கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
கிழக்கிலங்கையில் முஸ்லிம் தமிழர் இனவாதம் திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இரு மாவட்டங்களும் இவ் இனவாதத்தின் மையங்களாக விளங்குகின்றன. இந்த இனவாதம் எப்படி யாரால் எப்போது உருவாக்கப்பட்டது? இது புரையோடிய ஒரு புண்ணா அல்லது அண்மையில் ஏற்பட்ட சிரங்கா? இதை எவ்வாறு சுகப்படுத்தலாம்? என்பனபோன்ற கேள்விகளுக்கு விடை காண்பதே இக்கட்டுரை.
குருக்கள்மடக் கோயில்
சுமார் நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்னர் நான் இலங்கை வந்திருந்தபோது என் நண்பர் ஒருவருடன் குருக்கள்மடத்திலுள்ள ஓர் இந்துக் கோயிலுக்குச் சென்றேன். அக்கோயிலினுள் தலையில் தலைப்பாய் அல்லது தொப்பியணிந்தவாறு செதுக்கப்பட்ட கற்சிலை ஒன்று நடுக்கோயிலுக்குள்ளே இருந்ததைக்கண்டு அதைப்பற்றி வினவினேன். அது பட்டாணியர் சிலையென்றும் பட்டாணியருக்காகப் பூசை வருடாவருடம் நடைபெறுவதாகவும் அறிந்தேன். யார் அந்தப் பட்டாணியர் என்று ஆராயத் தொடங்கியபோது அவர்கள் முன்னொரு காலத்தில் திமிலருக்கும் முக்குவருக்குமிடையே ஏற்பட்ட சண்டையொன்றில் முக்குவர் சார்பாக நின்று போர்புரிந்த முஸ்லிம்கள் என்றும் அவர்களுக்கு நன்றி பாராட்டும் முகமாக மட்டக்களப்புக்குத் தெற்கேயுள்ள பல கோயில்களில் அவ்வாறான பூசை நடைபெறுவதென்றும் அறிந்து வியந்தேன். இந்த வரலாறு எந்த அளவுக்கு அங்குள்ள தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நேசமும் பாசமும் ஒரு காலத்தில் இருந்துள்ளதென்பதை வெளிப்படுத்தவில்லையா? இன்றும் காத்தான்குடி முஸ்லிம்களிடையே நிலவும் குடிமுறை முக்குவர்களிடையே இருந்து வந்தது என்பதை கனகரத்தின முதலியார் தனது நூலில் விளக்கியுள்ளார். இக்குடிமுறை தாய்வழியாக வளர்ந்துள்ளது என்பதை நோக்கும்போது பண்டை நாட்களில் முஸ்லிம்கள் முக்குவப் பெண்களையும் திருமணம் செய்திருப்பர் என்பதையும் நிராகரிக்க முடியுமா? எனவே இனவாதம் என்ற புண் அண்மைக்காலத்தில் ஏற்பட்டதொன்றே என்பதை ஏற்றேயாக வேண்டும். அதை நிரூபிப்பதாக அமைந்தது நான் இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் ஒருமுறை அதே கோயிலுக்குச் சென்றபோது அந்தச் சிலையைக் காணமுடியாமற்போனமை. இந்துத்துவவாதிகள் அதனை அகற்றிவிட்டனர் என்று ஒருவர் கூறக்கேட்டுக் கவலையுற்றேன்.
