ஏ.ஜே. காஷிபா பர்வின்
BA (Hons) in History
பேராதெனிய பல்கலைக்கழகம்
19ஆம் நூற்றாண்டில் காலனித்துவ ஆட்சிக்குள் சிக்குண்டிருந்த ஆசிய, ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தத்தம் சமயங்கள் மற்றும் கலாசாரங்களைப் புத்துயிர்ப்பிக்கும் நோக்கில் பல அறிஞர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் என பல மேதைகள் தோன்றி பங்களித்து காலத்தால் அழியாத புகழ் பெறும் வரம் பெற்றுள்ளனர். அந்த வரிசையில் 19ஆம் நூற்றாண்டின் இரு கடைத் தசாப்தங்களில் ஈழத்து இஸ்லாமிய இலக்கியத் தமிழ் வரிசையில் அறிஞர் சித்தி லெப்பை போலவே பேசவும் போற்றவும் பட வேண்டிய மேதையே அருள்வாக்கி அல்லா பிச்சை அப்துல் காதிர் புலவர் ஆவார்.
பலரும் இவர் குறித்து இவர் யார்? என கேள்வி எழுப்பும் சமகால சூழலில் அவரது நினைவு நாளான பிறந்த நாளையொட்டி இக்கட்டுரை வரையப்படுவதில் தெல்தோட்டை மீடியா குழுமம் சார்பாக பேருவகை கொள்கிறோம். ஈழத்து இஸ்லாமிய இலக்கியத்தின் கொடுமுடி என போற்றப்படும் அருள் வாக்கி அப்துல் காதிருப் புலவர் மலையகத்தின் தலை நகராய்த் திகழும் கண்டி மாநகரின் தென் திசையில் 36 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தெல்தோட்டையின் வீரபுரி எனப்படும் தற்போதைய போப்பிட்டியில் 1866 ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி அல்லாப்பிச்சை ராவுத்தர் மற்றும் ஹவ்வா எனும் இந்திய வம்சாவளி தம்பதியினரின் புதல்வராய்ப் பிறந்தார். நான்கு சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகளுடன் பிறந்த புலவர் தந்தை வழியில் இந்திய வம்சாவழியினராகவும் தாய் வழியில் வெத முகாந்திரம் மாமு நெய்னார் வைத்திய திலகத்தின் வம்சா வழியினராகவம் அடையாளம் காணப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
புலவர் தமது ஆரம்பக் கல்வியை 1870- களில் போப்பிட்டிய இஸ்லாமிய மார்க்கக் கல்வி போதிக்கும் மத்ரஸாவிலும், தமிழ் வித்தியாலயத்திலும் கற்றுத் தேர்ந்ததுடன் கண்டியிலுள்ள குயின்ஸ் எகடெமியிலும் கல்வி கற்றுள்ளதாக ஆவணச் சான்றுகள் சான்று பகர்கின்றன. 1877 முதற் கொண்டு இலக்கியத்தின் மீதிருந்த தனது காதலை வெளிப்படுத்தத் தொடங்கிய அறிஞர் 1881 களில் யாழ்ப்பாணத்தில் அருள் வாக்கி எனும் பட்டம் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார். புலவரின் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தை இனங்கண்டு கொண்ட அவரது தந்தை அ.பி ராவுத்தர் உயர்கல்விக்காக புலவரை இந்தியாவிலுள்ள திருப்பத்தூர் தமிழ் வித்தியாலயத்திற்கு அனுப்பினார். அங்கு தமிழ் இலக்கியம் கற்றுத் தேர்ந்த அருள்வாக்கி ஈழத்து இஸ்லாமிய தமிழ் உலகிற்கு அன்று முதல் பங்காற்றத் தொடங்கினார் எனலாம்.
அவ்வகையில் புலவர் குறித்த தெளிவானதும் சுருக்கமானதுமான வரலாற்றுப் பார்வையைச் செலுத்துவது சாலப் பொருத்தமாக அமையும். ஈழத்து இஸ்லாமிய இலக்கிய மரபு மற்றும் பிற இலக்கிய மரபுகளுக்கு காலனிய ஆட்சியின் 1880-–1930 வரையான கால கட்டம் மிக முக்கியமான காலகட்டமாகத் திகழ்கிறது. குறிப்பாக இக்கால கட்டத்தில் 1918 வரை தனது பணியினை அருள்வாக்கிப் புலவர் செய்துள்ளமையைக் காணலாம். முற்றிலும் இலக்கிய மரபு பேணி இலக்கியம் படைக்கும் ஆற்றலைக் கொண்டிருந்த புலவர் நவீனத்தைப் புறக்கணித்துப் பின்னர் இடைக்கால இஸ்லாமிய மரபில் உறுதியாகக் காலூன்றி நின்ற அதன் இறுதி தலைமுறையின் முக்கியமான ஆளுமையாக இஸ்லாமிய இலக்கிய மரபில் அடையாளம் காணப்படுகிறார்.
இந்த பின்புலத்தில் அருள்வாக்கி குறித்த தேடலை முன்னெடுத்துச் செல்லும் பொழுது முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப் புகழ்ந்து பாடிய காசிம் புலவரை அடியொட்டிப் பாடிய சந்தத் திருப்புகழ் அவரது இஸ்லாமிய உலகிற்கான முதல் இலக்கிய அடையாளமாக நோக்கப்படுகிறது. அதன் ஓரிரு வரிகளை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக அமையும் என நினைக்கிறேன்.
கொத்துற்றம லர்த்துற் றியகுழ
லிச்சைக்கெழு பொட்டிட் டொளிர்நுதல்
கொட்டத்தினு ரைத்துப் பரிமள முயர்சேலை….
குறிப்பாக இப்பாடல்கள் 15ஆம் நூற்றாண்டின் பின் தமிழில் மேலோங்கியிருந்த சிற்றிலக்கிய மரபிலும் அருள்வாக்கி பெற்றிருந்த ஆழ்ந்த ஞானத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
அந்த வரிசையில் தொடர்ச்சியாகவே ஈழத்து இஸ்லாமிய ஆன்மிகத்துறை மரபின் வளர்ச்சிக்கும் அருள் வாக்கியின் பங்களிப்புகள் பெருமளவில் காணப்படுகின்றன. குறிப்பாக சம காலத்தில் மேலோங்கியிருந்த சூபித்துவ ஆன்ம நெறியில் பெருமுனைப்பு காட்டியுள்ள இவர் காதிரிய்யா தரீக்கா நெறியிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததாக அறிய முடிகிறது. அதைப் பறை சாற்றும் விதமாக புலவரின் சகல நூல்களும் இஸ்லாமிய ஆன்மிகம் பற்றியதாகவும், அல்லாஹ்வையும், முஹம்மத் (ஸல்) அவர்களையும் புகழ்பவையாகவும், வலிமார்களைப் பாடுவதாகவுமே அமையப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் முக்கியமான தூண்களுள் ஒருவராகக் கொண்டாடப்படவும், நினைவு கூறப்படவும் வேண்டிய ஆளுமையே அருள்வாக்கி அப்துல் காதிருப் புலவர் என்பதை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள இந்நினைவுப் பேருரையும் களமமைத்துக் கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை எனலாம்.
மிக முக்கியமாக புலவரின் இஸ்லாமிய இலக்கியத் தொண்டுகள் சிலவற்றை அவரின் ஆளுமைக்குரிய எடுத்துக் காட்டுகளாக இக்கட்டுரையில் குறித்துக் காட்டுவது சிறப்பானதாக அமையும். அது குறித்துக் கவனம் செலுத்துகையில் தன்பீகுள் முரீதீன் எனும் புலவரின் உரைநடை நூல் இஸ்லாமிய சமூகத்தின் மீதான அக்கறைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். அதாவது 1897இல் அறிஞர் சித்தி லெப்பையின் அஷ்ரானுல் ஆலம் என்ற நூலுக்கு பலராலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட வேளை, அவற்றை மறுத்து சமூகத்தின் மறு எழுச்சி அல்லது புத்தெழுச்சியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் சித்தி லெப்பையின் இஸ்லாமியப் பணிகளுக்குத் துணை நின்றமைக்குச் சான்றாகவும் இப்புத்தகம் வரையப்பட்டதாக அறிய முடிகின்றது.
இந்நூலின் ஊடாகப் புலவர் சமகாலத்தில் இஸ்லாமிய சமூகத்தின் மத்தியில் சில முல்லாக்களால் கடுமையாகப் பின்பற்றப் பட்ட மார்க்க விடயங்கள் எனும் மூட நம்பிக்கைகளை களைந்து ஞான ஒளி பாய்ச்ச அறிஞர் சித்தி லெப்பைக்குப் பக்க பலமாக நின்று உழைத்துள்ளதையும் எம்மால் அறிய முடிகின்றது. அந்த வகையில் தன்பீகுள் முரீதீன் என்னும் நூலை இயற்றமிழ் வசன நடைக்கு மாற்ற நூலாசிரியருக்குப் புலவர் உதவியுள்ளமையானது அருள்வாக்கியின் இஸ்லாமிய ஆன்மிகக் கருத்தாடலுக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.
