கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
இந்தத் தலைப்பில் இதற்கு முன்னும் சில கட்டுரைகளை எழுதியுள்ளேன். எனினும், இன்று நாடு போகின்ற போக்கில் ஆட்சியினர் முஸ்லிம் சமூகத்தையே ஒரு குற்றவாளியைக் கூண்டில் நிறுத்தி விசாரிப்பதுபோல் நடத்துவதும், அது தெரிந்தும் முஸ்லிம் அரசியல்வாதிகள் செயலிழந்து காணப்படுவதும் வேதனையளித்த போதிலும், முஸ்லிம் தலைமைத்துவத்தைப்பற்றிய சில உண்மைகளை வாசகர்களுக்கு உறுத்தியுரைப்பது காலத்தின் கட்டாயமெனக் கருதியே மீண்டும் ஒரு முறை இவ்விடயத்தை அலசுகிறேன். இது தாய்நாட்டைப்பற்றியும் அதில் வாழும் சமூகங்களைப்பற்றியும் அதிலும் குறிப்பாக தான் பிறந்து வளர்ந்த ஒரு சமூகத்தைப் பற்றியும் சதா சிந்தித்துக் கொண்டிருக்கும் ஓர் அவதானியின் ஆத்மார்த்த உணர்வின் வெளிப்பாடேயன்றி வேறு எந்த நோக்குடனும் எழுதப்படவில்லை.
சமூகம் எப்படியோ தலைமைத்துவம் அப்படி
ஒரு சமூகம் எத்தன்மை வாய்ந்ததோ அத்தன்மையுள்ள தலைவர்களைத்தான் அது உருவாக்கும் அல்லது அவர்களிடையே உருவாகும் எனப் பொதுவாகக் கருதப்படுவதுண்டு. அதில் ஓரளவு உண்மையும் உண்டு. ஆனால் இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களிடையே உருவாகிய தலைவர்களை நோக்கும்போது அக்கூற்று முற்றாகப் பொருந்துவதுபோல் தெரிகிறது. முஸ்லிம் சமூகம் எப்படியோ அப்படியே அவர்களின் தலைமைத்துவமும் அமைந்துள்ளது. எனவே சமூகம் விழித்தெழுந்து மாறாதவரை அதன் தலைமைத்துவமும் மாறாதிருக்கும்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றிலே இதுவரை மூன்று வகையான தலைமைகள் உருவாகியுள்ளன. ஒன்று, பணக்கார வர்க்கத்தின் தலைமை, மற்றது இஸ்லாமிய மார்க்கவாதிகளின் தலைமை, மூன்றாவது அரசியல்வாதிகளின் தலைமை. இவற்றுள் முதல் இரண்டும் காலத்தால் முந்தியவை. மூன்றாவது சுதந்திரத்துக்குப் பின்னர் தோன்றியது. எனினும் முதலிரண்டின் செல்வாக்கு மூன்றாவதுக்குள்ளும் நுழைந்துள்ளது. இந்தத் தலைமைத்துவங்கள் எவ்வாறு முஸ்லிம் சமூகத்தின் நிலையினை பிரதிபலிக்கின்றது என்பதை முதலில் விளக்கவேண்டியுள்ளது.
இலங்கை முஸ்லிம்கள் வர்த்தகர்களாக வந்தவர்கள் என்பது வரலாற்று உண்மை. அவர்களுடன்தான் இஸ்லாமும் வந்தது என்பதும் உறுதி. ஆரம்பத்தில் அரேபியாவிலிருந்து ஊற்றெடுத்த இஸ்லாம் காலவோட்டத்தில் இந்தியாவிலிருந்து ஊற்றெடுக்கலாயிற்று. இந்த இரண்டு ஊற்றுகளுக்குமிடையே நிறைய வித்தியாசங்கள் உண்டு. அவற்றையெல்லாம் இங்கே விபரிக்க வேண்டியதில்லை. ஆனால் ஒன்றை மட்டும் இங்கே உணர்த்தவேண்டி இருக்கிறது. அதாவது, இலங்கையில் போதிக்கப்பட்ட இஸ்லாம் மறுமையே நிச்சயம், உலக வாழ்வு அனிச்சயம். ஆதலால் ஒரு முஸ்லிம் பரலோக வாழ்வை நம்பி இகலோக வாழ்வில் சடத்துவத் தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொண்டு தானும் தன் குடும்பமும், வியாபாரமும், பள்ளிவாசலும் என்ற போக்கில் வாழ்வதே இஸ்லாமிய வாழ்வு எனப் போதிக்கப்பட்டது. இதைத்தான் கடந்த நூற்றாண்டிலிருந்து சில பிரச்சாரகர்களும் போதித்தனர். இவ்வாறான போதனை எவ்வாறான ஒரு சமூகத்தைத் தோற்றுவிக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இகலோக வாழ்க்கையில் ஒரு பயணிபோல் நின்றுகொண்டும் தான் அடையப்போகும் நிரந்தரமான தலத்தையே சதா எதிர்பார்த்துக்கொண்டும் வாழும் ஒருவனுக்கு நாட்டுப்பற்று, மொழிப்பற்று, சமூகப்பற்று, அரசியல் நோக்கு என்பதெல்லாம் அநாவசியம். ஆன்மீகத் தேவை, பொருளாதாரத் தேவை என்பன மட்டுமே அவனுக்கு இருக்குமே தவிர இரசாஞான தேவை என்பதொன்று அவனுக்கு இருக்கமாட்டாது. அப்படிப்பட்ட மனிதர்களைக் கொண்ட ஒரு சமூகத்தை வழிநடத்தும் தலைவர்களின் கடமை என்ன?
பணக்காரத் தலைமைத்துவம் தானதர்மம் செய்வதிலும் பள்ளிவாசல்களையும் மதரசாக்களையும் கட்டிப் பராமரிப்பதிலும் ஏழைக் குமரிகளுக்கு விவாகம் செய்துவைத்தல் போன்ற கருமங்களிலும் ஈடுபடும்போது அத்தலைமைத்துவத்தின் பெயரும் புகழும் பெருகும். அத்தலைவர்களை சமூகம் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும். அவர்களின் செல்வம் எவ்வழியில் திரட்டப்பட்டிருந்தாலும் அது இறைவனின் அருளால் கிடைத்ததென்றே சமூகம் புகழும். இது பரம்பரையாக நடந்துவந்த கதை. மார்க்கத் தலைமைத்துவமும் அதே பல்லவியைப்பாடிப் பணக்கார வர்க்கத்துடன் இணைந்து செல்லும். இத்தலைமைத்துவங்களுக்கும் அவற்றின் பின்னால் திரளும் சமூகத்துக்கும் அவர்கள் வாழும் நாட்டுக்கும் இடையேயுள்ள தொடர்பு மந்தைகளுக்கும் புல்லுக்கும் இடையேயுள்ள தொடர்பேயன்றி வேறில்லை. மந்தைகளுக்குப் புல் எப்படி வளர்கின்றது அல்லது வளர்ப்பது என்ற கவலை இல்லை. வளர்ந்த புல்லை மேய்ந்துகொண்டு வாழ்வதே அதன் ஒரே தொழில். இப்படித்தான் முஸ்லிம் சமூகமும் அத்தலைவர்களால் வழிநடத்தப்பட்டது.
சுதந்திரத்துக்குப் பின்னர் உருவாகிய அரசியல் தலைமைத்துவம் இந்தப்போக்கினை மாற்றியதா? ஓரிருவரைத்தவிர பெரும்பாலான முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அதே போக்கினைத்தான் கடைப்பிடித்தனர். ஏனெனில் சமூக மக்களுக்கு அவர்களின் சொந்த வாழ்க்கையை இடையூறின்றி வாழ்வதற்கேற்ப சில வசதிகளைப் பெற்றுக் கொடுத்தால் அதுவே அவர்களின் ஆதரவைப் பெறுவதற்குப் போதுமானதாக இருந்தது. உதாரணமாக அரசாங்கத்திடமிருந்து நோன்பு காலத்தில் நோன்பு திறக்கப் போதியளவு பேரிச்சம் பழங்களும் ஹஜ் யாத்திரைக்கு அந்நிய செலாவணியும் பெற்றுக்கொடுத்து வியாபாரத்துக்கும் இடையூறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொண்டால் அதுவே அரசியல் தலைமைத்துவத்துக்கு ஆதரவு திரட்டும் மார்க்கமாக இருந்தது. அவ்வாறாயின் கல்வித்துறையில் பாடசாலைகள் எவ்வாறு முஸ்லிம்களிடையியே உருவாகின? அது மற்ற இனங்கள் போராடிப் பெற்றெடுத்த வசதிகள். நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் பொசிந்ததுபோல் முஸ்லிம்களுக்கும் பாடசாலைகள் கிடைத்தன. அவைதான் பின்னர் ராசிக் பரீத், பதியுத்தீன் மஹ்மூத் போன்றவர்களால் தனி முஸ்லிம் பாடசாலைகளாக மாற்றப்பட்டன. ஆனால் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து அதற்கான கோரிக்கைகள் எழவில்லை. ஏனெனில் முஸ்லிம்களின் வாழ்க்கையை இயக்கிய தத்துவத்துக்கும் பள்ளிக்கூடக் கல்விக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்கவில்லை. சமூகமே விழிக்காதிருக்கும்போது தலைமைத்துவமும் அதனை விழிக்கவைக்க விரும்பவுமில்லை. எனினும் இப்பொதுவான நியதிக்கு ஓரிரண்டு புறனடைகள் இருந்தன என்பதையும் இங்கே மறுக்கவில்லை.
