ஆப்கானிஸ்தான் பற்றி ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அறிக்கையை கண்டிக்கிறோம்
சுஹைர், லத்தீப் பாரூக், மாஸ் எல்.யூசுப் அறிக்கை
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விமர்சித்து வெளியிட்டுள்ள அறிக்கைக்கு ஈரானுக்கான முன்னாள் தூதுவர் எம்.சுஹைர், ஊடகவியலாளர் லத்தீப் பாரூக், சட்டத்தரணி மாஸ் எல்.யூசுப் ஆகியோர் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவின் அறிக்கை ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் வங்குரோத்து நிலைமையை உறுதி செய்கிறது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சார்க் அங்கத்துவ நாடான ஆப்கானிஸ்தானின் அரசியல் மாற்றத்தினை அரசாங்கம் அங்கீகரித்துள்ள நிலையில் அதனை ரணில் விக்கிரமசிங்க விமர்சித்துள்ளார். ஆப்கானிஸ்தான் 43 வருட காலமாக வெளிநாட்டு ஆக்கிரமிப்பில் இருந்துள்ளது. இரு யுத்தங்கள் அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு ஆக்கிரமிப்பினால் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துள்ளது. மனிதாபிமான ரீதியில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்நிலையிலே ஆப்கானிஸ்தானின் புதிய அரசியல் மாற்றத்தினை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. என்றாலும் இதனை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் விமர்சித்துள்ளார் என மூவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆப்கானிஸ்தானில் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் தற்போது அந்நாட்டில் அதிகாரத்திலுள்ளவர்களுடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஐக்கிய தேசிய கட்சி ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்குள்ளான போது ஒரு போதும் கண்டிக்கவில்லை. மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு தொடர்பிலும் கண்டிக்கவில்லை. தற்போது ஆப்கானிஸ்தான் மக்கள் தமது நாட்டினை தங்களது கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி பாமியன் புத்தர் சிலை தாக்கப்பட்டதை மீண்டும் நினைவுபடுத்தி வெறுப்புணர்ச்சியையும் பகைமையையும் தூண்டிவிட முயற்சிக்கிறது. ஆனால் இது சாத்தியப்படாது. முஸ்லிம்களும் முஸ்லிம் நாடுகளும் பாமியன் புத்தர் சிலை சிதைக்கப்பட்டதை ஏற்கனவே கண்டித்துள்ளன.
6ஆம் நூற்றாண்டு கால இந்தச் சிலை பாகிஸ்தானில் இருந்த போது 14 நூற்றாண்டு காலமாக ஆப்கானிஸ்தானியர்களால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. அவர்களுக்கு இச்சிலை காரணமாக சுற்றுலாத் துறையினால் வருமானம் கிடைத்து வந்துள்ளது.
செப்டெம்பர் 11ஆம் திகதிய தாக்குதலுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அப்போதைய ஆப்கானிஸ்தான் தலிபானின் தலைவர் முல்லா ஓமர் தெரிவித்துள்ளார். பாமியன் தாக்குதலுக்கு முன்பு அமெரிக்காவும் ஸ்கெண்டிநேவியன் தொடர்புடைய சில வெளிநாட்டவர்களும் முல்லா ஓமரை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். சிலையின் புனர்நிர்மாணம் தொடர்பில் பேசியிருக்கிறார்கள்.
இந்த சிலை தாக்குதல் வெளிநாட்டுச் சக்திகளாலே இடம் பெற்றிருக்கிறது. ஆப்கானிஸ்தான் ஏஜன்ட் ஊடாக வெளிநாட்டு சக்திகளாலேயே இந்தச் சிலை தாக்குதல் நடாத்தப்பட்டதாக பரந்தளவில் நம்பப்படுகிறது. தலிபான்கள் மீது வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் முஸ்லிம்களையும் பௌத்தர்களையும் பிளவுபடுத்துவற்காகவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா 2001 இல் தலிபான்களை களத்தில் தோற்கடித்தமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தனது அறிக்கையில் புறக்கணித்துள்ளது. அமெரிக்கா 29.02.2020 இல் தலிபான்களுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டமையும் அறிக்கையில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
‘தலிபான்கள் யுத்தத்தில் வெற்றியீட்டியுள்ளார்கள். ஆகையால் நாம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’என ஐரோக்கிய யூனியன் ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா 1989இல் இது போன்ற நிலைமைக்குள்ளானது. அமெரிக்காவினால் இந்நிலைமைக்குள்ளானது. ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டின் கருத்து தெரிவிக்கையில், ‘வெளியிலிருந்து மேற்கொள்ளும் அந்நியர்களின் மூடத்தனமான அணுகுமுறையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
‘ஆப்கானிஸ்தான் முன்னேறுவதற்கு சர்வதேச சமூகம் ஒத்துழைக்க வேண்டும்’ என சீன வெளிவிவகார அமைச்சர் வேங்க் வை தெரிவித்துள்ளார். அடிமைத்தனத்தின் விலங்கினை ஆப்கானிஸ்தான் கழற்றியெறிய வேண்டுமென பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ், ஈரான், கட்டார் துருக்கி மற்றும் சவு+தி அரேபியா ஆகிய நாடுகள் ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்தை அங்கீகரிப்பதாக தெளிவாக குறிப்பிட்டுள்ளன.
ஆசிய நாடுகளை தொடர்ச்சியாக ஆக்கிரமிப்புச் செய்யும் வெளிநாட்டுச் சக்திகளுக்கு ஆதரவு தெரிவிப்பதில் ரணில் விக்கிரமசிங்க நேர்மையற்றவராகவே செயற்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தனது தலைவர் இரத்தம் தோய்ந்த சக்திகளின் கைப்பொம்மையாக செயற்படுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியதன் பின்பு யுத்த தளவாடங்கள் உற்பத்தியின் ஏஜன்ட்கள் அடுத்த யுத்த வலயமொன்றினைத் தேடுவார்கள்.
ஐக்கிய அமெரிக்காவின் அந்தனி பிலின்கென் மற்றும் பாதுகாப்பு செயலாளர் வொயிட் ஒஸ்டின் என்போர் தங்கள் இலக்காக கிழக்காசியாவைக் கொண்டுள்ளார்கள். இது எங்கள் வலயமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. -Vidivelli