– பேராசிரியர் மௌலவி
எம்.எஸ்.எம். ஜலால்தீன்(கபூரி) –
இலங்கையின் அண்மைக்கால பேசுபொருளாகவும் மாற்று மதத்தவர் சிலரின் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் முஸ்லிம்களின் ஆயிரம் ஆண்டு கால வரலாற்றைக் கெண்ட ‘மத்ரஸாக்கள்’ காணப்படுகின்றன. இவ்வாறானதொரு இக்கட்டான நிலையில் இந்நாட்டின் வரலாற்றில் மத்ரஸாக்களின் தோற்றம், அதன் பங்களிப்பு மற்றும் செயற்பாடுகளையும் இக்கட்டுரை ஓரளவு நிதர்சனமாக முன்வைக்கும் என எண்ணுகின்றேன்.
‘மத்ரஸாக்கள்’ என்ற அறபுச் சொல்லை பாடசாலைகள், கல்விக் கூடங்கள் என தமிழில் மொழிபெயர்க்கலாம். பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்திலேயே இஸ்லாம் இலங்கைக்கு அறிமுகம் செய்யப்பட்டதாக மிகத் தெளிவான வரலாற்றுக் குறிப்புகள் இன்றும் காணப்படுகின்றன. இஸ்லாமிய கல்விப் போதனைகள் பெருமானார் (ஸல்) அவர்களின் நபித்துவ (இறைதூதரான) வெளிப்பாட்டின் பின், முஸ்லிம்களின் புனிதமிகு மஸ்ஜிதுகளில் ஒன்றான மதீனா முனவ்வராவை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றன. சில நூற்றாண்டுகளில் இஸ்லாத்தின் விரிவாக்கம் வியாபித்த போது , அப்பாஸிய கிலாபத்தின் தலை நகரான பக்தாத்துக்கும், அதை அண்மித்துள்ள நாடுகளுக்கும் மிக விரைவிலேயே இஸ்லாமிய கல்வி முறைகளும் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் வாழ்ந்த நாடுகளுக்கெல்லாம் இஸ்லாமியப் போதனைகள் அறிமுகமாகின. இத்தொடரிலேயே இலங்கையிலும் இஸ்லாமிய போதனைகள் அறிமுகமாகியது என நாம் உறுதி கொள்ளக்கூடிய பல வரலாற்றுச் சான்றுகள் காணப்படுகின்றன. இவ்வாறான இஸ்லாமிய போதனைகள் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்த இலங்கையின் கிராமங்கள், நகரங்களில் காணப்பட்ட மஸ்ஜிதுகளிலேயே பெரும்பாலும் இடம்பெற்று வந்தன.
‘எவ்வாறெனினும் கி.பி. 1870ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் காணப்பட்ட இவ்வாறான இஸ்லாமிய போதனை நிலையங்களின் எண்ணிக்கை, அதில் கல்வி கற்ற மாணவர் தொகை, கற்பிக்கப்பட்ட கல்விமுறை, கல்விகற்று வெளியான மாணவர் தொகை என்பன பற்றியெல்லாம் உறுதியாகக் கூற முடியாதுள்ளது. (இப்றாஹீம் எம்.ஏ.)
1870க்கு முன் இலங்கையில் காணப்பட்ட இவ்வாறான இஸ்லாமிய கல்வி போதனை நிலையங்களை இரண்டாக வகைப்படுத்தலாம்.
1. ‘மக்தபா’ அல்லது ‘கதாதீபு’ என அழைக்கப்பட்ட சிறார்களுக்கு அல் குர்ஆனையும், இஸ்லாமிய நம்பிக்கை, மார்க்க சட்டதிட்டங்கள், எழுத்துப் பயிற்சி, கணிதம் என்பவற்றை கற்பிக்கும் ஆரம்ப மத்ரஸாக்கள். இவ்வாறான சில மத்ரஸாக்களில் குர்ஆனை மனனம் செய்யும் பகுதியும் காணப்பட்டது.