இஸ்லாமிய ஆன்மீகக் கவிஞனென்றும், சந்தத்திருப்புகழ் பாடிய பாவலரென்றும் அடையாளம் காணப்படும், புலவர் மலையின் புலமைச் சொத்து அருள் வாக்கியின் இஸ்லாமிய இலக்கியத் தொண்டுகள் பற்றி கலாபூஷணம் எஸ். எம். ஏ. ஹஸனின் கூற்றிலிருந்து நல்ல விளக்கமொன்றைப் பெற முடியுமாக உள்ளது.
“அதாவது தமிழ் இலக்கிய மரபில் சிறந்த தமிழ் இஸ்லாமிய இலக்கியங்களைப் படைப்பதில் தன்னிகரற்றவராகத் தன்னை அருள்வாக்கி ஆக்கிக் கொண்டார். அறபுச் சொற்களையும், இஸ்லாமிய கருத்துக்களையும் இலக்கிய அமைப்பில் புகுத்தி அறபு கவி நயத்தையும் தமிழ் உலகுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் முதன்மை பெற்று விளங்கினார். இவரால் படைக்கப்பட்ட இஸ்லாமிய இலக்கிய பிரபந்தங்களில் இதற்கான சான்றுகள் நிறையவே காணப்படுகின்றன. இவரது பாடல்கள் பலவற்றில் தேவையான இடத்தில் அறபுச்சொற்களைக் கையாண்டிருப்பதால் இஸ்லாமிய தமிழ் இலக்கிய நயத்தை உள்ளவாறே அனுபவிக்கச் செய்கிறது. அதனால் இலக்கிய நயம் எவ்வித்திலும் குறைவுபடாது இஸ்லாமிய தத்துவங்களோடு நிறைவு பெற்றுக் காணப்படுகிறது”. இக்கூற்றானது புலவரின் இஸ்லாமிய இலக்கிய பங்களிப்பின் வகிபாகத்தை செவ்வனே தெளிவூட்டுகிறது எனலாம்.
மேலும் இவர் பற்றித் தேடுகையில் காதிரிய்யா தரீக்காவில் ஈடுபாடு கொண்ட புலவர் தரீக்கா சம்பந்தமாக இடம் பெறும் நிகழ்வுகளின் போதெல்லாம் கவி பாடியுள்ளார். இதனால் இவர் கண்டி தர்ஹா வித்துவான் என்ற சிறப்புப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இது ஆன்மிக ரீதியில் புலவர்க்கு இருந்த ஆர்வத்தினை எடுத்துக் காட்டுகிறது. அதே சமயம் இஸ்லாமிய கல்வி மேம்பாட்டினை முதலாகக் கொண்டு திண்ணைப் பள்ளிக் கூடம் ஒன்றையும் கொண்டு நடத்தியுள்ளார். இது சமூகத்தின் மீதான அவரது அக்கறை மற்றும் ஏனையோருடன் அவர் நெருங்கிப் பழகியமை, போன்றவற்றிற்கு ஆதாரமாகக் காணப்படுகிறது எனலாம்.
குறிப்பாக புலவரால் ஆரம்பிக்கப்பட்ட அத்திண்ணைப் பள்ளிகூடமே வித்துவதீப மகா வித்தியாலயமாகவும், இன்று க/எனசல்கொல்ல முஸ்லிம் மத்திய கல்லூரியாகவும் தரமுயர்த்தப்பட்டுள்ளது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. அந்தவகையில் புலவரால் விதையிடப்பட்டதே தெல்தோட்டையின் கல்வி அச்சாணி என்பதும் அது இன்று அப்பிரதேசத்தில் பல்லாயிரம் ஆசிரிய பெருமக்கள், அதிபர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என நீண்டு செல்லும் கல்வியலாளர்களையும், அதற்காக முன்னின்று உழைப்பவர்களையும் தோற்றுவித்துள்ளது எனலாம். அந்தப் பெருமையின் ஆரம்ப கர்த்தா வித்துவதீபம் அ.பி. அப்துல்காதிர் ஆவார்.
புலவரைப் பற்றி பேசுகையில், அவரது இலக்கிய தொண்டுகளுக்கு கிடைத்த பட்டங்களையும் குறிப்பிட்டாக வேண்டும். எடுத்துக்காட்டுகளாக ஞான வெண்பாப் புவிப்பாவலர், வித்துவசிரோமணி, கவி ராஜசேகரம், பிரபந்த ரத்னாகரம், சமூக வித்துவான், கவிவாணை, மெய்ஞான அருள்வாக்கி, வித்துவ தீபம், காந்த கவிராயர், தர்ஹா வித்துவான், நாவலர், திவ்யகவி நாவலர், அட்டாவதானி என பல பெயர்களால் கௌரவிக்கப்பட்ட பாவலர் ஈழத்து இஸ்லாமிய இலக்கியத்தின் கொடுமுடி என கொண்டாடப்படுவதில் ஆச்சரியமில்லை.
