எம்.ஏ.எம். அஹ்ஸன்
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மரணம் முழு இலங்கையையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்பதை அறிவோம். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்காக நீதியான முறையில் குரல் கொடுக்க என்றுமே தவறாத மங்களவின் மரணம் பெரும்பான்மை சிறுபான்மை என அனைத்து மக்களுக்கும் பாரியதொரு இழப்பு. ஏறத்தாள நான்கு தசாப்த அரசியல் அனுபவம் கொண்ட மங்கள தனது அரசியல் இருப்புஇ செல்வாக்கு என்பவற்றையெல்லாம் இரண்டாம் பட்சமாக வைத்துவிட்டு எல்லா இன மக்களையும் நீதியான முறையிலும் பன்மைத்துவ சிந்தனையிலுமே அணுகியிருந்தார். தனது 65 ஆவது வயதில் கொவிட் 19 தொற்று ஏற்பட்டு இந்த உலகை விட்டுப் பிரிந்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இறுதியாக கடந்த நல்லாட்சியில் நிதி மற்றும் வெளிநாட்டு விவகார அமைச்சராக பதவி வகித்திருந்தார். 1983 இல் மாத்தறை மாவட்டத்திலிருந்து இலங்கை சுதந்திரக்கட்சியின் பிரதம ஒருங்கிணைப்பாளராக அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டி பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார். 1994 தொடக்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு அமைச்சுப்பதவிகளில் இருந்துள்ளார். 2010 இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்ட மங்கள இறுதியாக நிதி மற்றும் வெளிநாட்டு விவகார அமைச்சராக பதவி வகித்திருந்தார்.
2020 இல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து தேர்தலில் போட்டியிடத் தயாராகியபோதும் தவிர்க்க முடியாத காரணங்களால் தேர்தல் போட்டியில் இருந்து விலகிக்கொண்டார். இனிமேல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கருத்து தெரிவித்த அவர் நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கி ‘தூய தேசப்பற்றாளர்கள்’ எனும் அமைப்பை உருவாக்கி அதனுரடாக அரசியல் மற்றும் சிவில் சமூக செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார்.
இலங்கை முஸ்லிம்கள் மீது அதிக கவனம் செலுத்தினார் என்பதை விட அவர்கள் மீது தீராத அன்பு செலுத்தினார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். பெரும்பான்மை மக்களிடம் தனது செல்வாக்கு கேள்விக்குறியாகும் என்பதை துச்சமாக மதித்து “இலங்கை ஒரு பௌத்த நாடு அல்லஇ இது ஒரு பண்மைத்துவ நாடுஇ இங்கே முஸ்லிம்கள் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்கிறார்கள், முஸ்லிம்களை மோசமானவர்கள் என்று சித்திரித்தே நல்லாட்சி கவிழ்க்கப்பட்டது” என்றெல்லாம் தைரியமாக பேசியிருக்கிறார். கட்டாய தகனத்திற்கு எதிராக குரல் கொடுத்தார். தனியார் வங்கி ஒன்றில் முஸ்லிம் பெண்களின் ஆடை சுதந்திரம் கேள்விக்குறியானபோது குறித்த வங்கியிலிருந்த தனது கணக்கை முடக்கிக்கொண்டார். முஸ்லிம்களின் எல்லா பண்டிகைகளையும் தனது பண்டிகையாக கொண்டாடுவார். இன்று அவர் இல்லை என்பது பாரியதொரு இழப்பாக இருக்கிறது.
இளைய அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டு
இன, மத, கட்சி பேதம் என்று எதுவும் இன்றி நல்ல விடயங்களை வரவேற்கும் பண்பினை மங்கள கொண்டிருந்தார். அது மங்களவின் தனித்துவம் என்றே சொல்ல வேண்டும். இலங்கையில் அனைவருக்கும் சம அளவில் மரியாதை கிடைக்க வேண்டும் என்பதையே இலட்சியமாக கொண்ட அவருக்கு தனிப்பட்ட வாழ்க்கை இலட்சியம் என்று எதுவும் இருக்கவில்லை. மங்கள சமரவீரவின் இழப்பு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது தனக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் முன்னாள் அமைச்சர் மங்கள முன்னுதாரணமாக இருந்திருக்கிறார் என்று அன்புடன் நினைவு கூர்ந்தார்.
