ரணிலை பிரதமராக்குவதற்கு எமக்கு பெரும்பான்மை உண்டு

ம.வி.மு.வின் ஆதரவு அவசியமில்லை என்கிறது ஐ.தே.க.

0 602

ஐக்கிய தேசியக் கட்சியின்  தலைவர்  ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக்குவதற்குத்  தேவையான பெரும்பான்மை   எம்மிடம்  காணப்படுகின்றது. மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவு எமக்கு அவசியமில்லை என்று   ஐக்கிய தேசிய  கட்சியின்  பொதுச்செயலாளர்  அகிலவிராஜ்  காரியவசம் தெரிவித்தார்.

தமிழ்  தேசிய கூட்டமைப்பு  ஜனநாயகத்தை   பாதுகாக்க  தொடர்ந்து ஒத்துழைப்பு  வழங்கும் என்ற  நம்பிக்கை எமக்குண்டு. மக்கள் விடுதலை முன்னணியினர் எமக்கு ஒரு போதும் புறமுதுகு  காட்டவில்லை.

ஜனநாயகத்தை பாதுகாக்க பாரிய ஒத்துழைப்பு வழங்கினார்கள். இருப்பினும்  ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்க  ஆதரவு  வழங்கமாட்டோம் என்று  உறுதியாகவும் குறிப்பிட்டிருந்தனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக்  கட்சியின்  தலைவர்  ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கை பிரேரணைக்கு  மக்கள் விடுதலை முன்னணியினர் ஆதரவு  வழங்க மறுத்துள்ளமை  தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு   குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவின்  அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாடுகளை கண்டித்தும்,   போலி  பிரதமர் மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவையின்  செயற்பாடுகளுக்கு  பாரிய போராட்டத்தின்  மத்தியில்  இன்று  நீதித்துறையின் ஊடாக தடைகளை ஏற்படுத்தியுள்ளோம். ஜனநாயகத்தை நிலைநாட்ட  கடந்த  நாட்களில்   பாராளுமன்றத்தில்   ஐக்கிய தேசிய  கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய  கட்சிகள் ஒன்றிணைந்தே ஒற்றுமையாக செயற்பட்டு வெற்றியினையும்  அடைந்துள்ளோம்.

இன்று  நம் நாட்டில் சட்டரீதியான பிரதமர் மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவை கிடையாது.  அடுத்த வாரத்திற்குள்   பிரதமர் மற்றும் அமைச்சரவையினை விரைவில் நியமிக்க வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவை   மீண்டும் பிரதமராக்குவதற்கான நம்பிக்கை  பிரேரணையை நாளை மறுதினம்   பாராளுமன்றத்தில்   சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.  இப்பிரேரணைக்கு மக்கள் விடுதலை முன்னணியினர் ஆதரவு  வழங்க மறுத்துள்ளனர்.  இவர்களது இத்தீர்மானம் யாவரும்  எதிர்பார்த்ததே.

ரணில்  விக்கிரமசிங்கவின்  பெரும்பான்மை  பலத்தினை நிரூபிக்க 113  உறுப்பினர்களது ஆதரவே தேவையாகும்.  இப்பெரும்பான்மைக்கு மக்கள் விடுதலை முன்னணியினரது ஆதரவு  அவசியமில்லை.  அது  அவர்களது தனிப்பட்ட கட்சிசார் தீர்மானமாகும்.  மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்தேசிய  கூட்டமைப்பினரது ஆதரவு  இல்லாவிடின் எதிர்  தரப்பினரை விட  ஐக்கிய தேசிய  கட்சிக்கு குறைவான பெரும்பான்மையே  காணப்படும் என்று  மஹிந்த தரப்பினர்  தவறான கணிப்புக்களை முன்னெடுக்கின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர்  தொடர்ந்து ஜனநாயகத்தை பாதுகாக்கவே  குரல் கொடுத்து வருகின்றனர். இவர்கள் தற்போதைய ஒரு சில  விடயங்களை மாத்திரம் மையப்படுத்தி அரசியல்  ரீதியான தீர்மானங்களை ஒருபோதும் எடுக்கமாட்டார்கள்.  தூரநோக்கு சிந்தனையுடன் அரசியல் தீர்வுகளை முன்னெடுக்கவே முனைவார்கள். ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனநாயகத்திற்கு  விரோதமான செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியினர்  எமக்கு ஆதரவு  வழங்க மாட்டார்கள் என்பதற்காக  அவர்களை குறைகூற முடியாது. ஜனாதிபதியின் அரசியல் சூழ்ச்சியை முறியடித்து ஜனநாயகத்தை   பாதுகாக்க இவர்கள் தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயற்பட்டார்கள்.  ஒருபோதும் புறமுதுகு  காட்டி இக்கட்டான  சூழ்நிலையில்  ஜனநாயகத்திற்கு  விரோதமாக அவர்கள் செயற்படவில்லை.  ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக்க ஒருபோதும் ஆதரவு  வழங்கமாட்டோம் என்று ஜே.வி.பி.யினர்   ஏற்கனவே உறுதியாக குறிப்பிட்டு  விட்டனர்.  ஆகவே  இவர்களது இத்தீர்மானம்  எதிர்பார்க்கப்பட்டதே,

225  பாராளுமன்ற உறுப்பினர்களும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்குமாறு குறிப்பிட்டாலும். தான்  ரணிலை மீண்டும் பிரதமராக்கமாட்டேன் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.    பிரதமராக ஒருவரை  நியமிக்க  225 உறுப்பினர்களது ஆதரவு தேவையில்லை.113 பெரும்பான்மையே போதும் என்பதை ஜனாதிபதி  தெரிந்துகொள்ள வேண்டும். தனது விருப்பத்தின் பிரகாரம்  ஜனாதிபதி பிரதமர் ஒருவரை  பெரும்பான்மை  பலத்திற்கு எதிராக தெரிவு செய்யலாம் என்று அரசியலமைப்பில் எத்திருத்தத்திலும் குறிப்பிடப்படவில்லை.

இவரது தவறான செயற்பாடுகளே இன்று அரசியலமைப்பை  கேள்விக்குறியாக்கி  அரசியல் நெருக்கடியினை தீவிரப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது விருப்பத்தின்  பெயரில் பெரும்பான்மை  பலம் இல்லாத   பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக் ஷவை அரசியலமைப்பிற்கு முரணான நியமித்தமையின்  பிரதிபலனையே இன்று முழு  நாடும் அனுபவித்து வருகின்றது. ஆகவே,  இனி  தனது விருப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை.  பாரர்ளுமன்றத்தின் பெரும்பான்மை  பலத்திற்கு  சிறந்த அரசியல்  தலைவர் என்ற ரீதியில்  மதரிப்பளித்து   செயற்படுவது அவரது  பதவிக்கு அழகாகும்.  முறையான அரசாங்கத்தின் நிர்வாகத்திலே தேர்தல்கள் சுயாதீனமாக இடம் பெற வேண்டுமே தவிர அரசியல் சதியால் உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் அல்ல என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.