கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானிய வல்லரசு, இருபதாம் நூற்றாண்டில் சோவியத் வல்லரசு, இருபத்தோராம் நூற்றாண்டில் அமெரிக்க வல்லரசு என்றவாறு மூன்று தற்கால வல்லரசுகள் தமது ஏகாதிபத்தியத்தை வளர்ப்பதற்காக ஆப்கானிஸ்தானைக் கட்டியாள நினைத்தன. அவை மூன்றுக்கும் அந்த நாடு ஒரு மயானபூமியாக மாறியதையே வரலாறு உணர்த்துகிறது.
திட்டமிட்டுச் சோடிக்கப்பட்ட ஆதாரங்களை உலகுக்குக் காட்டி ஏமாற்றி 2001இல் அமெரிக்க வல்லரசு அதன் நேசநாடுகளுடன் கைகோர்த்து ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும் கைப்பற்றி, முதலாவதை தலிபான்களின் பயங்கரவாத இஸ்லாமிய ஆட்சியிலிருந்தும் இரண்டாவதை சதாம் ஹூசைனின் சர்வாதிகார ஆட்சியிலிருந்தும் விடுதலையாக்கி, மக்களுக்கு ஜனநாயக சுதந்திரத்தை வழங்கி, ஆப்கானியப் பெண்ணினத்தின் அடிமைத் தளைகளையும் நீக்கி, இரு நாடுகளையும் பொருளாதார வளர்ச்சிப் பாதையில் நடைபோடச் செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ் பறையடித்ததை உலகு மறந்திருக்காது. 2003 வைகாசி மாதம் முதலாம் திகதியன்று அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பலொன்றின் மேற்தளத்தில் நின்று கொண்டு அதே ஜனாதிபதி எங்கள் ”தூது முடிவடைந்துவிட்டது” என்று அவசரப்பட்டு அறிவித்ததையும் மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். அதன் பிறகுதானே ஈராக் ஒரு கொலைக்களமாக மாறியது? 2011இல் அமெரிக்கத் துருப்புகள் ஈராக்கைவிட்டு வெளியேறினாலும் இன்றுவரை அங்கே அரசியல் அமைதி இல்லை என்பதைத்தானே செய்திகள் உறுதிப்படுத்துகின்றன? கடந்த இருபது வருடங்களாக ஆப்கானிஸ்தானிலும் அரசியல் சதுரங்க ஆட்டம் ஆடி இன்று தலிபான்களால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் 2001இல் தலிபான்களை விரட்டியடித்தபின் தேர்தல்கள் நடைபெற்றதும் அமெரிக்கப் பொம்மைகள் அங்கே தலைவர்களானதும் தலை நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பெண்கள் சுதந்திரமாக நடமாடியதும் கல்வியில் ஈடுபட்டதும் யாவரும் அறிந்த விடயங்களே. ஆனாலும் அத்தலைவர்களால் முழு நாட்டையும் கட்டியாள முடியவில்லை. தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் எல்லைப் புறங்களில் ஒதுங்கியிருந்து கொரில்லா யுத்தம் நடத்திக் கொண்டே இருந்தனர். அதனால் அந்நாட்டின் பொம்மை ஜனாதிபதிகள் காபுலின் மேயர்களாகவே இன்றுவரை செயற்பட்டுவந்தனர். அவர்களின் ஆட்சி தலைநகருக்கும் மற்றும் சில மாகாணங்களுக்கும் அப்பால் செல்லுபடியாகவில்லை. இருபது வருடங்களாக நடைபெற்ற இந்த அமெரிக்க நாடகத்தால் மூன்று திரில்லியன் டொலர்களையும் (3,000 000 000 000) சுமார் 2400 படைவீரர்களையும் அமெரிக்கா இழந்துள்ளது. பொருளாதார ரீதியாக நலிவடைந்துவரும் அமெரிக்க வல்லரசு இனியும் ஆப்கானிஸ்தானில் இருப்பதால் மேலும் இழப்புகளைச் சந்திக்கவேண்டிவரும் என்று நினைத்ததால் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்து ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை அமெரிக்கா இதுவரை பயிற்றுவித்த ஆப்கானியப் படைகளிடமே ஒப்படைக்கவும் முடிவுசெய்தார். இது ஏற்கனவே முன்னைய ஜனாதிபதி டொனல்டு ட்ரம்ப் எடுத்த முடிவு. அதை செயற்படுத்தியுள்ளார் பைடன். இதைத்தான் தலிபான்களும் இத்தனை ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். 