2. உயர் கல்வியைக் கற்கும் அறபுமொழி மத்ரஸாக்கள். இவ்வாறான மத்ரஸாக்களில் அறபுமொழி இலக்கண, இலக்கியங்கள், அல்குர்ஆன், அல்ஹதீஸின் விரிவான ஆய்வுகள், இஸ்லாமிய சட்டக்கலை, வரலாறு என பல்வேறு துறையிலான போதனைகள் இடம்பெற்று வந்தன.
அறபுநாடுகளில் தோற்றம்பெற்றிருந்த இவ்வாறான உயர்கல்வியை அடிப்படையாகக் கொண்ட மத்ரஸாக்கள் கி.பி. 16ஆம்நூற்றாண்டில் இந்தியாவிலும், 19ஆம் நூற்றாண்டில் இலங்கையிலும் அறிமுகமாகின.
கி.பி. 1258இல் நடந்த பக்தாதின் வீழ்ச்சிக்கு முன் இலங்கை முஸ்லிம்களின் அறபுலகத் தொடர்புகளும், தென்னிந்தியா, இந்தோனேஷியா, மலேஷியா போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளுடனான தொடர்புகளும் மிக அதிகளவில் காணப்பட்டன. அறபுலக கலீபாவான ஹாறூன் ரஷீத் அவர்கள் இலங்கை முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய கல்விப் போதனைகளைக் கற்பிக்க காலித் இப்னு பக்காயா என்பவரை இலங்கைக்கு அனுப்பியதாக உறுதியான வரலாற்று சான்று காணப்படுகின்றது. அவரைத் தொடர்ந்து வந்த பல கலீபாக்களும் இவ்வாறான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். இலங்கைக்கு வியாபாரிகளாக வந்த பல இஸ்லாமிய அறிஞர்களும் இலங்கையில் தரித்திருந்து இஸ்லாமிய கல்விப் போதனைகளில் மிக விருப்பமுடன் ஈடுபட்டு வந்ததையும் அறிய முடிகின்றது.
இலங்கையின் சில இஸ்லாமிய அறிஞர்கள் பக்தாதிலும், அறபுலக நாடுகளிலும் மிகவும் பிரபல்யம் பெற்று விளங்கினார்கள். இலங்கை முஸ்லிம் அறிஞர்களால் அறபு மொழியில் எழுதப்பட்ட பல நூல்கள், ஆக்கங்கள் அறபுலக அறிஞர்களின் பாராட்டையும் கவனத்தையும் பெற்றிருந்ததாகவும் நாம் அறிய முடிகின்றது.
இலங்கையை ஆண்ட பல சிங்கள மன்னர்கள் இவ்வாறு அறபுமொழியில் திறமைபெற்று விளங்கிய முஸ்லிம் அறிஞர்களை எகிப்து, பக்தாத் போன்ற அறபுலக நாடுகளுக்கு தூதுவர்களாக அனுப்பி அவர்களின் பல்வேறு வெகுமதிகளை தமக்காக பெற்றுக்கொண்டதோடு, ஏற்றுமதி இறக்குமதி – பண்டமாற்று வர்த்தகத்துக்கும் அவர்களைப் பயன்படுத்தி வந்தார்கள்.
இலங்கையை ஆட்சிசெய்த போர்த்துக்கேயர் ஒல்லாந்தர்களின் ஆட்சிக் காலங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கும் அறபு நாடுகளுக்குமிடையிலான தொடர்புகளும் அறபு மொழி மூலமான வியாபார பரிமாற்றமும் ஓரளவு வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.
