றத்தில், மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. பிரமித பண்டார தென்னக்கோன் மேற்குறிப்பிடப்பட்ட அதே நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக முந்தையதையொத்த தனிநபர் பிரேரணைகளை சமர்ப்பித்துள்ளார். அவற்றின் மீதான முதலாம் வாசிப்பு கடந்த டிசம்பர் 2020 இல் இடம்பெற்றது.
தனது உறுப்பினர் ஒருவர் பிழையானதொன்றை சரி செய்வதற்கு முயற்சிக்கின்றார் என்பதை அரசாங்கம் புரிந்து கொண்டமையினாலோ, என்னவோ இச்சந்தர்ப்பத்தில், அரசு விடயங்களை தனது கைகளில் எடுத்து இந்த தனி நபர் பிரேரணைகளில் உள்ள விடயதானங்களை முன்னகர்த்தி செல்கின்றது போலும். பொதுவான சட்டத்தின் கீழும் முஸ்லிம்கள் திருமணம் செய்வதை அனுமதிப்பதற்கு தேவையான சட்டத் திருத்தங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
சீர்திருத்தங்களை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் தீவிர முயற்சிகள்
முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டங்களின் மீதான கருத்தாழம் கொண்ட சீர்திருத்தங்களை தீவிரமாக எதிர்ப்போர் முஸ்லிம்கள் தாம் திருமணம் செய்ய விரும்பும் சட்டத்தை தெரிவு செய்வதை இயலுமாக்கும் சட்டத் திருத்த முயற்சிகளையும் எதிர்க்கின்றனர்.
முன்னர் ஏற்படுத்தப்பட்ட அனைத்து குழுக்களும் தமது அறிக்கைகளை இறுதியாக்கம் செய்வதற்கு முன்னர் சமூகத்தின் பரந்து பட்ட பிரிவுகளுடன் பாரிய ஆலோசனைகளை மேற்கொண்டிருந்தன. இந்நிலையில் தற்போது எந்தவொரு சீர்திருத்தமும் சமூகத்திடம் இருந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டே முன்னெடுக்கப்பட வேண்டும் என தீய எண்ணம் மற்றும் பெண்ணினத்தை அடக்கியாள எண்ணும் ஆண்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் சீர்திருத்தங்களை தடுப்பதற்கான முயற்சியே தவிர வேறொன்றுமில்லை. பல வருடங்களாக சீர்திருத்தங்களுக்கான கோரிக்கை சமூகத்தினுள் இருந்து வெளிப்பட்டதேயன்றி அது வெளிப்புறம் இருந்து எழுப்பப்படவில்லை என்பதே இங்குள்ள யதார்த்தமாகும். மேலும், இந்த ஆண்களைப் பொறுத்தளவில் அவர்கள் ”சமூகம்” எனக் கூறுவது ஆண்களை மாத்திரமேயாகும். சமூகத்தில் 50% இற்கும் அதிகமாகவுள்ள பெண்கள் சமூக ஆலோசனைச் செயற்பாடுகளில் பங்கேற்பதில் இருந்து அவர்கள் வேண்டுமென்றே மற்றும் தீய நோக்குடன் இந்த ஆண்களால் தடுக்கப்படுகின்றனர்.
இந்த இரக்க குணமற்ற, சுயநலம் மிக்க, ஆதிக்க மனப்பான்மை கொண்ட மற்றும் விட்டுக்கொடுக்காத ஆண்கள் மத நம்பிக்கைகள் என்ற போர்வையில் அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தி அவர்களுக்கு சாதகமானவர்களை பிழையாக திசை திருப்பி கையெழுத்துக்களை திரட்டி வருகின்றனர். அவர்கள் கூறும் விடயங்களுக்கு நேர்மாறானதாகவே உண்மைகள் உள்ளன. முன்கொண்டு செல்லப்பட இருக்கின்ற இந்த சீர்திருத்தங்களை பெற்றுக்கொள்வதற்காக முஸ்லிம் பெண்கள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக காத்திருக்கின்றனர்.
முஸ்லிம் அரசியல்வாதிகளும் மதத் தலைவர்களும் தமது சக குடிமக்களுடன் ஒன்றுபட்டு இந்த உரிமைகளை முன்கொண்டு செல்ல வேண்டிய தேவை மிக்க நேரமாக இன்றைய சூழல் அமைந்துள்ளது. இஸ்லாத்தின் பெயரில் முஸ்லிம் பெண்களுக்கு மேற்கொள்ளப்படும் அநீதிகளை களைவது மாத்திரமன்றி அவர்களுக்கு எதிராகக் காணப்படும் சமத்துவமின்மைகளை அகற்றுவதற்கு கடப்பாட்டை காண்பிக்கும் அமைச்சர் அலி சப்ரி அவர்களுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது ஆதரவை வழங்க வேண்டிய நேரமாகவும் இது அமைந்துள்ளது.
இங்கு காணப்படும் இலக்காக அமைவது முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து விடயங்களின் நியாயாதிக்க நிலையை உயர்த்துவதாகும், அதன் மூலமாக இவ்விடயம் பிரதான மயப்படுத்தப்பட்ட நீதி நிருவாகத்தின் கீழ் கொண்டு வரப்படும். இது நீண்ட காலத்துக்கு முன்னரே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய விடயமாகும். இது அனைவரும் சமமாக மற்றும் கௌரவமாக நடத்தப்படல், ஒவ்வொரு பிரஜைக்கும் நீதியான தீர்ப்பு கிடைக்க வழி வகுத்தல், மற்றும் அரசாங்கத்தினை வகை கூற வைத்தல் போன்ற விடயங்களை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படுகின்றது.
அரசாங்கம் மற்றும் அமைச்சரவை என்பன இவ்விடயம் தொடர்பில் தற்போது எடுத்திருக்கின்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். அரசியல் இலாபத்துக்காக நீதியை விட்டுக்கொடுக்கவோ அல்லது சமரசம் செய்யவோ கூடாது. இந்தச் சீர்திருத்தங்கள் இயலுமான விரைவில் சட்டமாக்கப்பட வேண்டும். அவை முஸ்லிம் மக்களுக்கு சுதந்திரத்தையும் அனைவருக்கும் நீதிக்கான சம அணுகலையும் வழங்கும்.-Vidivelli