உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியும் தொடர்புடையோரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே முஸ்லிம்களின் நிலைப்பாடு
ஜனாதிபதி, பிரதமர், சிவில் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோருக்கு உலமா சபை கடிதம் மூலம் அறிவிப்பு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மற்றும் இத்தாக்குதலுடன் தொடர்புபட்ட அனைவரும் இனங்காணப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இதுவே இலங்கை முஸ்லிம்களின் நிலைப்பாடாகும். முஸ்லிம் சமூகம் இவ்வாறான கொடூர செயலை ஒருபோதும் அனுமதிக்காது. தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் கையொப்பமிட்டு கடந்த ஜூன் மாதம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்நாட்டின் முக்கிய முஸ்லிம் சபையான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையிடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் பற்றி முஸ்லிம் சமூகம் கேள்விகள் கேட்கிறது. முஸ்லிம் சமூகம் சமாதானத்தை விரும்பும் சமூகமாகும். ஆயிரக்கணக்கான வருடங்கள் இந்நாட்டில் நாட்டுப் பற்றுடைய சமூகமாக வாழ்ந்து வருகிறது. எல்.ரி.ரி.ஈ.யினரின் யுத்தம் உட்பட அனைத்து கலவரங்களின் போதும் முஸ்லிம் சமூகம் நாட்டுப் பற்றினை உறுதி செய்துள்ளது. முஸ்லிம் சமூகம் தனது ஏனைய சமூகங்கள் சந்தேகம் கொள்வதை ஒருபோதும் விரும்பவில்லை. இனங்களுக்கிடையில் மீண்டும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு ஒரே வழி உயிர்த்த ஞாயிறு விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குவதாகும்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் ஏனைய அமைப்புகளும் முஸ்லிம் சமூகத்தினுள் தீவரவாதம் மற்றும் அடிப்படைவாதம் என்பனவற்றுக்கு இடமளிக்காது என்பதை உறுதி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றன.
எங்களுக்கு உள்ள மிகவும் குறைவான வளங்களைப் பயன்படுத்தி எமது இளைஞர் சமுதாயத்தை நாம் தொடராக கண்காணித்து வருகிறோம். உலமா சபையினதும் முஸ்லிம் சமூகத்தினதும் முக்கியமான பணி இந்நாட்டின் தேசிய பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு ஒத்துழைப்பதாகும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
நீங்கள் இந்நாட்டில் பொறுப்பானவர் என்ற வகையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை மிக விரைவில் பூர்த்தி செய்து குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்குவீர்கள் என்றால் நாம் மிகவும் நன்றியுடையவர்களாக இருப்போம்.
நியாயமான துரிதமான விசாரணைகள் மூலம் இச்சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகளை இனங்கண்டு எவ்வித பேதங்களுமின்றி அனைவருக்கும் நீதியை நிலைநாட்டுவீர்கள் என்று நாம் பலமாக நம்புகிறோம்.
இந்நாட்டின் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அகில இலங்கை உலமா சபையும் முஸ்லிம் சமூகமும் பூரண ஒத்துழைப்புகளை வழங்கும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் விசாரணைகளை துரிதப்படுத்தும் படியும், உண்மையான சூத்திரதாரியை இனங்கண்டு நீதியை நிலைநாட்டுவதுடன், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குமாறு கோரி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் பாதுகாப்புசெயலாளர் கமல் குணரத்ன ஆகியோருக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.
மேலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்காக ஏற்கனவே குரல் கொடுத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று அப்பாவி வழிபாட்டாளர்கள் மற்றும் பலர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை அடையாளம் கண்டு, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு முன்வைக்கப்படும் பாதிக்கப்பட்டவர்களின் வேண்டுகோளை உலமா சபை ஆதரித்துள்ளது.உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கவில்லை என்பதற்காகவும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதிகிடைக்கவில்லை என்பதற்காகவும் நாங்கள் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளுடன் நாங்கள் முழு மனதுடன் இணைந்து கொள்வதோடு குற்றவாளிகளை இனங்காணுவதில் அனைத்து இலங்கையர்களும் ஒன்றுபடுமாறும் உலமா சபை கோரிக்கை விடுத்துள்ளது.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வேண்டுகோளை நேர்த்தியாக சிந்திக்கக்கூடிய மக்கள் அனைவரும் ஆதரிக்குமாறும் வேண்டுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
முஸ்லிம் தலைமைகள் மௌனமா?
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முஸ்லிம் மக்கள் நடத்திய தாக்குதல் அல்ல. சிறிய அடிப்படைவாத குழுவொன்று நடத்திய தாக்குதல் என்பதே பெரும்பான்மையோரின் கருத்து. இக்கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது என இளம் கிறிஸ்தவ சமூக செற்பாட்டாளர் செஹான் மாலக கமகே தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அவர் மேலும் கருத்துவெளியிடுகையில், தாக்குதலினால் குறிப்பாக கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களுமே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் உலமா சபை, சூரா சபை உள்ளடங்கிய முஸ்லிம் தலைமைகள் ஆழ்ந்த மௌனத்தில் இருக்கிறார்கள். அதற்காக நாம் கவலைப்படுகிறோம் என்றும் தெரிவித்தார்.
ஆனால் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் மௌனத்தில் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றிதிலிருந்து உலமா சபை மாத்திரமல்ல, சூரா சபை உள்ளிட்ட முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்காக இன்றுவரை குரல் கொடுத்து வந்துள்ளன.
தாக்குதலின் சூத்திரதாரிகள் மற்றும் அதனுடன் தொடர்புபட்டவர்கள் அவர்கள் யாராக இருந்தாலும் தராதரம் பாராது தண்டிக்கப்பட வேண்டுமென்றே கோரி வருகின்றன. இதனை எவராலும் மறுக்க முடியாது.
முஸ்லிம்கள் நூற்றாண்டு காலமாக இந்நாட்டின் ஏனைய சமூகங்களுடன் நல்லுறவுடன் வாழ்கிறார்கள். அவர்கள் தேசப்பற்று மிக்கவர்கள். இதனை வரலாறு உறுதி செய்துள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் ஒரு சிறு குழுவினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு முஸ்லிம் சமூகம் பொறுப்பாகிவிட முடியாது.- Vidivelli