மத்ரஸாக்களின் தோற்றம்
19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையின் தென் மாகாணத்தின் வெலிகமயில் ‘மத்ரஸதுல் பாரி’ என்ற மத்ரஸாவும், அதனைத் தொடர்ந்து காலி கோட்டையில் ‘பஹ்ஜதுல் இப்றாஹிமிய்யா’ என்ற மத்ரஸாவும் இலங்கையின் முதன்மை மத்ரஸாக்களாகத் தோற்றம் பெற்றன. இலங்கையில் தோற்றம் பெற்ற பல அரசாங்கப் பாடசாலைகளில் அறபு மொழியும் ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக சேர் ராஸிக் பரீதின் முயற்சியினால் அறபு மொழி ஒரு பாடமாக அரச பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டு வந்ததுடன், இதைக் கற்பிப்பதற்காக மௌலவி ஆசிரியர்களை நியமிக்கும் திட்டமும் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இவ்வரலாற்றின் தொடர்ச்சியாக கி.பி. 19ஆம் நூற்றாண்டிலிருந்தே கிட்டத்தட்ட இலங்கையில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் எல்லா நகர்கள், கிராமங்களிலும் மத்ரஸாக்கள் தோற்றம் பெற்று, முஸ்லிம் சமய, கலாசாரத் திணைக்களத்தில் அவை பதிவு செய்யப்பட்டு, அரச அங்கீகாரம் பெற்ற அறபு மொழிக் கலாசாலைகளாக இன்றுவரை தமது பணியினைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. இவ்வாறு இலங்கையில் இதுவரை 500க்கும் மேற்பட்ட மத்ரஸாக்கள் தம்மை பதிவு செய்து, ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான உலமாக்களை இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தின் சமய ரீதியிலான எழுச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் பட்டமளித்து, வெளியாக்கி வருகின்றன.
உலமாக்களின் பங்களிப்பு என்ன?
இவ்வாறு இலங்கையில் அறபுக் கலாசாலைகளில் 6 – 8 வருடங்கள் கல்வி கற்று வெளியான உலமாக்கள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஆயிரக்கணக்கில் காணப்படுகின்றார்கள். இவர்களின் செயற்பாட்டைப் பொறுத்தவரையில் முஸ்லிம் சமூகம் மட்டுமன்றி, இந்நாடும் பல்வேறு வகையில் பல நன்மைகளை பெற்றுள்ளது. பெற்று வருகின்றது. அவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் நாம் பின்வருமாறு அடையளப்படுத்தலாம்.
முஸ்லிம் சமூகத்தின் தாஇக்களாக n(பிரச்சாரகரர்களாக) உலமாக்கள்
முஸ்லிம் சமூகம் என்பது வல்ல அல்லாஹ்வின் வழிகாட்டலான அல் குர்ஆனையும் பெருமானார் (ஸல்) அவர்களின் சுன்னத்தான ஹதீஸ்களையும் அடிப்படை வழிகாட்டியாகக் கொண்டு, தனது இம்மை, மறுமை வாழ்வை சீரமைத்துக் கொள்ள உறுதி கொண்டுள்ள ஒரு சமூகமாகும்.
இந்த வகையில் இவ்வுலகில் எவ்வாறு வாழ வேண்டும், தம் குடும்பம், அயலவர், பிற சமூகத்தினரோடு எவ்வாறு தொடர்புகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்று அல்குர்ஆன், அல்ஹதீஸ் மூலம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதோடு, தான் வாழும் நாட்டின் சட்ட திட்டங்களையும் மதித்து, அரச ஆணைக்கேற்ப செயற்பட வேண்டுமெனவும் இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது.
இஸ்லாத்தில் பெரும்பாவங்களாக இறைவனுக்கு இணைவைப்பது மட்டுமன்றி, விபச்சாரம், போதைவஸ்து பாவனையும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. விபசாரமும் போதைவஸ்து பாவனையும் எமது நாட்டின் எதிர்கால சந்ததிகளையே நாசமாக்கும் வகையில் இந்த நாட்டில் இப்போது தலைவிரித்தாடுகின்றது. இவ்விரண்டையும் இந்நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதற்கு எமது அரசாங்கம் அரும் பாடுபடுவதுடன் பல்வேறு வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றது. குறிப்பாக போதைவஸ்து பாவனை இப்போது உலகில் பல வடிவம் பெற்று பல மூலப் பொருள்களாக உருவம் பெற்று வருகின்றது. முன்னர் போதைவஸ்து பொருட்களாக நாம் கேள்விப்பட்ட கஞ்சா, சாராயம், வெளிநாட்டு மதுபானங்கள் மட்டுமன்றி, இப்போது ஹெரோயின், ஐஸ் என்ற பல பெயர்களில் புதுவடிவம் பெற்று வருகின்றது. நாட்டின் கடற்பரப்பில் தினமும் கோடிக்கணக்கான போதைவஸ்துகள் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டாலும் பல தடைகளை ஏற்படுத்தினாலும் இன்றுவரை இவ்விநியோக மார்க்கம் வளர்ந்து கொண்டே வருகின்றது.
