தடுப்பூசி ஏற்றாதவர்களின் தரவுகளை பள்ளிவாசல்கள் மூலம் திரட்ட திட்டம்
வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொவிட் 19 தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் முஸ்லிம் சமூகம் அக்கறை காட்டுவது போதாது என கொவிட் 19 தடுப்பு செயலணி சுகாதார அதிகாரிகள், பிரதேச, மாவட்ட செயலாளர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் இனங்கண்டுள்ள நிலையில் அவ் அதிகாரிகள் இது தொடர்பில் வக்பு சபையின் ஒத்துழைப்பினைக் கோரியுள்ளனர்.
முஸ்லிம் சமூகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோரில் அதிகமானோர் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் ஆர்வம் காட்டாததால் அவ்வாறானவர்களின் தரவுகள் தற்போது நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் மூலம் திரட்டப்பட்டு வருவதாக வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதை பூரணப்படுத்த வேண்டும் என அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலம் இவ்விபரங்கள் தற்போது திரட்டப்பட்டு வருகின்றது. பள்ளிவாசல்கள் மூலம் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஊடாக திரட்டப்பட்டுவரும் இப்பணிக்கு பள்ளிவாசல் நிர்வாகங்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமெனவும் வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.-Vidivelli