தொகுப்பு : ஏ.ஆர்.ஏ.பரீல்
ஆப்கானிஸ்தானில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் எவ்வித இடையூறுகளுமின்றி தங்களது நாடுகளுக்குத் திரும்புவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என தலிபான் அமைப்பு தெரிவிக்கிறது.
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படையினர் கடந்த சில மாதங்களாக கட்டம் கட்டமாக அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருந்த நிலையில் 20 வருடகாலமாக தலிபான் போராளிகள் மேற்கொண்டிருந்த போராட்டத்தில் வெற்றி கொண்டுள்ளார்கள். கடந்த மாதம் 15ஆம் திகதி அவர்கள் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்கள். தலிபான்களின் இந்த வெற்றியை அறிந்ததும் முழு உலகமும் அதிர்ச்சிக்குள்ளானது.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்பு அங்கு பணிபுரியும் இலங்கையர்கள் தொடர்பில் கூடிய அவதானம் செலுத்தப்பட்டது. தற்போது ஆப்கானிஸ்தானில் சுமுகநிலை திரும்பவில்லை. 2003இல் அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்புக்குள்ளாக்கிய போது நிலவிய கலவரங்களைப் போன்று தலிபான்களின் தற்போதைய நடவடிக்கைகள் மோசமானதல்ல.
காபுல் நகரில் தற்போது இலங்கையைச் சேர்ந்த 43 பணியாளர்கள் தங்கியிருக்கிறார்கள். காபுல் தலைநகரில் தங்கியிருக்கும் இலங்கையர்களை இந்நாட்டுக்கு அழைத்து வருவதற்கு விஷேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கான இலங்கைத் தூதுவர்
அட்மிரல் பியல் டி சில்வா
இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் நீண்டகால நல்லுறவு உள்ளது. பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் குதிரைகளைப் பராமரிப்பதற்கும் புகையிரத பாதை நிர்மாணப் பணிகளுக்காகவும் ஆப்கானிஸ்தானிலிருந்து தொழிலாளர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள்.
2013இல் கொழும்பில் ஆப்கானிஸ்தான் தூதரகம் ஆரம்பிக்கப்பட்டது. அத்தோடு இலங்கை அரசாங்கமும் 2014இல் ஆப்கானிஸ்தான் காபுல் நகரில் இலங்கை தூதரகத்தை திறந்து வைத்தது.
அன்றிலிருந்து நான் உட்பட நால்வர் ஆப்கானிஸ்தானின் இலங்கைத்தூதுவர்களாக கடமையாற்றியுள்ளோம். நான் இலங்கையின் தூதுவராக 9 மாதகாலம் தொடராக கடமையாற்றிய பின் வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன் விடுமுறையில் இலங்கைக்கு வந்துள்ள நிலையிலே இந்த எதிர்பாராத மாற்றம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ளது என ஆப்கானிஸ்தானுக்கான இலங்கைத் தூதுவர் அட்மிரல் பியல் டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், பூகோள ரீதியில் 6 நாடுகளின் நில எல்லைகளினால் சூழப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் எல்லைகளில் தலிபான்கள் தாக்குதல்களை நடத்தினார்கள். கடந்த 15ஆம் திகதி காபுல் தலைநகர் உட்பட ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தலிபான் அமைப்பினர் கைப்பற்றிக் கொண்டனர். விரைவில் அரசாங்கமொன்றினை அமைக்கவுள்ளதாக தலிபான்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானிலுள்ள இராஜ தந்திரிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் அங்கிருந்தும் வெளியேறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் காபுல் தலைநகரிலுள்ள விமான நிலையத்தில் பெரும் நெருக்கடியான நிலை உருவாகியுள்ளதாக அங்கிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டவர்களை எவ்வித இடையூறுகளுமின்றி அவர்களது நாட்டுக்கு திரும்புவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.
நான் விடுமுறையில் இலங்கையில் இருந்தாலும் ஆப்கானிஸ்தானிலிருக்கும் இலங்கையர்களுக்கான சேவைகளை வழங்குவதில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளேன்’ என்றார்.