இஸ்லாம் மார்க்கத்தைப் பொறுத்தவரையில் போதைவஸ்து என்பது என்ன பெயர் கொண்டு எவ்வகையில் வெளிவந்தாலும் அது ஒரு பெரும் பாவமாகக் கணிக்கப்படுகின்றது. அதே நேரத்தில் இலங்கையின் பெரும்பான்மையின மக்களின் மதமான பௌத்த மதத்தை பின்பற்றுபவரிடையே மது மற்றும் போதைவஸ்துப் பாவனை அதிகம் காணப்படுவதாக அண்மையில் மேற் கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின் மூலம் (Gombrich and Obeysekera.1988) பகிரங்கமாகத் தெரிய வந்துள்ளது. 4532 பேரிடத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில் (46 வயதுடைய ) 48.1 வீத ஆண்களும் 1.2 வீத பெண்களும் போதைவஸ்து பாவனையை உடையவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
2019ஆம் ஆண்டு இலங்கையின் மாவட்ட ரீதியில் மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள் தொடர்பான தகவல் நிலையத்தினால் (ADIC) மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் அநுராதபுர மாவட்டத்தில் 34.7 வீதமானோரும் நுவரெலியா மாவட்டத்தில் 34.3 வீதமானோரும் கொழும்பு மாவட்டத்தில் 30.7 வீதமானோரும் மதுபான பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான மற்றொரு பெரும்பாவமே விபசாரமாகும். இலங்கையில் இன்று 50000 (ஐம்பதினாயிரம்) விபசாரிகள் காணப்படுவதாக புதிய ஆய்வொன்று தெரிவிக்கின்றது. (UNFPA and UNDP- – 2014) இலங்கையில் விபசாரம் மேற்கொள்வது சட்டரீதியாக தடை செய்யப்பட்டாலும் கூட, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை, வறுமை, இரவு கேளிக்கை விடுதிகள், மஸ்ஸாஜிங் நிலையம், ஸ்பா (Spa) நிலையங்கள் என்பவற்றினூடாக விபசாரம் தொடர்ச்சியாக வளர்ச்சி பெற்று வருவதை ஆய்வுகளின் மூலம் அறிய முடிகின்றது. இலங்கையில் விபசாரம் தடை செய்யப்பட்டாலும், அதற்கான பல்வேறு மூலவழிகள் இன்றும் திறந்து விடப்பட்டுள்ளன. குறிப்பாக நகரங்களில் மூலை முடுக்கெல்லாம் காணப்படும் சட்ட அனுமதி பெற்ற தொடுகை நிலையங்கள் (Massage Centers and Spa) மூலம் இளம் வயது பெண்கள் மட்டுமன்றி, சிறுமிகள் கூட விபசாரத்தில் இலகுவாக இணைந்து கொள்கின்றனர்.
இலங்கையில் மத்ரஸாக்களை பூரணமாக இல்லாதொழிக்க பல மட்டத்தில் குரலெழுப்பி, சிங்கள மக்களை உணர்ச்சியூட்டும் பௌத்த துறவிகள் எவரும், இலங்கையில் இடம்பெறும் இவ்வாறான விபசார விடுதிகள், அதில் சீரழியும் ஆயிரக்கணக்கான யுவதிகள் பற்றியோ எவ்வித குரலும் எழுப்பாது அதற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலிருப்பது புதுமையானதே.