இது தொடர்பாக அவர் ‘விடிவெள்ளி’க்கு கருத்து தெரிவிக்கையில் “சிறு வயதில் இருந்தே முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் அரசியல் விடயங்களை அவதானித்திருக்கிறேன். கடந்த வருடம் பாராளுமன்றத்தில் எனது உரையொன்றை கேட்டுவிட்டு குறுஞ்செய்தி மூலம் எனக்கு வாழ்த்து ஒன்றை அனுப்பினார். அப்படித்தான் அவர் எனக்கு அறிமுகமானார். கட்சி, இனம், மதம் மற்றும் வயது என்பதைத் தாண்டி நல்லதொரு ஆலோசகராக எனக்கிருந்துள்ளார். துறைமுக நகர விவகாரம், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் போன்ற விவகாரங்கள் தொடர்பாக தொலைபேசியில் என்னோடு அதிகம் உரையாடியிருக்கிறார். எல்லா இனங்களுக்கும் சம அளவில் உரிமை கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான அரசியல்வாதிகளுள் அவரும் ஒருவர் ஆவார்” என தெரிவித்தார்.
மேலும் “இளைய அரசியல்வாதிகளான எங்களுக்கு அவர் ஒரு மிகப்பெரிய முன்னுதாரணம். 2005 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷவை எந்தளவு ஆதரித்தாரோ அதேயளவு அவருடைய கொள்கைகள் தனக்கு ஒத்துவராதபோது பகிரங்கமாக அதை எதிர்த்தார். நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றிக்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் தனக்கு சரி என்று நினைக்கும் ஒன்றிற்காக இறுதிவரை குரல் கொடுக்கும் துணிச்சலுடையவர் அவர். அந்த துணிச்சல் எனக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்திருக்கிறது. அவரது கனவுப் பாதையில் நாங்கள் பயணிப்பதுதான் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்” என்றார்.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர எப்போதும் இளைஞர்களை ஆதரித்து அவர்களின் தோள்களைத் தட்டிக்கொடுத்தவர் ஆவார். கடந்த ஜூலை மாதத்தில் தேஷய பத்திரிகைக்கு அவர் வழங்கிய செவ்வியில் “என்னைப் பொறுத்தவரையில் நான் பாராளுமன்றத்தில் இல்லாவிட்டாலும் நான் எதிர்பார்க்கும் விடயங்களை பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். சாணக்கியன் என்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். அவர் மூன்று மொழிகளையும் கையாளக்கூடிய ஒரு சிறந்த பாராளுமன்ற உறுப்பினர். இரண்டாவதாக சுனில் ஹந்துன்னெத்தி ஒரு நல்ல மனிதர் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
தனது அரசியல் எதிர்காலத்தை துச்சமாக மதித்தவர்.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனது அரசியல் எதிர்காலம் மற்றும் அரசியல் செல்வாக்கு என்பவற்றை துச்சமாக மதித்து முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த ஒரேயொரு அரசியல் தலைவர் ஆவார். முன்னாள் அமைச்சரின் முஸ்லிம் சமூகத்திற்கான செயற்பாடுகள் குறித்து அவரது சட்ட விவகாரங்களில் நெருங்கிச் செயற்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணி அமீர் பாயிஸ் ‘விடிவெள்ளி’க்கு கருத்து தெரிவிக்கும்போது “அமைச்சர் மங்கள சமரவீர போலிகளற்ற நிஜ மனிதன். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் என்ற இரண்டிலும் இப்படி போலிகள் இல்லாமல் உண்மையாக வாழ அபரிமிதமான துணிவு வேண்டும். அந்த மனோநிலை மங்களவிடம் எப்போதும் இருந்தது” என தெரிவிக்கிறார்.
இது தொடர்பாக சிரேஷ்ட சட்டத்தரணி பாயிஸ் மேலும் தெரிவிக்கும்போது “எமது நாட்டில் எங்கே பிழை இருக்கிறது என்பதை சரியாக அடையாளங் கண்டவர், அதனை திருத்துவதற்காக தனது பாதையில் துணிச்சலுடன் பயணித்தார். எல்லாவற்றிகும் மேலாக மனிதயநேயமுள்ள ஒருவராக விளங்கினார். எல்லா இடங்களிலும் கண்ணியத்தை பேணுவார். அனைவருக்கும் சம அளவில் உரிமைகள் மற்றும் மரியாதை கிடைக்க வேண்டும் என்றே அவர் அதிகம் கனவு கண்டார். நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கினாலும் கூட தனது கனவை அடையும் இலட்சியப் பயணத்தை அவர் விடவே இல்லை” என்றார்.
