அம்பாறையில் கடும் மழை: அட்டாளைச்சேனையில் 125 குடும்பங்கள் இடம்பெயர்வு

0 618

அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழையினால் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 125 குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழையினால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தாழ்ந்த குடியிருப்பு பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சனிக்கிழமை (08) முதல் காற்றுடன் கூடிய கனத்த மழை பெய்து வருவதனால் குளங்கள், ஆறுகள், களப்புகள் என்பன வெள்ள நீர் நிறைந்து எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

இடைவிடாத தொடர்மழையினால் பல்லாயிரக்கணக்கான நெற்பயிர்ச் செய்கைக் காணிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன் சேனநாயக்க சமுத்திரத்தின் வலதுகரை வாய்க்கால் கழியோடை ஆற்றின் வான் கதவுகள் அனைத்தும் திறந்து விடப்பட்டு நீர்பீரிட்டு பாய்ந்து செல்வதை அவதானிக்க முடிந்தது.

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, திராய்க்கேணிக் கிராமம் மற்றும் ஒலுவில் முதலாம் மற்றும் 02ஆம் கிராமங்கள், பாலமுனை ஸகாத் கிராமம் ஆகியவற்றில் வெள்ளநீர் நிரம்பி குடியிருப்பு வீடுகளில் புகுந்துள்ளதனால் 125 குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகள் மற்றும் பொது இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளன.

திராய்க்கேணி கிராம மக்கள் மாரியம்மன் கோவிலிலும், திராய்க்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், ஸகாத் நகர் மக்கள் ஸக்காத் நகர் பள்ளி வாசலிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.

தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை கிராம சேவகருடன் பிரதேச செயலாளர் லியாகத் அலி மற்றும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.ஸியாத், இராணுவத்தினர் பார்வையிட்டுச் சென்றுள்ளதுடன் அவர்களுக்கான உலருணவுப் பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ந்தும் இக்காலநிலை நீடிப்பதற்கான அறிகுறிகள் இருப்பதால் மேலும் இடம்பெயாந்து செல்வதற்கான சாத்தியங்கள் உள்ளதால் அவ்வாறு இடம்பெயர்ந்து செல்பவர்களுக்கான தங்குமிடம் மற்றும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதனால் தம்பிலுவில் பிரதான வீதிக்கு அருகிலிருந்த பாரிய ஆலமரம் வீதிக்கு குறுக்காக இன்று காலை வீழ்ந்துள்ளது. இதனால் அக்கரைப்பற்று – பொத்துவிலுக்கான பிரதான வீதியூடான போக்குவரத்து பல மணி நேரம் தடைப்பட்டிருந்ததுடன் மின்சார கம்பிகளும் துண்டிக்கப்பட்டு மின்சாரமும் தடைப்பட்டிருந்தது.  மின்சார சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் துரித நடவடிக்கையை அடுத்து போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.

சீரற்ற காலநிலையை அடுத்து ஏற்படக்கூடிய அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்கக் கூடிய வகையில் மின்சாரம், குடிநீர், வைத்திய சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை தங்கு தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் முப்படையினரும், பொலிஸார் மற்றும் அரசாங்க அதிகாரிகள் தயார்நிலையில் உள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் கே. எம். எல். பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.