ஆனால் அறபுக்கல்லூரிகளில் (மத்ரஸாக்களில்) கல்வி கற்று வெளியாகும் உலமாக்கள், விபசாரம், போதைவஸ்துக்கு எதிராக இஸ்லாமிய வழியில் போதனை செய்து முடிந்தளவு முஸ்லிம் சமுதாயத்திலாவது இவ்விரு பெரும் பாவங்களையும் குறைப்பதற்கு காரண கர்த்தாக்களாக அமைந்துள்ளார்கள். அவ்வாறே இந்த உலமாக்கள், பொய் பேசுதல், மனித குலத்துக்கு தீங்கு செய்தல், முறைகேடான வியாபாரம், கொடுக்கல் வாங்கல் போன்ற பல்வேறு பாவங்களுக்கு எதிராகவும் மக்களுக்கு உரிய இஸ்லாமிய போதனைகளை தினமும் நடாத்தி, அப்பாவங்களிலிருந்து அவர்கள் முற்று முழுதாக விடுபட அர்ப்பணிப்புடன் சேவையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய தூய்மையான இஸ்லாமியக் கல்வியை இவர்களுக்கு போதித்தது மத்ரஸாக்களே என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
இலங்கையில் முஸ்லிம்களின் மத்ரஸாக்கள் போன்று பௌத்தர்களின் தம்ம பாடசாலைகளும், ஹிந்துக்களினதும், கிறிஸ்தவர்களினதும் அறநெறிப் பாடசாலைகளும் சிறுவர்களை பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு, அவர்களுக்கு தத்தமது சமய போதனைகளையும் அறநெறிக் கருத்துக்களையும் போதிப்பதை, நடைமுறைப்படுத்துவதை நோக்காகக் கொண்டு பல்லாயிரம் வருடங்களாக செயல்பட்டு வருகின்றன. இவ்வாறான சமயம் சார்ந்த பாடசாலைகள், கல்லூரிகளால் அதில் கல்வி பயிலும் மாணவர்களிடையே எந்தளவு அறநெறிக் கருத்துக்களை, வாழ்க்கை முறைகளை ஏற்படுத்த முடிந்தது? என்பது ஆழமாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.
ஏனெனில், இலங்கையில் வாழும் முஸ்லிம் அல்லாதவர்களிடையே போதைவஸ்துப் பாவனை, பாவமான ஆண் பெண் தொடர்புகள், விபச்சாரங்கள், ஏனைய சமூகங்களுக்கு எதிரான தாக்குதல்கள், கொலைகள், கொள்ளைகள், தர்க்கங்கள் போன்ற பல பாவச் செயல்களும், தவறான நடத்தைகளும் இலங்கையில் தினமும் அதிகரித்துச் செல்கின்றதே தவிர குறைந்தபாடில்லை. பௌத்த தர்மங்களுக்கும் பௌத்த துறவிகளின் வழிகாட்டுதலுக்கும் முற்றாக கீழ்ப்படியும் சமூகமாக தம்மைக் காட்டிக் கொண்டிருக்கும் பௌத்தர்களால் கூட இவ்வாறான பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ள முடியாமல் இருப்பது துரதிஷ்டமே. இலங்கையில் முஸ்லிம்கள், தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களால் மேற்கொள்ளப்பட்ட பல தாக்குதல்கள், அராஜக நடவடிக்கைகளின் வரலாற்றையும் அச்செயற்பாட்டின் தன்மையையும், நாம் ஆய்வு செய்கின்ற போது பௌத்த மத இளைஞர்களாலேயே இத்தாக்குதல்கள் தோற்றுவிக்கப்பட்டு மிகத் திட்டமிட்ட முறையில் மாற்றுச் சமூகத்தவர்களும் அவர்களின் வீடுகள், வணக்கஸ்தலங்கள், வியாபாரத்தலங்கள் என அழித்தொழிக்கப்படுவதை அளுத்கம, திகன, மினுவாங்கொட ஆகிய இடங்களில் இடம்பெற்ற மிக அண்மைக்கால இனவன்முறைகளின் போது கூட எம்மால் அறிய முடிந்தது. அதிலும் மிக ஆச்சரியம் என்னவென்றால், நல்லொழுக்கத்தையும் அறநெறிகளையும் மற்ற சமூகங்களுடனான உறவுகளையும் போதிக்க வேண்டிய பௌத்த மதகுருமாரே இவ்வாறான சில கலவரங்களின் முக்கிய சூத்திரதாரிகளாக செயல்பட்டுள்ளமையை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் மூலம் அறிய முடிகின்றது.
