கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களின் அதீத விலை உயர்வுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தினக் கூலிகளாகவும் தொழிலாளர்களாகவும் அன்றாடம் உழைத்து வாழ்க்கை நடத்தும் மக்கள் மூவேளை உணவுகளுக்குக் கூட திண்டாடி வருகின்றனர்.
அண்மையில் எரிபொருட்களின் விலைகள் அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டதால் உணவுப் பொருட்களின் விலைகளில் திடீரென மாற்றங்கள் ஏற்பட்டன. மக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான உணவுப் பொருட்களாக அரிசி, சீனி, பருப்பு, கோதுமை மா, தேங்காய் எண்ணெய் உட்பட பலவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டன. பேக்கரி உணவுப் பொருட்களான பாண் 5 ரூபாவாலும் ஏனையவை 10 ரூபாவாலும் அதிகரித்தது.
இன்று அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையினை விடவும் உணவுப் பொருட்கள் அதிகரித்து விற்கப்படுகின்றன. அரசாங்கம் இந்நிலையினை தடுக்க முடியாது திணறுகிறது.
2019ஆம் ஆண்டு அக்டோபர் மாத விலைகளுடன் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலைகளை ஒப்பிட்டு நோக்கும்போது சில உணவுப் பொருட்கள் 100 வீத, 200 வீத அதிகரிப்பினைத் தொட்டுள்ளன.
244 ரூபாவாக இருந்த ஒரு கிலோ சிறிய வெங்காயம் 432 ரூபாவாகவும், 109 ரூபாவாக இருந்த உருளைக்கிழங்கு 295 ரூபாவாகவும், 320 ரூபாவாக இருந்த ஒரு லீட்டர் தேங்காய் எண்ணெய் 710 ரூபாவாகவும், 110 ரூபாவாக இருந்த மைசூர் பருப்பு 240 ரூபாவாகவும், 100 ரூபாவாக இருந்த சீனி ஒரு கிலோ 220 ரூபாவாகவும், 88 ரூபாவாக இருந்த வெள்ளை பச்சை அரிசி 110 ரூபாவாகவும் சந்தையில் விற்கப்படுகிறது.
இவ்வாறான விலை அதிகரிப்பினை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த இயலாத நிலை உருவாகியுள்ளது. கோதுமை மா, அரிசி, சீனி,சமையல் எரிவாயு என்பனவற்றின் விலையேற்றத்தினால் சிற்றுண்டிச்சாலைகளும், ஹோட்டல்களும் உணவுப் பொருட்களின் விலைகளை நினைத்தவாறு அதிகரித்துள்ளன.
சீனி விலை 100 வீதத்துக்கும் அதிகமாக அதிகரித்த பின்னணியை ஆராய்ந்த நுகர்வோர் அதிகார சபை சீனியை பதுக்கி வைத்திருந்த 5 களஞ்சியசாலைகளுக்கு சீல் வைத்துள்ளது. சந்தையில் செயற்கையாக தட்டுப்பாட்டினைத் தோற்றுவித்து விலையை அதிகரிக்கும் நோக்கில் பதுக்கப்பட்டதாக நம்பப்படும் 206 கோடி ரூபா பெறுமதியான 10255 மெட்ரிக் தொன் சீனி இக்களஞ்சியசாலைகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இக்களஞ்சியசாலைகள் பதிவு செய்யப்படாதவை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளமையையடுத்து, அரிசி, சீனி, பருப்பு, உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.
ஒரு கிலோ சீனி வரியுடன் சேர்த்து 98 ரூபாவாகவே அமைகிறது. வருடத்துக்கு எமக்கு 7 இலட்சம் மெட்ரிக் தொன் சீனி தேவைப்படுகிறது. தற்போதைய நிலையில் இறக்குமதியாளர்கள் 7000 கோடி வருமானம் பெறுகிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை அத்தியாவசிய உணவுப் பொருட்களை அரசாங்கம் ச.தொ.ச. ஊடாக சலுகை விலையில் விற்பனை செய்ய வேண்டும் என நீர்வழங்கல் அமைச்சர் அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.
அத்தோடு அத்தியாவசிய உணவு விநியோகத்திற்கு அவசரகால விதிமுறைகள் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு முதல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி இதற்கான விஷேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகப் பதுக்குதல், அதிக விலை அறவிட்டு நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாக்குவதைத் தவிர்த்தலுக்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் வர்த்தமானி வெளியிடுவதுடன் மாத்திரம் இருந்துவிடாது இது தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்த வேண்டும்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பதுக்கும் பின்னணியில் அரசியல்வாதிகள் இருக்கிறார்களா? என சந்தேகிக்கப்படுகிறது. வர்த்தமானி வெளியீடுகள் மூலம் மாத்திரம் இந்த மோசடிகளையும் விலை உயர்வுகளையும் தடுக்க முடியாது. இவ்வாறான வர்த்தகர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தராதரம் பாராது தண்டிக்கப்பட வேண்டும். நுகர்வோர் பாதுகாக்கப்பட வேண்டும்.- Vidivelli