இன்னும் புலவரின் இஸ்லாமிய இலக்கிய தொண்டுகள் குறித்து அவரது ஒவ்வொரு படைப்புகளில் இருந்தும் உதாரணம் காட்ட முடியும். அவற்றில் சிலதை இங்கு விளக்கத்திற்கு எடுத்துக் கொள்வோமாயின், “முஹிய்யத்தீன் ஆண்டகை காரணப்பிள்ளைத் தமிழ்” (1895) எனும் நூலானது குத்துபு நாயகம் முஹிய்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி குறித்து பேசுகிறது. இது காதிரியா தரீக்கா மீது புலவரின் ஈடுபாட்டை பறைசாற்றுவதாகவும் அமையப்பெற்றுள்ளது. இதேயமைப்பில் பாடப்பட்ட பிறிதொரு நூலாக “பேரின்ப ரஞ்சிதமாலை” (1899) எனும் நூலும் காணப்படுகின்றது. இவ்வாறாக ஆன்மீகம் சார்ந்து புலவரால் பாடப்பட்ட கவிகள் ஈழத்து இஸ்லாமியரின் இலக்கிய அடையாளங்களாக இன்றும் இலக்கிய உலகில் பேசப்படுகின்றமை முக்கியமானதாகும்.
……பலரது தீராத நோய்களைத் தீர்த்து வைத்துள்ளாரெனவும் கூறுவர். …….தமிழில் எல்லா சந்தங்களிலும் கவிதை புனைந்த இவர் அறபுச் சந்தத்திலும் கவிதை இயற்றியுள்ளமை போற்றுதற்குரிய செயலாகும்.”
அடுத்து புலவரின் இஸ்லாமிய இலக்கிய படைப்புகளில் “பிரபந்த பஞ்சம்” எனும் நூல் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் புலவரின் ஆறு நூல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்நூலே புலவருக்கான இஸ்லாமிய இலக்கிய உலகின் அடையாளத்தை தூக்கி நிறுத்தியது எனலாம். அந்த வகையில் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள நூல்களாக “அடைக்கலமாலை” (அல்லாஹ்வின் சிறப்புகளை கூறி அடைக்கலம் தேடுதல்), “முனாஜாத்து” (முஹம்மத் நபியின் பெயரில் பாடப்பட்டுள்ளது.) “என் கலை வண்ணம்” (முஹம்மத் நபியின் பெயரில் பாடப்பட்டுள்ளது.) “எண்கலை வன்மெல்லிசை வண்ணம்” (முஹிய்யத்தீன் ஆண்டகை பற்றி பாடப்பட்டுள்ளது.), “கண்டி பதிற்றுப்பத்தந்தாதி” (கண்டி மீராமக்கம் தர்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள செய்ஹு சிஹாபுத்தீன் வலியுல்லாஹ் பெயரில் பாடப்பட்டுள்ளது.) “அருள் மணிமாலை” (கண்டி சிஹாபுத்தீன் வலியுல்லாஹ் பற்றி பாடப்பட்டுள்ளது.) இவ்வாறாக பல்வேறு இலக்கிய சான்றுகளை இஸ்லாமிய உலகுக்கு பரிசளித்த புலவர் உலக தீபம், முத்தமிழ்ச் சிங்கம், கலைவல்லோன், கல்விக்கடல் போன்ற இன்னும் சில சிறப்புப் பெயர்களாலும் கொண்டாடப்பட்டுள்ளமை ஈழத்து இஸ்லாமிய இலக்கிய மரபில் அவர் கொண்டாடப்பட வேண்டிய அவசியத்தை மீளமீள வலியுறுத்துவதாக அமையப் பெற்றுள்ளது எனலாம்.
இது தவிர பிற படைப்புகளில் சிறப்புப்பாயிரம், சாற்றுக்கவி, சிறப்புக்கவி என்பனவும் முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் கண்டி கலப்பகம் (1909), காட்டுபாவா சாகிபு கும்மி (1905) போன்றனவும் முக்கியம் பெறுகின்றன. இவையனைத்தும் இலங்கை சூபித்துவத்தினதும் சூபி இலக்கியத்தினதும் வளர்ச்சி நிலையின் ஓர் அங்கமாக பார்க்கப்படுகின்ற அதேசமயம் இஸ்லாமிய இலக்கிய மரபில் புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தவையாகவும் காணப்படுகின்றன.