அவ்வாறானால் பௌத்த மத ஆரம்பக் கல்விகளும் தம்ம பாடசாலைகளும் அவற்றின் போதனைகளில் செயற்பாட்டுக் கிரமத்தில் வெற்றிபெற முடியவில்லையா? என்ற கேள்வி எம்மில் எழுகின்றது. அதுமட்டுமன்றி பௌத்த மக்களையும், இளைஞர்களையும் குறிப்பாக யுவதிகளையும் பெருமளவில் சீரழித்துக்கொண்டிருக்கும் போதைவஸ்து, விபச்சாரம், தவறான ஆண் பெண் உறவுகள், சமயம் வெறுக்கும் களியாட்டங்களை இந்த நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழிக்கும் எந்த வேலைத் திட்டத்தையும் எவ்வித பிரசாரங்களையும் எந்த மதகுருவோ, பன்சலைகளோ, அமைப்புகளோ இதுவரை திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளவுமில்லை. அதற்கான எவ்வித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை என்பது இவற்றினால் பாதிப்புக்குள்ளாகும் எம்மவர்களுக்கும் ஒரு துரதிஷ்டமே. இந்த நாட்டின் எல்லா விடயங்களிலும், அரசியல், கல்வி, சுகாதாரம், அபிவிருத்தி என்ற அனைத்து துறைகளிலும் ஆழமாக வேரூன்றி பாடுபடும் எந்த பௌத்த துறவிகளும் மேற்சொன்ன விடயங்களில் இன்றுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காது அவற்றை அவர்களே அங்கீகரிப்பது போல் கைகட்டி வேடிக்கை பார்த்து நிற்கின்றனர்.
ஆனால் மத்ரஸாக்களில் கல்வி கற்று வெளியாகும் உலமாக்கள், தமக்கு மத்ரஸா தந்த தூய்மையான கல்வியின் வழியில் செயல்பட்டு, இவ்வாறான மோசமான, பாவமான, செயல்களை தமது சமூகத்திலிருந்து மட்டுமல்ல, தாம் வாழும் சூழல், தமது பிரதேசம், ஊரிலிருந்து வேரோடு களைவதற்கு தொடர்ந்து பாடுபட்டு வருவதுடன், இதற்காக வெள்ளிக்கிழமை ஜும்ஆ, மிம்பர்கள், தஃவா களங்கள், பயான்கள், திருமண வைபவங்கள், ஜனாஸா அடக்கம் செய்யப்படும் நிகழ்வுகள் என்ற அனைத்தையும் பூரணமாக பயன்படுத்தி வருவதன் மூலம் குறைந்தது தமது சமூகத்திலிருந்தாவது இவற்றை இல்லாதொழிக்க முயற்சிக்கின்றனர். எனவே சமூக, சமய, நாட்டின் மறுமலர்ச்சிக்கான மத்ரஸாக்களின் பங்களிப்பை எவரும் இலகுவாகக் கருதி விட முடியாது.
இலங்கையின் கல்விப் பங்களிப்பில் உலமாக்கள்
இலங்கையில் காணப்படும் பாடசாலைகளிலும், உலமாக்கள் ஆசிரியர்களாக, அதிபர்களாக, கல்விப் பணிப்பாளர்களாக, விரிவுரையாளர்களாக, திட்டமிடல் அதிகாரிகளாக, ஆயிரக்கணக்கில் கடமையாற்றி வருகின்றார்கள். பலர் தமது கடமைகளை செவ்வனே நிறைவேற்றி ஓய்வும் பெற்றுள்ளார்கள். இவ்வாறான உலமாக்கள் தமது சமயம் சார்ந்த அறபுமொழி, இஸ்லாமிய துறை பாடங்கள் மட்டுமன்றி, பல்வேறு துறைகளிலும் பாடங்களிலும் கூட இவ்வாறு வேவையாற்றி வருகின்றார்கள். இவ்வாறான கடமை உணர்வுள்ள உலமாக்களை உருவாக்கியது இந்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளாக செயல்பட்டுவரும் மத்ரஸாக்களே என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
வெளிநாட்டுத் தூதுவர்களாக உலமாக்கள்
இலங்கையில் காணப்படும் ‘ஜாமிஆ நளீமிய்யா’ போன்ற உயர் அறபுமொழி கல்விக் கூடங்களில் கற்று வெளியான பல இஸ்லாமிய அறிஞர்கள் இன்று இலங்கை நாட்டின் தூதுவர்களாக வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். எனக்குத் தெரிந்த வகையில் இவ்வாறு மூவர் வெளிநாட்டுத் தூதுவர்களாக பணி புரிகின்றனர். எவ்வாறு இலங்கையில் மன்னர் காலத்தில் அறபு மொழி தெரிந்த உலமாக்கள் மன்னர்களின் தூதுவர்களாக அறபு நாடுகளுக்கு பலமுறை சென்று வந்தார்களோ அப்பணி இப்போதும் உலமாக்கள் மூலம் தொடர்கின்றமை மத்ரஸாக்களின் இந்நாட்டுக்கான பங்களிப்பாகும்.
