நாடு மிக மோசமானதொரு மருத்துவ நெருக்கடியை நோக்கி நகர்வதாக கடந்த சில தினங்களாக சுகாதாரத்துறையினர் எச்சரித்து வருகின்ற நிலையில் அதன் யதார்த்தங்களை நாம் இப்போது உணரத் தொடங்கியுள்ளோம். நாட்டில் கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 8000 ஐ தொட்டுள்ளது. தற்போது தினமும் சராசரியாக 200 மரணங்கள் பதிவாகின்றன. உலகில் கொவிட் மரண வீதம் அதிகரித்துள்ள முதல் 10 நாடுகளுக்குள் இலங்கை வந்துள்ளமை பெரும் துரதிஷ்டமாகும்.
சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில் இணையவழியாக உரையாற்றிய ஹொங்கொங் பல்கலைக்கழக பேராசிரியர் மலிக் பீரிஸ், அடுத்து வரும் மாதங்கள் இலங்கைக்கு ‘மிக அபாயமிக்கவை’ என எச்சரித்திருந்தார். தான் ஒரு இலங்கையன் என்ற வகையில் இதனைக் கூறுவது தனது பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். அவரது கூற்றுப்படி ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இலங்கையில் கொவிட் 19 டெல்டா திரிபின் பரவல் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்று அவர் கூறியதன் யதார்த்தத்தை இன்று உணர்ந்து வருகிறோம்.
இந்தியாவில் டெல்டா திரிபு ஏற்படுத்திய பாதிப்பினை நாம் ஊடகங்கள் வாயிலாக கண்டுள்ளோம். அதே நிலைமையின் சாயல்களை இப்போது இலங்கையில் காண முடிகிறது.
நாம் முன்னர் பல தடவைகள் கூறியதைப் போன்று அரசாங்கம் கொவிட் 19 தொற்றிலிருந்து தனது மக்களைப் பாதுகாப்பதில் தோல்வியடைந்துள்ளது என்பதே யதார்த்தமாகும். தமது அரசியல் நலன்களைக் காப்பாற்றிக் கொள்வதிலும் எதிரிகளைப் பழிவாங்குவதிலும் சிறுபான்மை சமூகங்களை ஓரங்கட்டுவதிலும் காட்டிய அக்கறையை கொவிட் விடயத்தில் காட்டியிருந்தால் நிச்சயமாக இந்தச் சிறிய தீவை கொரோனா எனும் கொடிய நோயிடமிருந்து எப்போதோ பாதுகாத்திருக்க முடியும். எனினும் நாட்டின் தலைவர்களின் தூய்மையற்ற, நீதியற்ற செயற்பாடுகள் தொடர்ந்தும் அவர்களுக்கு அழிவுகளையே தேடிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
நாட்டின் தேசிய நிலைமை இவ்வாறிருக்க முஸ்லிம் சமூகத்திலும் கொவிட் தொற்றுப் பரவல் ஒப்பீட்டளவில் அதிகரித்தே செல்கிறது. தினமும் கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் ஜனாஸா செய்திகளே சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன. ஓட்டமாவடி மஜ்மா நகரில் நேற்று முன்தினம் மாலை வரை 2113 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. தற்போது தினமும் சராசரியாக 40 ஜனாஸாக்கள் அங்கு கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது.
“இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களின் விகிதாசாரம் சுமார் 10 வீதமாக இருக்கின்ற நிலையில், கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களுள் சுமார் 40 வீதமானோர் முஸ்லிம்களாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்” என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். “இன்று எம் கண்முன்னே எமது முஸ்லிம் சகோதர, சகோதரிகள் பலர் தினமும் கொவிட் தொற்றினால் மரணித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக முஸ்லிம்கள் நாற்பது, ஐம்பது பேரளவில் உயிரிழந்து வருகின்றனர். இவர்களுள் பெரும்பாலானோர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் என தெரிய வருகிறது. சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் சிலர் இதனை என்னிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். தடுப்பூசி ஏற்றுக்கொள்வது பாதகமானது என்ற தவறான கருத்துக்கள் முஸ்லிம்கள் மத்தியில் பரப்பப்பட்டிருக்கிறது. இதனால் முஸ்லிம்கள் பலர் தடுப்பூசி பெற்றுக் கொள்ள பின்வாங்குகின்றனர். இது குறித்து சுகாதார அமைச்சு மற்றும் பொலிஸ் தரப்பினர் என்னிடம் கவலை வெளியிட்டுள்ளனர்” என்றும் நீதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று முஸ்லிம் சமூகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோரில் அதிகமானோர் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் ஆர்வம் காட்டாததால் அவ்வாறானவர்களின் தரவுகள் தற்போது நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் மூலம் திரட்டப்பட்டு வருவதாக வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் தெரிவித்துள்ளார்.
மறுபுறம் முஸ்லிம் சமூகத்தில் ஒரு குழுவினர் தடுப்பூசிக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுப்பதையும் அவதானிக்க முடிகிறது. இது மிகவும் ஆபத்தானதாகும். தடுப்பூசி பற்றிய மிகத் தெளிவான மார்க்க மற்றும் சுகாதார வழிகாட்டல்கள் உள்ள நிலையில், இவ்வாறான பிற்போக்குவாதிகளின் பொய்ப்பிரசாரங்களை நம்பி அநியாயமாக உயிர்களைப் பலிகொடுக்கின்ற நிலைக்கு முஸ்லிம் சமூகம் வந்துவிடக் கூடாது. எனவேதான் தமது மஹல்லாக்களில் உள்ள அனைவரும் தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதை உறுதிப்படுத்த வேண்டியது பள்ளிவாசல்களின் பொறுப்பாகும் என வலியுறுத்த விரும்புகிறோம்.-Vidivelli