ஆங்கிலத்தில்: ஜாவிட் யூசுப்
தமிழில்: எம்.ஏ.எம்.அஹ்ஸன்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று இரண்டரை ஆண்டுகள் கடந்த பிறகும் நடந்த விடயங்களின் உண்மைத் தன்மையினை இந்த நாடு வெளியிடவில்லை. இது ஒரு பாதுகாப்பு தோல்வியே தவிர உளவுத்துறை தோல்வி கிடையாது. பல்வேறு தேவாலயங்கள் மற்றும் விடுதிகளில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கவும் காயமடையவும் காரணமான இந்த திட்டமிட்ட தாக்குதல்களைத் தடுக்க முடியவில்லை என்றபோதிலும் சட்டத்தை அமுல்படுத்தும் தரப்புகள் தாக்குதலுக்குப் பிறகு விரைவாக நடவடிக்கை எடுத்து இரண்டு வாரங்களுக்குள் பயங்கரவாத வலையமைப்பை செயலிழக்கச் செய்தன.
சில கைதுகள் இடம்பெற்றுள்ள நிலையில் விசாரணைகள் அனைத்தும் நத்தை வேகத்தில் நகர்வதாகவே தெரிகின்றது. அவ்வப்போது தாக்குதல்களில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. இருப்பினும் கடந்த காலங்களில் தாக்குதல்களைத் திட்டமிடுவதில் அல்லது நடத்துவதில் செல்வாக்குச் செலுத்திய குறிப்பிடத்தக்க எந்தவொரு தனி நபரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
விசாரணைகளில் பல இடைவெளிகள் உள்ளன. அவை பதில்களை விட அதிகமாக கேள்விகளையே எழுப்புகின்றன. சாரா அல்லது புலஸ்தினி (தற்கொலைதாரி ஒருவரின் மனைவி) என்பவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகின்ற நிலையில் அவர் தப்பிச் செல்வதை தடுக்கவோ அல்லது நாட்டுக்கு அழைத்து வரவோ எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. ஸஹ்ரானின் மனைவியின் தோழியாக சாரா இருந்துள்ளதால் அவரது சாட்சியம் இந்த வழக்கில் மிகவும் முக்கியமானது என்பதுடன் விசாரணைகளுக்கும் அது விலைமதிப்பற்றதாகும். மேலும் அவரிடம் இதுவரை இனங்காணப்படாத அந்தரங்கமான பல தகவல்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. தாக்குதல்கள் தொடர்பான உளவுத்துறை தகவல்கள் இந்தியாவில் இருந்தே பெறப்பட்டுள்ளன. எனவே சாராவுக்கும் இந்திய உளவுத்துறைக்கும் இடையில் தொடர்புகள் இருக்கும் என்றால் அது குறித்து விசாரணைகளும் நடத்தப்பட வேண்டும்.
ஊழல் எதிர்ப்பு முன்னணியின் செயலாளர் என்று தன்னைத்தானே கூறிக்கொண்ட நாமல் குமாரவின் மர்மமான செயற்பாடுகள் குறித்த விசாரணைகளின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. அவர் எங்கிருந்தோ திடீரெனத் தோன்றி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் தலைவர் நாலக சில்வா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போதைய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்வதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக அவர் கூறினார்.
நாமல் குமாரவுக்கு ஊடகங்கள் மூலம் கணிசமான விளம்பரம் கொடுக்கப்பட்டு இறுதியில் நாலக சில்வாவே கைதும் செய்யப்பட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு குருநாகலில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களின் போது திடீரென தோன்றியது தவிர, நாமல் குமார பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைந்தே இருந்தார்.
