பெண்ணை கொலை செய்துவிட்டு சடலத்தை உரப் பையிலிட்டு கடை ஒன்றில் வைத்துவிட்டுச் சென்ற நபர்
வாழைச்சேனையை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்
எச்.எம்.எம்.பர்ஸான்
“காலையில் வங்கிக்குச் சென்ற லைலா எனும் பெண்மணி இன்னும் வீடு திரும்பவில்லை. கண்டவர்கள் எம்மை தொடர்பு கொள்ளவும்” என்ற ஒரு செய்தி குறித்த பெண்ணின் புகைப்படத்துடன் கடந்த வியாழக்கிழமை 5 ஆம் திகதி மாலை நேரம் முகநூலில் அதிகம் பகிரப்பட்டது. ஆனால் அப் பெண்ணை பின்னர் உயிருடனன்றி சடலமாகவே கண்டுபிடிக்க முடிந்தமை துரதிஷ்டமே.
அன்றைய தினம் காலை 11 மணியளவில் வீட்டில் இருந்து வங்கிக்குச் சென்றுள்ளார் வாழைச்சேனை 5 ஆம் வட்டாரத்தில் வசித்துவந்த முகம்மது ஹனீபா சித்தி லைலா என்பவர். மாலையாகியும் அவர் வீடு திரும்பாததால் கவலையுற்ற அவரது குடும்பத்தினர் காணாமல் போன லைலாவை தேட ஆரம்பிக்கின்றனர்.
அப்போதுதான், அவரை அவரது உறவுக்காரர் ஒருவரே தனது ஆட்டோவில் ஏற்றிச் சென்ற விடயம் குடும்பத்தாருக்கு தெரிய வருகிறது.
உடனே லைலாவின் மகள், வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வங்கிக்குச் சென்ற தனது தாய் இன்னும் வீடு திரும்பவில்லை என்றும் தனது தாயை இன்னார்தான் ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளார். அவரை விசாரித்து எனது தாயை கண்டுபிடித்துத் தாருங்கள் என்றும் முறையிட்டுள்ளார்.
அந்தத் தகவலின் படி குறித்த நபரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்த பொலிஸார் அப் பெண்ணை ஆட்டோவில் ஏற்றிச்சென்றதாக கூறப்படுவது பற்றிக் கேட்டறிந்தனர்.
அதற்கு அவர், தான் ஏற்றிச் சென்றது உண்மை என்றும் எனினும் ஓட்டமாவடி பகுதியில் அந்தப் பெண்ணை இறக்கி விட்டதாகவும் அதன் பிறகு அவர் எங்கு போனார் என்பது பற்றி தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார். அதுமாத்திரமன்றி அந்நபர் “வாருங்கள்.. நான் ஆட்டோவிலிருந்து இறக்கிவிட்ட பகுதியில் தேடிப் பார்ப்போம்” என்று கூறி காணாமல் போன பெண்ணின் மகளையும் தனது மனைவியையும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பிரதேசம் முழுவதும் தேடி அலைந்துள்ளார்.
எங்கு தேடியும் லைலாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் அவர்கள் பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறையிடுகின்றனர்.
எனினும் ஆட்டோவில் ஏற்றிச் சென்ற நபர் மீதுதான் தனக்கு சந்தேகம் உள்ளதாகவும் அவரை முறையாக விசாரிக்குமாறும் லைலாவின் மகள் மீண்டும் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். எனினும் அவர் மீது பொலிஸார் சந்தேகம் கொள்ளவில்லை.
அன்று இரவு ஒன்பது மணியாகியும் காணாமல் போன பெண்ணைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இத்தனைக்கும் காணாமல் போன பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் பெண்ணை ஆட்டோவில் ஏற்றிச் சென்ற நபர் ஆகியோர் பொலிஸ் நிலையத்திலேயே அப்போதும் இருக்கிறார்கள்.
