(ஏ.ஆர்.ஏ.பரீல்)
காதிநீதிமன்ற முறைமையையோ, முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தையோ இல்லாமற் செய்ய வேண்டாம். மாறாக காதி நீதிமன்ற கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகளையே முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதியமைச்சரைக் கோரும் மனுவொன்று தற்போது முஸ்லிம் சமூகத்தினால் கையொப்ப வேட்டைக்கு விடப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இம்மனுவில் 2500 கையொப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பிட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
காதி நீதிமன்ற கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்வதற்காகவும், முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் குர்ஆனிய சட்டங்களை மாற்றியமைப்பதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டு தற்போது சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு முஸ்லிம்கள் பொதுச் சட்டத்தின் கீழ் திருமண பதிவு செய்து கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சில முஸ்லிம் பெண்களின் கோரிக்கைக்கு அமைவாகவே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பலதார மணம் குர்ஆனிய சட்டமாகும். இது இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இவையனைத்தும் முஸ்லிம்களை இரண்டாம் தரப் பிரஜையாகவே கணிப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில், தேசிய சூரா கவுன்ஸில் மற்றும் வை.எம்.எம்.ஏ. அமைப்பு என்பன ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாட்டை விளக்கியுள்ளது.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் முஸ்லிம்களின் உரிமையாகும். நாட்டில் காதிநீதிமன்ற முறைமையை மேம்படுத்த வேண்டுமேயன்றி இல்லாமற் செய்யக்கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதிநீதிமன்ற முறைமையை இல்லாமற் செய்ய வேண்டுமென்றோ, பலதார மணத்தை இல்லாமற் செய்ய வேண்டும், தடை செய்ய வேண்டுமென்றோ அண்மையில் நியமிக்கப்பட்டிருந்த நீதியமைச்சருக்கு இது தொடர்பில் ஆலோசனை வழங்குவதாக நியமிக்கப்பட்ட குழு சிபாரிசு செய்யவில்லை எனவும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.-Vidivelli