இந்தத் துர்ப்பாக்கிய நிலையை அண்மைக்காலத்தில் உருவாகிய முஸ்லிம் தலைமைத்துவம் ஒரு புதிய கண்கொண்டு நோக்கியது. சமூகத்துக்கே நாட்டைப்பற்றியும் அதன் அபிவிருத்தியைப் பற்றியும் கவலையில்லாதபோது நாமேன் அதைப்பற்றிக் கவலைப்படவேண்டும்? முஸ்லிம்களுடைய வாக்குகளைக் கவர்வதற்குப் பணமும் இஸ்லாத்தைப்பற்றிய பிரச்சாரமும் இருந்தாலே போதும். அதனாலேதான் தேர்தல் காலங்களில் பணமூட்டைகள் அவிழ்க்கப்பட்டு தேர்தல் மேடைகள் ஹதீஸ் மஜ்லிசுகளாக மாறியுள்ளன. இதுதான் இன்றைய முஸ்லிம் தலைமைத்துவத்தின் நிலைப்பாடு. அந்த இரண்டையும் கொண்டு வாக்குகளைப்பெற்று நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த தலைவர்கள் அவர்களின் சொந்த நலன்களைப் பெருக்குவதில் கவனம் செலுத்துவதில் ஏன் குறைகாண வேண்டும்? சமூகம் எப்படியோ அதன் தலைமைத்துவமும் அப்படியே.
உருவாகும் ஒரு புதிய வர்க்கம்
இதுவரை காலமும் உலகியற்கலைகளைக் கற்றுத்தேர்ந்த அறிவாளிகளுக்கு தலைமைத்துவத்தை வழங்கி அவர்களின் வழிகாட்டலில் முஸ்லிம் சமூகம் என்றுமே ஒன்றுபட்டதில்லை. கல்வியறிவிலே முஸ்லிம்கள் கவனம் செலுத்தாதும் வர்த்தகர்களாகவே நீண்டகாலமாக வாழ்ந்தமையும் இதற்கொரு காரணம். அத்துடன் மார்க்கத் தலைவர்களும் உலகியற்கல்வி ஆகிறத்துக்கு உதவாது என்று போதித்தது இன்னொரு காரணம். இன்றோ அந்த நிலை மாறிக்கொண்டு வருகின்றது. கடந்த முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளாக உலகியற் கல்வியில் முஸ்லிம்களுக்கு ஒரு விழிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் பெண்கள் முக்கிய ஆர்வம் காட்டுவது ஆரோக்கியமான ஒரு வளர்ச்சி. முஸ்லிம் பெண்களின் எழுத்து ஆக்கங்களைப் படிக்கும்போது அவர்களை நீண்டகாலமாக எழும்பவிடாது கூண்டுக் கிளிகளாய் வளர்த்த வைதீகத்தை சபிக்காமல் இருக்க முடியாது. இன்றைய மாற்றத்தை முஸ்லிம் சமூகம் வரவேற்க வேண்டும். இந்த ஆண் பெண் புத்திஜீவிகள் முஸ்லிம்களுக்குள் ஒரு புதிய வர்க்கமாக உருவாகியுள்ளனர். அவர்களின் கைகளுக்குள் தலைமைத்துவம் செல்ல வேண்டும். ஆனால் அதைவிடவும் ஒரு கடமை இப்புத்திஜீவிகளுக்கு உண்டு.
முஸ்லிம் சமூகம் இன்னும் அரசியல் விவகாரங்களிலும் அதுபற்றிய சிந்தனையிலும் முதிர்ச்சி அடையவில்லை. தம்முடன் உள்ள வாக்குரிமையின் பெறுமதியையும்கூட பெரும்பாலான முஸ்லிம்களால் உணரமுடியாமல் இருக்கின்றது. அதை உணர்ந்திருந்தால் இன்று நாடாளுமன்றத்துக்குள் அவர்களின் பிரதிநிதிகளாய் இருப்போரில் தொண்ணூறு சதவீதமானவர்களேனும் அங்கே நுழைந்திருக்கமாட்டார்கள். அவர்களை நீக்குவது இச்சமூகத்தின் இன்றைய கடமை. முஸ்லிம் சமூகத்துக்கு அந்தப் பிரதிநிதிகள் ஓர் அசிங்கம். அந்த அசிங்கத்தைக் களைய சமூகத்துக்கு வழிகாட்ட வேண்டியவர்கள் இப்புத்திஜீவிகளே. அது இவர்களின் தலையாய கடமை. அத்துடன் முஸ்லிம்களுக்கென்று ஒரு தனிக்கட்சி தேவையேயில்லை. நாட்டின் யாவரினதும் நலனுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் கொள்கைகளை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்தக்கூடிய எத்தனையோ மனிதாபிமானங்கொண்ட முற்போக்கான சிங்கள தமிழ் மக்கள் இருக்கவே இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்தாலன்றி முஸ்லிம்களுக்கு விமோசனமில்லை. இந்த உணர்வை புத்திஜீவிகள் முஸ்லிம் சமூகத்திடையே பதித்துவிட்டால் தலைமைத்துவமும் உங்களை வந்தடையும்.- Vidivelli