நிலைமாறு கால நீதி மற்றும் அதிகாரப் பரவலாக்கம் போன்ற விடயங்களுக்காக முன்னாள் அமைச்சர் மிகுந்த நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வந்ததை சட்டத்தரணி அமீர் பாயிஸ் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். வடக்கு முஸ்லிம்களின் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை, இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விவகாரம் என்பவற்றில் அதிகம் கரிசனையுடன் மங்கள கருத்து வெளியிட்டதாக அவர் தெரிவிக்கிறார். கட்டாய தகனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து குரல் எழுப்பிய முதன்மையான அரசியல்வாதிகளுள் மங்கள சமரவீரவும் ஒருவர் ஆவார். தனது அலுவலக பணியாளர்கள் மற்றும் தனக்கு கீழ் வேலை செய்ய வேண்டியவர்களை தெரிவு செய்யும்
போதும் இன மத பேதமின்றி திறமையின் அடிப்படையிலேயே வாய்ப்புகளை வழங்கியிருந்தார். ஒரு துளி கூட இனவாதம் இல்லாமல் முற்போக்கு சிந்தனையுடன் மங்கள வாழ்ந்து மறைந்துள்ளாக சட்டதரணி அமீர் பாயிஸ் கவலை வெளியிடுகின்றார்.
மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்
வடக்கின் பெண் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்புடன் நெருக்கமான உறவை வைத்திருந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களது தேவைகளை அடிக்கடி கேட்டறிந்து கொண்டார். குறித்த அமைப்பின் தலைவரும் மாற்றுத்திறனாளியுமான பிரியதர்ஷினி ராஜேந்திரன் 2018 இல் மன்னாரில் வைத்து முன்னாள் அமைச்சரை சந்தித்து தமக்கிருக்கின்ற இன்னல்களை தெரிவித்தபோது அதில் மனமுருகி 2019 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கென பாரியதொரு தொகையை ஒதுக்கீடு செய்ய வழி சமைத்தார். அதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான அரசாங்கத்தின் கொடுப்பனவு ரூபா 3000 ஆக இருந்ததை ரூபா 5000 ஆக அவர் மாற்றுவதற்கு தன்னாலான முயற்சிகளை செய்தார்.
இது தொடர்பாக ‘விடிவெள்ளி’க்கு கருத்து தெரிவிக்கும் பிரியதர்ஷினி ராஜேந்திரன் “மாங்குளம் பகுதியில் எங்களுக்காக 10 ஏக்கர் காணியொன்றினை ஒதுக்கீடு செய்வதற்கு அவர் வழிசமைத்தார். அதில் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டடங்கள் கட்டுவதாக இருந்தது. ஆட்சி மாற்றம் மற்றும் கொரோனா தொற்று காரணமாக வேலைகள் ஸ்தம்பித்துப்போனாலும் நாங்கள் அவரை நன்றியோடு நினைவு கூர்கிறோம்” என தெரிவிக்கிறார். மாங்குளம் பகுதியில் குறித்த ஒதுக்கப்பட்ட காணி இருக்கின்றது. தற்போது அதில் கட்டடங்கள் கட்டுவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒலித்த வலிமையான குரல்
தமிழ், முஸ்லிம், பௌத்த மற்றும் கிறிஸ்தவம் என சகல இனங்களிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எப்போதும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனது குரல்களை வெளிப்படுத்தியே வந்தார். நுண் நிதிக்கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பில் அமைச்சரின் நடவடிக்கைகள் குறித்து கருத்துத் தெரிவித்த மனித உரிமைகள் ஆர்வலர் ஷ்ரீன் ஸரூர் “நுண் நிதிக்கடன் பிரச்சினையால் பல பெண்கள் தற்கொலை செய்து கொண்டிருந்த காலப்பகுதியில் அந்த விடயத்தில் நிதியமைச்சர் என்ற அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தினார். மத்திய வங்கியின் ஊடாக பதிவு செய்யப்படாத நுண் நிதிக்கடன் திட்டங்களை விசாரணை செய்யும் செயற்றிட்டம் ஒன்றை அவர் அதற்காக கொண்டு வந்தார்” என தெரிவிக்கிறார்.
பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகளினால் அரசியலில் உச்சம் தொட்ட மங்கள அதே பெரும்பான்மை மக்களும் பெரும்பான்மை அரசும் சிறுபான்மை மக்களுக்கு அநீதியிழைக்கும்போது நிமிர்ந்து கேள்வி கேட்ட ஒரு நபராக மங்களவை ஷ்ரீன் பார்க்கிறார். மேலும் “மக்களோடு மக்களாக இருந்து அவர்களுக்காகவே கடைசி வரை வாழ்ந்து சென்றிருக்கிறார். தற்போது சிறுபான்மை இனங்கள் மற்றும் மதங்களுக்கு எத்தனையோ அநீதிகள் நடக்கின்றன. அது தொடர்பாக தைரியமாக அவர் பேசியிருக்கிறார். அவரைப்போல இன்னொரு அரசியல்வாதி இனி இருக்கப்போவதில்லை” என மேலும் தெரிவிக்கிறார்.
ஊடகத்துறைக்கும் முன்மாதிரியான சேவைகளை செய்தார்
ஊடக அமைச்சராக மங்கள சமரவீர இருந்த காலங்களில் ஊடகத்துறைக்கு முன்மாதிரியான பல சேவைகளை முன்னெடுத்திருந்தார். பதவிகளை வழங்குதல் மற்றும் நிர்வாக சேவைகளில் பாரபட்சமின்றி எல்லா இனத்தவர்களுக்கும் சம அளவில் வாய்ப்பு வழங்கி சிறுபான்மையினரையும் உள்வாங்கினார். திறமையை அடிப்படையாகக் கொண்டே அனைவருக்கு நிர்வாகக் கடமைகளில் பொறுப்பு வழங்கியிருந்தார். இது தொடர்பாக முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் ‘விடிவெள்ளி’க்கு கருத்து தெரிவிக்கும்போது “மங்கள ஊடக அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் 80 வருட வரலாற்றில் முதல் முறையாக ஒரு முஸ்லிம் நபரை தலைவராக நியமித்திருந்தார். இப்படி முஸ்லிம்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கியிருக்கிறார். இவர் இன ரீதியாக வேறுபாடுகள் காட்டாத ஒருவர் என்பதற்கு இது ஒரு மிகச்சிறந்த உதாரணம் ஆகும்” என தெரிவித்தார்.
“ஊடகங்களில் இனம் மதம் என்பவற்றை பெயர் குறிப்பிட்டு தவறான முறையில் செய்திகள் வெளியிடுவதைத் தவிர்க்கும் சுற்றுநிருபம் ஒன்றையும் அவரது காலத்தில் கொண்டு வந்தார். யாழ்ப்பாண நுரலகம் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும்பான்மை மக்களுக்கு அந்த சம்பவத்தின் பாரதூரத்தை உணர்த்தி புத்தகங்களை சேகரிப்பதற்கும் வழிசமைத்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுடன் இணைந்து வௌ;ளைத் தாமரை என்ற செயற்றிட்டத்தின் ஊடாக சமாதானத்தை வலியுறுத்தும் செயற்பாடுகளையும் அவர் செய்தார். கொவிட் 19 அச்சுறுத்தலைத் தொடர்ந்து நாட்டின் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று எப்போதும் தெரிவித்துக் கொண்டே இருப்பார்” என மேலும் தெரிவித்தார்.
மங்களவின் மறைவு எல்லா சமூகங்களுடனும் சமத்துவத்துடனும் சமாதானமாகவும் வாழ விரும்புகின்ற முற்போக்கு சக்திகள் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் போன்ற ஒரு தலைவர் இனி இல்லை என்பதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள எத்தனை நாட்கள் செல்லுமொ தெரியவில்லை. பல சூழ்ச்சிகளால் பலர் ஒடுக்க நினைத்த குரல் இன்று கொடிய வைரஸ் தாக்கத்தினால் தானாக உறங்கச் சென்று விட்டது. முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் வழித்தடங்களை இளம் அரசியல்வாதிகள் பின்பற்றுவார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இலங்கை தொடர்பாக மங்கள கண்ட கனவுகள் என்றாவது ஒருநாள் நிறைவேற வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்போம்.- Vidivelli