பல்கலைக்கழகங்களில் உலமாக்கள்
இலங்கையிலுள்ள பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் உலமாக்கள் விரிவுரையாளர்களாகவும், பேராசிரியர்களாகவும், பீடத் தலைவர்களாகவும் பீடாதிபதிகளாகவும் கடமையாற்றி வருகின்றனர். மத்ரஸாவில் தமது ஆரம்பக் கல்வியைக் கற்று வெளியான இவர்கள், அறபு, இஸ்லாமியத் துறைகளில் மட்டுமன்றி, பல்வேறு துறைகளிலும் கடமையாற்றி வருவதை ஒரு பல்கலைக்கழக முன்னாள் ஊழியர் என்ற வகையில் என்னால் நிரூபிக்க முடியும். அவ்வாறே உலமாக்கள் பலர் குறிப்பாக பெண் மௌலவியாக்கள் இலங்கையில் பல்கலைக்கழகங்களில் கற்று வைத்தியக் கலாநிதிகளாகவும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடமையாற்றி வருவதையும் நான் அறிவேன்.
அமைச்சுக்களின் செயலாளர்களாக உலமாக்கள்
இலங்கையின் மத்ரஸாக்களில் அறபுக் கல்விக்கூடங்களில் கற்று வெ ளியான பல உலமாக்கள் இலங்கையின் பல்வேறு அமைச்சுகளில் செயலாளர்களாக, உதவிச் செயலாளர்களாக தொடர்ந்து கடமையாற்றி வருகின்றனர். பலர் கடமையாற்றி இப்போது ஓய்வு நிலையையும் அடைந்துள்ளனர். இவ்வாறு இருபதுக்கும் மேற்பட்ட உலமாக்கள் பல்வேறு அமைச்சுகளில் செயலாளர்களாக, உதவிச் செயலாளர்களாக கடமையாற்றுவதை தரவுகள் மூலம் நாம் அறியலாம்.
மாவட்ட, பிரதேச செயலாளர்களாக உலமாக்கள்
இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் (மத்ரஸாக்களில், அறபுக்கல்விக் கூடங்களில் கற்று வெளியான) உலமாக்கள் மாவட்டச் செயலாளர்களாக சுமார் 25க்கும் மேற்பட்டோர் கடமையாற்றி வருவதையும், காலஞ்சென்ற முன்னாள் உதவி மாவட்ட செயலாளர் ஹபீப் முஹம்மது என்பவரும் ஒரு உலமாவே என்பதில் வியப்பில்லை. இவர்கள் அனைவரும் தமது மத்ரஸாக் கல்வியை இந்நாட்டின் சிறந்த நிர்வாகத்துக்கும் நல்லாட்சிக்கும் அர்ப்பணித்து செயற்படுகின்றமை அவர்களின் சேவை மனப்பாங்கு மூலம் நாம் அறியலாம்.
சட்டத்துறையில் உலமாக்கள்
அறபுக் கல்லூரிகளில் கல்வி கற்று வெளியான பல உலமாக்கள் இலங்கையில் பல பகுதிகளில் சட்டத்தரணிகளாகவும், நீதிபதிகளாகவும் கடமையாற்றி வருகின்றார்கள்.