1969இல் தப்பினோம் பிழைத்தோம் என்று எவ்வாறு அமெரிக்கப்படைகளும் அவர்களின் ஆதரவாளர்களும் வியட்னாமைவிட்டு வெளியேறினார்களோ அவ்வாறான ஒரு வெளியேற்றமே இப்போது ஆப்கானிஸ்தானிலும் நடைபெற்றுள்ளது. தலிபான்களின் ஒரு புதிய சந்ததியின் கைகளுக்குள் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தான் பாலையாகுமா பசுந்தரையாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதற்கு முன்னர், அதாவது 1996 தொடக்கம் 2001 வரை, தலிபான்கள் ஆண்டபோது இஸ்லாமிய ஆட்சி என்ற பெயரில் கடைப்பிடித்த கொள்கைகள உலகே அறியும். ஷரியத் சட்டத்தை நிலை நாட்டுகிறோம் என்று கூறிக்கொண்டு உலகுக்குக் காட்டிய பகிரங்க தூக்கு மேடைகளும், கசையடிகளும், கல்லெறியும் தண்டனைகளும் இஸ்லாத்தைப்பற்றிய ஒரு தவறான அபிப்பிராயாத்தை வளர்த்தது என்பதை மறுக்க முடியுமா? அவர்களுடைய ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண்களின் சிறைகூடமாக அமைந்ததையுந்தான் மறுக்க முடியுமா? சுருக்கமாகச் சொன்னால் அது ஓர் முழுக்கமுழுக்க வைதீகத்தில் மூழ்கிய முல்லாக்களின் ஆட்சியாக அமைந்து திக்குத் தெரியாது தடுமாறியது. அங்கே புஷ்துன் இனத்தவர்களைத் தவிர மற்ற இனங்களெல்லாம் தலிபான்களின் வெறுப்புக்கு ஆளாகித் துன்புறுத்தப்பட்டன. எனவே இந்த ஆட்சியும் மீண்டும் அதே கொள்கைகளைத்தான் கடைப்பிடிக்குமென அவதானிகள் பலர் கணிப்பிடுகின்றனர். ஆனால் அது ஒரு தப்பான கணிப்பீடெனக் கருதவும் இடமுண்டு.
அமெரிக்க ஆதரவிலே கட்டாரின் டோகா நகரிலே நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளிற் கலந்துகொண்ட தலிபான் பிரதிநிதிகள் தங்களை மிதவாதிகள் என அடையாளப்படுத்தினர். இன்று அரசியல் அவதானிகளை எதிர்நோக்கும் ஒரே கேள்வி தலிபான்களின் இரண்டாவது ஆட்சி மிதவாதிகளின் கைகளில் இருக்குமா தீவிரவாதிகளின் கைகளில் இருக்குமா என்பதுதான். தீவிரவாதிகளின் கைகளுக்குச் செல்லுமானால் அது உலகின் பல பாகங்களிலும் குமுறிக்கொண்டு செயற்படும் அல் கையிதா, ஜமாஅத் இஸ்லாமிய்யா, போகோ ஹொறாம், ஐசிஸ் போன்ற இயக்கங்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும். அத்தீவிரவாதிகளுட் சிலர் தலிபான்களின் தற்போதைய போராட்டத்திலும் கலந்து கொண்டிருப்பார்களெனவும் நம்ப இடமுண்டு. எனவே ஆப்கானிஸ்தானின் அரசு தலிபான் தீவிரவாதிகளின் கைகளுக்குச் செல்லுமானால் அந்த நாடு உலக இஸ்லாமிய தீவிரவாதத்தின் தாயகமாகவும் மாறலாம். அவ்வாறு மாறினால் கானல் நீரான கிலாபத்தைத் தேடிப் பல ஜிஹாதுக் கும்பல்கள் முஸ்லிம் நாடுகளுக்குள் தோன்றலாம். அது இன்னுமொரு குருதிபடிந்த அத்தியாயத்தை உலக வரலாற்றில் தோற்றுவிக்க இடமுண்டு. இந்தப் பயம் வெறும் கற்பனையல்ல, சாத்தியப்படக்கூடிய ஒன்று. முஸ்லிம் நாடுகளின் அரசியலைக் கூர்ந்து அவதானிப்போருக்கு இது புலப்படும்.
ஆனால் முதலாவது ஆட்சியை நிறுவிய தலிபான்களின் சந்ததிக்கும் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஆட்சியேறியுள்ள சந்ததிக்குமிடையே சிந்தனைப் புரட்சி ஒன்று ஏற்பட்டு கட்டாரிலே சொன்னதுபோல் மிதவாதக் குழுவொன்று தலிபான்களின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றி இருக்குமா? அவ்வாறான ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்பதை ஒரு சம்பவம் சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்கப் படைகள் வெளியேறப்போவதை அறிந்த சீனா காலம் தாழ்த்தாது தலிபான் தலைமையுடன் கைகோர்க்கத் தொடங்கியுள்ளது. தலிபானும் சீனத் தலைவன் சீ ஜின்பிங்கை ”வரவேற்கத்தக்க நண்பன்” என அழைத்துள்ளது. இந்த நிகழ்வை எவ்வாறு எடைபோடலாம்?