இந்த சம்பவங்களுக்குப் பின்னர் நாமல் குமார என்பவர் பொலிசாருக்கு தகவல் வழங்குபவர் என்பது தெரியவந்தது. நாலக சில்வாவுக்கு எதிராக நாமல் குமார கூறிய குற்றச்சாட்டுகளில் தீவிரம் இருந்தபோதிலும் இன்றுவரை நாமல் குமார மீதோ அல்லது நாலக சில்வா மீதோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஸஹ்ரானை கைது செய்வதற்கான தேடுதல்கள் சூடு பிடிக்கத்தொடங்கிய நேரங்களில் எல்லாம் நாமல் குமார தனது கோமாளித்தனங்களை வெளிப்படுத்தி அவற்றை திசை திருப்பினார். நாலக்க சில்வாவின் கைது மற்றும் அது தொடர்பான விடயங்கள் என்பன ஸஹ்ரான் தொடர்பான விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதை செயலிழக்கச் செய்தன.
இங்கு விடைகாணப்பட வேண்டிய கேள்வி என்னவென்றால் நாமல் குமாரவின் குற்றச்சாட்டுகள் ஸஹ்ரானை கைது செய்வதிலிருந்தும் பொலிஸாரின் கவனத்தை திசை திருப்புவதற்கான பொய்ப் பிரசாரங்களா என்பதுதான்.
இன்று பெரும்பாலான மக்களின் மனதில் எழுந்திருக்கும் கேள்வி என்னவென்றால் தாக்குதல்களுக்கு மூலகாரணமாக செயற்பட்ட சூத்திரதாரி யார் என்பதுதான். நௌபர் மௌலவிதான் இந்த தாக்குதலின் சூத்திரதாரியாக செயற்பட்டிருக்கிறார் என்று பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கருதுகின்ற போதிலும் இந்தக் கூற்றை நிரூபிக்க எந்தவொரு ஆதாரமும் இதுவரை முன்வைக்கப்படவில்லை.
இந்நிலையில் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு முகம்மது நௌபர் அல்லது நௌபர் மௌலவி சூத்திரதாரியாக இருந்தார் என்பதை அமெரிக்காவின் பெடரல் புலனாய்வுப் பிரிவு (எப்.பி.ஐ) உறுதிசெய்ததாக அமைச்சர் வீரசேகர, மே 19 அன்று பாராளுமன்றத்தில் கூறினார்.
“எங்கள் விசாரணைகள் மற்றும் அமெரிக்க விசாரணைகளின் படி இதன் சூத்திரதாரி நௌபர் மௌலவி என்பது தெளிவாகிறது. அதை ஸஹ்ரானின் மனைவியும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த தாக்குதலில் நௌபர் முக்கிய பங்கு வகித்ததை அமெரிக்க புலனாய்வு துறையான எப்.பி.ஐ உறுதி செய்துள்ளது” என்றே அமைச்சர் அன்றைய தினம் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திடம் இலங்கை ஊடகங்கள் கேள்வி எழுப்பின. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியாக செயற்பட்டவர் நௌபர் மௌலவிதான் என்பதை எப்.பி.ஐ உறுதி செய்துள்ளதா என்ற சந்தேகத்திற்கு தூதரகம் பின்வருமாறு பதிலளித்தது:
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து விசாரணைகளுக்காக இலங்கை அரசாங்கம் எங்களது ஆதரவை நாடியது. எப்.பி.ஐ உடனடியாக அதற்கு பதிலளித்தது. இந்த மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களை விசாரிக்க இலங்கை அதிகாரிகளுடன் திறம்பட எப்.பி.ஐ ஒத்துழைத்தது.”
“ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதக் குழுவிற்கு உதவி வழங்கி சதி செய்த குற்றச்சாட்டில் மூன்று இலங்கையர்களை கைது செய்தது தொடர்பான அறிக்கை ஒன்றை ஜனவரி 8 அன்று அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது.”