சர்வதேச நாடுகளின் மகாநாடுகளில் மொழிபெயர்ப்பாளர்களாக உலமாக்கள்
இலங்கையில் 1976ஆம் ஆண்டில் அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு அப்போதைய பிரதமர், திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அவ்வாறே காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாடு 2013ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. இவ்வாறு பல சர்வதேச மாநாடுகளும், பல்வேறு சர்வதேச கருத்தரங்குகளும் இலங்கையில் பலமுறை நடைபெற்றுள்ளன. தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இம்மாநாடுகளில், கருத்தரங்குகளில் அறபு நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான அரசியல் பிரமுகர்கள், பிரதம மந்திரிகள், ஜனாதிபதிகள், அமைச்சர்கள், ஆய்வாளர்கள், ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதிகளாக பங்குபற்றுவதுடன் இந்நாட்டின் அபிவிருத்திக்கும் வளர்ச்சிக்கும் தம்மாலான பங்களிப்புக்களையும் தமது நாடுகளிலிருந்து பெற்றுக் கொடுத்துள்ளனர். இவ்வாறான மாநாடுகளில், முக்கிய மொழிபெயர்ப்பாளர்களாக இலங்கையின் மத்ரஸாக்களில் கல்வி கற்று வெளியான உலமாக்களே கடமையாற்றியுள்ளமை நிதர்சனமாகும். பொதுவாக இம்மாநாடுகளின் பூரண வெற்றிக்கு இந்த உலமாக்களும் குறிப்பிட்ட வகையில் தமது பங்களிப்பை நல்கியுள்ளமை வெள்ளிடைமலையாகும்.
இவ்வாறு ஆயிரம் ஆண்டுகளாக இந்நாட்டில் கல்வி போதிக்கும் மத்ரஸாக்களும், அங்கு கற்று வெளியாகிய அறிஞர்களும் இந்நாட்டின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் பல்வேறு வழிகளில் தொடர்ச்சியாக தமது பங்களிப்பை நல்கி வருகின்றமையை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
சஹ்ரானும் மத்ரஸாவும்
கடந்த 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாசிமும் ஒரு அறபுக் கல்லூரியில் மத்ரஸாவில் கற்றவரே என்பது இன்று மத்ரஸாக்களை இல்லாதொழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்பவர்கள் கூறும் முக்கிய காரணமாகும்.
இக்கூற்றில் உண்மையிருப்பினும், சஹ்ரானின் இளமைக் கால வாழ்க்கை வரலாற்றை தெரிந்தால், அவனின் மூர்க்கக் குணமும் யாருக்கும் கட்டுப்படாத வெறித்தனமும், தன்னிலையாக எம்முடிவையும் எடுக்கும் சர்வாதிகார போக்கையும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளமுடியும். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு விசாரணை அறிக்கையிலும் சஹ்ரானின் இவ்வாறான மோசமான செயற்பாடுகள் பல வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான பல மோசமான செயற்பாடுகளினாலேயே சஹ்ரான் மத்ரஸாவிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதுடன், அவன் மத்ரஸாவில் பூரணமாக கற்ற ஒரு உலமாவாக வெளிவரவில்லை.
சஹ்ரானின் மோசமான செயற்பாடுகளை இந்த நாட்டுக்கு முதலில் வெளிப்படுத்தியது மத்ரஸா நிர்வாகமே. இவனின் மிருகக் குணமே பல பயங்கரவாதிகளோடு தொடர்புகளையும் ஏற்படுத்தி உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு பல நூற்றுக்கணக்கான உயிர்களைக் காவு கொண்டது. இவ்வாறு மிருக குணம் கொண்ட ஒருவன் மத்ரஸாவில் சில காலம் கற்றதற்காக மத்ரஸாக்களை இல்லாதொழிக்க வேண்டும் என்று கூப்பாடு போடுவதில் என்ன நியாயம் இருக்கின்றது. வரலாற்று ரீதியாக முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்கும், உயர்ச்சிக்கும் மட்டுமன்றி இந்நாட்டின் ஐக்கியம், எழுச்சி, சர்வதேச அபிவிருத்தி, சிறந்த நிர்வாகம் அறபுலக முஸ்லிம் நாடுகளுடனான ராஜதந்திரத் தொடர்புகள் அந்நாடுகளின் பல்வேறு உதவிகள் என்பவற்றுக்கு கால்கோலாக உள்ள உலமாக்களை உருவாக்கும் இலங்கையின் மத்ரஸாக்கள், இந்நாட்டின் தேசிய சொத்துக்களில் ஒன்றாக கருதப்பட வேண்டும். பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.-Vidivelli