நான் கண்ட தேர்தல் கலவரம்
நான் பிறந்தது மட்டக்களப்பு மாவட்டத்தில் நூற்றுக்கு நூறு வீதம் முஸ்லிம்கள் வாழ்கின்ற காத்தான்குடியில். அந்த ஊருக்குத் தெற்கே ஆரையம்பதியும் வடக்கே பூனொச்சிமுனை, கல்லடி ஆகிய கிராமங்களும் தமிழர் அடர்த்தியாய் வாழுமிடங்கள். இலங்கை சுதந்திரம் அடைந்தபோது எனக்கு வயது எட்டு. அதனால் 1947இல் நடைபெற்ற முதலாவது நாடாளுமன்றத் தேர்தலைப்பற்றிய ஞாபகங்கள் சற்றேனும் எனக்குக் கிடையாது. இரண்டாவது தேர்தல் 1952இல் நடைபெற்றபோது எனக்கு வயது பன்னிரண்டு. அந்தத் தேர்தலின்போதுதான் தமிழர் முஸ்லிம் இனவாதத்தின் கோரவடிவை நேரிற் கண்டேன். அந்தத் தேர்தல் இரு அங்கத்தவர்களுக்கிடையிலான நேரடிப் போட்டி. ஒருவர் முஸ்லிம், மற்றவர் தமிழர். ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டவர் முஸ்லிம். சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றவர் தமிழர். தேர்தல் பிரசாரம் களைகட்டி இருந்த வேளையில் முஸ்லிம்களைப் பற்றிய அவதூறுகள் தமிழர் மத்தியிலும் தமிழரைப் பற்றிய இழிவு சிறப்புகள் முஸ்லிம்கள் மத்தியிலும் தாராளமாக அவிழ்த்து விடப்பட்டிருந்தன. இனக்கசப்பு விரைவாகப் பரவியது. அதன் விளைவாக ஒரு நாள் சாயந்தரம் நான்கு மணி இருக்கும், காத்தான்குடியின் சின்னபள்ளிவாசலில் இருந்து ஆரையம்பதியை நோக்கி சுமார் ஐம்பது யார் தூரத்தில் நடுத்தரவயது நிரம்பிய முஸ்லிம்களின் ஒரு கூட்டம் திரண்டிருந்தது. அதிலிருந்து மேலும் சுமார் நூறு யார் தூரத்தில் ஆரையம்பதியின் பொன்னையா அண்ணனின் பேக்கரிக் கடையொன்றின் முன்னே தமிழர் கூட்டம் ஒன்றும் திரண்டு நின்றது. இரு கும்பல்களும் ஒன்றையொன்று நோக்கித் தூஷணத் திருவாசகம் பாடத் தொடங்கினர். நானும் என்னோடு விளையாடித்திரிந்த என்வயது நண்பர்களும் சின்னப்பள்ளிவாசல் முன்றலில் நின்று வேடிக்கை பார்த்தோம். அங்கேதான் நாங்கள் தினந்தினம் கூடி விளையாடுவது வழக்கம். இளங்கன்றுகள் நாங்கள். எங்களுக்கேது பயம்?
விரைவில் அங்கே நடைபெறவிருந்த கற்போருக்கு உதவுவது போன்று அரசாங்கத்தின் பொது வேலைத் திணைக்களமும் வீதி திருத்தும் நோக்கில் பாறாங்கற்களை ஏற்கனவே வீதியோரத்தில் சின்னப்பள்ளியின் முன்பு குவித்திருந்தது. அதேபோன்று ஆரையம்பதிக்கருகேயும் ஒரு குவியல் கிடந்தது. முஸ்லிம் கும்பலுக்குள் நின்ற எனக்கு நன்றாகத் தெரிந்த ஒருவர், அவர் என் உறவினருங்கூட, “எடுங்கடா கல்லை! எறிங்கடா அந்த நாய்களுக்கு”, என்ற மந்திரத்துடன் வீசினார் ஒரு கல்லை. திருவாசகம் பாடிச் சொல் மழையில் நனைந்த இருகூட்டங்களும் சற்று நேரத்தில் கல்மழையிற் காயமுறலாயின. அந்தச் சூழலில் ஒரு தமிழ் நடுத்தர வயதினன் அருகாமையிலிருந்த ஒரு முஸ்லிமின் வீட்டுக் கூரைமீதேறி ஓட்டைப்பிரித்து உள்ளே குதிக்க முயன்றான். அதைக் கண்ணுற்ற ஒரு முஸ்லிம் கடைக்காரன் அவனுடைய துப்பாக்கியால் அந்த வாலிபனின் கால்களை நோக்கிச் சுட்டுக் காயப்படுத்த, அவன் உருண்டு புரண்டு வீதியில் விழுந்தான். அவனது நல்ல நேரம், சாகவில்லை.
