திடீரென நிறுத்தப்பட்ட முஸ்லிம் சேவை ; மன்னிப்புக் கோரினார் இ.ஒ.கூ. தலைவர்
மீண்டும் வழமை போன்று 102.1 அலைவரிசையில்
(றிப்தி அலி)
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட தடங்கலுக்கு மன்னிப்புக் கோருவதாக அதன் தலைவர் ஹட்சன் சமரசிங்க தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமையும் , செவ்வாய்க்கிழமை காலையும் முஸ்லிம் சேவையின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகவில்லை.
எனினும் செவ்வாய்க்கிழமை இரவு 8.00 மணிக்கு மீண்டும் வழமை போன்று 102.1 அலைவரிசையில் ஒலிபரப்பாகியது.
இதன்போது இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவர் ஹட்சன் சமரசிங்க விசேட உரையொன்றினை சிங்கள மொழியில் நிகழ்த்தினார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சுமார் 70 வருடங்கள் பழமை வாய்ந்த SLBC இன் தமிழ் தேசிய சேவை மற்றும் முஸ்லிம் சேவை ஆகியன 102.1 அலைவரிசையில் ஒலிபரப்பாகி வந்தன.
தமிழ் தேசிய சேவை நிகழ்ச்சிகள் அதிகாலை 4.00 மணி முதல் இரவு 10.30 மணி வரை ஒலிபரப்பாகியது. இதில் காலை 8.00 – 10.30 மணி வரையும், இரவு 8 – 9 மணி வரையும் முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டன.
இவ்வாறான நிலையில், கல்வி அமைச்சின் அனுசரணையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் ‘விசன் எப்.எம்’ எனும் கல்விச் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் தேசிய சேவையின் 102.1 அலைவரிசையும், பிறை எப்.எம் இயங்கிய 102.3 அலைவரிசையும் ஒதுக்கப்பட்டது.
இதனையடுத்து பிறை எப்.எம்.இற்கு விசேட அலைவரிசையொன்று ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் தேசிய சேவைக்கு எந்தவித அலைவரிசையும் ஒதுக்கப்படவில்லை.
இதனால் தமிழ் தேசிய சேவை மற்றும் அதில் ஒலிபரப்பாகிய முஸ்லிம் சேவை ஆகியவற்றின் நிகழ்ச்சிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. அது மாத்திரமல்லாம் ஐந்து வேளை ஒலிபரப்பப்பட்ட அதானும் இடைநிறுத்தப்பட்டது.
இந்த விடயம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதை அடுத்து ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவர் ஹட்சன் சமரசிங்கவிற்கு பல்வேறு மட்டங்களிலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.
இதனையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை காலை விசேட கூட்டமொன்று இடம்பெற்றது. இதன்போது, அதே அலைவரிசையில் மீண்டும் முஸ்லிம் சேவையினை ஒலிபரப்புவது என தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய மீண்டும் முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள் வழமைபோன்று ஒலிபரப்பாகின்றன. “முஸ்லிம் மக்களின் மத உரிமையினை கௌரவிக்கின்றேன்” என ஹட்சன் சமரசிங்க இந்த கூட்டத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இது போன்று தமிழ் சேவையும் நேற்று (18) புதன்கிழமை முதல் அதே அலைவரிசையில் ஒலிபரப்பாகின்றமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli