உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்புடையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது. எவ்வாறிருப்பினும் இந்த விவகாரத்தில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பினை அரசாங்கம் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினரிடம் ஒப்படைத்துள்ளது என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பிலும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தொடர்பிலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ளது.
அதற்கமைய இதனுடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் எவ்வித அழுத்தங்களும் இன்றி முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது சந்தேகநபர்கள் தப்பிவிடக் கூடாது என்ற அடிப்படையில் சட்டமா அதிபர் திணைக்களம் செயற்பட்டு வருகிறது. இதனுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளில் அரசாங்கம் என்ற ரீதியில் அரசியல் அழுத்தங்கள் எவற்றையும் நாம் பிரயோகிப்பதில்லை. எனவே விசாரணைகளின் முழு பொறுப்பும் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.- Vidivelli