சீனாவின் ராஜதந்திரத்துக்கும் அமெரிக்காவின் ராஜதந்திரத்துக்கும் இடையே ஒரு முக்கிய வேறுபாடுண்டு. சீனா மற்ற நாடுகளின் உள்நாட்டு அரசியலிலும் பிரச்சினைகளிலும் தலையிடுவதில்லை. அமெரிக்காவோ ஜனநாயக ஆட்சி, அரசியல் சுதந்திரம், மனித உரிமைகள் போன்ற அம்சங்களை வலியுறுத்தி மற்ற நாடுகளுடனான உறவினை வலுவாக்கும் அல்லது குறைக்கும். தலிபான்களின் தலைமைத்துவம் தீவிரவாதிகளின் கைகளிலேதான் இருக்குமென்றால், அவர்கள் இஸ்லாமிய ஆட்சியை ஆப்கானிஸ்தானில் நிறுவி அவ்வாறான ஓர் ஆட்சியையே உலகின் ஏனைய முஸ்லிம் நாடுகளும் சமூகங்களும் அடைவதற்குப் பாடுபடுவர். அவ்வாறாயின் இன்று சீ பிங் தலைமையிலான சீனா அங்கு வாழும் உய்கர் முஸ்லிம்களின் இஸ்லாத்தையும் முஸ்லிம் கலாசாரத்தையும் அழித்து இனஒழிப்புச் செய்வதை மறந்து அத்தலைவனுடன் கைகோர்த்து அவரை வரவேற்க வேண்டிய நண்பன் எனக் கூறுவதை எவ்வாறு சரிகாணலாம்? அதற்கு மாறாக, அந்தக் கைகோர்ப்பு சீனாவை நோக்கி, நாங்களும் உங்கள் உள்நாட்டு விவகாரங்களிற் தலையிடமாட்டோம், நீங்களும் எங்கள் உள்நாட்டு விவகாரங்களிற் தலையிடவேண்டாம், இருவரும் நமக்கிடையே உள்ள பரஸ்பர நலன்களைப் பெருக்குவோம் என்று ராஜதந்திரத்துடன் கூறியதுபோல் தெரியவில்லையா? இவ்வாறு நோக்கும்போது தலிபானின் அரசியலில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அது காட்டவில்லையா? சவூதி அரேபியா உட்பட எத்தனையோ முஸ்லிம் நாடுகள் சீனாவுடனான பொருளாதார உறவை வளர்ப்பதற்காக உய்கர் முஸ்லிம்களைப் பலியாக்கியதுபோல் தலிபானும் ஏன் பலியாக்கக் கூடாது? இது அவர்களின் அரசியல் சிந்தனையில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்தவில்லையா? என்னும், மிதவாதம் நோக்கிய அந்த மாற்றம் ஏனைய முஸ்லிம் தீவிரவாத இயக்கங்களை தலிபானின் எதிரிகளாக மாற்றவும் கூடும். அது மிதவாத தலிபான்களுக்கு உலக அரங்கில் ஆதரவு தேட ஓர் அரிய வாய்ப்பையும் அளிக்கும்.
மேலும், தலிபான் தலைவரொருவர் அண்மையில் அளித்த பேட்டியொன்றில் அவர்களது புதிய ஆட்சி பெண்களின் கல்விக்குத் தடைவிதிக்காதென்றும் பெண்கள் தொழில்களில் ஈடுபடுவதையும் தடுக்காதென்றும் கூறியுள்ளார். இது வரவேற்கவேண்டிய ஒரு செய்தி. இருபது வருடங்களாக அரசியல் அஞ்ஞானவாசம் அனுஷ்டித்த தலிபான்கள் மிதவாதிகளாக மாறிவிட்டனர் எனவும் நம்பத் தோன்றுகிறது. ஆனால் தலிபான்கள் எல்லாருமே மிதவாதிகளாகி விட்டார்களா? அம்மிதவாதிகளின் பலம் எத்தகையது? தீவிரவாதத் தலிபான்களும் அங்கே இருப்பின் அது அதிகாரச் சண்டையொன்றுக்கு வழிவகுக்காதா? அதனாலேதான் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் புதிய ஆட்சியில் பாலையாகுமா பசுந்தரையாகுமா என்பதையெல்லாம் இப்போது திட்டவட்டமாகக் கூறமுடியாமல் இருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. காலம் நோய் தீர்க்கும் ஒரு சிறந்த பரிகாரி. தலிபான்கள் அவர்களின் முதலாவது ஆட்சியில் அடைந்த கசப்பான அனுபவங்கள் அவர்களுக்குப் பல பாடங்களை கற்பித்திருக்கலாம். உலகத்தைப் பகைத்துக்கொண்டு எந்த ஒரு ஆட்சியாளனும் ஒரு நாட்டை ஆளமுடியாதென்பதை அவர்கள் உணர்ந்திருப்பர். ஆப்கானிஸ்தான் செழிப்பதற்கு பணவருவாயும், தொழில்நுட்பத்திறனும், ஆண்பெண் அனைவரின் உழைப்பும் அவசியம். இவற்றையெல்லாம் ஆயுதங்களைக்கொண்ட அடக்குமுறை ஆட்சியால் பெற்றுவிட முடியாது. இதை தலிபான்கள் உணர்ந்திருப்பார்களானால் ஆப்கானிஸ்தானுக்கு ஒரு அமைதியான எதிர்காலம் உண்டெனக் கருதலாம். எனவே அவசரப்பட்டு அவர்களின் ஆட்சியை யாரும் எடைபோடுவதைத் தவிர்த்தல் ஆப்கானிஸ்தானுக்கும் நல்லது, வெளி உலகுக்கும் நல்லது.