இதற்கிடையே இக்கலவரம் வெடித்த செய்தி எப்படியோ மட்டுநகர் காவல் துறையினருக்கு எட்டியதால் அங்கிருந்து கலவரக்களம் நோக்கி விரைந்தது காவற் படை. சுமார் பத்து நிமிடங்களுக்குள் அவர்கள் அங்கே வந்து தடியடிப் பிரயோகம் செய்தும் வானை நோக்கி வெடிவைத்தும் கும்பல்களைக் கலைத்தனர். யாரையாவது கைதுசெய்தார்களா என்பது எனக்கு இப்போது ஞாபகமில்லை. ஆனால் கலகம் அடங்கியது. புதினம் பார்த்து நின்ற நாங்களும் புதினம் முடிந்துவிட்டதே என்ற ஏமாற்றத்துடன் வீடு திரும்பினோம். அதனைத் தொடர்ந்து அன்றிரவு மட்டுநகரிலும் ஆரையம்பதியிலும் முஸ்லிம் வியாபாரத் தலங்கள் தமிழர்களால் நொறுக்கப்பட்டதாகவும், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் அதனை தமிழர் நிரம்பிய காவல் துறை தடுக்கவில்லை எனவும் மறுநாள் காலை செய்திகள் காத்தான்குடியை வந்தடைந்தன. அவை என் ஞாபகத்தில் இன்னும் அழியாதிருக்கின்றன. அதன்பின் தொடரப்பட்ட வழக்குகள் அதன் முடிவுகள் யாவற்றையும் பற்றி அறிய விரும்புவோர் அன்றைய பத்திரிகைகளை நாடலாம்.
இனவாதத்தின் ஆரம்பம்
சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்குள் நடந்து முடிந்த அந்தக் கலவரத்தின் எதிரொலியாகத் தமிழருக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் முஸ்லிம்களால் கல்முனையிலும் சம்மாந்துறையிலும் நிந்தவூரிலும் அவிழ்த்து விடப்பட்டதாக அப்போது காத்தான்குடி மத்திய கல்லூரியில் என்னுடன் கல்வி பயின்ற அவ்வூர் மாணவ நண்பர்களிடமிருந்து அறிந்தேன். சுமார் எழுபது வருடங்களின் பின்னர் அப்போது நடந்தவற்றை மீட்டுப் பார்க்கையில் அந்தக் கலவரமே கிழக்கிலங்கையில் தமிழர் முஸ்லிம் இனவாதம் வளர்வதற்கு வித்திட்டது என்பதை உணர்கிறேன். அதன்பின் கிழக்கிலே நடைபெற்ற தேர்தல் போட்டிகளில் தமிழர் -முஸ்லிம் இனவாதமே அடிக்கோடாக விளங்கியதெனக் கூறுதல் பொருந்தும். அந்த இனவாதத்தை வளர்க்கும் ஒரு கருவியாக விளங்கியது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆர்ப்பாட்டங்களும் பிரசாரங்களும்.
1952 தேர்தலில் தமிழரசுக் கட்சி மொத்தம் இரண்டு ஆசனங்களையே கைப்பற்றியது. அவை இரண்டும் வடக்கிலேயேயன்றிக் கிழக்கில் இல்லை. அதன் பிறகுதான் அக்கட்சி கிழக்கை நோக்கிப் படையெடுத்து 1956ஆம் வருடத் தேர்தலில் மட்டக்களப்பு, கல்முனை, திருகோணமலை, பொத்துவில் ஆகிய நான்கு தொகுதிகளை கிழக்கிலே கைப்பற்றியது. இதில் வேடிக்கை என்னவென்றால் கல்முனையிலும் பொத்துவிலிலும் அக்கட்சியின் ஆதரவில் வென்றவர்கள் இரு முஸ்லிம்கள். அவர்கள் பின்னர் அக்கட்சியைவிட்டும் விலகி ஆளும் கட்சியுடன் இணைந்ததால் முஸ்லிம்கள் ”தொப்பி திருப்பிகள்” என்ற ஓர் அவமானப்பெயரும் தமிழ் மக்களிடையே வளரலாயிற்று. மட்டக்களப்பில் போட்டியிட்ட காத்தான்குடியைச் சேர்ந்த முஸ்லிம் வேட்பாளர் தோல்வியுற்றார்.
