ஆப்கானில் மீண்டும் தலிபான் ஆட்சி என்ன நடக்கிறது அங்கே?
உலகின் மிக வல்லமை பொருந்திய அமெரிக்க இராணுவம் மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்திருக்கிறது. சுமார் ஓர் இலட்சத்து 30 ஆயிரம் படைவீரர்கள், உலகின் அதிநவீன போர்க்கருவிகள், சக்தி வாய்ந்த போர் விமானங்கள் இத்தனையும் இருந்தும் தலிபான்களை வீழ்த்த முடியாமல் அமெரிக்கா பின்வாங்கியிருக்கிறது.
அமெரிக்கா ஆப்கானில் கால் பதித்ததைத் தொடர்ந்து 2001 இல் தலைநகர் காபூலிலிருந்து ‘மீண்டும் நாங்கள் காபூலைக் கைப்பற்றுவோம்!” என்று சூளுரைத்து விட்டு வெளியேறிய தலிபான்கள் 20 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் காபூலை முழுமையாகக் கைப்பற்றியிருக்கின்றனர்.
இன்று தலிபான்கள் மீண்டும் உலகளாவிய ஊடகங்களில் தலைப்புச் செய்தி ஆகியிருக்கிறார்கள். கைகளில் துப்பாக்கிகளை ஏந்தியபடி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருக்கும் ஜனாதிபதி மாளிகையில் கூட்டமாக தலிபான் போராளிகள் அமர்ந்திருக்கும் புகைப்படம், அந்த நாட்டின் எதிர்காலம் பற்றிய கவலையை ஆப்கானியர்களுக்கு மட்டுமன்றி உலகெங்கும் தோற்றுவித்துள்ளது. ஆனாலும் தலிபான் பேச்சாளர் ஊடகங்களுக்கு வெளியிடும் கருத்துக்கள் சற்று நம்பிக்கையளிப்பதாக உள்ளன.
20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கப் படைகளால் ஆட்சியிலிருந்து விரட்டப்பட்ட தலிபான்கள், வெறும் இருபதே நாட்களில் மீண்டும் தேசத்தைக் கைப்பற்றிவிட்டனர்.
20 ஆண்டுகள் அமெரிக்கா பணத்தைக் கொட்டி பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்து வளர்த்த ஆப்கான் இராணுவமும் பொலிஸ் படையும் சின்ன எதிர்ப்புகூட காட்டாமல் சரணடைந்துவிட்டன. ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானி பதவி விலகி தஜிகிஸ்தான் நாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டார். ‘போரால் காபூல் அழிவதை விரும்பவில்லை. எண்ணற்ற தேசபக்தர்கள் உயிரிழப்பதைத் தடுக்கவே இந்த முடிவெடுத்தேன்” என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் அவர். அஷ்ரப் கானி, நான்கு கார்கள் நிறைய பணத்தை எடுத்து வந்து ஹெலிகொப்டரில் தப்பிச் சென்றதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
தலைநகர் காபூலின் எல்லையில் தலிபான்கள் தடம் பதித்த விடயம் அறிந்ததும், அங்குள்ள பல நாடுகளின் தூதரகங்கள் பதற்றமாகிவிட்டன. அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா என வெளிநாடுகளிலிருந்து விமானங்கள் பறந்துவந்து தங்கள் தேசத்தவரையும் தூதரக அதிகாரிகளையும் மீட்டுச் சென்றன.
அமெரிக்கத் தூதரகத்தின் கூரையில் இறங்கிய அமெரிக்க ஹெலிகொப்டர் அங்கிருந்த அதிகாரிகளை மீட்டுச் சென்ற காட்சி, வியட்நாம் போரில் ஏற்பட்ட தோல்வியில் தலைகுனிந்து கடைசி இராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்க விமானங்கள் திரும்பிய காட்சியை நினைவூட்டினஆம், உலகின் மிக வல்லமை பொருந்திய அமெரிக்க இராணுவம் மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்திருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் படைவீரர்கள், உலகின் அதிநவீன போர்க்கருவிகள், சக்தி வாய்ந்த போர் விமானங்கள் இத்தனையும் இருந்தும் வெறும் 75 ஆயிரம் பேர் கொண்ட தலிபான் படையை வீழ்த்த முடியாமல் சமாதானம் செய்துகொண்டு அமெரிக்கா பின்வாங்கியிருக்கிறது.
