கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்த முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான மங்கள சமரவீர முஸ்லிம்களுக்கு உதவியாகவும் பக்கபலமாகவும் செயற்பட்டவர் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மங்கள சமரவீரவின் மறைவு எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. அன்னார் ஜனநாயக விழுமியங்களை பேணக்கூடியவராகவும் நடுநிலைப் போக்குடையவராகவும் காணப்பட்டதோடு, நம் நாட்டுக்காக அரசியில் ரீதியில் பாரிய பங்களிப்புகளை செய்த ஒருவருமாவார். மேலும், அவர் சிறுபான்மை மக்களை அரவணைத்து, அவர்களது அபிலாஷைகளை மதித்து, அவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த ஒருவருமாவார்
முஸ்லிம்களுடைய விடயங்களில் மிக கரிசனையுடன் அவர் செயற்பட்டதோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம் சமூகம் பிரச்சினைகளை எதிர்கொண்ட போது முஸ்லிம்களுக்கு உதவியாகவும் பக்கபலமாகவும் செயற்பட்டார். இவரது இந்த நற்பண்புகளையும் செயற்பாடுகளையும் முன்மாதிரியாக எடுத்து அரசியல்வாதிகள் செயற்படும்பட்சத்தில் நம் நாட்டை அபிவிருத்தியின் பாதையில் இட்டுச் செல்ல முடியும்.
இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முழு முஸ்லிம் சமூகம் சார்பில் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.- Vidivelli