இவ்வாறாக ஈழத்து இஸ்லாமிய இலக்கிய மரபின் அச்சாணியாக திகழ்ந்த மெய்ஞான அருள்வாக்கி அல்லாபிச்சை ராவுத்தர் அப்துல் காதிர் புலவர் 1918.09.23 ஆம் திகதி கண்டியில் இறப்பெய்தினார். இறப்பெய்தி நூற்றாண்டுகள் கடந்தாலும் அவரது இலக்கிய சேவை இலக்கியம் உள்ளவரை வாழும் எனும் அளவிற்கு அவர் ஆற்றிய பணிகள் ஏராளம் கொட்டிக் கிடக்கின்றன. குறிப்பாக 1894 –1918 வரை புலவர் பல நூல்களுக்கு சிறப்புப்பாயிரங்களையும், வாழ்த்துக் கவிளையும், சாற்றுக் கவிகளையும் வழங்கி ஈழத்திலும், இந்தியாவிலும் பரந்துபட்ட அறிஞர்கள் மத்தியில் தனக்கென ஓர் அழியாத இடத்தைப் பெற்றுக்கொண்டார். எவ்வாறாயினும் அருள்வாக்கி குறித்த முழுமையான வரலாறு இன்றுவரை ஆவணமாக்கல் செயன்முறைக்கு உள்வாங்கப்படாமை இஸ்லாமிய இலக்கிய மரபில் ஓர் இடைவெளியை தோற்றுவித்துள்ளது. அதனை செப்பனிட்டு பூரணப்படுத்தி எமது சமூக இலக்கியக் கூறுகளை இலக்கிய உலகுக்கு பரிசளிக்க வேண்டியது தெல்தோட்டை வாழ் கல்வியலாளர்களுக்கு மாத்திரமன்றி ஈழத்து இஸ்லாமிய சமூகத்தினர் மீதுமுள்ள மீதுள்ள கடமையாகும். குறிப்பாக வித்துவதீபம் குறித்த ஆய்வு செயன்முறைகள் முன்னெடுக்கப்படுவதன் ஊடாக அருள்வாக்கி தொடர்புடைய வெளிக்கொண்டுவரப்படாத படைப்புகளும், பதிவுகளும் இலக்கிய உலகுக்கு புதுவெளிச்சம் கொண்டுவரலாம்.
ஏனெனில் இன்று அருள்வாக்கி குறித்து பலருக்கு தெரியாதுள்ளது. அவரது நூல்கள் பல அழிந்துவிட்டன. சில மூல நூல்களே கிடைக்காதுள்ளன. இது ஒரு புலமையை தெரிந்தே ஓர் சமூகம் தவற விடுவது போன்றதாகும். இதற்கு ஈழத்தின் இலக்கிய ஆர்வலர்களும் முன்னின்று செயலாற்றி தேசிய நீரோட்டத்திலிருந்து இதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை சமூகம் சார்ந்து முன்னெடுக்க வேண்டும்.
சூபித்துவ அறிஞர் என்ற நோக்கில் இயக்க பேதங்களை இங்கு திணியாது, சமூகத்தின் ஆளுமை என்ற நோக்கில் அவரது வகிபாகம் சகலராலும் கொண்டாடப்பட வேண்டும். அது குறித்த விழிப்புணர்வுகள் செய்யப்படவேண்டும். அதனூடாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கு பெருந்தொண்டாற்றிய இலக்கிய கொடுமுடி, அட்டாவதானி அருள்வாக்கி குறித்து சமூகத்தின் வரும் தலைமுறையினருக்கும் ஓர் நற்செய்தியை வழங்க முடியுமாக இருக்கும். இன்ஷா அல்லாஹ்
இவ்வாறான ஓர் வரலாற்றுப் பின்புலத்தில் நிமிட வித்துவான் அருள்வாக்கியின் நினைவுப் பேருரையை ஏற்பாடு செய்திருக்கும் தெல்தோட்டை ஊடக மன்றத்தின் முயற்சிகள் பாராட்டவும், வரவேற்கவும் தக்கவை. தொடர்ந்தும் காத்திரமான பணிகள் முன்னெடுக்கப்படுவதனூடாக அருள்வாக்கியை பரிசளித்த மண்ணுக்கு இன்னும் பல பரிசுகள் கிடைக்க துணைகிட்ட முடியும் என்ற பிரார்த்தனையுடன் அருள்வாக்கி குறித்த இப்பத்திக்கு முற்றிடுகின்றேன்.-Vidivelli