‘ஆப்கானிஸ்தான் மண்ணில் அல் கைய்தா அமைப்புக்கோ, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கோ புகலிடம் தர மாட்டோம்” என தலிபான் அமைப்பு கொடுத்த ஒற்றை உறுதிமொழியை மட்டும் எடுத்துக்கொண்டு அமெரிக்கப் படைகள் வெளியேறியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் 2001 முதல் 2021 வரை நடத்திய போருக்காக இதுவரை அமெரிக்கா செலவிட்ட தொகை 2.26 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் என அமெரிக்க பிரௌன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாணயத்தில் அதன் பெறுமதி 450,866,158,000,000.00 ரூபா. இந்தப் போரினால் காயமுற்ற அமெரிக்க படையினருக்கு காலமெல்லாம் சிகிச்சை அளிப்பதற்கான தொகை இதில் உள்ளடக்கப்படவில்லை
அமெரிக்கப் படையினர், ஆப்கான் இராணுவத்தினர், தலிபான்கள், பொது மக்கள் என 20 ஆண்டுகளில் சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
வெளியேறிய அமெரிக்கா!
11 செப்டம்பர், 2001 அன்று அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் மீது அல் கைதா அமைப்பு தாக்குதல் நடத்தியதில் சுமார் 3,000 பேர் உயிரிழந்தனர். அந்தச் சமயத்தில் அல் கைதா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததாகக் கூறி, ஆப்கானில் அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டன. இதனால், அப்போது ஆப்கானை ஆட்சி செய்த தலிபான் அமைப்பு அதிகாரத்தை இழந்தது. அவுஸ்திரேலியா, கனடா, நேட்டோ படைகள் ஆகியவற்றின் உதவியோடு தலிபான்களை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றியது அமெரிக்கா.
அமெரிக்கப் படைகளின் கண்காணிப்பு ஆப்கானிஸ்தான் முழுவதும் பலமாக இருந்து வந்ததால் தலிபான்கள் இத்தனை ஆண்டு காலமாகப் பதுங்கி இருந்தனர். ஆனால், தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 20 ஆண்டுகளாக ஆப்கானில் முகாமிட்டு வந்த படைகளை அங்கிருந்து திரும்பப்பெறுவதாக அண்மையில் அறிவித்தார். எதிர்வரும் செப்டம்பர் 11 க்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறிவிடும் என அவர் உறுதியளித்துள்ளார். அதையடுத்தே, அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறி வருகின்றன. தற்போது காபூல் விமான நிலையத்தில் மாத்திரம் அமெரிக்கப் படைகள் மிகச் சொற்பளவில் நிலை கொண்டுள்ளன.
அச்சத்தில் ஆப்கான் மக்கள்
2001 ஆம் ஆண்டுக்கு முன்பு தலிபான்கள் ஆட்சியிலிருந்தபோது, “இஸ்லாமிக் எமிரேட் ஒப் ஆப்கானிஸ்தான்’ என்ற பெயரில் தங்களின் ஆட்சியை முன்னெடுத்தனர். இதன்போது பெண்கள் வேலைக்குச் செல்வது, படிக்கச் செல்வதை தலிபான்கள் தடைசெய்திருந்தனர். மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன விதமான அடக்குமுறைகளை விதிப்பார்களோ என்ற அச்சத்தில் அந்நாட்டு மக்கள் உள்ளனர்.
சில மாவட்டங்களை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு, ஆப்கானிஸ்தான் வங்கிகளில் பெண் ஊழியர்கள் இனி வேலைக்கு வரக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கான் வங்கிகளில் பெரும்பாலும் பெண்கள் பணியில் இருந்துவந்த நிலையில், தற்போதைய நெருக்கடியான சூழலில் வங்கிப்பணி பாதிக்கப்பட்டுள்ளது. தனது பணி பறிபோனது குறித்து நூர் கத்தேரா என்ற 43 வயது பெண் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு கருத்து வெளியிடுகையில், ‘நான் எனது பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளேன். சில துப்பாக்கி ஏந்திய தலிபான்கள் என்னுடன் வீடு வரைக்கும் வந்தனர். இனி இவரை வேலைக்கு அனுப்பாதீர்கள். அவருக்குப் பதில் வீட்டில் உள்ள ஆண்கள் யாரேனும் வேலைக்கு வாருங்கள் என்று சொல்லிச் சென்றனர். பெண்கள் பணிக்கு வரக்கூடாது என்ற உத்தரவு மிகவும் விந்தையாக உள்ளது. நான் வங்கியில் கணக்குத் துறையில் பணி புரிந்தேன். நான் பணியில் சேரும் போது நானே ஆங்கிலம் கற்றேன். நானே கணினி அறிவையும் வளர்த்துக் கொண்டேன். இப்போது நான் மீண்டும் அடுப்பங்கரைக்கு செல்லப்போகிறேன்” என்று கூறினார்.