வெளிவிவகார அமைச்சின் வெளிவிவகார செயலாளர் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகேயின் ஆலோசனையின் பேரில் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
43 இலங்கையர்கள் அந்நாட்டில் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இவர்கள் பணிபுரிவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் சுமார் 300 இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்துள்ளார்கள். 2020 டிசம்பரில் இவ்வெண்ணிக்கை 250 ஆக குறைவடைந்ததாக தகவல்கள் கிடைத்தன. பின்பு அமெரிக்க இராணுவ முகாம்கள் அப்புறப்படுத்தப்பட்ட பின்பு அவ்விடங்களுக்கு அண்மையில் பணிபுரிந்த இலங்கையர்கள் அதிகமானோர் இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தூதுவராலயத்தில் பதிவு செய்து கொண்டிருந்த 43 இலங்கையர்களில் கடந்த 16ஆம் திகதி 8 பேரை அங்கிருந்தும் வெளியேற்ற முடிந்துள்ளது. என்றாலும் கடந்த19ஆம் திகதியாகும் போது 93 இலங்கையர்கள் தூதுவராலயத்தில் தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளனர். இவர்களில் அநேகர் அவர்கள் பணிபுரியும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிறுவனங்கள் ஊடாக வேறு நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து இலங்கை திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் சுமார் 35 பேர்களாவர். மேலும் 25 இலங்கையர்கள் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் தொடர்புபட்ட நிறுவனங்களில் தொடர்ந்தும் அங்கேயே தங்கி பணியாற்றுவதற்கு விரும்புவதாக அறிவித்துள்ளனர்.
இராஜ தந்திரிகளை தொடர்ந்தும் அந்நாட்டில் சேவையாற்றுமாறு தலிபான்கள் அறிவித்திருக்கிறார்கள். இது தொடர்பில் நாம் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருகிறோம் என்றும் அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானிலிருக்கும் கண்டி குண்டசாலையைச்
சேர்ந்த ரோஹித வெலிஹிதகே
ஆப்கானிஸ்தானில் இருக்கும் கண்டி குண்டசாலையைச் சேர்ந்த ரோஹித வெலிஹிதகே தெரிவிக்கையில், ‘நான் கடந்த 4 வருடங்களாக காபுல் நகரின் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தில் சேவையாற்றுகிறேன். காபுல் நகரின் எதிர்காலம் குறித்து என்னால் எதுவும் கூற முடியாது. எனது வீட்டார் அச்சம் கொண்டுள்ளதால் நான் இலங்கை திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ளேன். காபுல் சர்வதேச விமான நிலையத்தை அடைவதற்கு 20 நிமிடம் எடுக்கும் தூரத்திலே நான் தற்போது தங்கியிருக்கிறேன். நான் பணிபுரியும் நிறுவனம் எனக்கு அனைத்து வசதிகளையும் செய்து தந்துள்ளது. நான் கடந்த 19ஆம் திகதி மேலும் ஒரு இலங்கையருடன் கசகஸ்தானுக்கு செல்வதற்கு தயாராக இருந்தாலும் விமான நிலைய நுழைவாயிலில் இலட்சத்துக்கும் அதிகமான ஆப்கானிஸ்தானியர்கள் இருந்ததால் விமான நிலையத்தை அடைய முடியவில்லை. இதனால் 20 நிமிடத்தில் விமான நிலையத்தை அடைய முடியாதுள்ளது. இதற்கு 2 ½ மணித்தியாலம் வரையில் செல்லலாம்.
இலங்கையர்கள் அநேகர் இலங்கை தூதரகத்தில் பதிவு செய்து கொண்டில்லை. தூதுவராலயத்தில் பணிபுரிந்த வெளிநாட்டு சேவை அதிகாரி கடந்த ஜூன் மாதம் கொரோனாவுக்குப் பலியாகிவிட்டார்’ என்றார்.
‘சிலோன் பிரைட் சிக்கன்’ உணவுச் சாலை
வலையமைப்பின் உரிமையாளர்
ஆப்கானிஸ்தானில் சாருனவ் எனுமிடத்தில் இயங்கிவரும் ‘சிலோன் பிரைட் சிக்கன்’ உணவுச் சாலையின் உரிமையாளரான இலங்கையில் ஹங்வெல்லயைச் சேர்ந்த அனுராத சப்புதன்திரி தெரிவிக்கையில், ‘நான் 9 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்து இந்த வர்த்தகத்தை ஆரம்பித்துள்ளேன். எனது இந்த உணவுச் சாலையில் மூன்று இலங்கையர்களும் ஆப்கான் நாட்டவர் ஒருவரும் வேலை செய்கிறார்கள். இறுதியில் இந்த அசாதாரண நிலைமை காரணமாக அவர்கள் வெளியேறிவிட்டார்கள்.
நாங்கள் முடியுமான வரையில் இந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இங்குள்ள நிலைமை குறித்து நான் இலங்கையிலிருக்கும் வீட்டாருக்குத் தெரிவிக்கவில்லை. என்றாலும் சமூக ஊடகங்கள் மூலம் அவர்கள் அனைத்தையும் அறிந்து கொண்டுள்ளார்கள்’ என்றார்.- Vidivelli