இலங்கையிலே தேர்தலுக்காக ஒரு கட்சியில் போட்டியிட்டு வென்றபின் அதிலிருந்து பிரிந்து ஆளும் கட்சியுடன் சேர்தல் என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமே உரிய ஒரு பண்பல்ல. சுயநலன் தேடும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் சொந்தமான ஒரு பண்பு. ஆனால் கிழக்கிலங்கையின் குடிசனப்பரம்பலை அறிந்தவர்களுக்கு 1956இல் கல்முனையிலும் பொத்துவிலிலும் நடைபெற்ற மாற்றங்கள் இரு இனங்களுக்கிடையேயும் எவ்வாறான ஒரு கசப்பினை ஏற்படுத்தியிருக்கும் என்பதை ஓரளவு விளங்கிக் கொள்ளலாம். அத்துடன் முஸ்லிம்களின் தலைமைத்துவம் அக்காலத்தில் மேல்மாகாணத்திலே வளர்ந்ததால் அத்தலைமைத்துவம் சிங்கள முஸ்லிம் இன உறவினை வளர்க்கப் பாடுபட்டதே ஒழிய தமிழர் முஸ்லிம் உறவைப்பற்றி எந்தக் கரிசனையும் எடுக்கவில்லை. அத்துடன் சிங்கள தமிழ் உறவு விரிவடைவதற்கு தமிழரசுக் கட்சியே காரணம் என்று முஸ்லிம் தலைமைத்துவம் கருதியதால் கிழக்கிலும் முஸ்லிம்களிடையே அக்கருத்து வலுவடையத் தொடங்கிற்று. உதாரணமாக, சீங்கள ஸ்ரீ எழுத்துப் போராட்டம் ஆரம்பித்தவேளை கல்முனைத் தொகுதி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழரசுக்கட்சியின் தமிழ் ஸ்ரீக்குப் பதிலாக அரபியில் ஸ்ரீ எழுதி வாகனங்களிற் பொறிக்குமாறு தனது ஆதரவாளர்களை வேண்டிக்கொண்டது என் ஞாபகத்துக்கு வருகிறது. தமிழர்- முஸ்லிம் இனவாதம் துளிர்விட ஆரம்பித்த காலம் அது.
குடிசனப் பரம்பலும் இன உறவும்
கிழக்கிலங்கையிலே தமிழர்களும் முஸ்லிம்களும் கிராமம் கிராமமாக எவ்வாறு இணைந்துள்ளார்கள் என்பதை “பிட்டும் தேங்காய்ப்பூவும்” என்ற உவமானத்தின் மூலமாக விளக்குவர். இந்த இணைப்பினால் கிழக்கின் எல்லாத் தேர்தல் தொகுதிகளுக்குள்ளும் இரு இன மக்களும் அடங்குவர். இப்போது சில தொகுதிகளுக்குள் சிங்கள இனமும் அடங்கியுள்ளமை அண்மையில் ஏற்பட்ட ஒரு மாற்றம். கிழக்கிலங்கையின் இனவாத வளர்ச்சியில் சிங்களக் குடியேற்ற ஊடுருவல் இன்று முன்னிலை வகிக்கிறது. அது ஒரு புறமிருக்க, குடிசனப் பரம்பலால் ஏற்பட்ட இணைப்பு தமிழர் முஸ்லிம் உறவை ஒரு வியாபாரிக்கும் வாடிக்கையாளனுக்கும் இடையேயுள்ள உறவாக மாற்றியதேயன்றி இரு சகோதரர்களுக்கிடையேயோ அல்லது இரு நண்பர்களுக்கிடையேயோ நிலவும் உறவாக வளர்க்கவில்லை.