எனினும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை தலிபான்களின் ஊடகப் பேச்சாளர் சுஹைல் ஷகீன் மறுத்துள்ளார். “ஆப்கான் பெண்கள் கல்வி கற்க அனுமதிக்கப்படுவார்கள். ஆப்கான் மக்களை பழிவாங்கமாட்டோம்” என அவர் பி.பி.சி. உள்ளிட்ட பல ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
“மக்களின் உயிரும், சொத்துகளும் பாதுகாப்பாக இருக்கும். ஆப்கானிஸ்தான் மக்களை பழிவாங்கமாட்டோம். நாங்கள் மக்களின் சேவகர்கள். எங்களது தலைமையிலான ஆட்சியில் காபூலில் தொந்தரவுகள் ஏற்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் அமைதியான முறையில் எங்கள் அதிகாரத்தைப் பெற காத்துக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் அனைத்து ஆப்கான் மக்களும் பங்குகொள்ளும் ஆட்சியாக எங்கள் ஆட்சி அமையும். நாங்கள் இஸ்லாமிய அரசு அமைய விரும்புகிறோம். நாங்கள் பெண்கள் உரிமையை மதிப்போம். வெளியே தனியாக பெண்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பெண்கள் கல்வி கற்கவும், வேலைக்குச் செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் ஹிஜாப் அணியும் பழக்கத்தை கடைப்பிடிப்பார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார். தலிபான்கள் முன்னரை விட கொள்கையளவில் அதிக முன்னேற்றமடைந்துள்ளதை அவரது இக் கருத்துக்கள் உணர்த்துவதாகவும் தலிபான்களிடமிருந்து வித்தியாசமானதொரு ஆட்சியை எதிர்பார்க்கலாம் என்றும் சில அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தலிபான்களின் பின்னணி என்ன?
1980 களில் அமெரிக்காவுக்கும் அப்போதைய சோவியத் ரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்தது. இந்த பனிப்போரில் குளிர்காய நினைத்த அமெரிக்கா சோவியத்துக்கு எதிரான முஜாஹிதீன் படைக்குள் சில பிரச்சினைகளை உண்டாக்கியது. அதிலிருந்து விலகிய சில உறுப்பினர்களுடன் 1994 இல் தலிபான் படைகள் உருவாகின. 1996 இல் அதன் கை மேலோங்கியது. நாட்டில் தீவிரமாக இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தை அமுல்படுத்தின தலிபான் படைகள். மேலும் மத சிறுபான்மையினர் கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளாகினர். தலிபான் அமைப்பின் தலைவராக முல்லா முகமது ஒமர் செயற்பட்டார்.
அதன்பின்னர் தலிபான் படைகளுக்கு அமெரிக்கா கடும் நெருக்கடி கொடுத்தது. அமெரிக்கப் படைகளை சமாளிக்க முடியாமல் அதன் அப்போதைய தலைவர் முல்லா முகமது ஒமர் தலைமறைவானார். 2013 ஆம் ஆண்டுவரை அவரது நிலைவரம் என்னவென்பது மிகப்பெரிய ரகசியமாக பாதுகாக்கப்பட்டது. 2015 இல் முல்லாவின் மரணத்தை அவரது மகன் உறுதி செய்தார்.
இப்போது ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக ஆக்கிரமித்துவிட்ட நிலையில், அந்தப் படையில் 6 பேர் மிக முக்கிய புள்ளிகளாகக் கருதப்படுகின்றனர். அவர்களது விபரம் வருமாறு:
ஹைபத்துல்லா அகுன்சதா : இவர்தான் தலிபான்களின் சுப்ரீம் தலைவர் என்று அறியப்படுகிறார். தலிபான்களின் அரசியல், மதம் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை இவர்தான் தீர்மானிக்கிறார்.
முல்லா முகமது யாகூப் : இவர் தலிபான் அமைப்பை நிறுவிய முல்லா முகமது ஒமரின் மகனாவார். இவர்தான் தலிபான்களின் இராணுவத்தை மேற்பார்வை செய்துவருகிறார். ஒமர் மறைவுக்குப் பின் இவர்தான் தலைவராக வேண்டும் என பலமுறை வலியுறுத்தப்பட்டாலும் கூட இவர் அதனை ஏற்கவில்லை. வயது குறைவு, போர்க்கள அனுபவம் போதாது போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி தொடர்ந்து அவர் தலைமைப் பொறுப்பை தவிர்த்து வருகிறார். யாகூப் இன்னும் 30 வயதைக்கூட எட்டவில்லை என்று கூறப்படுகிறது.