இந்நிலையில்தான் அப் பெண்ணை ஆட்டோவில் ஏற்றிச் சென்ற நபர் மீதே சந்தேகம் நிலவுவதாக பிரதேசத்தில் கதை தீயாய் பரவியது. இச் சம்பவம் குறித்து அறிந்து கொண்ட , வாழைச்சேனையில் அமைந்துள்ள வளர்ப்பு மீன் மற்றும் அலுமினியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர் ஒருவர் பொலிஸ் நிலையம் வந்து தகவல் ஒன்றை வழங்குகிறார்.
“ குறித்த பெண்ணை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்ற, தற்சமயம் பொலிஸ் நிலையத்தில் இருக்கும் இந்நபர் எனது கடைக்குள் இரண்டு உரப்பைகளை வைத்து விட்டு சிறிது நேரத்தில் எடுக்க வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார். அப் பைகளை எடுத்துச் செல்லுமாறு இவரது தொலைபேசிக்கு நான் பலமுறை அழைத்தும் அவர் பதிலளிக்கவில்லை. இவர் இன்னும் வந்து எடுக்க வரவில்லை. அதில் எனக்கு சந்தேகமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
உடனடியாக செயற்பட்ட பொலிஸார் குறித்த இடத்திற்குச் சென்று பரிசோதித்ததில் உரப்பையில் இருப்பது காணாமல் போன லைலா என்பவரின் சடலம் என்பதை அடையாளம் கண்டனர்.
பின்னர்தான் முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்ற குறித்த நபர், ஓட்டமாவடி எம்.பி.சீ.எஸ். வீதியிலுள்ள தனது கடைக்குள் அப் பெண்ணை அழைத்துச் சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளமையும் அதன் பின்னர் தனக்கு எதுவும் தெரியாது என நாடகமாடியுள்ளமையும் தெரியவந்தது.
குறித்த நபர் அந்தக் கொலையை மறைப்பதற்கு கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை உரப்பை ஒன்றில் போட்டு அதனுடன் சந்தேகம் வராத வகையில் மற்றொரு உரப்பையில் வேறு பொருட்களை வைத்து இரண்டு உரப்பைகளையும் அவரது முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திலுள்ள அவரது உறவினர் ஒருவரின் வளர்ப்பு மீன் மற்றும் அலுமினியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வைத்துள்ளார். அத்துடன் இந்த இரண்டு பைகளும் இருக்கட்டும் இதனை நான் சிறிது நேரத்தில் வந்து எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி உரப்பைகளை வைத்து விட்டுச் சென்றுள்ளார்.
அன்றையதினம் முழுக்க அப் பெண்ணின் உடல் உரப்பைக்குள் வைக்கப்பட்ட நிலையில் குறித்த கடைக்குள்தான் இருந்திருக்கிறது. மறுநாள் வெள்ளிக்கிழமை 6 ஆம் திகதி அதனை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.எம்.பசீல் பார்வையிட்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு கட்டளை பிறப்பித்தார்.
இக் கொலையை புரிந்ததாக நம்பப்படும் 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையையும் சடலம் இருந்த உரப்பை வைக்கப்பட்ட கடை உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
கொலை செய்த பெண்ணை உரப்பையில் போட்டு கடை ஒன்றில் வைத்து விட்டுச் சென்ற நபர் அதை இரவு வேளையில் எடுத்துச் சென்று யாரும் காணாத இடத்தில் புதைத்துவிட்டு, சம்பவத்தை மறைக்க முயற்சி செய்துள்ளார் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட பெண் இளமையிலிருந்தே வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து பல்வேறு இன்னல்களை அனுபவித்தவர் என அப் பகுதி மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
கொலை செய்யப்பட்ட பெண் அயலவர்களுக்கு உதவி செய்வதில் முன்னிற்பவர் என்றும் அண்டை வீட்டார் அவரை பெருமையோடு நினைவு கூருகிறார்கள்.
மேலும் நான்கு பிள்ளைகளின் தாயான 55 வயதுடைய லைலா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்டகாலம் மகரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
லைலாவை கொலை செய்த நபரும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் லைலாவின் உறவினர்தான் என்றும் அவர்களுக்குள் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் முரண்பாடுதான் கொலை வரை சென்றுள்ளதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. அவரது ஜனாஸா நேற்று முன்தினம் மாலை வாழைச்சேனையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.-Vidivelli