பிட்டிலே இரண்டு வகையுண்டு. ஒன்று வண்டுப் பிட்டு, மற்றது குழல் பிட்டு. வண்டுப் பிட்டில் மாவும் தேங்காய்ப் பூவும் இரண்டறக் கலந்திருக்கும். ஆனால் குழல் பிட்டுக்குள் மாவும் தேங்காயும் அவற்றின் விளிம்புகளிலேதான் ஒட்டிக் கிடக்கும். முஸ்லிம் தமிழர் உறவு குழல் பிட்டாக இருந்ததேயன்றி வண்டுப் பிட்டாக என்றுமே இருந்ததில்லை. அவ்வாறு இருப்பதைத் தடுத்தன இரு இனங்களும் பின்பற்றிய மதங்களும், 1952க்குப்பின் வளர்ந்த அவர்களின் அரசியலும்.
இனங்களுக்கிடையே நெருங்கிய உறவு ஏற்படுவதற்கு எவ்வாறு அவ்வினங்கள் பின்பற்றிய மதங்கள் ஒரு தடையாய் இருந்தன என்பதைப்பற்றி விரிவாக விளக்க இக்கட்டுரையின் நீளம் இடந்தராது. சுருக்கமாக ஒரு வரியிலே கூறப்போனால் எல்லா மதங்களும் ஒரே மலையின் உச்சியிலிருந்து அருவிகளாக ஊற்றெடுத்து அவை பின்னர் வெவ்வேறு நதிகளாகி இறுதியில் இறைவன் என்னும் சமுத்திரத்துக்குள் சங்கமமாகின்றன என்ற உயரிய தத்துவத்தை எந்த மதத் தலைவனும் அவன் வழிகாட்டும் மக்களுக்கு என்றுமே உணர்த்தியதில்லை. பொதுமேடைப் பிரசங்கங்களில் மட்டும் எல்லோரையும் திருப்திப்படுத்துவதற்காக அதைக் கூறி அத்துடன் திருப்தியடைவானே ஒழிய அதைத் தனது பக்தர்களிடம் தனிப்பட்ட முறையில் என்றுமே அவன் ஓதுவதில்லை. பல்லின மக்கள் ஒன்றோடொன்று உரசி வாழுகின்ற ஒரு சமுதாயத்தில் மேடைப் பேச்சோடு இத்தத்துவம் நின்றுவிடுதலால் இனங்களும் விளிம்பில் நின்றுதான் உறவாடுகின்றன. இது ஒரு துரதிஷ்டம்.
அரசியல் வளர்த்த இன உறவு
கிழக்கிலங்கையில் இனவாதம் பேசித் தேர்தலில் வென்று நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் தமது தொகுதிக்குள் வாழ்ந்த மற்ற இனத்துக்காக அல்லது அவ்வினம் வாழும் கிராமத்தின் வளர்ச்சிக்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தனிப்பட்ட முறையில் ஒரு முஸ்லிம் அங்கத்தவர் சில தமிழர்களுக்கும் அதேபோன்று ஒரு தமிழ் அங்கத்தவர் சில முஸ்லிம்களுக்கும் உதவி இருந்தாலும் இரு இனங்களினதும் சமமான வளார்ச்சிக்காக எந்த அங்கத்தவனும் பாடுபடவில்லை. 1950களில் இருந்து வளர்க்கப்பட்ட இந்தப் பாரபட்சம் இந்த நூற்றாண்டில் தீவிரமாகப் பின்பற்றப்படுகிறது.