இவற்றையெல்லாம்விட இன்னுமொரு பிரச்சினையே தலிபான்-சீன நட்பின் விளைவாக உலக ராஜதந்திர அரங்கில் முக்கியத்துவம் பெறும். அது இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஏற்கனவே ஆப்கானிஸ்தானுடன் பொருளாதரத் தொடர்புகளை சீனா வளர்த்திருந்த போதிலும், அமெரிக்கா வெளியேறியவுடன் தலிபான்களுடன் தோழமை பூண்டு அந்நாட்டின் பொருளாதாரத் துறையில் தனது கால்களை ஆழமாகப் பதிப்பதற்கு சீனாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்மூலம் புதிய பட்டுப்பாதை வழியாக உருவாக்கப்பட்ட சீன-–பாகிஸ்தான் பொருளாதாரத் தாழ்வாரத்துக்குள் ஆப்கானிஸ்தானையும் சேர்க்க சீனா தயங்காது. ஏற்கனவே இலங்கை அதனுள் உள்வாங்கப்பட்டுள்ளமைக்கு சீனா உருவாக்கிய கொழும்புத் துறைமுக நகர் ஓர் எடுத்துக்காட்டு. இந்த மாற்றங்களைப் புவிசார் அரசியல் ரீதியாகவோ ராஜதந்திர ரீதியாகவோ நோக்கினால் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், வங்காளதேசம், இலங்கை ஆகிய நாடுகளுக்குள் தனது செல்வாக்கை ஆழமாக்கி, ஆசியாவில் தனக்கு ஒரு சவாலாக வளரும் இந்தியாவை சீனா சுற்றிவளைக்கின்றதை உணரலாம் அல்லவா? எற்கனவே ஈரானுடன் உள்ள உறவை முறித்துக்கொண்ட அமெரிக்கா ஆப்கானிஸ்தானையும் இப்போது இழந்துள்ளதால் தனது நண்பனான இந்தியாவின் பிராந்திய நலன்களை எவ்வாறு பாதுகாத்து அதேசமயம் இந்து சமுத்திரத்தில் தனது பலத்தையும் எவ்வாறு நிலைநாட்டுவது என்பது பற்றியே உலக அரங்கில் மேற்கத்திய நட்பு நாடுகளுடன் அமெரிக்கா கலந்தாலோசிக்கும். அதன் விளைவாக அமெரிக்காவின் ராஜதந்திர ராடருக்குள் இலங்கை மீண்டும் இழுக்கப்பட்டுக் கண்காணிக்கப்படும். இன்று இலங்கை அரசு தன்னிச்சையாகச் சீனாவுடன் தேன் நிலவு கொண்டாடுவது இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதைத் தடுக்கமுடியாது. அவற்றைத் தவிர்ப்பதற்காக ராஜபக்ச அரசு பல முயற்சிகளை இப்போது எடுத்துள்ளது. இதனைப்பற்றி அடுத்த கட்டுரை ஆராயும்.
இந்தக்கட்டுரை ஒன்றை மட்டும் வலியுறுத்த விரும்புகிறது. எவ்வாறு ரோஹண விஜேவீரவின் அன்றைய தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணிக்கும் இன்று அதன் அவதாரமாக விளங்கும் அனுர குமார திசநாயக்காவின் மிதவாத மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையே வேறுபாடுண்டோ அவ்வாறான ஒரு வேறுபாட்டை தலிபான்களின் இரு சந்ததிகளிடையேயும் எதிர்பார்க்க வேண்டும். எனவே இரண்டாவது தலிபான் ஆட்சியைப்பற்றி எந்த முடிவுக்கும் இப்போது நாம் வந்துவிடக்கூடாது.- Vidivelli