“இன்று, இந்த உயிரிழப்புகளுக்கு பொறுப்பில் இந்த பிரதிவாதிகள் தங்கள் பங்கைக் கொண்டிருப்பதாக நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். இந்த குற்றச்சாட்டுகளின்படி பிரதிவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ் இன் ஆதரவாளர்கள் ஆவர். ஐ.எஸ்.ஐ.எஸ் இன் செல்வாக்கினை உபயோகித்து வேறு சிலரையும் இதனுடன் இணைத்துள்ளனர். வெடிகுண்டுகளை தயாரிக்கத் தேவையான பொருட்களையும் கொள்வனவு செய்துள்ளார்கள். தாக்குதல்களில் பங்கேற்ற மற்றவர்களை தயார் செய்து பயிற்சி அளிக்கவும் இவர்கள் வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். மேலும் இந்தக் கொடிய வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பின் தூண்டுதலாலேயே அனைவரும் கொல்லப்பட்டுள்ளார்கள்” என்று தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
“குற்றவியல் முறைப்பாட்டில் பெயரிடப்பட்ட மூன்று பிரதிவாதிகளும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதக் குழுவுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தவர்கள் ஆவர், அவர்கள்
1. முகமது நௌபர், ‘இலங்கையின் ஐ.எஸ்.ஐ.எஸ்’ என்று தம்மை அழைத்துக் கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்களின் குழுவின் இரண்டாவது அமீராக இவர் செயற்பட்டார். குழுவின் பிரசார முயற்சிகளுக்கு தலைமை தாங்கியதுடன் ஐ.எஸ்.ஐ.எஸ். இல் ஏனையோர் இணைவதற்கும் வழி சமைத்தார். மேலும் நீண்ட நாட்கள் தொடராக இடம்பெற்ற இராணுவ வகை பயிற்சிக்கும் இவர் தலைமை தாங்கியுள்ளார்.
2. முகமட் அன்வர் முகமட் ரிஸ்கான், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை தயாரிக்கத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்து உதவியதாக கூறப்படுகிறது.
3. அஹமட் மில்ஹான் ஹயாத்து மொஹமட், பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கியைப் பறிப்பதற்காக அவரைக் கொலை செய்துள்ளார். பொலிசாருக்கு தகவல் வழங்கிய மற்றொருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். மேலும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பொருத்தமான இடங்களை தேடி தெரிவு செய்யும் நடவடிக்கைகளிலும் இவர் ஈடுபட்டுள்ளார்,”
ஆக, அமெரிக்க நீதித்துறையினால் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக முகமது நௌபர் அல்லது நௌபர் மௌலவி என்பவர் வெளிப்படையாக அடையாளம் காணப்படவில்லை.
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட அறிக்கைக்கு அப்பால் தாக்குதல்களின் சூத்திரதாரியாக நௌபர் மௌலவியை வெளிப்படையாக அடையாளம் காண முடியவில்லை. அறிக்கையில் உள்ள சில விடயங்கள் இலங்கையில் இடம்பெற்ற விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்ட விடயங்களில் இருந்து வேறுபடுகின்றன.
அந்த அறிக்கைகளில் ‘இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ்’ என்று அழைக்கப்படும் ஒரு குழு இருந்தது பற்றி எந்தவொரு குறிப்போ ஆதாரங்களோ இல்லை. ஏனென்றால், இலங்கை புலனாய்வாளர்கள் நாட்டில் இதுபோன்ற ஒரு குழு இருக்கிறது என்பதை ஒருபோதும் கண்டுபிடிக்கவில்லை. இலங்கையின் புலனாய்வாளர்களின் கூற்றுப்படி தாக்குதலுடன் தொடர்புடைய ஒரேயொரு குழு தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (என்.ரி.ஜே) மாத்திரமே ஆகும்.
இந்த நேரத்தில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அவர்களும் அவரது குழுவினரும் உண்மைகள் வெளிவரும் வரை காத்திருக்கிறார்கள். மேலும் இப்படியொரு மிலேச்சத்தனமான தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதையும் ஏன் இப்படியொரு குற்றம் நடந்தது என்பதையும் தெரிந்து கொள்ள முஸ்லிம்களும் ஆவலுடன் இருக்கிறார்கள். நன்றி: சண்டே டைம்ஸ் 01.08.2021 -Vidivelli