இந்தப் பாரபட்சப் போக்கினால் நீண்டகாலமாக கிழக்கிலே நட்டமடைந்த சமூகம் தமிழர் சமூகமே. ஒரு பக்கத்தில் தமிழரின் தலைமைத்துவம் சிங்கள அரசாங்கங்களை எதிர்த்தே நின்றதும் மறுபக்கத்தில் அந்த எதிர்ப்பால் விளைந்த விரிசலை முஸ்லிம் தலைவர்கள் தமது இனத்துக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக நினைத்துச் செயற்பட்டதும் இந்த இழப்பை உண்டாக்கிற்று. முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் கல்வீடுகளாலும் கடை வீதிகளாலும் நிரம்பி மின்சார விளக்குகளுடனும் குழாய் குடிநீர் வசதிகளுடனும் பட்டணங்களாகக் காட்சியளிக்க, தமிழர் வாழ்ந்த பகுதிகளோ பெரும்பாலும் ஓலை வீடுகளாலும் ஓரிரண்டு சில்லறைக் கடைகளாலும் ஏதோ இருளில் மூழ்கிய பாழடைந்த பகுதிகளாகவே நீண்ட காலமாகக் காட்சியளித்தன. அந்த நிலையை மேலும் சீரழித்தது புலிகளின் தமிழீழப் போராட்டம். எனினும் கிழக்கின் சமநிலையற்ற வளர்ச்சி எவ்விதமான ஒரு மனோபாவத்தை தமிழரிடையே தூண்டி இருக்கும் என்பதை முஸ்லிம் தலைவர்கள் அன்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இது அவர்களின் தூரநோக்கற்ற தலைமைத்துவத்தின் ஒரு பிரதான குறைபாடு. அது மட்டுமா?
மூலைக்குள் முடங்கும் முஸ்லிம்கள்
இன்று கிழக்கிலங்கை முஸ்லிம் இனத்தை வாட்டுவது நிலப் பசி. இந்தப்பசியே இங்கு கொந்தளிக்கும் இனவாதத்துக்குத் தூண்டுதலாகவும் விளங்குகிறது. கிழக்கு மாகாணத்தில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினராக வாழும் முஸ்லிம்கள் ஆக ஐந்து சதவீத நிலப்பரப்புக்குள்ளேதான் வாழ்கின்றனர். உண்மையிலேயே முஸ்லிம் சமூகம் ஒரு மூலைக்குள் முடங்கிக் கிடக்கின்றது. இருக்கின்ற ஐந்து வீதத்தையும்கூட எப்படியாயினும் குறைத்து முஸ்லிம்களை கிழக்கு மாகாணத்தைவிட்டே விரட்டியடிக்கும் நோக்குடன் ஓர் இனவாதத் தமிழ்த் தலைமைத்துவம் இப்போது அங்கே உருவாகியுள்ளது. ஆனால் இந்த நிலப்பற்றாக்குறையை கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்த எந்த கிழக்கிலங்கை முஸ்லிம் தலைவனுமே உணராததை என்னவென்று கூறுவதோ! எதிர்காலத்தைப்பற்றி எந்தச் சிந்தனையுமில்லாத முட்டாள்களை தலைவர்களாகத் தெரிந்தனுப்பியது முஸ்லிம்கள்தானே. ஆகவே வாக்காளர்களைத்தான் முதலில் குறைகூற வேண்டியுள்ளது. பள்ளிவாசல்களையும் மதரசாக்களையும் கட்டுவதிலும் தமக்கு ஆதரவில்லா ஆசிரியர்களையும் அரசாங்க உத்தியோகத்தர்களையும் இடமாற்றம் செய்வதிலும் தமக்கெனச் சொத்து சேர்த்துச் சுகபோகங்களை அனுபவிப்பதிலும் கவனம் செலுத்திய இத்தலைவர்கள் தமது சமூகத்தின் எதிர்கால நிலைபற்றி எந்தக் கவலையுமின்றே வாழ்ந்தனர். முஸ்லிம் புத்திஜீவிகளின் ஆலோசனைகளுடன் சமூகத்தின் நீண்டகாலத் தேவைகளை கருத்திற்கொண்டு பொருத்தமான திட்டங்களை வகுத்து தமது அரசியல் செல்வாக்கின் மூலம் அரசாங்க ஆதரவைப்பெற்றுச் செயற்படுத்த எந்த முஸ்லிம் தலைவனுக்கும் ஆர்வமோ துணிவோ இருக்கவில்லை. அதன் விளைவைத்தான் இன்று முஸ்லிம் சமூகம் கிழக்கிலங்கையில் அனுபவிக்கிறது.
இனி என்ன செய்யலாம்?