சிராஜுதீன் ஹக்கானி: முஜாகிதீன் கமாண்டர் ஜலாலுதீன் ஹக்கானியின் மகன் தான் இந்த சிராஜுதீன் ஹக்கானி. இவர் தலிபான் படைகளின் நிதி மேலாண்மை நிர்வாகப் பொறுப்பில் இருக்கிறார். உலகம் முழுவதுமிருந்து தலிபான்களுக்கு நிதி திரட்டுவது இவரது பொறுப்பு.
முல்லா அப்துல் கானி பரதார்: இவர் தலிபான் நிறுவனர்களில் ஒருவர். இப்போது அரசியல் தலைமயகப் பொறுப்பை நிர்வகிக்கிறார். இவர் தோஹாவில் நடைபெறும் ஆப்கான் அமைதிப் பேச்சுவார்த்தையில் தலிபான் பிரதிநிதியாகக் கலந்து கொண்டுள்ளார். இவர் ஒமரின் மிகவும் நம்பிக்கைக்குரிய கமாண்டர். 2010 ஆம் ஆண்டு இவர் பாகிஸ்தானின் கராச்சியில் பிடிபட்டார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு 2018 இல் அவர் விடுவிக்கப்பட்டார். இவர்தான் ஆப்கானிஸ்தானின் அடுத்த ஜனாதிபதியாகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய்: தலிபான் 2001க்கு முன்னதாக ஆட்சியில் இருந்தபோது இவர் தலிபான்களின் துணைத் தலைவராக இருந்தார். இவர் ஆப்கான் அரசுடன் தலிபான் சார்பில் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றிருக்கிறார்.
அப்துல் ஹகீம் ஹக்கானி: இவர்தான் தலிபான்களின் தற்போதைய சுப்ரீம் தலைவர் அகுன்சதாவின் நம்பிக்கைக்குரிய தலைவர். இவர் தலிபான் அமைதிப் பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றிருக்கிறார்.
ஆப்கானைக் குறிவைக்கும் சீனா!
ஆப்கானிலிருந்து அமெரிக்கா வெளியேறிவரும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அங்கு கால்பதிக்கத் திட்டமிட்டிருக்கிறது சீனா. ஆப்கானிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் சீனாவுக்கு தலிபான்கள் குழு ஒன்று கடந்த ஜூலை மாத இறுதியில் சென்றது. அங்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயை சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது தலிபான் குழு.
இதன்போது அரசியல், பொருளாதாரம், இரு நாடுகளின் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்துப் பேசப்பட்டன. மேலும், சீனாவுக்கு எதிராக ஆப்கானின் மண்ணைப் பயன்படுத்த யாரையும் அனுமதிக்கமாட்டோம் என சீனாவுக்கு இதன்போது தலிபான்கள் உறுதியளித்துள்ளனர்.
இனித்தான் சவால்!
“தலிபான்கள் கைகளில் எளிதாக ஆப்கான் விழுந்திருக்கலாம். ஆனால், உண்மையான சவால் இனித்தான் தொடங்கப் போகிறது” என்கிறார் தோஹா பல்கலைக்கழகத்தின் மனிதாபிமான ஆய்வுகள் மையத்தின் இயக்குநர் சுல்தான் பரகத். “அவர்கள் இதுவரை கெரில்லா குழுக்களாக இருந்தனர். ஆனால், இப்போது அவர்கள் ஒரு நாட்டை நிர்வகிக்க வேண்டும். இரண்டும் ஒன்றல்ல” என்கிறார் அவர்.
“ஒட்டு மொத்த ஆப்கான் மக்களுக்கும் தங்களைப் பிரதிநிதியாகக் காட்டிக் கொள்ள வேண்டுமானால், அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்துக் கொள்ளவேண்டும். இதனை சில தலிபான் தலைவர்கள் ஒப்புக் கொள்கின்றனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் தோஹாவில் நடந்த பேச்சுவார்த்தையில் இது குறித்த உறுதியையும் அளித்துள்ளனர். ஆனால், நடைமுறையில் அது அவ்வளவு எளிதாக இல்லை. தலிபானில் உள்ள இளைஞர்கள் ஆக்ரோஷமாகச் செயல்படுகின்றனர், துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றனர்” என்றும் சுல்தான் பரகத் எழுதுகிறார்.
தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளமை குறித்து அந்ந நாட்டில் மாத்திரமன்றி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் வாதப் பிரதிவாதங்கள் மேலெழுந்துள்ளன.
தலிபான் பேச்சாளர் கூறுவது போல அவர்கள் ஜனநாயக வழிமுறைகளைப் பின்பற்றி ஆட்சியைத் தொடர்வார்களா அல்லது சர்வாதிகாரப் போக்கை கடைப்பிடிக்கப் போகிறார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.-Vidivelli