அரசியலும் மதமும் வளர்த்துவிட்ட இனவாதத்தை அவை இரண்டுக்கும் வெளியே நின்றுதான் நீக்கவேண்டியுள்ளது. அதற்காக, இரு சமூகங்களின் அடிமட்டத்தில் மாற்றுச் சிந்தனைகள் வளரவேண்டும். அதனை வளர்க்கவேண்டிய பொறுப்பு இன்றைய இளஞ்சந்ததியிடமும், அவர்களிடையே உருவாகியுள்ள புத்திஜீவிகளிடமும், அந்தப் புத்திஜீவிகளின் தலைமையில் அமைக்கப்படவேண்டிய சிவில் அமைப்புக்களிடமுமே தங்கியுள்ளது.
இரு இனங்களையும் இணைப்பது தமிழ் மொழி. அது மட்டுமல்லாமல் இரு இனங்களினதும் கலாசாரத்திலும் நிறைய கலப்புகளுண்டு. ஆதலால் மொழியையும் கலாசாரத்தையும் கருவிகளாகப் பாவித்து ஜனரஞ்சகமான படைப்புகள் ஊடாகவும் நிகழ்வுகள் ஊடாகவும் இரு இனங்களும் ஒன்றாகக் கூடிக்களித்து உறவாடக்கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்தவேண்டியது அவசியமாகின்றது. இசை, நடனம், நாடகம், சித்திரம், ஓவியம், விளையாட்டு என்றவாறு இரசாஞானத் துறைகளை இரு இனங்களும் கூட்டாக வளர்ப்பதன்மூலம் இன உறவை வலுப்படுத்தலாம். இதனை முஸ்லிம் இளைஞர்களும் யுவதிகளும் முக்கியமாக உணரவேண்டும். ஏனெனில் உங்களை இந்தத் துறைகளில் ஈடுபடவிடாமல் தடுக்கின்றது உங்களின் வைதீக மார்க்கம். இதனாலேதான் நீங்கள் மற்ற இனங்களால் ஒதுக்கப்பட்டுள்ளீர்கள். இந்த ஒதுக்கம் இனவாதம் வளர்வதற்கு ஒரு முக்கியமான காரணம் என்பதை பல இடங்களில் நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.
ஆனால் இது ஒரு நீண்டகாலத்திட்டம்.
குறுங்காலத்தில் தமிழர்- முஸ்லிம் இனவாதம் குறைவதானால் அரசியல் அடிப்படையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டியுள்ளது. அதைச் செய்ய இனறுள்ள தமிழ் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பலரை அகற்ற வேண்டும். பணத்துக்காகவும் பதவிக்காகவும் சமூகத்தை விலைபேசும் அரசியல் தலைவர்களால் இனவாதம் பெருகுமேயன்றி குறையமாட்டாது. இதற்கிடையில், தமிழர் முஸ்லிம் ஆகிய இரு இனங்களுமே இந்த நாட்டுக்குச் சொந்தமானவையல்ல என்று கூறிக்கொண்டு ஒரு பேரினவாத இயக்கம் சிங்கள மக்களிடையே பூதாகரமாக உருவாகியுள்ளது. அதன் ஆதரவாளர்கள் கிழக்கிலங்கையிலும் அரசின் ஆதரவுடன் இன்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் சந்தர்ப்ப சகவாசத்தைப்பற்றியும் அது எவ்வாறு தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரித்து வைக்கின்றது என்பது பற்றியும் ஏற்கனவே ஒரு பத்திரிகையில் நான் விளக்கியுள்ளேன். இந்தப் பேரினவாதத்தை தமிழரும் முஸ்லிம்களும் தனித்துநின்று தோற்கடிக்க முடியாது. இணைந்தால் வெற்றி காணலாம். இணைவதற்கு மறுக்கின்றனர் இப்பச்சோந்தித் தலைவர்கள். எனவேதான் அடுத்த சந்தர்ப்பம் வரும்போது அவர்களை தோல்வியடையச் செய்வது இரு இனங்களினதும் பிரதான கடமை. தமிழ், முஸ்லிம் புத்திஜீவிகளே விழியுங்கள். உங்கள் மக்களையும் விழிப்படையச் செய்யுங்கள். உங்களுக்கிடையே கொந்தளிக்கும் இனவாதத்தை விரட்டியடியுங்கள்.-Vidivelli